Friday, January 17, 2020

KAMAKSHI







                ஒரு  இருசொல் அலங்கார பாடல் J K SIVAN

''கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்களன்றும் விரும்பாளே - நெஞ்சுதனில்
அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண்''

மேலே கொடுத்திருக்கும்  பாடலை  பல முறை படித்தாலும்   என்ன அர்த்தம் புரியும்?
எவளோ ஒருத்தி  கஞ்சி கொடுத்தால் குடிக்கமாட்டாள் .  கம்பு  வேகவைத்து  சோறாக்கி  தட்டில் போட்டு கொடுத்தால் கொட்டிவிடுவாள் சாப்பிடமாட்டாள்.    சாப்பிட தொட்டுக்கொள்ள  இந்தா  துவையல், ஊறுகாய், வெண்டைக்காய் , கத்திரிக்காய், உருளைக்கிழங்கு  என்று  காய் காரமாக சமைத்து கொடுத்தாலும் தொடமாட்டாள். பிடிக்காது. யாரவள்  இவ்வளவு உசத்தி ?
அஞ்சுதலை  பாம்பு ஆசாமி எவனுக்கோ  ரொம்ப ஆறுதலாக  இருப்பவளாம் . கஞ்சத்தனம் கொண்ட  இந்த பெண்ணுக்கு காமாட்சி என்று பெயர்.

யாரோ ஒரு கவிஞன் தனது மனைவி பற்றி இதை எழுதி இருக்கிறான். இதையெல்லாம் படித்து நேரம் வேஸ்ட்  இந்த சிவனுக்கு தான் வேறே வேலை இல்லை. கண்டதை எல்லாம் குப்பை குப்பை யாக  எழுதி காட்டுகிறான் என்றால் நானுமா  அவனைப்போல் வேலையற்றவன்? என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு மதிப்பெண்  நூற்றுக்கு  பூஜ்யம்.  

மேலே சொன்ன  அருமையான நாலுவரி  பாடல் அர்த்தபுஷ்டி வாய்ந்தது. இருசொல் அலங்காரம் வகை. உள்ளர்த்தம் அற்புதமானது. சொல்கிறேன் கேளுங்கள்: 

இதில் சொல்லப்படுவது காஞ்சிபுரமும்  அதில் குடிகொண்டிருக்கும்  ஸ்ரீ காமாக்ஷி அம்மன் பற்றியும் தான். 

'' கஞ்சி குடியாள் ''   காஞ்சிபுர க்ஷேத்ரத்தில் குடி கொண்ட  அம்பாள்.  

 ‘கம்பஞ்சோறு உண்ணாள்'  -  காஞ்சியில்  காமாக்ஷி தவமிருக்கிறாள்  தனியாக கோயில் கொண்டவள்.  ஏகாம்பரேஸ்வரர் கோவில் பிரசாதம்  காமாக்ஷி கோவிலுக்கு கிடையாது.  எல்லா சிவன் கோவில்களிலும்  ஈஸ்வரனுக்கு நைவேத்தியம் பண்ணுவதை அம்பாளுக்கும் நைவேத்தியம் பண்ணுவது தானே வழக்கம்.   ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு நைவேத்யம் பண்ணும்  பிரசாதம் காமாக்ஷி கோவிலுக்கு கிடையாது. தனியாக தான்  நைவேத்யம் . ஆகவே தான் ஏகாம்பரேஸ்வரின் சோறு அவள் சாப்பிடமாட்டாள் என்கிறார் புலவர்.

காஞ்சிபுரத்திலே நிறைய,  நூற்றுக்கு மேல்  சிவன் கோவில்கள் இருந்தாலும்  ஒன்றில் கூட  அம்பாள் சந்நிதியே கிடையாது.எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து பெரிதாக தனியாக  காமாட்சியாக அருள் பாலிக்கிறாள். 

'வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே' என்றால்   காஞ்சி காமாக்ஷி  கருணை தெய்வம்.  எல்லோரிடமும் தயை, அன்பு  கொண்டவள். கோபமே  நெருங்காதவள்.  அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரில்  பார்வதி, உமை  சக்தி தெய்வம். அசுரர்களை அழித்தவள். அப்படி   கோபம் கொண்டவள் காஞ்சியில் கருணைவடிவாக இருக்கிறாள் என்கிறார்  கவிஞர்.
தமிழில்  தொட்டுக்கொண்டு சாப்பிடும் ஐட்டங்கள்  வியஞ்சினம் எனப்படுகிறது. 

''அஞ்சுதலை  அரவார்''   என்பது  பரமேஸ்வரனை குறிக்கிறது. பஞ்சமுகம் எனும் ஐந்து முகங்கள் கொண்டவன் சிவன். ருத்ரனுக்கு  ஐந்து முகங்கள்  .சர்ப்பங்களை  ஆபரணங்களாக அணிந்தவர்  சிவ பெருமான்.  நாகபாரணன்  என்று சிவனுக்கு பெயர். அரவார் என்கிறார் புலவர். 

‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவாரை  கொண்டவள் காமாக்ஷி.  சிவனை அடையவே  தவம் இருப்பவள் அல்லவா. நெஞ்சில் சிவனை தெய்வமாக கொண்டு த்யானிப்பவள் காமாக்ஷி என்று அர்த்தம் த்வனிக்கிறது .
‘ஆறுதலையாவாள்' -   பக்தர்களுக்கு  அஞ்சேல்,  யாமிருக்க பயமேன் என்று  ஆறுதலை தருபவள் காமாக்ஷி என்று பொருள் படுகிறது. 

 '' கஞ்ச முகக் காமாட்சி''    காமாட்சிக்கு  ''கஞ்ச தளாயதாக்ஷி''  தாமரை இதழ் போன்ற  கண்களை உடையவள் என்று ஒரு பெயர்.    கஞ்ச முகம் என்றால் தாமரை பூவைப்போன்ற முகம்.  

இப்படி எந்த  கவிஞனாவது இப்போது எழுதுகிறானா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...