Sunday, January 26, 2020

KRISHNA TIMES


                       கண்ணன் சொல்கிறான்...  J K  SIVAN   

என் எதிரே  கிருஷ்ணன். நேரில் அல்ல. உணர்வு பூர்வமான ஒரு  வண்ணப்படத்தில்.  காலண்டராக ஒரு வருஷம்  நாங்கள் போட்டு  நிறைய  பேருக்கு  கொடுத்தோம். அதில்  ஒன்று  என் முன்னே சுவற்றில்....எத்தனை நேரம் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தேன் தெரியவில்லை.  நான்  நங்கநல்லூரில் இல்லை. எங்கோ விண்ணில் பறந்து கொண்டிருந்தேன். என் கால்கள் என்னை இழுத்து செல்லவில்லை. ஏதோ மெல்லிய  வலிமையற்ற சிறிய  பஞ்சுத் துண்டு  காற்றில் அடித்துச் செல்லப்படுவதைப்  போல  எந்த வித  நோக்கம், மார்க்கமும்  இல்லாமல்   நான் எங்கோ  தூக்கிச் செல்கிறதே.  தொம் மென்று கீழே  இறக்கப்பட்டேன்.....

''அட,   நான் எப்படி அதற்குள்  பிருந்தாவனம் வந்தேன்.  இந்த பெரிய  மாட மாளிகை யாருடையது.? இவ்வளவு பெரியதை நான் பார்த்ததே இல்லையே.  இந்த குளுமையான மாலைவேளையில்  நந்தகோபன் இல்லத்தின் வாசலிலா நான்! .  

சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.  எல்லாமே  ஆனந்தமாக தென்படுகிறது.   வசந்த கால மாலை   பொன்  வெய்யில் என்னையே  தங்கநிறமாக்கிக் கொண்டிருக்கிறது.  எங்கும் எதுவும் பொன் முலாம் பூசப்பட்டிருக்கிறது.  ஏதோ மஞ்சள் சிவப்பு கலந்த  மலர்  ஜமுக்காளம்  எங்கும் விரித்தாற் போல  வண்ணம் தீட்டி விட்டது. 

இது அவன் வீட்டை விட்டு வெளியே வரும் நேரம். இப்போது தான் காலையில் பசுக்கள் கன்றுகளுடன் கோவர்தன மலை  பள்ளத்தில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு  அவைகளோடு திரும்பி வந்து அவற்றை  பாதுகாப்பாக  வீட்டின் பின்புறம் கட்டிவிட்டு  இனி அவன்  வழக்கம் போல் யமுனாநதி  மதுவனத்தில்  புல்லாங்குழல் ஊதி எல்லோரும்  விளையாடும் நேரம். முன்னிரவு வரை விளையாடிவிட்டு திரும்புவான்.  எத்தனை கோபியர்கள் மான்கள் மயில்கள் காத்துக்கொண்டிருக்கும் அவனுக்காக அங்கே.   

இது யார்  என்னைப்போலவே இங்கே  இன்னொரு ஆசாமி ?  ஓ!    ஒரு கோபி.   அவள்  எதற்கு நந்தகோபன் வீட்டு வாசல் தூணின் பின்னே நிற்கிறாள் ? அவளும்  என்னைப்போல கிருஷ்ணனுக்காக  காத்திருக்கிறாளா? அவள் கையில் ஒரு பெரிய  மலர்மாலை. அதன் மணம் 'கம்' மென்று என் மூக்கை துளைக்கிறதே. 

வெகுநாட்களாக  மல்லிகை  செண்பக மலர்ச்  செடிகள் வளர்த்து அவை பூத்துக் குலுங்கும் வரை காத்திருந்து முதன்  முதலாக பூத்த அவற்றை எடுத்து தொடுத்து கண்ணனுக்கு அவற்றை அளிக்கவேண்டும் என்று அவளது நீண்ட கால ஆசை இன்று நிறைவேறப் போகிறது. அந்த பூக்களை தொடுத்தது நூலைக் கொண்டு அல்ல. அவள் மனதால், ஆனந்த கண்ணீரால், கண்ணன் மேல் அவள் கொண்ட எல்லையில்லாத  பாசத்தால் ... சங்கு போன்ற வெள்ளை வெளேர் மல்லிகை மலர்கள், அதோடு  மஞ்சள் மசேல் என்று அவனது பீதாம்பரம் போல் மஞ்சள் செண்பகமலர்கள்.  ஒன்றின் பக்கம் ஒன்றாக  அவற்றை நெருக்கமாக தொடுத்து திண்டு மாதிரி ஒரு மாலை கட்டி இருக்கிறாளே. ஒரு சின்ன சந்தேகம் அவளுக்கு  . அவன் இதை  ஏற்பானா?  ஏன் மாட்டான்? அவனுக்கு மலர் மாலைகள் என்றால் ரொம்ப ரொம்ப  விருப்பமாயிற்றே.

மாலையை  தொடுத்து கையில் ஏந்தியவாறு நந்தகோபன் வீடு  வரை வந்தவளுக்கு ஒரு திடீர்இன்னொரு  சந்தேகம், சங்கோஜம்? எதற்காக? எப்படி  திடு திப்பென்று  உள்ளே நுழைவது?.  ஓஹோ  அதற்காகத்தான் அவன் வெளியே வருவான் இந்த நேரத்தில் என்று கேள்விப்பட்டு அவனை நேரில் கண்டு கொடுப்பதற்கு இந்த தூணின் பின்னே நிற்கிறாளோ?

யாரோ வரும் சத்தம். கால் சதங்கை ஒலி, அதை தொடர்ந்து ஒரு தெய்வீக ஒளி.  மஞ்சள் பீதாம்பரம் கண்ணைப் பறிக்க,  மாலை தென்றல் அவன் சுருள்சுருளான கேசத்தை  நாட்டிய  மாட வைக்க, அவனது காதுகளில் குண்டலங்கள் முன்னும் பின்னும் ஆடி  அவனது காதிற்கு பின் சுருண்டு ஆடும் கேசத்தை தொட முயல்கிறதே.  அழகிய  கருநிறம் அவன்.  கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் என்பது சாத்தியமான வார்த்தை. .  ஸ்ப்ரிங்  என்போமே  அது மாதிரியான சுருள் சுருளான கம்பி  கேசங்கள் அவனது கரிய  மென்மையான  கழுத்தின் பின் பகுதியில்  கடலலை போல் ஆட, இடது தோளில்  இறங்கி ஆட, அவன் அவற்றை நாசூக்காக பின்னே  தள்ளி விடுகிறான்.

மேலே  ஒரு  பீதாம்பர வஸ்திரம் அதை அழகாக ஒரு பக்கம் தூக்கலாக  இடது தோளில்  விடுகிறான். அது வழிந்து அவன் முழங்கை வரை நழுவி விழுந்து அவன் அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

அதை அவன் வாரி  மீண்டும்  இடது தோளில்  விடுகிறான் அப்போது அசையும் மார்பின் வெண்ணிற முத்து நெக்லஸ் முத்துக்கள் ஒன்றோடொன்று உராய்ந்து  ஒரு இனிய சப்தத்தை  தருகிறது.

இப்படி ஒரு தெய்வீக உருவத்தை பார்த்த தூண் பின்னால்  நிற்கும் கோபியின்  கண்கள் நிலை குத்தி அப்படியே அவன் முகத்தில் நின்றுவிட்டன.  அவன் முகமண்டல காந்த சக்தி அவள் எதற்காக அங்கே வந்தாள்  நின்றாள்  என்பதெல்லாவற்றையும்  மறக்கடித்து விட்டது. 

அவள் மறந்தாலும் மல்லிகை செண்பக பூக்கள் மறந்து போகுமா?.  ஒவ்வொரு இதழும்  கிருஷ்ணா, மாதவா, கோவிந்தா என்று இசை பாடின.

எப்படி தான் அவனுக்கு தெரியுமோ ?  சொல்லிவைத்தாற்போல்  அவன் நேராக அவள் நிற்கும் தூண் அருகே வந்தான்.  அவனுக்கு  அவள் அங்கே இருப்பது எப்படி தெரிந்தது?  அவளுக்கு அவளை பற்றி தெரிந்ததை விட அவனுக்கு அவளைப்பற்றி மட்டும் அல்ல  எல்லோரைப்பற்றியுமே  நிறையவே தெரியும்.  அவள் செடி வளர்த்தது. அவை பூக்க ஆரம்பித்து இன்று அவள் அவற்றை முதன் முதலாக பறித்தது, மாலை கட்டியது, தனக்கு அளிக்க விரும்பியது எல்லாமே அவள் சொல்லாமலேயே அவனுக்கு  தெரியுமே. அவன் சங்கல்பத்தால்  தானே  அவளே  செடி வளர்த்து , மாலை தொடுத்து அதை அவனுக்காக இங்கே  கொண்டு வந்து தூணின் பின் ஒளிந்துகொண்டிருக்கிறாள்.  தூணுக்குள்ளே இருந்த நரசிம்மனுக்கு தூணுக்கு பின்னாலே ஒரு பக்தை நிற்பது தெரியாமல் போகுமா.  அவனருளால் தான் அவள் இதெல்லாம் செய்தவள்.  

கண்ணன் நேராக அவள் எதிரில் வந்து குனிந்து தன்  நீலோத்பல விழிகளை அவள் மேல் செலுத்தினான் 
அவள் கைகளில் தவழும் மாலையை பார்த்தான். இதழோரத்தில் புன் சிரிப்பு   அவளுக்கு  அவன் கரிய அழகிய விழிகள், தனது கைகளில் இருக்கும் மாலை மேல் செல்வது ஆனந்தத்தை அளித்தது. கரிய பெரிய  கண் இமைகள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மழைபோல் அவளது  முகத் திலிருந்து  அவள் கைகள் தாங்கிய  மாலைக்கு பாய்ந்தன.

' ஓ.  உனக்கு என் சாம்ராஜ்யத்தில் இடம் உண்டே,  வைகுண்ட வாசி இனி நீ, என்று தலை அசைத்தான் கிருஷ்ணன். கையை நீட்டி  அவள் வைத்திருந்த மாலையை தானே  எடுத்து அணிந்து கொண்டான்.  தனது எண்ணம்  இவ்வளவு அழகாக  கண்ணெதிரே நிறைவேறுவதை ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த கோபி அந்த எளிய கண்ணனின் ஏராளமான  அன்பை பூர்ணமாக  அனுபவித்து தனைமறந்த நிலையில் சிலையாகிவிட்டாள் .
 


என் எதிரே இருந்த படத்தில்  இவ்வளவும் சொல்லிவிட்டு  இன்னும்  சொல்லவா என்று கேட்டான்......  போதும் என்றா சொல்வேன்.. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...