Sunday, February 17, 2019

TAGORE


ரபீந்திரநாத் தாகூர் J.K. SIVAN

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா.....

இது ஒரு புது மாதிரியான கதை.... உங்களுக்கு பிடிக்கலாம்.. இதுவும் ரபீந்திரநாத் தாகூர் எழுதிய ஒரு சிறுகதை.
கொஞ்சம் நீளம். அதனால் ரெண்டாக ஒடித்து தருகிறேன்.

நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மையை சொல்லட்டுமா? நாம் கதைப் பிரியர்கள். முதல் வாக்கியம் நம்மை விறுவிறுப்பாக புத்துணர்வோடு தாத்தா, பாட்டி, அத்தை பக்கத்தில் நெருங்கி உட்காரவைத்தது என்ன என்று ஞாபகம் இருக்கிறதா? ''ஒரு ஊரிலே ஒரு காலத்திலே ஒரு ராஜா....'' எந்த ஊர், எந்த ராஜா, அவன் பெயர் இதுவெல்லாம் நமக்கு அவசியமில்லாமல் இருந்தது. அவன் என்ன செய்தான் என்று தான் ஆவலாக கேட்க காத்திருந்தோம். இப்போதைய குழந்தைகள் நம்மைப் போல் இல்லை. எந்த ஊர்? ராஜாவின் பெயர் என்ன. எப்போது இருந்தான்? ஏன், எதற்கு எப்படி ...... கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது. சில குழந்தைகள் பேய்க்கதை கேட்க பயப்படும். இருட்டில் எங்கு பார்த்தாலும் பேய்கள் நின்று கொண்டு வா வா என்று அழைப்பது போல் பதறும். நான் ராஜா கதை கேட்பதில் ஆனந்தம் அடைந்தவன்.

என் சிறுவயதில் நடந்தது நன்றாக நினைவிருக்கிறது. நான் ஒரு ஏழு வயது கல்கத்தா சிறுவன் அப்போது. அன்று கனத்த மழை. காற்று புயலாக வீசி சில்லென்று குளிர்காற்று உடலைத் துளைத்து எலும்புக்குள் சென்றது. எங்கும் பிரளயம் போல் மழை நீர். வெள்ளக்காடு. எங்கள் தெருவில் முழங்கால் ஆழம். எனக்குள் ஒரு ஆசை. பாழாய்ப்போன ட்யூஷன் வாத்யார் இன்று வரக்கூடாது. எங்கள் வீட்டு வெராண்டாவில் ஒரு மர ஸ்டூலில் நான் உட்கார்ந்து வெளியே தெருவில் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மார்பு படபடவென்று அடித்தது. ஒவ்வொரு நிமிஷமும் மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்தேன். கடவுளே மழையை விடாமல் இரவு ஏழரை மணி வரை பெய்யச்சொல். அப்புறம் அந்த ட்யூஷன் வாத்யார் வரமாட்டார். என்னைப்பொறுத்தவரை மழை என்பது கல்கத்தாவில் ஒரு சந்தில் இருக்கும் பையன் வீட்டுக்கு ட்யூஷன் வாத்யார் வராமல் இருக்க செய்வது ,பெய்வது. ட்யூஷன் வாத்தியாரிடம் இருந்து தப்ப வைப்பதற்கு தான். தலையில் பலமாக குட்டுவாரே. ஒருவேளை என் பிரார்த்தனை பலித்ததோ, அல்லது இயற்கை தானாகவே மழையை தொடரவிட்டதோ தெரியவில்லை. ஆனால் அந்த ட்யூஷன் வாத்தியார் குடையை பிடித்துக் கொண்டு வந்து தொலைத்துவிட்டார். அதோ தெரு முனையில் மெதுவாக தண்ணீரில் நடந்து கொண்டு குடையை பிடித்துக்கொண்டு வரும் அவர் தலை தெரிகிறதே. என் நம்பிக்கை சுக்கு நூறாக வெடித்தது. கடவுளே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், பாபத்திற்கு தண்டனை என்று ஓன்று இருந்தால் நான் ட்யூஷன் வாத்தியாராக பிறந்து அவர் என் மாணவனாக பிறந்து நான் அவர் தலையில் குட்டவேண்டும். தினமும் அவரை வாட்டி எடுக்க வேண்டும். இதோ குடை வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. உள்ளே ஓடினேன்.

என் அம்மாவின் அறையில் என் பாட்டியும் அம்மாவும் எதிரெதிரே அமர்ந்து வழக்கம்போல் சீட்டு ஆடுகிறார்கள். எண்ணெய் தீபம் வெளிச்சம். அம்மாவின் அருகே சென்று அவளை கட்டிக்கொண்டேன்.

''அம்மா அம்மா ட்யூஷன் வாத்யார் வந்துவிட்டார். எனக்கு தலை ரொம்ப வலிக்கிறது. இன்னிக்கு ட்யூஷன் வேண்டாம் எனக்கு. என்னால் படிக்க முடியாது '.(இதை எந்த மாணவ மாணவியும் படிக்க கூடாது. எந்த புத்தகத்திலும் இது ஒரு பாடமாக வரக்கூடாது. குழந்தைகளுக்கு இந்த கதை தெரியவேண்டாம். நான் செய்தது தப்பு. எனக்கு தண்டனை கிடைக்கவில்லை. என் கெட்ட எண்ணம் வென்றுவிட்டது.)
''சரிடா குழந்தே, ட்யூஷன் வாத்யார் வந்ததும் இன்று ட்யூஷன் வேண்டாம் என்று சொல்லி அவரை வீட்டுக்கு போக சொல்லி விடு'' என்றாள் என் அம்மா. அவள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தாள். நிஜமாகவே எனக்கு தலைவலியா என்று கவலைப்படவில்லை. சீட்டு ஆட்டம் தொடர்ந்தது. என் படுக்கையில் இழுத்து போர்த்திக்கொண்டு படுத்தேன். உள்ளூர சிரிப்பு. வாத்யார் வந்தார். தொப்பலாக மழையில் நனைந்து இருந்தவர் குடையை மடக்கி வெராந்தாவில் வைத்து விட்டு உள்ளே வந்தார். என்னை படுக்கையில் பார்த்தார்.தலைவலி நாடகம் ஆடி அவரை போக வைத்தேன். சரி என்று மழையில் குடையை பிடித்துக் கொண்டு திரும்பி சென்று விட்டார்.

ஏழு வயது பையனால் எத்தனை நேரம் இல்லாத தலைவலி நாடகம் ஆட முடியும்? வாத்யார் சென்ற அடுத்த கணம் எழுந்தேன். ஓடிச் சென்று பாட்டி கழுத்தை கட்டிக்கொண்டு ''பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு'' என்று கெஞ்சினேன். பல முறை கெஞ்சினதும் தான் அவள் சீட்டு ஆட்டத்தில் இருந்து மனதை திருப்பினாள் .

''கொஞ்சம் இருடா செல்லம். இதோ ஆட்டம் முடியப்போகிறது. அப்புறம் பார்க்கலாம்''
''இல்லே பாட்டி எனக்கு இப்பவே நீ கதை சொல்லணும்'. அம்மா, உன் சீட்டை நீ நாளைக்கு ஆடிக்கோ. இப்போ பாட்டியை விடு. பாட்டி எனக்கு கதை சொல்லணும் ' நான் விடாமல் துளைத்தேன்.

என் அம்மா பெருமூச்சு விட்டாள். ''சரி அம்மா இந்த ராக்ஷஸன் விளையாட விடமாட்டான். என்னால் அவனை சமாளிக்க முடியாது. நீ அவனை அழைத்துக்கொண்டு போய் கதை சொல்லு. போதும் சீட்டாட்டம் இப்போதைக்கு. நாளைக்கு விளையாடலாம்'' என்று சீட்டுகளை கீழே எறிந்தாள். ஒருவேளை நாளைக்கு ட்யூஷன் வாத்யார் வந்தால் என்னை ஒன்றரை மணி நேரம் பிடித்துக் கொள்வார் என்று நம்பிக்கை. அம்மா எழுந்து போய் சமையலறை சென்றுவிட்டாள். நான் பாட்டியை கட்டி இழுத்துக்கொண்டு என் கொசுவலைக்குள் அவளோடு படுத்துக் கொண்டேன்.

''பாட்டி இப்போ கதை சொல்லு..''
''ஒரு ஊரிலே ஒரு ராஜா. ... ஆஹா காதில் தேவாம்ருதம்.
''அந்த ராஜாவுக்கு ஒரு ராணி...'' ஆஹா எவ்வளவு நல்ல ராஜா. அந்த காலத்தில் ஒரு ராஜாவுக்கு எத்தனையோ ராணிகள். இவன் நல்ல ராஜா. ஒரே ஒரு ராணி மட்டும். நல்ல ராஜாவின் நல்ல கதை......
''அந்த ராஜாவுக்கு பிள்ளையே இல்லை.... ''
ஏழு வயதில் எனக்கு ராஜாவுக்கு பிள்ளை எதற்கு என்றோ , அவசியமா என்றோ எதற்கு அதனால் வருத்தம் என்றோ புரியவில்லை...
''ராஜா பிள்ளை வேண்டும் என்று காட்டில் தவம் இருக்க சென்றுவிட்டான்.'' நான் ராஜாவைப் போலவே காட்டிற்கு சென்றுவிட்டால் ட்யூஷன் வாத்யாரிடமிருந்து தப்பித்திருக்கலாமே....
''ராஜாவிற்கு ஒரு பெண் இருந்தாள் . அழகு பிம்பம். அவள் அழகு ராணியாக வளர்ந்து வந்தாள் ''
பாட்டியின் கதை தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...