Thursday, February 14, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹா பாரதம்

கணவன் உயிர் மீட்டவள்

சாவித்திரியின் எதிரே நின்றவன் பதில் சொன்னான்:
''பெண்ணே, என் பெயர் யமன். இதோ உன் மடியில் இருக்கிறானே, அம்மா, உன் கணவன் சத்யவானின் பூலோக ஆயுள் முடிந்து விட்டது அவனை எமலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறேன். நீ ஒரு பதிவ்ரதை என்பதாலும் கணவனை தெய்வமாக போற்றுபவள், நற்குணங்கள் படைத்தவள் என்பதாலும் உன் கண்ணுக்கு மட்டும் நான் தெரிந்தேன். உன்னோடு பேசவும் செய்கிறேன்''

' யம தர்மா, நான் கேள்விப்பட்ட வரை, மனிதர்கள் உயிரைப் பறிக்க உன்னுடைய தூதர்கள் தானே வருவார்கள். நீ எதற்கு வந்திருக்கிறாய்?''

''ஆம், வழக்கமாக என் தூதர்கள் தாம் வருவர். மிகச் சிறந்த மனிதர்களை, உன் கணவன் போன்ற அப்பழுக்கற்ற நற்குணங்கள் கொண்ட , பெற்றோருக்கு பணிவிடை செய்து, கடமை தவறாமல் வாழ்ந்த உயிர்களைப் பறிக்க நானே வருவேன். சத்யவானின் உயிர் ஒரு சிறு கட்டை விரல் அளவில் எமனின் பாசக் கயிற்றுள் அடங்கியது. அவன் உடல் கீழே கிடந்தது. யமன் திரும்பி சத்யவான் உயிரோடு தெற்கு நோக்கி சென்றான். சாவித்திரியும் பின் தொடர்ந்தாள் .

'' பெண்ணே நீ எதற்கு என்னைப் பின் தொடர்கிறாய். இந்த எல்லை தாண்டி நீ வரக்கூடாது. உனது கணவன் உடலுக்கு வேண்டிய கிரியைகளைச் செய். போ'' என்றான் யமன்.

''ஏழு அடிகள் தொடர்ந்து நடந்தாலே வாழ்க்கையில் நட்பு உண்டாகிறது. நான் உன்னோடு பேசிக்
கொண்டு இருக்கிறேன். பக்தையாகவும் தொடர்ந்து வந்திருக்கிறேனே. எனக்கு உதவ வேண்டாமா''

''உனக்கு ஒரு வரம் தருகிறேன் உன் கணவன் உயிரைத் தவிர வேறு ஏதாவது கேள் ''
''என் கிழ மாமனாருக்கு கண் பார்வை திரும்ப வேண்டும்.. ''
சரி அப்படியே'' இனி நீ செல்லலாம்.
மேலும் யமனைப் பின் தொடர்ந்து சாவித்ரி சென்றாள்.

''இல்லை தர்மராஜா. ஆத்மா, தன்வசம் இல்லாமல் எவனும், பிரமச்சாரி, கிரஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்நியாசி ஆகமுடியாது. அந்தந்த ஆச்ரமத்துக்குண்டான கடமைகள், ஞானம், இன்றி வாழ்க்கை நிறைவு இல்லாமல் போகும். என் கணவன் என் ஆத்மா. அவன் எங்கு இருக்கிறானோ, எங்கு செல்கிறானோ அங்கே நானும் போவேன். அவனோடு இருப்பேன்.

''பெண்ணே, உன் கற்பு, தியாகம், நேர்மை, பண்பு எனக்கு பிடிக்கிறது. உன் கணவன் உயிரைத் தவிர வேறு இன்னும் ஒரு வரம் கேள். தருகிறேன். அத்துடன் இங்கிருந்து உடனே சென்றுவிடு''

என் கணவனின் தந்தை மீண்டும் ராஜ்யத்தை பெற்று அவர் அரசனாக தனது கடமையை புரிய அருள வேண்டும்''

''அவ்வாறே. ராஜ்யமும் திரும்பப் பெற்று தனது கடமையும் புரிய வரம் தந்தேன் . இனியும் இங்கு நிற்காதே திரும்பிச் செல். இன்னுமொரு வரமும் தருகிறேன் உன் புருஷன் உயிரைத் தவிர. கேள்.''

''நன்றி தர்மராஜா, என் தந்தைக்கு நான் ஒரு பெண்ணாக பிறந்தேன். அவருக்கு புத்திர பாக்கியம் வேண்டும்''

''அடாடா, அதுவும் கொடுத்தாகிவிட்டது. இனியும் தொடராதே. வரக்கூடாத இடத்துக்கு வெகு தூரம் என்னோடு நடந்து வந்து விட்டாய். பூலோகத்தில் வாழும் எவரும் இங்கே உடலோடு வரக்கூடாது. திரும்பிச் செல் ''

''என் கணவனைத் தொடர்வதில் எனக்கு எந்த களைப்பும் கஷ்டமும் இல்லை. தர்மாத்மா, நீங்கள் விவஸ்வானின் புத்திரன். அதனாலேயே வைவஸ்வதன் என்ற பெயரும் கொண்டவர். உங்களைப்போல், உலகில் எல்லோரையும் போல், தர்மம் கடைப்பிடிக்க எனக்கும் சத்யவானுக்கும் வம்சவ்ரித்திக்கு புத்ரபாக்கியம் வேண்டும். அனுக்ரஹம் செய்யவேண்டும்.

'பெண்ணே, தர்மத்தை நன்றாக அறிந்து கொண்டவள் நீ. உனது பரோபகார சிந்தனையை மெச்சி உனக்கு நீ வேண்டிய வரம் அளிக்கிறேன்'' என்றான் யம தர்மன்.

சாவித்திரி யமனை வணங்கி நன்றி கூறி நின்றாள்.

''ஏன் இன்னும் நிற்கிறாய். நீ கேட்டதெல்லாம் கொடுத்தாகி விட்டதே செல் இங்கிருந்து''-- யமன்.

''தர்ம தேவதையே, நீங்கள் சற்று முன்பு அளித்த வரம் எவ்வாறு என் கணவன் இன்றி நிறைவேறும்? அவருக்கு உயிர் பிச்சை கொடுத்து உங்கள் வரம் நிறைவேற அருள் புரியவேண்டும்''

''ஆஹா, பிறகு என்னாயிற்று என்று யுதிஷ்டிரன் கேட்க, மார்கண்டேயர் தொடர்கிறார்:

''சாவித்திரி, நீ ஒரு பதிவ்ரதை, சத்தியவானுக்கேற்ற சத்யவதி. இதுவரை நடக்காதது இப்போது நடக்கும். உனது தர்மம் வென்று அதன் மூலம் சத்தியவான் உயிர் பெறுவான். நீயும் அவனும் இன்னுமொரு நானூறு ஆண்டுகள் புத்திர பௌத்ரர்களோடு வாழ்வீர்கள்'' என்று அருளினான் யமதர்மன்.

யமன் சென்றுவிட்டான். சாவித்திரி திரும்ப சத்தியவான் உடல் கிடந்த இடம் வருகிறாள். அவன் தலையை எடுத்து மடியில் வைத்து த்யானம் செய்ய, சற்று நேரத்தில் சத்தியவான் தூங்கி எழுந்தவன் போல் கண் திறந்தான்.. THOSE WHO ARE INTERESTED IN OBTAINING MY ''AINDHAM VEDHAM'' BOOKSET MAY CONTACT ME 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...