Tuesday, February 12, 2019

RAMANUJAR



வைஷ்ணவ மஹநீயர்கள்   J.K. SIVAN 
ஆளவந்தார் 

          அகந்தை மிக்க பண்டிதனை வென்ற ஆளவந்தார் 


மகா  மேதாவி,  பண்டிதன், எல்லோரும் கதி கலங்கும் கோலாஹலனோடு  ஒரு சிறு பிள்ளை வாதம் செய்யப்போகிறானாம்  என்கிற சேதி எங்கும் பரவியது.  மதுரை அதனை  அடுத்த கிராமங்களில் கூட செயதி காட்டுத்தீ போல் பரவியது. எல்லோரும் அதை எதிர்பார்த்திருந்தார்கள்.

சிங்கத்தோடு சிறு முயல் குட்டி வாதம் செய்வதைக்கான எண்ணற்றோர்  திரண்டனர்.   ஏற்கனவே தோற்றவர்கள் மனம் வாடினர். 

 "பகவானே, இந்த சிறு பிள்ளைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. அதே சமயம் எங்களைப் போலவர்களை மீட்க  இவன் சக்திவாய்ந்தவனாக அமையவேண்டும் உன் கிருபையால்'' என்று வேண்டினார்கள். யாமுனாசார்யாரை வாழ்த்தினார்கள்.

''ராணி,  இதோ பார் நம் கண் முன்னே இந்த  எலிக்குஞ்சு   நமது கடுவன் பூனையிடம் மோதி  இரையாவதை'' என ஏளனமாக  சிரித்தான் பாண்டிய மன்னன் .

''இல்லை பிரபோ, எனக்கு அப்படி தோன்றவில்லை. ஆனானப் பட்ட மகா பலி சக்ரவர்த்தி கூட இப்படி தானே  அந்த  நாராயண வாமனனைப் பார்த்ததும் தப்புக் கணக்கு போட்டார்.  இந்த பிள்ளை  சாதாரணன் இல்லை என்று படுகிறது. ஒரு சிறு  தீப்பொறி  பஞ்சு மலையையே சாம்பலாக்கி விடுமல்லவா?'' என்றாள்  ராணி.

''அதெப்படி  அவ்வளவு நம்பிக்கை உனக்கு?  உண்மையிலேயே நமது  கோலாஹலனை  இந்த பையன் வெல்வான் என்கிறாயா  என்ன  பந்தயம் வைக்கிறாய் சொல்?'' என்றான்  பாண்டியன்.

''பிரபு.   ஒருவேளை  இந்த சிறுவன்  தோற்றால்  நான்  உங்கள் வேலைக்காரிகளில் கடை நிலையானவ
ளுக்கும்  வேலைக்காரியாகிறேன்.''

''ஆஹா  என்ன நம்பிக்கை உனக்கு. ரொம்ப  பெரிய  ஆபத்தான பணயம் வைத்து விட்டாய்.  சரி  ராணி,   நானும் அதற்கேற்றவாறு உன்னிடம் ஒரு பந்தயம் வைக்கிறேன். இந்த சிறுவன் ஜெயித்தால், எனது ராஜ்யத்தில் பாதி அவனுக்கு தான். சரியா?''   ராஜா  ராணி  இருவருமே சிரித்து மகிழ்ந்தார்கள்.

பல்லக்கு வந்தது, யாமுனாச்சர்யார் இறங்கி உள்ளே வந்தார். கோலாஹலன்  பார்த்து சிரித்தான்.  ''ஓஹோ  இவர் தான்  நம்மை  ''ஆள  வந்தாரோ?''  (என்னை ஜெயிக்க வந்தவரோ?')  என்று கேலி செய்தான்.

ராணி பதில் சொன்னாள். '' ஆமாம்  கோலாஹலரே ''உம்மையும் நம்மையும்  '' ஆள வந்தார்' என்றாள் . அவள் உள்ளுணர்வு  எப்படியும் யாமனச்சார்யார் ஜெயித்துவிடுவார் என்றது.

போட்டி ஆரம்பித்தது.   ஸமஸ்க்ரித  இலக்கணத்தில் வியாகரணத்தில், நிகண்டுவில், எல்லாம் சில கேள்விகள்.    பளிச்சென்று பதில் சொன்னார் யாமுனாசார்யார். அடுத்து  நிரடலான பதங்களுக்கு அர்த்தம்.  சர்வ சௌலப்யத்தோடு பதில் வந்தது.

கோலாஹலனுக்கு  வியர்த்தது.

'' என்ன பண்டிதரே, சிறுவன் என்பதற்காக என்னிடம் சுலபமான கேள்விகளைக்   கேட்கிறீர்களோ?அஷ்டாவக்ரன் என்னை விட சிறியவன்  ஜனகர் அரண்மனையில்  பந்தி என்கிற  ஆஸ்தான பண்டிதனை தோற்கடித்தது,   ஞாபகம் இருக்கிறதா?   ஒருவேளை  ஞானம்  உருவத்தில் தான் என்று நினைத்தால், அதோ தெரியும்  அந்த  குட்டையில் கிடக்கும் எருமை உங்களை  விட  பெரிய பண்டிதன், ஞானி அல்லவா?! ''

அரசன் கை தட்டினான்.  சபாஷ்,  பையா இப்போது உன் முறை. நீ கேள்வி கேள்.  கோலாஹல பண்டிதர் பதில் சொல்லட்டும்'' என்றான் அரசன்.

''அப்படியே  மகாராஜா, பண்டிதரே  உம்மிடம்  மூன்று விஷயம் சொல்வேன். அதை  தவறென்று மறுக்க வேண்டும். தக்க ஆதாரத்தோடு  நிரூபித்தால் நான் தோற்றவன் என்று ஒப்புக் கொள்கிறேன்,  சரியா?''   என்றார் யாமுனாசார்யார்.

நெஞ்சில் கலவரத்தோடு கண்களில் பயம் தோன்ற பண்டிதன் தலை ஆட்டினான்.

1 முதலாவது :     உமது தாய் ஒரு மலடி அல்ல. இதை தவறு என்று  மறுக்க, நிரூபிக்க முடியுமா உம்மால்?''
பண்டிதன் விழித்தான். எப்படி இதை தவறென்பது?  என் தாய்  மலடி என்றால் நான் பிறந்து இந்த அவதிப் பட மாட்டேனே'' என நினைத்தான்.  பேசாமல் இருந்தான்.   சபை அவன் அமைதியை  ஆவலாக பார்த்தது. எங்கே பதில்?

2.  '  அடடா, எவ்வளவு பெரிய பண்டிதன், கெட்டிக் காரர் . உம்மால்  முதல்  விஷயத்தையே மறுக்க முடியவில்லையோ.  சரி. ரெண்டாவது விஷயம்.

''இதோ இந்த பாண்டிய  மன்னன் நேர்மையானவன், நீதி மான், தர்மிஷ்டன், யோக்யன், பாபங்கள் தீமைகள் இல்லாதவன்'' .   இல்லை என்று உம்மால் மறுக்க முடிந்தால் பதில் வரட்டும் ''

பண்டிதன் நடுங்கினான். தலை சுற்றியது. முகம் வெளிறியது.   எல்லோரும் அவனது அவஸ்தையை பார்த்து ரசித்தனர்.

3. ''பாவம் போகட்டும் பண்டிதரே,   மறுக்க இயலாத உமது இக்கட்டான நிலை புரிகிறது. சரி இந்த  மூன்றாவது விஷயத்தையாவது மறுத்து என்னை வென்று விட  ஒரு வாய்ப்பு தருகிறேன்''.

''இந்த ராஜாவின் அருகில் அமர்ந்திருக்கும் ராணி  சதி சாவித்திரி போல் ஒரு பதி விரதை. கற்புக்கரசி.  ஒருவனின் மனைவி மட்டுமே.   பண்டிதரே நீர்  எல்லாமும் அறிந்தவர்.  ஆணித்தரமாக  ஆதாரத்தோடு நான் சொன்னது தவறு என்று மறுத்து  நிருபித்து  என்னை வெற்றி கொள்ளுங்கள்'' என்றார் யாமுனாசார்யார்.

பண்டிதன் விழித்தான். கண்களில் ஜலம்.  இந்த சிறுவனிடம் வகையாக மாட்டிக்கொண்டேனே. எப்படி அவன் சொல்வதை என்னால் மறுக்க  முடியும்.மறுத்தால் என் உயிர் தப்புமா?

கோபத்தில் வெறி கொண்டு  பண்டிதன் கத்தினான்.'ஏ  முட்டாளே,  எவ்வாறு ஒரு ராஜாவின் பிரஜையாக இருக்கும் நான் என் அரசன் ஒரு  அதர்மன், நீதியற்றவன், என்றோ  அவன் மனைவி  கற்பில்லாதவள் என்றோ கூற முடியும்.  உனது சொல்லுக்கு மறுப்பில்லை என்பதால்  நான்  தோற்றவனா ?  நீ சொன்னவைகளை நீயே மறுக்கமுடியுமானால் நீ தப்புவாய் இல்லையேல்  உனக்கு மரணம்'' என்றான்.

சபையோர்  இதை எதிர்த்தனர்.  கோலாஹலன்  ஒப்புக்கொண்டபடி மறுக்க முடியாமல் திணறினான். தோற்றான்''  என்றனர்.

''நிறுத்துங்கள்.   நானே என் சொற்களை மறுத்துக் காட்டுகிறேன்.   இதைக் கேளுங்கள் :

எல்லோரும்  யாமுனாசார்யாரை திறந்த வாய்  மூடாமல் சிலையாக அமர்ந்து கேட்டார்கள்.எப்படி இந்த சிறுவன் மறுக்க  முடியாதவற்றை மறுக்கப் போகிறான்?

''முதலாவதாக,   மனு சம்ஹிதையில்  ஒரு பிள்ளையை மட்டும் பெற்றவள் மலடி என்று வருகிறது.  ஒரே பிள்ளையாக பிறந்த பண்டிதரே,  நீங்கள் சாஸ்திரப் பிரகாரம் ஒரு மலடியின் மகன்.

ரெண்டாவதாக,  அதே மனு சம்ஹிதை பிரகாரம், ஒரு அரசன் தனது பிரஜைகளிடமிருந்து  ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்தும், ஆறில் ஒரு பங்கு  புண்யமும் பெற்று, அவர்களின்  அநீதி, அநியாயம், நேர்மை
யின்மை, தீய செயல்கள் அவற்றிலும் ஆறில் ஒரு பங்குக்கு  சொந்தக்காரன்  என்று வருகிறது.  கலியுகத்தில்  அதெல்லாம் அதிகமாகி விட்டதால்,  ராஜாவின் பங்கு நிறையவே  சேர்ந்து விட்டது. எனவே  ராஜா  அநீதிமான், அதர்மன், தீங்கு செய்தவன்,

மூன்றாவதாக,  அதே மனு சம்ஹிதையில் வருகிற விஷயம்  என்னவென்றால், அரசன்  என்பவன்  அக்னி, வாயு, வருணன், சந்திரன்,  யமன்,குபேரன் இந்திரன் சூரியனுக்கு சமம்  ராஜா  உண்மையில் எட்டு ஆசாமி. . எனவே  ராணி ஒருவனுக்கு மட்டும் மனைவி அல்ல. எட்டு பேருக்கு சொந்தமானவள். எப்படி  ஒருவனுக்கே மாலையிட்ட  மங்கை என்று சொல்ல முடியும்?''

''ஹா ஹா''  என்ன  சாதுர்யம், கோலாஹலா,   நீ சொன்ன படியே   உன்னை ''ஆளவந்தார்''   இந்த  சிறு  வயது யாமுனாசார்யார். நீ தோற்றுவிட்டாய் அவரிடம் என்பது எங்களது  தீர்ப்பு என்றனர்  பண்டிதர்கள்.

பாண்டியன் ஓடி வந்து அவரை அணைத்துக்கொண்டான். ''சூரியன் போல் ஒளிவீசி வந்த  இளைஞரே, நீரே வென்றீர். உமக்கு  மரண தண்டனை என்று சொன்ன  இந்த பண்டிதனுக்கு நீங்கள் என்ன தண்டனை அளிக்கிறீர்களோ சொல்லுங்கள், அதை நிறைவேற்றுகிறேன். என் வாக்கின் படி இந்த கணமே  என் ராஜ்யத்தின் பாதியை   நீங்களே இனி  ''ஆள  வந்தவர்''   என்றான்பாண்டிய மன்னன்.

ஆளவந்தார்  பாண்டிய மன்னனானார்.  பண்டிதனை  மன்னித்தார்.  எல்லோருமே சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.ராஜாவாக என்ன செய்தார் ? என்பதை  இன்னொரு  கதையில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...