Sunday, January 5, 2020

MARGAZHI VIRUNDHU



மார்கழி விருந்து J K SIVAN

21. ''பெரியாய்'' இந்த உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடியது எது என்று கேட்டால் நீங்கள் புலி, சிறுத்தை, மான் என்று....-----சிலர் 'நாய்'' குதிரை '' என்றெல்லாம்... மன்னிக்கவும் . இது எதற்குமே வேகம் கிடையாது. என்னைக்கேட்டால் நேரம், நாள் இது தான் வெகு வேகமாக ஓடுகிறது என்பேன். இது தான் உலகமே ஓய்வில்லாமல் சுழல்வதை கணிப்பது. விஷ்ணு சித்தரும் இதைத்தான் உரக்க தனது நந்தவனத்தில் செடிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார். '' மார்கழி ஆரம்பித்ததே தெரியவில்லையே . நழுவிக்கொண்டே இன்று 21 நாள் ஆகிவிட்டதே. என்ன அற்புதமான அனுபவம் இத்தனை நாளும். கோதையின் பாசுரங்கள் எனக்குப் புத்துயிர் அளித்து வருகிறதே, இன்னும் ஒன்பது நாள் மட்டுந்தானா இந்த இன்பம் ! வேகமாக ஓடும் நாளே, நீ ஏன் மார்கழிக்கு மட்டும் குறைந்தது இருநூறு நாட்களாக இருக்கக்கூடாது ! ' ரோஜாப்பூ, சண்பகம், மல்லிகை எல்லாமே விஷ்ணு சித்தர் பேச்சைக் கேட்டு குபீர் என்று சிரித்தன. ''ஏன் சிரிக்கிறீர்கள், என் அருமை புஷ்பங்களே! ? ''ஆழ்வாரில் பெரியவரே, சிறந்தவரே, கோதையின் அப்பாவே, இந்த மார்கழிக்கு முப்பது பாசுரங்களுக்காக நாள் போதாது என்றே குறைப்பட்டுக் கொள்கிறீர்களே, எங்களைப்பற்றி ஒரு கணமாவது சிந்தித்தீர்களா? ''. ''அப்படி என்ன உங்களைப்பற்றி?'' ''காலையில் மலரும் நாங்கள், மாலையில் மடிகிறோமே, எங்கள் வாழ்வு சோகமானதல்லவா? '' ''ஆஹா ! ரோஜாமலர்களே, நீங்கள் சொல்வது என் மனத்தை உங்களிடம் உள்ள முள்ளைப் போல் சுரீர் என்று தைக்கிறதே!'' '' நீங்கள் அப்படி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தோம். அது தான் இல்லை, நாங்கள் பரம திருப்தியாக இருக்கிறோம், பரம்பரை பரம்பரையாக. காலையில் மலர்ந்தோமா, எங்களை யாராவது உங்களைப்போல் உள்ளவர்கள், ஆசையாக வளர்த்தார்களா, எங்கள் அழகை ஸ்லாகித்து பேசி, பாடி, பறித்து, மாலையாக்கி, தங்களுக்கோ, இறைவனுக்கோ சூட்டி மகிழ்ந்தார்களா , அது போதுமே. எங்கள் வாழ்வின் லட்சியம் அதோடு முடிந்ததே! இது அல்லவா பேரின்பம். சிறிதும் துன்பமே இல்லையே. பிறந்தோம், வளர்ந்தோம், மகிழ்ந்தோம், பிறருக்கு பயனானோம் , உபயோகப்பட்டோம், மகிழ்ச்சியளித்தோம், முடிந்தோம். எல்லாம் சிறிது நேரத்திலேயே! இது போதுமே! பயனற்று பலகாலம் வாழ்ந்து தானும் வருந்தி, பிறரையும் வருத்தி வாழ்வது நல்லதா, சுகமாக பிறர்க்குதவி வாழ்ந்த சொல்ப வாழ்வு சிறந்ததா? நீங்களே முடிவெடுங்கள்!'' விஷ்ணு சித்தர் கண்களை மூடி ''ரங்கா, ரங்கா வட பத்ர சாயி'' என்றார். அது தான் முடிவு, அதில் தான் எல்லாம் அடக்கம்! அவரை அப்படியே யோசிக்க விட்டுவிட்டு, நாம் தான் இப்போது ஆயர்பாடிக்கு சென்று விட்டோமே அங்கு என்ன நடக்கிறது பார்க்கலாம்: --- வழக்கம்போல் தினமும் யமுனையில் நீராடி கிருஷ்ணன் வளர்ந்து வாழும் ஆயர்பாடியில் நந்தகோபன் மாளிகைக்கு தினமும் சென்று கிருஷ்ணனை துயிலெழுப்புவது எல்லாருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமா? சாத்தியம் தானா?. அந்த சிறுமி ஆண்டாளுக்கு, அவளால் மற்ற சிறுமிகளுக்கு, இந்த அனுவபம் வரப்ரசாதமாக அமைந்ததே! அதி புத்திசாலியான ஆண்டாளின் வர்ணனைக்கு ஈடு இல்லை. நந்தகோபன் வீட்டு பசுக்கள் மந்தையாக மலை போன்று பருத்து பெரிதாக நிற்கின்றன. அந்த அதிகாலை வேளையில். கோபர்கள் பெரிய பாத்திரங்களை எடுத்துகொண்டு அந்த கறவைப்பசுக்களை அணுகி பால் கறக்க அந்த பாத்திரங்களை மடிக்கருகில் வைத்த கணத்திலேயே, தானாகவே பால் வெள்ளம் போல பொங்கி பாய்கிறது பாத்திரத்தில். கண்ணிமைக்கும் நேரத்தில் பாத்திரம் பொங்கி வழிகிறது மேற்கொண்டு பாத்திரத்தில் பால் கொள்ள இடமில்லாமல்!! ஒரு வள்ளல் என்பவன், தன்னைப் பலமுறை படையெடுத்து, அவனைப் புகழ்ந்தால் மட்டுமே பணமோ பொருளோ மற்றவர்கள் கேட்டு கொடுப்பவனல்ல. கேளாமலேயே வாரி கொடுப்பவன். நந்த கோபன் பசுக்கள் ஒவ்வொன்றுமே பால் சொறியும் பெரும் வள்ளல்கள். உன் வீட்டு பசுக்களே இப்படி வள்ளல்கள் என்றால் எண்ண வொண்ணா சகல உயிர்களையும் ஊட்டி வளர்க்கும் ரங்கா, நீ எத்தனை பெரிய வள்ளல். உன்னை "பெரிய கடவுள்" என்பது எத்தனை பொருத்தம். உன்னை எதிர்த்தவர்கள் தவறை உணர்ந்து உன்னை சரணடைவது உன் பேரருளுக்கல்லவோ?. உலக மாயை எனும் இருளகற்றும் பேரொளியே! துயிலெழு!, உன்னைத் தேடி வந்த இந்த சிறுமிகளுக்கும் வழிகாட்டு. எங்கள் பாவை நோன்பின் கருப்பொருளாக வந்து எங்களை எப்போதும் உன் நினைவிலேயே போற்றி புகழ்ந்திட அருள்வாய்.'' இப்படி அந்த இடைச்சிறுமி ஆண்டாள் சொல்வதாக கோதை அபூர்வமாக ஒரு பாசுரம் எழுதினாள் . காலத்தால் அழியாத சிறிய காவியம். அது இதோ: ''ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்'' வில்லிப்புத்தூரில் கோதை மேலே சொன்ன பாசுரத்தை எழுதியிருந்த ஓலைச்சுவடியை இதுவரை குறைந்தது பத்து முறையாவது வழக்கம்போல் விஷ்ணுசித்தர் படித்து மகிழ்ந்தார். அருகிலிருந்தோரிடம் எல்லாம் அர்த்தத்தை விளக்கினார். '' அம்மா கோதை என் செல்வமே, பல்லாண்டு பல்லாண்டு என்று பெரிய பாசுரங்களை எல்லாம் எழுதினேன். பாடினேன். அந்த நாராயணனை விடியலில் எழுப்பி வாழ்த்தினேன். எல்லோரும் என்னைப் புகழ்ந்தார்கள். நான் எழுதிய பல்லாண்டுக்கு ஈடு இணை இல்லை என்று புகழ்ந்தார்கள். இன்று தோட்டத்தில் நந்தவனத்தில் ஒரு சிறிய ரோஜாப்பூ எனக்கு உணர்த்திய உண்மை இதற்கும் பொருந்தும் தாயே. ஒரு சிறிய பாசுரத்தில் நீ துயிலெழுப்பின அழகுக்கு எடைக்கு எடை என் பெரிய பாசுரம் தாங்குமா தெரியவில்லை என் தெய்வமே!!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...