Thursday, February 28, 2019

NOSTALGIA



காலம் மாறி போச்சு - J K SIVAN

காலம் மாறிப்போச்சு என்று எல்லோரும் .தான் சொல்கிறோம். ஒவ்வொருவரும் வாழும் வாழ்ந்த விதம் தான் வேறே. காலம் என்றும் ஒரே சீராகத்தான் எல்லோருக்கும் இருக்கிறது. மாறுதல் நம்மிடம் தான் காலத்திடம் இல்லை. ரயிலில் உட்கார்ந்து பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரம் உட்கார தான் எல்லோருக்கும் பிடிக்கும். வெளியே மரங்கள் வீடுகள் தெரு எல்லாமே ஏன் கிடு கிடு வென ஓடுகிறது? அவைகள் நின்ற இடத்திலேயே தான் இருக்கிறது. நாம் தான் ரயிலில் ஓடுகிறோம். அதுபோல தான் இதுவும். மனிதன் மனதில் தோன்றும் எண்ணங்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.

காலம் மாறிப்போச்சு என்று ஒரு தமிழ் சினிமாவே வந்தது. அதில் ரொம்ப பிரபலமாக ஒரு பாடல் தெருவில் எல்லோரும் பாடிக்கொண்டே போனது ஞாபகம் இருக்கிறது. 'ஏரு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே.. என்று வஹீதா ரஹமான் டான்ஸ் ஆடிக்கொண்டே பாடுவார் . தங்கப்பன் நடன​ கோஷ்டி சட்டையில்லாமல் வெறும் தலைப்பாகை மட்டும் அணிந்து கொண்டு தலையாட்டி சிரித்துக்கொண்டு கையில் ஒரு டமாரம் வைத்து அடித்துக்கொண்டு ஆடுவார்கள். பாலையா ரொம்ப பொல்லாத பண்ணையாராக வந்து எல்லோரையும் படுத்துவார். படம் பார்ப்பவர்களை பிழிய பிழிய அழவைப்பார். ,அமிஞ்சிக்கரை லட்சுமி டாக்கீஸ் நடந்து போய் இந்த படம் பார்த்து விட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது.

​பழசெல்லாம் தாத்தா காலம். நான் தாத்தா தானே. வேறு என்ன பொருத்தமான கதை சொல்லமுடியும்?

சுமார் 75 வருஷங்களுக்கு முந்தைய விஷயம். நடந்த ஸ்தலம் , கோடம்பாக்கம். வடபழனி ஆண்டவர் கோவில் அருகே பிள்ளைமார்கள் வசித்த பகுதியில் ரங்கநாதன் பிள்ளை வீட்டில் குடியிருந்த காலத்தில்.
அப்போதெல்லாம் தெருவில் ஒரு சிறு ப்ரொஜெக்டரை தூக்கிக்கொண்டு ஒருவன் வருவான். சில பிலிம் சுருள்களை இணைத்து கையால் சுற்றுவான், உள்ளே ஒரு சிறிய திரையில் சினிமா படம் ஓடும். பயாஸ்கோப் என்று அதை அடையாளம் கண்டு கொண்டிருந்தோம். சத்தம் கேட்காது. பாடாது, பேசாது. இரண்டு மூன்று நிமிஷ நேரம் ஒரு துளை வழியாக பார்க்க ஒரு அணா (இப்போது 6 பைசா) வாங்குவான். நீல கொட்டடி சட்டையில் தான் அவனை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அழுக்கு நாலு முழ வேஷ்டியை மடித்து முழங்காலுக்கு மேல் டப்பா கட்டுடன் தோளில் அந்த ப்ரோஜெக்டருடன் அவன் வந்ததைப் பார்த்தாலே ஒரு சிறு கூட்டம் அவனை சூழ்ந்து கொள்ளும். சில்லறைகள் நிறைய அவன் பாக்கெட்டில் சீக்கிரமே சேர்ந்து விடும். அவனே பாடுவான்.

'' ரங்கசாமி'' என்று கூப்பிட்டு அவனுக்கு என் தாயார் காபி கொடுப்பதால் எனக்கும் என் சகோதரனுக்கும் ஒரு சில நிமிஷங்கள் அதிகமாக துளை வழியாக சினிமா பார்க்க சலுகை உண்டு.

பாடாத பி. யூ. சின்னப்பாவை இப்படிப் பார்த்த வெகு சிலரில் நான் ஒருவன். ஜகதலப் பிரதாபன் என்ற படம் அது. நினைவில் இருக்கிறது. ஒரு நாள் ஒரு காலை கர்ண பிள்ளை வீட்டு காளை மாடு சிவப்பு சட்டை போட்டிருந்த ரங்கசாமியை வேகமாக ஓடிவந்து முதுகில் முட்டிவிட்டது. அதற்கு பிறகு அவனும் வரவில்லை, படம் பார்ப்பதும் நின்று போனது.. அல்ப ஆயுசில் மாடு முட்டி, அலங்காநல்லூர் போகாமலே மறைந்தவன் ரங்கசாமி.

சனிக்கிழமைகளில் ''கோவிந்தோ கோவிந்தோ'' காலை ஆறுமணிக்கே தெருவில் சத்தம் கேட்கும்.
ஒருவர் உடம்பெல்லாம் நாமம் போட்டுக்கொண்டு ஒரு பித்தளைச் சொம்பை பள பள வென்று தேய்த்து, புதிதாக்கி, அதன் வாயை ஒரு மஞ்சள் தோய்த்த துணியால் கட்டி துணியில் காசு போட மட்டும் துவாரம் பண்ணி வைத்துக்கொண்டு, தலைக் குடுமியை நாரதர் போல் நடுத் தலைமேல் முடிந்து கொண்டு தாடி மீசை ஆறு மாதத்திற்கு குறையாத வளர்ச்சியோடு இடுப்பில் ஒரு மஞ்சள் தோய்த்த வேஷ்டியை கச்சம் வரிந்து கட்டியவாறு தெருவில் மண்ணில் புரண்டு கொண்டே வருவார். செம்பு நேராக இருக்கும் அதைச் சாயாமல் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு புரள்வார். எங்களுக்கு எல்லாம் அவர் பக்கத்தில் போகவே பயமாக இருக்கும். பிடித்துக் கொண்டு போய்விடுவார் என்று யாரோ சொல்லியதின் விளைவு அது. ஆனால் அவர் பின்னாலேயே தெரு முனை வரை போவோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கொஞ்சம் சத்தமாகவே ''கோவிந்தோ''.போடுவார். உள்ளேயிருந்து யாராவது காசு கொண்டு வந்து செம்பில் போடும் வரை நகர மாட்டார். சத்தமும் நிற்காது. காசு கொண்டு வந்தால் தலையை மட்டும் தூக்கி சொம்பை நீட்டுவார்.

ஒரு முஸ்லீம் ''பாய்'', பல்லில்லாமல், சிகப்பு குஞ்சம் தொங்கும் தொப்பியோடும் தன்னை விட பெரிய கோணிப் பையையோ, அழுக்கு கித்தான் பையோ தூக்கிக்கொண்டு வரும் ஒரு குள்ளப் பையனோடும் மாதம் ஒரு முறை வருவார். பொடி போடுவார். கைலிக்குள் நிறைய கத்தி, சுத்தி எல்லாம் கொண்ட ஒரு பையை செருகிக் கொண்டு வருவார். ''பித்தளை பாத்திரம் ஈயம் பூசறது'' என்று பையன் கத்திக்கொண்டே வராவிட்டால் அடிப்பார். பையன் அவர் மகனா, வேலைக் காரனா, என்று எனக்கு இன்னும் தெரியாது. எங்கள் வீட்டு வாசல் மகிழ மரம் வயதானது. நிறைய நிழல் தரும். அது தான் அவர் கடை போடும் இடம்.

கீழே மண்ணில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டுவான் பையன். ஒரு துருத்தி ஒரு பக்கம் இணைத்து அடுத்த பக்கம் மண்ணிற்கு வெளியே நிறைய கரி துண்டுகள் போட்டு நெருப்பு மூட்டுவான். வெள்ளையாக நீளமாக ஒல்லியாய், கம்பி கம்பியாக ஈயம் வைத்திருப்பார் பாய். அவரைச் சுற்றி வெகு சீக்கிரம் பழைய தவலைகள், அண்டாக்கள், குண்டாக்கள், செம்புகள், வாயகன்ற போசி, அடுக்குகள் நிரம்பிவிடும். எல்லாவற்றையும் யார் யார் வீட்டு சாமான்கள் என்று பிரித்து வைத்துக் கொள்வார். பையன் துருத்தி அடிப்பான். வாயைத் திறந்து திறந்து அது மூடும்போது காற்று மண்ணிற்குள் அவன் செய்த சுரங்கம் வழியாக புஸ் புஸ் என்ற சத்தத்தோடு அடுத்த முனையில் எரியும் கரிக்கு உஷ்ணம் கொடுக்கும். சில சமயங்களில் எங்களையும் துருத்தி அடிக்க அனுமதிப்பான். துருத்தி அடிக்க எங்களுக்குள் போட்டி. அதற்கு முன் பாய் எங்காவது கண்ணில் தெரிகிறாரா என்று சிஷ்யப் பையன் பார்த்துக் கொள்வான்.

பாய் கோபக்காரர். எங்களை துருத்தியை தொட அனுமதிக்க மாட்டார். கண்ணால் கண்டாலே போ போ என்று விரட்டுவார் எங்களை. கெட்டவார்த்தை நிறைய பேசுவார்.

துருத்தியின் புஸ் காற்றில் அடுத்த பக்கம் நெருப்பு எரிய, அந்த சூட்டில் பாத்திரங்கள் உள்ளே முதலில் கருப்பாக இருக்கும். என்ன மாயம்? பாய் அந்த ஈயக்கட்டியை கொஞ்சமாக பத்திரத்தின் உள்ளே கோடுகளாக கிழித்து ஒரு அழுக்கு துணியால் துடைப்பார். புகை வரும். ஒரு கார நெடியடிக்கும். இருமல் வரும். புகைக்கு இடையே, வெள்ளை வெளேரென்று கண்ணை பறிக்கும் பாத்திரத்தின் உட்புறம். வெள்ளியாக அது மாறுவது எங்களுக்கு உலக மகா அதிசயம். ஈயம் பூசிய பாத்திரங்களை ஒரு தவலை தண்ணீரில் கொஞ்சம் எடுத்து அலம்பி கொடுப்பார் பாய். தண்ணீரில் போட்டவுடன் ஜிஸ் என்று சப்தம் நுரையோடு, குமிழிகள் கொப்புளங்களோடு தண்ணீரில் அமிழ்ந்த அந்த சூடான பாத்திரம் சூடு ஆறியவுடன் சாதுவாக இருக்கும். எங்களை விட்டு ஈயம் பூசிய பாத்திரங்களை ஒவ்வொரு வீட்டிலாக கொண்டு போய் கொடுக்க சொல்வதில் எங்களுக்கு பெருமை. காசு மட்டும் தானாகவே போய் வாங்கி கொள்வார்.

அப்துல்லா என்ற ஒரு நடு வயது உயரமான ஆள். சிகப்பாக இருப்பார். சுருள் சுருளாக தலை முடி. அந்தகால ராஜ் கபூர் மாதிரி ஒரு கவர்ச்சியான முகம் அதே மீசை. கண்களை சுருக்கிக் கொண்டு நெற்றியில் சுருண்டு விழும் முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டே பேசுவார். கையில் ஒரு பெரிய தடி. அதன் முனையில் சிவப்பு, பச்சை, நீலம், ஆரஞ்சு போன்ற கலர்கள் கொண்ட இனிப்பு சுற்றி வைத்திருப்பார். அரையணா முதல் ஓரணா வரை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் கைகளில் அந்த நீண்ட ஜவ்வு போன்ற கலர் மிட்டாயை எடுத்து கொஞ்சம் திரித்து பாம்பு மாதிரியாகவோ, கடிகாரம் மாதிரியோ சுற்றி விடுவார். அதை கொஞ்சம் நேரம் அப்படியே எல்லாருக்கும் காட்டி மகிழ்ந்த பிறகு பையன்கள் பெண்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக அதை சாப்பிட்டு விடுவார்கள். எங்கம்மா இதை வாங்க அனுமதிகாததால் இன்று வரை அதன் ருசி யான் அறியேன் பராபரமே.

கோவிந்தம்மா மோர் கூடையில் கொடுக்காப்புளி நிறைய பறித்து வந்து விற்பாள். எங்களுக்கு எப்போதாவது இலவசமாகவே கொஞ்சம் கிடைக்கும்.

அவள் வாரம் ஒரு நாள் கமர்கட் என்ற ஒரு மிட்டாய் பண்ணிக் கொண்டு வருவாள். (சமீபத்தில் ஒரு பொட்டலம் கமர்கட் ஒரு பெரிய கடையில் வாங்கினேன். அழகிய ஒரு பாக்கெட்டில் 4 சிறிய எள்ளுருண்டை போல் கமர்கட். அதன் விலை 25 ரூபாய்).

அரை அணாவிற்கு இதை விட மிகப் பெரியதாக கம கம வென்று தேங்காய், வெல்லப்பாகு மணம் வீச கோவிந்தம்மா கொடுத்த கமர்கட் மகிழ்ச்சி அளித்தது. இனி இந்த ஜென்மத்தில் அது மீண்டும் கிடைக்கப் போவதில்லை. அந்த ஒரு கமர்கட்டுக்கு ஒரு மாச சம்பளமே தர ஆசை. ஆனால் இப்போது நான் சம்பாதிக்கவில்லை என்பதால் இவ்வளவு தாராளமாக வார்த்தை வீசுகிறேனோ?

பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் மாமாவின் கடைசிப் பையன் ஆராவமுது ஒருநாள் எங்களோடு கமர்கட் சாப்பிட்டான் என்று அவன் அண்ணன் பாபு போய் வீட்டில் சொல்லிவிட்டதால் கோபாலாச்சாரி கையில் வேப்பங் குச்சியோடு வேட்டையாடி கடைசியில் ஆராவமுது ஓடமுடியாமல் கீழே விழுந்து பிடிபட்டு முதுகில் வேப்பஞ்குச்சி விளைவித்த தழும்புகளோடு வீட்டில் அழுது கொண்டிருந்ததை ஜன்னல் வழியாக பார்த்து பயந்தோம். ரொம்ப ஆசாரம் அவர்கள் வீட்டில். வெளியே கண்ட இடத்தில் எதையும் யாரிடமும் வாங்கி தின்பது அவர்களைப் பொறுத்தவரை பஞ்ச மகா பாதகத்தில் ஒன்று என்று எனக்கு அப்போது தெரியாது.

இன்னும் நிறைய பேர்கள் அந்த காலத்தில் தெருவில் வந்தவர்கள் இப்போது காணோம். இனி அவர்களை இந்த ஜென்மத்தில் காணமுடியாது. ஏன் ? காலம் மாறி போச்சு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...