உனக்கு ஈடு நீயே - J.K. SIVAN
சந்திரனுக்கு சோமன் என்று பெயர்.அவன் வம்சத்தில் வந்தவர்கள் யாதவர்கள். கிருஷ்ணன் அவதரித்த வம்சம் யாதவகுலம். யாதவ குல முரளி என்று எவ்வளவு பாட்டுகளில் பாடுகிறோம். க்ஷத்ரியர்கள் ஒன்று சூரியவம்சம் ரவிகுலம் அல்லது சந்திரகுலம் , சோம வம்சம். என்று தான் அடையாளம் கொள்வார்கள். ராமா ரவிகுல சோமா என்று ராமனை பாடுகிறோம். ராமர் சூரியவம்சம். கிருஷ்ணன் சந்திர வம்சம்.
பிருந்தாவனம் ஒரு ஆன்மீக உலகம்.கோ லோக பிருந்தாவனம், வ்ரஜ பூமி என்று அதற்கு பெயர்.
இந்த யாதவ குல கிருஷ்ணனாக பிறக்க மஹா விஷ்ணு சங்கல்பித்தார். பலராமனோடு கிருஷ்ணனும் அவதரித்த ஒரு அதிசயம் இந்த பிறவி. ஒரு பூர்ண அவதாரம். கிருஷ்ணன் விஷ்ணு தத்துவத்தின் ஆதி காரணம். கோவிந்தன் என்ற பெயர் கொண்ட தெய்வீக பிறவி. மஹாவிஷ்ணுவின் மூச்சில் தான் கோடானுகோடி ஜீவன்கள் தோன்றுகிறது. கிருஷ்ணனை விளக்கி சொல்ல ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலேயே கூட முடியாது. கிருஷ்ணனாக அவதரித்து கண்ணன் சொன்னது செய்ததெல்லாம் மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே. கிருஷ்ணனை ப்பற்றி எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும், பாடினாலும் ஏன் அலுக்கவே இல்லை.மேன்மேலும் ஆர்வம் பெருகுகிறது என்பது இதனாலேயே தான்.

வாழ்க்கையை வாழத்தெரியாதவன், பசுவை கொல்பவனுக்கு கிருஷ்ணன் புரியாது. ரசிக்காது. கிருஷ்ணன் பசு இரண்டையும் பிரிக்கமுடியாது. கிருஷ்ணனை அறியாமல் வாழ்வது தற்கொலைக்கு சமானம் என்று சொல்லலாமா? அற்புதமான இந்த மானுட வாழ்க்கையை வாழத் தெரியாதவன் தானே உயிரை மாய்த்துக்கொள்ள, தற்கொலைக்கு தயாராகிறான். மஹான்கள் கிருஷ்ணனை ஸ்மரித்து, பாடி, படித்து, பேசி, நமக்கு எத்தனையோ பேரின்ப வழிகளை காட்டி இருக்கிறார்கள். ஏன்? பவ ரோகம் எனும் இந்த பிறவிநோயினின்றும் விடுபட இது ஒன்றே வழி. ஆகவே தான் கிருஷ்ணன் கதைக்கு பவ ஒளஷதம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உலக வாழ்க்கையின் பற்றுதல்கள் விலக உதவும் மருந்து.
துருவன் தவமிருந்தான். பல வருஷங்கள் கழிந்து நாராயணன் எதிரே தோன்றினான்.
''உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் துருவா''
'' பகவானே எனக்கு எல்லாம் கிடைத்து திருப்தியாக இருக்கிறேன். இந்த உலக பற்று புலன்களின் ஆதிக்கம் என்னை விட்டு அகல அருள்வாய் பரந்தாமா. அது ஒன்றே போதும்'' என்றான் துருவன்.
சுகப்பிரம்ம மஹரிஷி, கிருஷ்ணனின் தாமரைப்பதங்கள் எனும் படகினால் என் தாத்தா அர்ஜுனனும் மற்றவர்களும்,குருக்ஷேத்திர யுத்தம் எனும் கடலை கடந்து அதில் எதிர்ப்பட்ட பீஷ்மர் எனும் திமிங்கிலத்தை கூட வெல்லமுடிந்தது. கடக்கமுடியாத சமுத்திரத்தை ஒரு கன்றுக்குட்டியின் குளம்பு சுவடு போன்றதாக கடக்க முடிந்தது. என் தாய் உத்தரை, '' கிருஷ்ணா நீயே கதி என்று சரணடைந்தபோது கையில் சுதர்சன சக்ரம் ஏந்தி என் தாய் கர்ப்பத்தில் குடியேறி, கிருஷ்ணன் அஸ்வத்தாமன் என்னை அழிக்க எய்த பிரம்மாஸ்திரத்தை தடுத்து என் உயிர் காத்து இந்த பாண்டவ வம்சம் அழியாமல் காத்ததை உங்கள் மூலம் அறியும் போது, விஸ்வரூபம் காட்டி இந்த உலகில் அதர்மம் நீங்க தர்மம் தழைக்க நான் வருவேன் என்ற கிருஷ்ணனிடம் என் நன்றி உணர்ச்சியை நான் எப்படி வெளிப்படுத்துவேன் '' என்று கதறுகிறான் பரீக்ஷித்.
No comments:
Post a Comment