Wednesday, February 13, 2019

KRISHNA TALKS



​ ​ ]
''பேசாமலேயே பேசுவான்'' ​ J.K. SIVAN
​ ​ ​
கடவுளைக் கோயிலில் தேடுகிறோம். நம்மில், நம்மோடு, நம் எதிரில், அருகிலேயே, ஏன் , எங்குமே ''காணும்'' அவனை நாம் காண்பதில்லை. நமக்கு அவனைக் ''காணோம்''.. அவனைக் காண ​வெறும் ​ கண் மட்டும் போதாது. அதை இயக்கம் மனம் வேண்டும், ஈரமான இதயம் வேண்டும். ஆகாயத்திலே மட்டும் தேடிக்கொண்டிருந்தால் அருகில் எப்படி தெரிவான்?.

ஆச்சர்யமாக இருக்கிறதே. ''இப்போ கூட கிருஷ்ணன் நம்மோடெல்லாம் பேசுவாரா? ரங்குவிற்கு சந்தேகம்​. இப்போது தான் ரெண்டு மணி நேரம் பஞ்சு பாகவதரின் பிரசங்கம் கேட்டான். பஞ்சு பாகவதர் கிருஷ்ணன் பேசியதெல்லாம் நேரில் கேட்டது போல் அழகாக வர்ணித்தாரே.​​
​​
அவ​​னும் நண்பன் பாபுவும் ஒரு ரோடுசைட்​ ​கையேந்தி பவனில் தோசை காபி சாப்பிட்டுக்​ ​கொண்டிருந்த போது தான் ரங்குவிற்கு மேலே கண்ட சந்தேகம் முளைத்தது.

''எனக்கென்னவோ​ ​பஞ்சு பாகவதர் சொன்னமாதிரி கிருஷ்ணன் இன்னும் நம்மோடு தான் இருக்கிறார் எப்போ வேணுமானாலும் நம்மிடம் பேசுவார் டா பாபு '' என்றான் ரங்கு.

பாபு தோசையை விழுங்கிக்கொண்டே சொன்னான். ''பேசுவார் பேசுவார். சரிடா நாளைக்கு​ பாகவதர் பிரசங்கத்தில் மறுபடியும் பார்ப்போம்''​ . பாபு போய்விட்டான். ரங்கு வழியெல்லாம் கிருஷ்ணன் பேசுவானா என்பது பற்றியே சிந்தித்துக்கொண்டு வீடு நோக்கி சைக்கிளை மிதித்தான். இரவு மணி பத்தரை.

''கிருஷ்ணா, உண்மையிலே நீ பேசுவாயா? என்னிடமும் பேசேன். உன் குரல் கேட்க ஆசையாக இருக்கிறதே எனக்கு'' ரங்கு ஏங்கினான். சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவன் பச்சையப்ப முதலி தெருவில் திரும்பவேண்டியவன் பகதூர் சந்தில் ஏன் சைக்கிளைத் திருப்பினான்? எதற்கு அவன் சைக்கிள் அங்கிருந்த நாகசாமி சூடான பால் கடை முன் நின்றது? எதற்கு நாலு கப் பால் வாங்கினான்? எனக்கோ​ வீடு இல்லை. ஒத்தை ரூம். யாருமில்லை. ஒண்டிக்கட்டை. எதற்கு இப்போது 4 கப் பால் வாங்கினேன்?​ . எதற்கு இந்த தெரு வந்தேன்?​ ​. கிருஷ்ணா, ஒருவேளை நீ தான் இவ்வாறு எனக்கு கட்டளையிட்டாயோ.?

பதில் கிடைக்கவில்லை அவனுக்கு.​ ​அவன் சைக்கிள் மீண்டும் பச்சையப்ப முதலி தெரு நுழைந்தது. நேரே ரெண்டு கிலோ மீட்டர் சென்று வடக்கே வாராவதி மீது ஏறி இடது பக்கம் ராஜாமணி சினிமா கொட்டகை அருகே உள்ள தெருவில் மூன்றாவது கட்டிடம் அவனுடைய ஒத்தை அறை இல்லம். வீட்டுக்காரன் பாலுமுதலி 11 மணிக்கு வாசல் விளக்கை அணைத்து கதவை பூட்டி விடுவான். கறார் பேர்வழி.

''கிருஷ்ணா​, நீ தான் என்னை பால் வாங்க வைத்தாயோ. சரி சரி. பதில் சொல்லாவிட்டால் என்ன. எதற்கு பால் வாங்க புத்தி போனதோ தெரியாவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை. நாளை காலை ரெண்டு மடக்கு குடித்தால் டிபன் காசு மிச்சம்.''

வாராவதி எதிரே தோன்றியது. மேலே ஏறிப் போகாமல் ஏன் வாராவதிக்கு கீழே மேற்கே திரும்பினான். கால்வாய் ஓரமாக நீலகண்டன் குறுக்கு சந்து என்று ஒரு பலகை பேரைக் காட்டியது. சைக்கிளை மிதித்துக்கொண்டு அதில்​ எதற்கு செல்லுகிறான்? எதிரே ஒரு​ குப்பை லாரி வழி மறைக்க அதற்கும் காய்கறி கை வண்டிக்கும் இடையே உள்ள கொஞ்சம் இடைவெளியில் சாமர்த்தியமாக அவன் சைக்கிள் ஊர்ந்து சென்றது.

''என்ன பைத்தியக்காரத்தனம் இது'' ரங்கு தன்னையே கடிந்து கொண்டான். ஆனால் சைக்கிள் மேலே மேலே சென்றது. குறுக்கு சந்தின் கடைசிவரை வந்தவன் ஒரு மாமர தோட்டத்திற்கு அருகில் உள்ள பாதி கட்டியிருந்து வர்ணம் பூசாத சிமெண்ட் ​ஷீட் முன் பக்கம் சரிந்த ஒட்டு வீடு வாசலில் நின்றது.​ வண்டியை நிறுத்தி அந்த கட்டிடம் அருகே சென்றான். அது நீண்டு ஒரு ஸ்டோர் மாதிரி இருந்தது. முதலில் மூங்கில் தட்டி வைத்த​ கதவு வீடு.​ கதவு சாத்தியிருந்தது. அடுத்து நீல கலர் கம்பி கிராதி போட்ட ஜன்னல் தெரிந்த வீடு. அதில் உள்ளே ஒரு 25 வாட் பல்ப் வெளிச்சம். இது யார் வீடு?. யார் இருக்கி
றார்கள் இதில்? அவனுக்கு அந்த தெருவே புதிசு. அவன் இதுவரை வந்ததில்லையே. சுற்றுமுற்றும் பார்த்தான். ரோஷினி டைலர்ஸ் என்ற ஒரு கடை.​ அதுவும் ​ மூடியிருந்தது. நடுவே குப்பை தொட்டி. அடுத்து அரசு பலசரக்கு கடை. அதன் கதவும் மூடப்பட்டு இரவிலும் ஒரு பெரிய வெள்ளை பூட்டு மினு மினுவென தொங்கியது.

ரெண்டு தெருநாய்கள் அரை மனதோடு அவனைக்​ ​க​டிக்கலாமா வெறுமே ​ஸாஸ்திரத்துக்கு ​ குலைத்தால் மட்டும் போதுமா என்று யோசனை செய்தன. ரங்குவின் கால்கள் தானாகவே அந்த கம்பி கிராதி ஜன்னல் வீட்டை நோக்கி நடந்தன. கதவை தட்டச் சொல்லி ஒரு உந்துதல். யார் இங்கே இருப்பவர்கள்?​ தூங்கும் நேரமாச்சே. எதற்கு கதவைத் தட்டினேன்?

''கிருஷ்ணா என்ன இதெல்லாம். எனக்கு பைத்தியமா பிடித்துவிட்டது? சரி கிருஷ்ணா இது உன் கட்டளை தான் போல இருக்கிறது. நடப்பது நடக்கட்டும். கதவை த்தட்டினதில் யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். ஒல்லியாக கண் பஞ்சடைந்து ஒரு முதியவர் கொஞ்சமாக கதவைத்திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி '' யாரு?' என்ன வேணும்?'' என்றார் .

''இந்தாங்க'' சூடான பால் பாக்கெட் கை மாறியது.
''என்னதுங்க இது. எதுக்கு, யார் நீங்க.''
என் பேர் ரங்கராஜன். இந்தாங்க சூடான பால். உங்களுக்கு தான்''

கிழவனுக்கு ஆச்சர்யம். ராத்திரி 11 மணிக்கு யாரோ ஒருவன் வந்து பால் சூடாக கொடுத்தான் என்றால்..!'',
கிழவன் பாலோடு உள்ளே சென்றான். ஒரு வார்த்தையோ மறு வார்த்தையோ அவன் பேசவில்லை. அடுத்த கணம் ஒரு இளம் பெண் கையில் ஒரு அழும் கைக்குழந்தையோடு தோன்றினாள் . அவள் கண்களில் காவேரி.​ ​கூடவே அந்த பெரியவர். பேசினார்:

''​ஐயா நீங்கள் யாரோ தெரியவில்லை. என் பெண் பாமா. குழந்தைக்கு பால் வாங்கக் கூட காசில்லை. இப்போது தான் கொஞ்ச நேரத்திற்கு முன் ''கிருஷ்ணா நான் ஒரு வழியும் அறியாமல் கையில் சல்லிக் காசுமில்லாமல் இருக்கிறேனே. குழந்தை பசியால் வாடுகிறதே. செல்லாக் காசும் இல்லையே. இரவில் கண் தெரியாமல் எப்படி என் அப்பா வெளியே போய் எங்காவது பால் வாங்கி வருவார் என்று வேண்டினாள் ​. ​நானும் கிருஷ்ண பக்தன் தான். ''சுவாமி நீதான் எதாவது வழி காட்டவேண்டும். நீ தீன ரக்ஷகன் அல்லவா? என்று கெஞ்சினேன். ​ இந்த வீட்டின் மேல் கடன் கொடுத்தவன் நாங்கள் இன்னும் திருப்பித் தராத பாக்கிக்கு எங்கள் இந்த பழைய ஓட்டை வீட்டை ஜப்தி செய்ய ஒரு வழக்கு ​ நாளைக்கு ​ விசாரணைக்கு வருகிறது​ . வீட்டை காலி செய்யவேண்டும்​. ஒரு வாடகை வீட்டுக்கு மாறவேண்டும். வண்டிக்கூலிக்கு கூட பணம் இல்லையே.​ கிருஷ்ணா இந்த குழந்தை பசியால் வாடி துடிக்கவிடுவாயா.''
என்று கெஞ்சினேன். ​ ​அஞ்சு நிமிஷம் கூட ஆகலை. நீங்கள் யாரோ தெரியவில்லை பாலுடன் வந்து நிற்கிறீர்கள். கிருஷ்ணன் தான் உங்களை அனுப்பியிருக்க வேண்டும். அவரா உங்களை இங்கு பால் கொண்டுவரச்செய்தது.? அந்த கிழவர் பொக்கை வாயில் கேட்டது ரங்குவின் காதில் விழவில்லை. கண்கள் குளமாயின. ​ ரங்கு தனது கைப்பையை துழாவினான். ​எல்லாமாக ​ 108 ரூபாய் தேறியது . அதை அந்தக் கிழவர் கையில் வைத்து அழுத்தினான்.

சைக்கிள் ராஜாமணி சினிமா கொட்டகையைக் கடக்கும்போது​ ரங்குவின் சந்தேகத்துக்கு பதில் கிடைத்துவிட்டதே.
''​அது சரி ​108 ரூபாய் ஏன்?
பஞ்சு பாகவதர் 'உனது நாமங்களை அஷ்டோத்ரம் என்றும் சஹஸ்ர நாமம் சொல்ல முடியாவிட்டால் உங்களால் முடிந்த 108 சத நாமாவளி யாவது சொன்னால் அவன் உங்களோடு என்றும் இருப்பான் . தினமும் சொல்லுங்கள் என்றாரே. நானும் சரி நாளையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பாபு விடம் சொன்னேனே. அதன் பிரதிபலிப்பா? கிருஷ்ணா நீ தான் என்னுள் பேசினவனா?​ . என்னை பகதூர் சந்து நாகசாமி பால் கடை போகவைத்து, 4 கப் பால் வாங்கச் சொல்லி அதை அந்த குறுக்குச் சந்து கம்பி கிராதி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு காத்திருக்கும் அந்த குழந்தையிடம் கொடுக்க வைத்தவன் என்பதில் எனக்கு சந்தேகம் இப்போ இல்லை''

தனது அறையின் கதவை திறந்துகொண்டிருந்த ரங்கு மனதில் சந்தோஷத்தோடு இருந்தான். மனம் லேசாகி இருந்தது.
'மாமா'' மாமா'' இந்தாங்க ?​ ரங்கு திரும்பினான்.​ ​
பாலு முதலி பெண் ருக்மணி அவனிடம் ஒரு கிருஷ்ணா ஸ்வீட் பாக்கெட் மைசூர்பாக்கை நீட்டினாள் ''
''எதுக்குங்க எனக்கு இது.''
''எனக்கு இன்று கிருஷ்ணாராவ் கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது.'' என்றாள் .
ரங்குவிற்கு அது கிருஷ்ணன் அவனைத்தேடி வந்து கொடுத்த பரிசாக தோன்றியது.
'கிருஷ்ணா நீ பேசுவாய். ஆனால் மற்றவர்கள் மாதிரி இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது'' என்றான் ரங்கு தனது அறையில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு புன்னகைக்கும்​ ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவை சொசைட்டி ​ பட ​ கிருஷ்ணனிடம்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...