Thursday, February 7, 2019

PARASURAMAN



பரசுராமன் J.K. SIVAN
2. ஸ்தல யாத்திரை
ரவி குலம் எனும் சூரிய குலத்திலே ஒரு ராஜா. பெயர் கிருத வீர்யன். அவனது நாடு கேகயம். அவனது மனைவி சுனந்தா. அவர்களுக்கு ஒரு புத்ரன் பிறந்தான்.அவன் தான் கார்த்தவீர்யார்ஜுனன். அவன் ஒரு விசித்திர பிறவி. ஏனென்றால் பிறக்கும்போதே அவனுக்கு கைகள் கிடையாது. மிக்க வருத்தத்தோடு ராஜாவும் ராணியும் இறைவனை வேண்ட அவனும் தனது குறை நீங்குவதற்கு தத்தாத்திரேயரையே வணங்கி தவம் செய்தான் .

தத்தாத்திரேயர் என்பவர் மகரிஷி அத்ரி அனசூயா தம்பதியின் புதல்வர். மகரிஷி அத்ரி ''ஹே நாராயணா நீயே எனக்கு புத்திரனாக பிறக்கவேண்டும்''என்று வேண்டி தத்தாத்ரேயர் பிறந்தார் என்பார்கள். இப்படிப்பட்ட தத்தாத்ரேயரை தான் கார்த்தவீர்யார்ஜுனன் தவமிருந்து வேண்டினான். தத்தாத்ரேயர் அருளால் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள் கிடைக்கிறது. அளவற்ற பலம் கொண்ட மஹா வீரனாகிறான். அவனது வீரத்தை கண்டு அஞ்சிய அனைத்து அரசர்களும் கப்பம் கட்டி அவனிடம் ஏராளமாக செல்வங்களும் புகழ், பெருமையும் சேர்ந்தது. இதனால் அவனுக்கு தற்பெருமையும் கர்வமும் கூடிவிட்டது. அவன் மகரிஷியிடம் வரத்தால் அவனால் காற்றில் பறக்கவும் முடிந்தது.
மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து தனது அதிகாரத்தை செலுத்துகிறான்.

ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் கார்த்தவீர்யார்ஜுனன் ஸ்னானம் செயகிறான். தனது ஆயிரம் பலத்த கரங்களால் நர்மதையை அணை போல் கட்டி விடுகிறான். ஆற்றின் எங்கோ ஒரு பக்கத்தில் ராவணன் அப்போது தீர்த்த யாத்திரைக்கு வந்தவன் நீரற்ற ஒரு பகுதியில் தனது சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்கிறான். கார்த்தவீர்யார்ஜுனன் திடீரென்று தனது கைகளை விலக்கிக் கொண்டதும் நர்மதை ப்ரவாஹத்தோடு ஓடுகிறாள். ராவணேஸ்வரன் வைத்திருந்த பூஜை பொருள்கள் நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. ராவணன் சிவ பூஜை கெடுகிறது. கோபத்தில் ராவணன் விஷயமறிந்து கார்த்தவீர்யார்ஜுனனோடு மோதுகிறான். ஆனால் தோற்று கார்த்தவீர்யார்ஜுனனின் தலைநகர் மாஹிஷ்மதியில் சிறைப்படுகிறான். பிறகு புலஸ்தியர் ஒருவாறு கார்த்தவீர்யார்ஜுனனை சமாதானப்படுத்தி ராவணன் விடுதலையாகிறான்.

மற்றொரு சமயம் தனது படை வீரர்களோடு கார்த்தவீர்யார்ஜுனன் ஒரு காட்டில் வேட்டைக்கு செல்கிறான். வேட்டையை முடித்துவிட்டு திரும்பும்போது காட்டில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் கண்ணில் படுகிறது. அங்கே சென்ற கார்த்தவீர்யார்ஜுனன் அது ரிஷி ஜமதக்னி முனிவருடைய ஆசிரமம் என்று அறிகிறான்.

பசியால் வாடிய அவர்கள் அனைவருக்கும் முனிவர் சிரம பரிகாரம் செய்வித்து ஆகாரங்கள் அளிக்கிறார். தேவலோக பசு காமதேனுவால் அங்கே செல்வம் நிரம்பி வழிவதை காண்கிறான்.

''மகரிஷி இந்த அற்புதமான அழகிய காமதேனு எனும் பசுவை எனக்கு தாருங்கள் '' என்று கேட்டிருந்தால் அவர் .கொடுத்திருப்பாரோ என்னவோ. முனிவரும் அவர் இல்லாத நேரம் காமதேனுவை கடத்திச் செல்கிறான்.

ஆஸ்ரமம் திரும்பியபோது மகரிஷி ஜமதக்னி காமதேனுவைக் காணவில்லை என்றது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிகிறார். தனது மகன் பரசுராமனை அழைக்கிறார். ''பரசுராமா, மாஹிஷ்மதி நகரத்திற்கு நமது காமதேனுவை அவள் குழந்தையோடு கார்த்தவீர்யார்ஜுனன் கடத்திச் சென்றுவிட்டான். நீ சென்று அவற்றை மீட்டு வா '' என அனுப்புகிறார். கோடாலியோடு கிளம்பிவிட்டான் பரசுராமன்.

மாஹிஷ்மதிக்கு சென்ற பரசுராமன் கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். அவரை கார்த்தவீரியார்ஜுனன் எதிர்க்கிறான். தனது ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி கொடிய சரங்களை பரசுராமன் மீது பொழிகிறான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். சந்தோஷப் படாமல் ஜமதக்னி மிகவும் வருத்தப்படுகிறார்..

''என்ன காரியம் செய்துவிட்டாய் பரசுராமா, ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய க்ஷேத்ரங்கள் தரிசனம் செய்துவிட்டு வா!''

தந்தை சொல் தட்டாத பரசுராமன் அவ்வாறே ஒரு வருஷ காலம் ஸ்தலயாத்திரை செல்கிறார்



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...