Tuesday, February 19, 2019

PANCHAYATHANA POOJA

இறைவா ,உன்னை நினைத்து.....J.K. SIVAN


நான் தமிழன், ,தெலுங்கன், மலையாளி,கன்னடிகன் இப்படி அடையாளம் காட்டிக்கொள்வதை விட நான் ஒரு ஹிந்து, இந்தியன் என்று சொல்லிக்கொண்டால் அனைவரும் அதிகமாக பெருமைப்பட முடியும். நமது சனாதன தர்மம் அவ்வளவு புகழ் வாய்ந்தது.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஸ்புடம் போடப்பட்டு தேர்ந்து கோடானு கோடி முன்னோர்களால் பாராட்டப்பட்டு வளர்ந்து வருவது. அதை மதம் என்று சொல்லவேண்டாம். மற்ற மதங்களை போல் எவராலோ தோற்றுவிக்கப்பட்டதில்லை. பல ரிஷிகள், முனிவர்கள், ஞானிகளால் பட்டை தீட்டப்பட்டது. இணையிலா, மதிப்பறியமுடியாத வைரம்.

ஹிந்துக்களுக்கு ஒரு சௌகரியம். எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் இஷ்ட தேவதை யாக கொண்டாட வசதி உண்டு. உருவம், பெயர் ஆடை, ஆபரணம், பிடித்த நைவேத்தியம் எதை வேண்டுமானாலும் அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம். இதில் நான் வழிபடும் தெய்வம் உயர்ந்தது, உன்னுடையது தாழ்ந்தது என்று சொல்பவனால் தான் சிக்கல் முளைக்கிறது.

பூஜை என்பது வழிபடும் முறை. மகா பெரியவா நித்ய பூஜை செய்வதை பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக தெளிவாக பார்ப்போம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமாக பூஜை செய்யலாம். நேரம் காலத்திற்கேற்ப சுருக்கமாகவும் செய்ய வழி உண்டு. பத்தே நிமிஷம் போதும்.ஆபீஸு க்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாக பூஜை ஒன்றை செய்யலாம். செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் பூஜை அறையிலோ, இருக்கும் ஒரே அறையிலோ நித்யம் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

இதற்கு தான் பஞ்சாயதன பூஜை என்று ஒரு வழி இருக்கிறது. ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் உருவங்களை (மூர்த்தி) வைத்துப் பூஜை . உருவங்கள் போல் அங்கங்கள் , விக்ரஹங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் (சாளக்ராமம்) ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். வழக்கம்.

சிவனுக்கு, ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.
அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
அதில் தங்க ரேக் ஒடுவது தெரியும்.
விஷ்ணுவிற்கு ஸாளக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது.
சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.
விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து பெறுகின்ற இந்த ஐந்து கற்களையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகிறது இல்லையா.?.

ஏற்கனவே மேலே சொன்னது போல் இந்த ஐந்துக்கும் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை.உருவம் இல்லை.
அழுக்கேற இண்டு இடுக்கு இல்லை. அபிஷேகம் செய்து துடைக்க ஒரு சில நிமிஷம். எல்லாம் சின்னச் சின்ன கற்கள். எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பூஜா மண்டபம் .எதுவும் வேண்டாம். ஒரு சின்ன டப்பா, (சம்புடத்தில்) வில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போகும் போதும் சம்புடத்தை எடுத்து பெட்டியில் வைத்துக்கொண்டு கிளம்பலாம். பூஜைக்கு பத்து நிமிஷம் கூட ஆகாதே. பூஜை செய்வதில் சிரமமே இல்லை. பூஜைக்கு அர்ச்சனைக்குப் பூ எங்கேயாவது கிடைக்குமா என்ற கவலை தேவை இல்லை. கொஞ்சம் வில்வம், துளசி காய்ந்து போயிருந்தால், அதை உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் போதுமானது. சிவனையும் விஷ்ணுவையும் அதால் அர்ச்சிக்கலாம். மற்ற தெய்வங்களுக்கு ஒரு சின்ன டப்பாவில் அரிசி (அக்ஷதை) எடுத்துப் போனால் அதால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் (வடித்த சாதம்) எங்கே கிடைக்கும் என்று அலையவேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கொஞ்சம் பூஜை பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தால் அது போதும். நிவேதித்து விடலாம்.

ஆகவே நண்பர்களே, மேலே சொன்ன ஐந்து மூர்த்திகளையும் , துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை ஆகியவற்றை கைக்கு அடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம். நாம் தான் நடமாடும் கோவில் ஆச்சே..

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்யும் சுலப வழிபாடு தான் பஞ்சாயதன பூஜை எனப்படும். இந்தப் புராதன வழிபாட்டை நமக்குச் சொல்லிக் கொடுத்தவர் ஆதி சங்கரர். ''இந்தா உனக்கு பிடித்த எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நீ வழி படு. இது உன் சுதந்திரம்'' என்று தான் ''ஷண்மத ஸ்தாபனம்'' உருவாகியது. மேலே சொன்ன ஐந்தோடு ஆறாவது
சுப்பிரமணியன் எனும் முருகனை உபாசிப்பது. இதற்கு சிறு வேல் போதும். ''வேலை வணங்குவது தவிர வேறென்ன வேலை '' என்று அற்புதமாக ஒரு பாட்டு இருக்கிறது. முருகன் சுப்பிரமணியன் வேலாயுதன். தமிழ்க்கடவுள்.

பூஜை செய்வது என்பது ஏதோ ஒரு பெரிய வேலை. அது நம்மால் முடியாது என்ற எண்ணம் போகத் தான் மேலே சொன்ன சுருக்கு வழி. மனசு இருந்தால் மார்க்கம் உண்டு. வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் சுத்தமான சாதம், அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்டி உண்ணலாம். நாம் அநுபவிப்பதற்காக இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை உண்டாக்கி அளித்திருக்கிறான் இறைவன். எத்தனை விதமான சௌகர்யங்கள், போக போக்யங்கள் பாக்கியங்கள். எல்லாவற்றையும் ''அனுபவி ராஜா அனுபவி'' என்று நமக்கு தந்திருக்கிறான். நன்றியோடு நாம் அநுபவிப்பதை
யெல்லாம் அவருக்கு ''இந்தாப்பா உனக்கு தான் முதலில் என்று சமர்ப்பித்துவிடுவது தான் நைவேத்தியம். அவருக்கே என்றா எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறோம். ஒரு சின்ன தட்டில், கிண்ணத்தில் கொஞ்சம். அதையும் அவருக்கு எதிரே வைத்து, சும்மா காட்டுகிறோம். பிறகு நாம்தான் அதை புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் சாமி சாப்பிடுகிறாரா? -- சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் சாமியை சாப்பிட வைப்பது என்று அர்த்தம் இல்லை. அவருக்கு எதுவுமே தேவையில்லை. நம் நினைவை, எண்ணத்தை
மனத்தை, சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை நைவேத்தியம் எல்லாமே. 'நிவேதயாமி' என்றால் ஸமஸ்க்ரிதத்தில் ''படை க்கிறேன்'' என்று பொருள் இல்லை. "அறிவிக்கிறேன்" என்றுதான் அர்த்தம்.

'' என் அப்பனே, இந்த வேளைக்கு, உன் கருணையால், இந்த அன்னத்தை எனக்கு பசியாற உண்ணக் கொடுத்திருக்
கிறாய்'' என்று அவனுக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ணுகிறோமே அது தான் சாதத்தை ப்ரசாதமாக்குகிறது. பிணி தீர்க்கும் மருந்தாக்குகிறது.

இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். யாராலாவது ஒரு மணி அரிசியை தயாரிக்க முடியுமா சார்? செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்தாலும் அதற்கான ரசாயன பொருள், chemicals அவன் அளித்தது தானே. அவன் சிருஷ்டித்தது தானே? அதனால் தான் ''அவனன்றி ஓரணுவும் அசையாது'' . புரிகிறதா? அவன் அளித்ததை அவனுக்கு முதலில் மனதில் திருப்தியோடு,நன்றியோடு காட்டக்கூட இல்லாமல் நாமே அனுபவித்தால் நாம் குற்றவாளிகள். ஆகவே தான் சாப்பிடும்போது எல்லா தெய்வங்களையும், பிராணனையும் நினைத்து ஸ்வாஹா என்று அளித்துவிட்டு கடைசியில் இந்த உணவை எனக்கு கிடைக்க வைத்தவர்கள் அனைவரும் சுகமாக நன்றாக வாழவேண்டும். ''அன்னதாதா சுகீ பவா'' என்று வாழ்த்துவது.

எங்கும் இருப்பவன், எந்த உருவிலும் நாம் விரும்பியபடியே அருள்வான். கல்,மண், செம்பு,உலோகம், எந்த பொருளிலும் எந்த உருவிலும் விக்ரஹமாக நாம் விரும்பிய தோற்றத்தில் ஆலயங்களில் அருள்கிறான். அவன் கருணையின் வடிவம். அன்பின் மறுபெயர்..



சுருக்கமாக சொன்னால் பூஜை என்று ஒன்றை செய்து, நமது குடும்பங்கள் இறைவனோடு வாழ்ந்து, அவனைக் கூப்பிட்டு, நீ கொடுத்ததை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அவனை நினைவு கூர்ந்து நன்றியோடு ''அறிவிக்க'' வேண்டியது அவசியம் என்று நமது முன்னோர்கள் நமக்கு நிறைய சொல்லிக்கொடுத்தார்கள். நமக்கு மறதி அதிகமாகி விட்டது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...