Wednesday, February 27, 2019

LADDU



திருப்பதி லட்டு J K SIVAN

இன்றும் இந்த உலகத்தில் ஒரு கண் கண்ட அதிசயம் உண்டு என்றால் அது திருப்பதி பாலாஜி தான். கோடானு கோடி பக்தர்கள் உலகெங்குமிருந்து வந்து லக்ஷக்கணக்காக குழுமி மணிக்கணக்காக கால் தரிசிக்கும் ஒரே தெய்வம் திருப்பதி திருமலை வேங்கடேசன் தான். அவரைப்பற்றி தெரியாத விஷயமே இல்லை. காலம் காலமாக ஓயாமல் ஒழியாமல்,ஓய்வு இன்றி தரிசனம் கொடுக்கும் ஒரே தெய்வம் ஸ்ரீ பாலாஜி.

ஹிந்துக்கள் மட்டும் அல்ல, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஏன் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் கூட அவரை விரும்பி தரிசித்திருக்கிறார்கள்.

கிழக்கிந்திய வர்த்தக வெள்ளைக்காரர்களாகட்டும், பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளாகட்டும் எத்தனையோ பேர் வேங்கடேசனின் பக்தர்கள். கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற ஆங்கிலேய கி. இ. கம்பெனி அதிகாரிகள் கூட பெருமாளின் பக்தர்கள் . வெள்ளைக்காரர்களும் வித வித நேர்த்திக் கடன்களையும் செலுத்தி உள்ளனர் என்று சரித்திர புத்தகங்கள் சொல்லும்போது, அதைப் படிக்கும்போது பெருமையாக இருக்கிறது.

''பெரும் ஆள்'' என்று பெயர் பெற்ற வெங்கடேச பெருமாள் கலியுகத்தில் கண் கண்ட தெய்வம், கலியுக வரதன். எவர் என்ன வேண்டினாலும் அதை நிறைவேற்றி அருள்பவர் என்று உறுதியோடு இருக்கும் கோடானுகோடி பக்தர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். திருப்பதி போய்விட்டு வந்தேன் என்றாலே, எங்கே லட்டு என்று எல்லோரும் பிரசாதம் தேடுகிற அளவுக்கு திருப்பதி லட்டு பெருமை பெற்றது. புனிதமானது.

லட்டு பிரசாதம் எப்போதில் இருந்து திருமலையில் தர ஆரம்பித்தார்கள்? இதற்கு ஆதாரம் எதுவும் காகிதத்தில், கல்வெட்டுக் குறிப்பில் எல்லாம் கிடையாது. கிட்டத்தட்ட கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது தகவல்.

மறைந்த எங்கள் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கத்தின் தலைவர் ஸ்ரீ கீரனுர் ராமமூர்த்தி மிக அழகாக ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சி பிரசங்கம் செய்வார். கண்களை மூடி கேட்டுக்கொண்டிருப்போம். மலையடிவாரத்தில் அலிப்பிரியில் இருந்து மெதுவாக அடிமேல் அடிவைத்து ஏழு மலைகளையும் தாண்டி வெங்கடேசன் தரிசனம் செய்துவைத்து மீண்டும் கீழே அழைத்துவந்து நம் வீட்டிலேயே நம்மை கொண்டு விடுவார். நாங்கள் நிறைய கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஸ்ரீனிவாச கல்யாணம் வழக்கம் பழங்காலத்தில் இல்லை. ஸ்ரீநிவாசர் திருக்கல்யாண உத்ஸவம்,கி.பி. 1546-ஆம் ஆண்டில் தாளப்பாக்கம் திருமலை ஐயங்கார் என்பவரால் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. அப்போது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம். அந்த கல்யாண உத்சவத்தில் லட்டு விநியோகம் பண்ணியதாகவும் தகவல் இல்லை. பிரசாதமாக பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி போன்றவையே வழங்கப்பட்டதாக தான் ஒரு கல்வெட்டு பேசுகிறது. த் தகவல் சொல்கிறது.

20ஆம் நூற்றாண்டில்தான் எப்போதோ கல்யாணம் ஐயங்கார் என்பவர் ஒருவர் முதல் முதலாக லட்டு விநியோக காரணகர்த்தா என்று படித்தேன். அட பழங்கால நமது முன்னோர்கள் திருப்பதி லட்டு சாப்பிடாதவர்களா என்று தோன்றியது.

1932ஆம் வருஷம் தான் TTD என்கிற திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உதயமாகியது. மடப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையும் ‘மிராசி’கள் என்பவர்கள் பொறுப்பில் இருந்தது. ஐந்து மிராசிகளுக்குப் பிரதிநிதியாக ஒருவர். அப்படிப்பட்ட ஒரு பிரதிநிதி தான் லட்டுவை அறிமுகப்படுத்திய கல்யாணம் ஐயங்கார். ஒட்டுமொத்த மடப்பள்ளி நிர்வாகத்தையும் இவரே பொறுப்பேற்று நடத்திய தகவல் இன்றும் திருப்பதி தேவஸ்தான குறிப்பேடுகளில் இருக்கிறது.

ஒருநாள் திருப்பதி திருக்கல்யாண உத்ஸவத்துக்கு ‘கொண்டந்தா லட்டு’ (''கொண்டா'' என்றால் மலை ) என்கிற ஒரு பிரார்த்தனையை தெலுங்கு பக்தர் ஒருவர் செய்தார். அதற்குரிய பணத்தையும் தேவஸ்தானத்தில் கட்டினார். அதன்படி பல்லாயிரக்கணக்கான லட்டுகளைத் தயாரித்து திருக்கல்யாண வைபவத்தை ‘ மலை’ க்க வைக்கும்படி ஜமாய்த்துவிட்டார் கல்யாணம் ஐயங்கார் என்று படித்தேன். லட்டு விநியோகத்திற்கு பணம் கட்டிய பக்தர் நிச்சயம் ரொம்ப திருப்தி அடைந்திருப்பார். அன்றைய தினம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதமாகத் தங்களுக்குக் கிடைத்த லட்டைப் பல பக்தர்களும் வீட்டுக்கு எடுத்துச் சென்று அக்கம் பக்கத்தி னருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். மூதறிஞர் சக்ரவர்த்தி ராஜாஜி அவர்களே, கல்யாணம் ஐயங்கார் தயார் செய்த லட்டுவின் பெருமையை ஒரேயடியாக பாராட்டி புகழாரம் சூட்டி இருக்கிறார். இப்போது அந்த ''மிராசி'' இல்லை. மிராசி வழக்கத்தின் ஓரு கண்டிஷன் என்ன வென்றால், தேவஸ்தானத்தில் 51 லட்டு தயாரித்தால், அதில் இருந்து 11 லட்டை மிராசி குடும்பத்தினருக்குக் கொடுத்து விட வேண்டுமாம். இதில் விருப்பம் இல்லாத திருப்பதி தேவஸ்தானம், சுப்ரீம் கோர்ட் வரை போய் மிராசி நடைமுறையையே ஒழித்துவிட்டது. இப்போது லட்டு தயார் செய்யும் பணியை தேவஸ்தானமே மேற்கொண்டு விட்டது.

திருப்பதி பெருமாளுக்கு அவ்வப்போது திருமலையில் திருக்கல்யாண உத்ஸவம் ஆலயத்திலேயே கோலாகலமாக நடந்து வந்தது. இது 1940ஆம் ஆண்டில் இருந்து நித்ய கல்யாண வைபவம் ஆயிற்று. இந்தக் கல்யாண வைபவத்தில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் எல்லோருக்கும் இனிப்பாக லட்டு வழங்கப்பட்டது. 1943ஆம் ஆண்டிலிருந்து, பெருமாள் கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. அதே சமயம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளாத பலரையும் இந்த விநியோக முறை ஏங்க வைத்தது. ‘கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொண்டால் மட்டும்தான் லட்டு பிரசாதமா?’ என்று தேவஸ்தான அதிகாரிகளிடம் குறைப்பட்டுக் கொண்டனர். அதன்பின் தேவஸ்தான அதிகாரிகள் அமர்ந்து பேசி, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆலய தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்குவது என்று தீர்மானித்துச் செயல்பட ஆரம்பித்தனர். பிறகு, அதுவே நிரந்தரமாகிவிட்டது.

ஸ்ரீவாரி பிரசாதம் என்றும் லட்டு பிரசாதம் என்றும் திருப்பதி லட்டைத் தயாரிக்க பிரத்யேகமான ஒரு மடப்பள்ளியே திருமலையில் வேலை செயகிறது. ‘பொடு’ என்று அதற்குப் பெயர். பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, பெருமாள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சின்னதாக ஒரு லட்டு TTD நிர்வாகம் இலவசமாக தருகிறது. விற்பனைக்குச் செல்லும் லட்டுகளின் எடை சரியா என்று TTD ஊழியர்கள் பரிசோதிக்கிறார்கள்.காசு கொடுத்து தாங்கள் வாங்கும் லட்டின் எடை சரியாக இருக்கின்றதா என்பதை பக்தர்களே சோதித்து அறிவதற்கு, லட்டுகள் விற்பனை செய்யப்படும் மையத்துக்கு அருகில் மின்னணுத் தராசும் உள்ளது. கள். இதையும் மீறி லட்டின் தரம் குறித்தும், எடை குறித்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. லட்டு விற்பனை மூலம் TTD வருடத்துக்கு பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. 2007ல் ரூபாய் 103 கோடி 2009ல் 125 கோடி . இப்போது பத்து ஆண்டு கூட ஆகிவிட்டதே. ஆட்களும் அதிகம். கோடிகளின் அளவு அதிகமாகவே இருக்கும். எவ்வளவு தான் தயாரித்து விற்றாலும், வழங்கினாலும், இன்னும் சிலர் ''எனக்கு லட்டு கிடைக்கவில்லை'' என்கிறார்கள். இதிலும் டூப்ளிகேட் லட்டு, போலி லட்டுகள் நிறைய விற்பனை ஆகிறதே. TTD இதையும் கவனித்து ஆவன செய்கிறது. லட்டு செய்ய தேவையான மூலப் பொருட்களைத் பரிசோதனை செய்த பின், நேரடியாகவே கொள்முதல் செய்கிறது. மும்பையில் இருக்கிற ஸ்பைசஸ் போர்டு நிறுவனம்ஏலக்காய் மற்றும் முந்திரிப் பருப்பும், ஆந்திர மாநில அரசு நிறுவனமான விஜயா டைரியில் இருந்து நெய் வருகிறதாம்.

உலகத்தையே தன் பக்கம் சுண்டி இழுக்கும் திருப்பதி லட்டு இப்போது காப்புரிமை பெற்று நேர்த்தியாக ருசிக்கிறது. காப்புரிமை பதிவு அதிகாரிகளிடம் TTD ‘எங்கள் ஆலயம் தயாரிக்கும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை’ என்று பதிவு செய்துள்ளது. பலே TTD . திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே சைஸில் – சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி வெங்கடேசன் ஆலயத்தில் நமக்கு கிடைக்கும் TTD வழங்கும் லட்டு மட்டுமே.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...