Monday, February 18, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹாபாரதம்

ப்ரிதா பெற்ற வரம்

'வைசம்பாயன மஹரிஷி, எங்கள் மூதாதையர் பாண்டவ சக்கரவர்த்தி, யுதிஷ்டிரர் ஏன் கர்ணனைப் பற்றி மட்டும் கவலை கொண்டார்?. அவனிடம் அப்படி என்ன சக்தி இருந்தது? அவனை அழித்தாலன்றி பாண்டவர்கள் வெற்றிபெற முடியாது என்ற எண்ணம் எதனால் வந்தது?

''ஜனமேஜயா, நீ சமயோசிதமாக ஒரு கேள்வி கேட்டாய். பதில் சொல்கிறேன் கேள். கர்ணன் அம்ருத (மரணம் அணுகாத) கவச குண்டலத்தோடு பிறந்தவன். சூரியன் அருளால் அதை பெற்றவன். சிறந்த வற்றாத ஐஸ்வர்யம் சூரியன் அருளால் இருந்தததால் நிறைய தானம் தர்மம் செய்தான். பிராமணர்களுக்கு இல்லை என்ற வார்த்தையே இல்லாதவன்.

ஒரு நாள் இரவு சூரியன் கர்ணன் கனவில் வந்து ''கர்ணா, பாண்டவர்களுக்கு உதவ, உனது கவச குண்டலங்களை
தானம் பெற இந்திரனே ஒரு பிராமணனாக உருவெடுத்து உன்னை அணுகி கேட்கப் போகிறான். எக்காரணத்தை கொண்டும் அதை இழக்காதே. உன் உயிரைக் காப்பாற்றும் அவற்றை தானமாக கொடுத்து விட்டால் உன் மரணம் நிச்சயம். வேறு ஏதாவது பொருள் கொடுத்து அனுப்பிவிடு''

''என் மீது இவ்வளவு கருனையாக கொண்ட நீங்கள் யார்? என்கிறான் கர்ணன்.
''நான் சூரியன்.
''கதிரவனே, கடவுளே, நமஸ்காரம். உங்கள் அறிவுரை கேட்டு மகிழ்ந்தேன். எனது விரதம் உங்களுக்கு தெரியும். என்னிடம் இருப்பதை யாசகம் கேட்டு எவர் வந்தாலும் இல்லை எனும் வார்த்தை என்னிடம் இல்லை. என் உயிரையே தானமாக கேட்டாலும் மறு கணமே தரும் எண்ணம் என் மனதில் நிறைந்திருப்பதால் உங்கள் அறிவுரைக்கு நன்றி. தேவாதி தேவன் இந்த்ரனே என்னிடம் பிராமணனாக பொய் உரு எடுத்து யாசகம் கேட்டான் என்றால் அது அவனுக்கு தான் இழுக்கு. எனக்கு பெருமை. என் விரதத்துக்கு எந்த பங்கமும் வராமல் மூன்றுலகிலும் எனது தான தர்ம பெருமை நிலைத்தால் என் உயிர் எனக்கு பிரதானம் இல்லை'' என்றான் கர்ணன்.

''கர்ணா, உயிரோடு இருப்பவனுக்குத் தான் பெருமை கீர்த்தி சேர்க்கும். திருப்தி அளிக்கும். இறந்தவனுக்கு பெருமை அவன் பிணத்தின் மேல் இட்ட மாலைக்கு தான் சமம். நீ என்னை வழிபடுபவன் என்பதால் உன்னைக் காப்பாற்ற உனக்கு இதை உணர்த்தினேன். மற்றுமொரு காரணம், உன் மீதுள்ள பாசத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒரு காலத்தில் அது உனக்குத் தெரியவரும் . மீண்டும் சொல்கிறேன் கர்ணா, உன் கவச குண்டலங்கள் உன்னிடம் இருக்கும்வரை அர்ஜுனனாலோ வேறு எவராலோ உன்னை வெல்லமுடியாது. அவற்றை நீ இழந்தால் உன் உயிரையும் இழப்பது நிச்சயம்.''

''சூர்ய தேவா, நமஸ்காரம். எனக்கு உயிர் பெரிதல்ல. என் தான தர்ம புகழ் அணுவளவும் குறைய நான் சம்மதியேன். கவச குண்டலம் இல்லாமலேயே அர்ஜுனனை எளிதில் என்னால் வெல்ல முடியும் பிரபு.''

''நல்லது கர்ணா. உன் மனம் புரிந்து விட்டது. உன்னை, உன் தைரியத்தை மெச்சுகிறேன். என்றாலும் இந்திரன் உன் கவச குண்டலங்களை யாசகம் கேட்கும்போது அவனிடம் '' உன் வஜ்ராயுதத்தை அதற்கு ஈடாக எனக்கு கொடு'' என்றாவது கேள். அதைப் பெற்றால் உலகத்தில் ஒருவராலும் உன்னை வெல்ல முடியாது. உன் எதிரிகளும் அதிலிருந்து தப்ப முடியாது.''

சூரியன் மறைந்தான். கர்ணன் இந்திரனுக்காக காத்திருந்தான்.

''வைசம்பாயனரே, சூரியன் கர்ணனிடம் ஒரு காரணம் உனக்குப் பிறகு தெரியவரும் என்றாரே அது என்ன? கவச குண்டலங்கள் எப்படி கர்ணனிடம் பிறக்கும்போதே அமைந்தது?

''ஒருநாள் குந்தி போஜன் என்கிற ராஜாவிடம் ஒரு வயதான பிராமணன் நீண்ட தாடி, ஜடாமுடியோடு கையில் ஒரு கோலோடு வந்தான். ''நான் இங்கு சில நாள் தங்க உத்தேசம். உஞ்சவ்ரித்தி எடுத்து அதில் கிடைக்கும் உணவே போதும். எந்த தடையும் எனக்கு இருக்க கூடாது. எப்போது வேண்டுமானாலும் வருவேன் போவேன் உனக்கு இது சம்மதமா?'' என்றான்.

''ஆஹா, இது என் பாக்கியம். நீங்கள் என் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். என் மகள் ப்ரிதா உங்களை நன்றாக கவனித்து சேவை செய்வாள்'' என்றான் குந்தி போஜன்.

அதே போல் ப்ரிதாவிடமும் ''அம்மா பிரிதா , நீ வ்ரிஷ்ணி குலத்தவள். வாசுதேவன் சகோதரி. உன்னை என் பிரிய மகளாக வளர்ப்பதில் பெருமை. நீ நமக்கு அதிதி யாக வந்திருக்கும் இந்த பிராமணர் மனம் கோணாமல் அவருக்கு தேவையான சிச்ருஷை செய்து அவருடைய ஆசி பெறவேண்டும். செய்வாயா கண்ணே '' என்றான் ராஜா.
''அப்படியே செயகிறேன்'' என்றாள் ப்ரிதா.
ஒரு வருஷகாலம் போல அந்த பிராமணர் நினைத்த நேரத்தில் வந்து, நள்ளிரவிலும் உடனே உணவு வேண்டும் என்றெல்லாம் படுத்தி, அவள் செய்த எந்த சேவையிலும் குறை கண்டுபிடித்து அவளை மனம் நோக கடிந்து கொண்டாலும் ப்ரிதா மறு வார்த்தை பேசாமல் அவருக்கு வேண்டிய உபசாரம் செய்து, அவர் கடைசியில் விடைபெற்று செல்லு முன். ''குழந்தை, உன்னை வேண்டுமென்றே கடினமாக சோதித்தேன். நீ வெற்றி பெற்று விட்டாய். உனக்கு என்ன வரம் தேவை கேள் தருகிறேன்'' என்றார்.
''எனக்கு உங்கள் ஆசி ஒன்றே போதும்.''
''பெண்ணே, உனக்கு ஒரு மந்திரம் உபதேசிக்கிறேன். அதை உச்சரித்தால் பிரபஞ்சத்தில் எந்த தேவதையும், தெய்வமும் உன் எதிரே நின்று நீ கேட்பதை அளிக்கும்'' என்று ஒரு மந்திரம் உபதேசித்தார். THOSE INTERESTED IN OBTAINING THE COPIES OF AINDHAM VEDHAM TWO VOLUMES CAN CONTACT 9840279080



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...