Saturday, February 23, 2019

AINDHAM VEDHAM.


ஐந்தாம் வேதம்      J.K. SIVAN 
மஹா பாரதம்.

                     

       குளக்கரையில் கேள்வி பதில்
ஜனமேஜயனுக்கு அளவு கடந்த .ஆர்வம். என்ன சம்பவம் நடந்தது  த்வைத வனத்தில்? என வைசம்பாயனரைத் துருவித்துருவி கேட்டான்.  அவர் நிதானமாக என்ன சொன்னார் என்பதை  நாமும் கேட்போமா?

வேத காலத்தில் யாக யஞத்துக்கு அக்னியை உரசித் தான் தீப்பொறி உண்டாக்குவார்கள். த்வைத வனத்தில் வாழ்ந்த ஒரு பிராமண ரிஷி ஆஸ்ரமத்தில் வாசலில் ஒரு மரக்கிளையில் அவனது அரணிக் கட்டைகளை மாட்டி வைத்திருப்பது வழக்கம்.  ஒரு நாள் அந்தப் பக்கமாக வந்த ஒரு மானின் கொம்புகளில் அந்த அரணிக் கட்டை ஜோடி மாட்டிக்கொண்டுவிட்டதால் அத்தோடு அது ஓடிவிட்டது.  ப்ராமணரிஷி அதை பிடிக்க ஓடி கீழே  விழுந்தான்.

''ஐயோ எனது அக்னி ஹோத்ரம் என்னாவது?''  அரணிக்கட்டை இல்லாமல் எப்படி அக்னி  மூட்டுவது?  பிராமண ரிஷி க்கு  அந்த  வனத்தில் பாண்டவர்கள் வசிப்பது  தெரியும்.  ஓடிவந்து பாண்டவர்களிடம் முறையிட்டார். யுதிஷ்டிரன் உதவ முற்பட்டான். பாண்டவர்கள்  மானின் கால் தடத்தைப் பார்த்து தேடி  அந்த மான் மீது அம்பு தொடுத்தும் அது பிடிபட  வில்லை.  மாயமாய் மறைந்து விட்டது.

எங்கு தேடியும் மான் தென்படவே இல்லை. களைத்து ஒரு ஆலமரம் அடியில் பாண்டவர்கள் அமர்ந்தனர்.
யுதிஷ்டிரன் நகுலனிடம் '' இந்த மரத்தின் மேல் உயரே ஏறி எஙகேனும் குடிக்க நீர் அருவி, குளம் கண்ணில் படுகிறதா பார் '' என்றான்.

''பச்சைப் பசேல் என்று ஒரு திட்டு செடிகள், கொடிகளுடன் தெரிகிறது. நாரை வாத்து போன்றவை குரல் கேட்கிறது. அங்கே நிச்சயம் நீர் இருக்கும் போல் இருக்கிறது அண்ணா '' என்றான் நகுலன்.

 ''சரி தம்பி, நீ சென்று இந்த தோல் பை நிறைய நம் எல்லோருக்கும் குடிக்க நீர் எடுத்து வா''

சற்று தூரத்தில் அந்த திட்டு தெரிந்து அதன் அருகில் பளிங்கு நீர் ஓடும் ஒரு சிறு குளத்தையும் , நிறைய நாரைகள் அங்கிருந்து வந்து போவதையும் நகுலன் பார்த்தான். அருகில் சென்று அந்த குளத்தில் இறங்கி கை கால் முகம் கழுவி ஒரு வாய் நிறைய நீர் பருக முயலும்போது 

'' நில். அவசரப்படாதே.  இந்த நீரைப் பருகாதே. மரணமடைவாய். என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நான் சொன்னபிறகு நீர் பருகு''    என்று ஒரு குரல் கேட்டது. நகுலன் அந்த எச்சரிக்கையையோ, அதை அறிவித்த
வரையோ பற்றி துளியும் கவலைப் படாமல் நீர் பருகி சுருண்டு கீழே விழுந்து மாண்டான்.

''ஏன் நகுலன் குடிக்க நீர் கொண்டுவரப் போனவன் இன்னும் வரவில்லை. நீ போய் பார்த்துவா சகாதேவா,''
 என யுதிஷ்டிரன் சகாதேவதனை அனுப்ப, அவனும் அந்த தடாகத்தை கண்டு பிடித்து, அதில் இறங்கி முதலில் தான் நீர் பருக முயற்சித்தான். 

இந்த முறையும், ஒரு குரல் முன்பு போலவே எச்சரித்தும், சகாதேவனும் அதை லட்சியம் செய்யாமல் நீரைக் குடித்து மாண்டான்.

''என்ன ஆயிற்று நகுல சஹாதேவர்களுக்கு. அர்ஜுனா. எனக்கு  சந்தேகமாக இருக்கிறது. இங்கே  ஏதோ சூது,  மாயம் நடக்கிறது. நீ போய் என்னவென்று பார். தடைகள் இருந்தால்  வென்று, அவர்களை மீட்டு நீர் கொண்டுவா'' என்றான் யுதிஷ்டிரன்.
அர்ஜுனன் இரு சகோதரர்களின் உடலை பார்த்து ஆச்சர்யமும் விசனமும் அடைந்து காண்டீபத்தை எடுத்து எங்கு நோக்கியும் எவருமில்லை. முதலில் உடல் களைப்பை போக்குவோம் என்று நீரில் இறங்கி நீர் குடிக்க குனிந்தபோது மீண்டும் அதே குரல். என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு எவ்வளவு நீர் வேண்டுமானாலும் கொண்டு போ. இல்லையேல் உனக்கும்  மரணமே கிட்டும். '' அந்த குரலின் எச்சரிக்கையை அர்ஜுனன் லக்ஷியம் பண்ணவில்லை. 

''நான் நீர் குடிக்கிறேன் நீ என்ன செய்கிறாய் என்று பார்க்கிறேன். தைரியம் இருந்தால் என்னெதிரே வா. யார் மரணமடைகிறார்கள் என்று பார்ப்போம். அர்ஜுனன் நீரைக் குடித்தான். இறந்தான்.

''பீம சேனா. நிச்சயம் ஏதோ ஆபத்து. உடனே போ. மூன்று சகோதரர்களுமே வரவில்லை நீரோடு. அழைத்து வா அவர்களையும். ஏதோ ஒரு பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது.''

பீமன் அருவிக்கரையில் தனது சகோதரர்கள் பிணமாக கிடப்பதை கண்டதும் வெகுண்டான். யார் இதற்கு காரணமோ அவர்களைக் கொன்று விட துடித்தான். ஆனால் முதலில் தாகம் தீரட்டும் என்று நீரில் இறங்கியது வழக்கம்போல் குரல் ஒன்று எச்சரித்தது. பீமன் பதிலே பேசாமல் முதலில் நீரைப் பருகி பிறகு பிணமானான்.

நீர் கொண்டுவர சென்ற  நான்கு சகோதரர்களும் வெகு நேரமாக  திரும்பாததால்,  கவலையுற்ற யுதிஷ்டிரன் அவர்களைத் தேடிக்கொண்டு குளக்கரை அடைந்தவன் அதிசயிக்கிறான். யாருமே வெல்ல முடியாத அர்ஜுனன், பீமன் உடம்பில் ஒரு காயமுமின்றி, ஆயுதங்கள் உபயோகப் படுத்தாத நிலையில், எவரது காலடியும் தென் படாமல் எப்படி மரணம் அடையமுடியும். அவர்களை வீழ்த்திய  எதிரி அதீத சக்தி வாய்ந்த தெய்வமாகத்தான் இருக்கவேண்டும். அசுரர்கள், மிருகங்கள் நெருங்க முடியாத வீரர்களாச்சே இவர்கள். எதற்கும் முதலில் தாகம் தீரட்டும்.  பிறகு உண்மையைக்  கண்டுபிடிப்போம். நீரில் எந்த விஷமும் கலந்ததாக தெரியவில்லையே. சகோதரர்கள் உடலில் நிறம் மாற வில்லையே. உலகில் மரணம் சம்பவிக்க வேண்டுமானால் அது யமனின் முடிவு தானே. இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது '' என்று யுதிஷ்டிரன் தீர்மானித்தபோது மீண்டும் அதே குரல். அதே எச்சரிக்கை. நீரைப் பருகாமல் யுதிஷ்டிரன் பதிலளித்தான்.

' நீங்கள் யார்?

' உன்  எதிரே நீரில்  நிற்கும் நாரை யைப்பார். அது தான் நான்.  இந்த பொய்கைக்கு உடைமையாளன். என் சொல் கேளாமல் யம தர்மனின் கோட்டைக்கு சென்ற உன் சகோதரர்களைப் போல் ஐந்தாவது ஆளாக சாகாமல் நீயாவது என் கேள்விகளுக்கு பதில் சொல்லி உயிரைக் காப்பாற்றிக்கொள்''

' நீங்கள் நிச்சயம்  ஒரு நாரை அல்ல. தெய்வமோ, தேவதையோ என்பது நிச்சயம். என்ன காரணத்துக்காக இப்படி என் சகோதரர்கள் உயிரை பழி வாங்கினீர்கள் என்பது தெரியவில்லை. வணக்கத்தோடு உங்களை வேண்டுகிறேன். நீங்கள் யார் ?''

''நான் ஒரு யக்ஷன் என சொல்லியவாறு அவன்ஒரு  யக்ஷன்  யுதிஷ்டிரன் எதிரே தோன்றினான்.'
' உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்''.

யக்ஷன் சட் என்று கேட்கும் கஷ்டமான கேள்விகளுக்கெல்லாம் பட் என்று யுதிஷ்டிரன் பதில் சொல்லியதை ''அவசரக் கேள்வியும் அவசிய பதிலும் ' என்ற தலைப்பில் 123 கேள்வி பதில்களாக  இனி வெளிவரும்.   மஹா பாரதத்தில்  இதற்கு ''யக்ஷ ப்ரச்னம் ''என்று பெயர். ப்ரச்னம் என்றால் கேள்வி.  யக்ஷன் ய;யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்விகள். அதற்கு அவன் சொன்ன அற்புதமான பதில்கள்.
ஏற்கனவே  இந்த முகநூல் பகுதியில்  தமிழிலும் ஆங்கிலத்திலும்  எழுதி இருந்தேன்.  அவற்றை  படிக்கவில்லை என்றால் படிக்கலாம். தண்ணீர் குடிக்கும் முன்பு தான் படிக்கவேண்டும் என்ற கண்டிப்பு யக்ஷன் போல் என்னிடம் இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...