Wednesday, February 20, 2019

BODY CLOCK



 உடல் கடிகாரம் - J.K. SIVAN

‘’பட்டு, நாளைக்கு காலம்பற மூணு மணிக்கு எழுந்தாதான் ஆறு ஏழுக்குள்ளே எல்லா வேலையும் முடியும். எழுப்பி விடறியா?

பட்டு எழுப்புவதற்கு முன்பே வெங்காச்சு என்கிற வெங்கடாச்சலம் மூணு மணிக்கே மொட்டாக தானே எழுந்து வெத்திலைப்  பெட்டியை தேடுகிறார். எப்படி? அது தான் நம் உடம்பின் சூக்ஷ்மம். உள்ளே ஒரு அருமையான கடிகாரம் ஓடுகிறது.    எப்போதோ விழுங்கிய கடிகாரம் இன்னும்  சரியாக வேலை செய் கிறதே. ஐந்தேமுக்காலுக்கு ட்ரெயின் என்றால் விடிகாலை நாலரைக்கு நம்மை கிளப்பி விட்டுவிடும்.

குறித்த நேரத்தில் சாப்பிட, தூங்க, வெளியே கிளம்ப வைத்துவிடும். இதற்கு ஆங்கிலத்தில் “Circadian rhythm”. CIRCADIAN எனும் வார்த்தை லத்தீன் பாஷை. சர்க்கிள் என்றால் வட்டம் அல்லவா? 
சுற்றிலும் முற்றிலும் திரும்ப குறித்த காலத்தில் இயங்குவது. காலையில் எழுவது, மதியம் சாப்பிடுவது, இரவு உறங்குவது போல. இயற்கை உயிரியல் கடிகாரம். மிருகங்கள், பறவைகள், தாவரங்களுக்கும் இந்த சக்தி உண்டு. மூளையின் வேலை இது. 

ஒரு ஆங்கில கட்டுரையில் இது பற்றி ஒரு விளக்கப் படம் தென்பட்டது. அதை அப்படியே தருகிறேன். தமிழில் எழுதி அதை எழுதி  கொலை செய்ய எனக்கு விருப்ப மில்லை. நமது உடல் எப்படி மூளை தரும் அதிகாரங்களை குறிப்பாக உணர்கிறது என்று அழகாக விளக்கும் படம். மெதுவாக படியுங்கள் புரிந்து கொள்ளுங்கள். மூளைக்குள்  ஒரு  நுண்ணிய பாகம் உள்ளது அதை ஆங்கிலத்தில் suprachiasmatic nucleus (SCN),
என்பார்கள். கண் நரம்புகளுக்கு மேலே பகவான் அதை அமைத்திருக்கிறார். 

''டே பயலே, பொழுது விடிஞ்சாச்சு. எழுந்திரு....   அடே,    ராத்திரி பிசாசே போய் தூங்கு'' என்றெல்லாம் கட்டளையிடுகிறது.   Melatonin, மெலடோனின் உற்பத்தி பண்ணி ராத்திரி பகல் உணர்வை கொடுத்து எழுப்புகிறது,  தூங்க வைக்கிறது.
.
நமது உடல் கடிகாரம் வெளியே தெரியும் இருட்டு, வெளிச்சத்துக்கு தக்கவாறு இரவு பகல் என புரிந்து கொண்டு இயங்குகிறது. அது உள்ளே இருப்பதால் வெளியே நடப்பது தெரியாது, அதற்கு  புரியாது. ஐம்புலன்கள் அதற்கு உதவி   செய்ய விஷயம்  அனைத்தையும்  உள்ளே அனுப்புகிறது. அதனால் தான் குருடர்களுக்கு  இது சரியாக பயன்படுவதில்லை.     
 அமெரிக்கா பறந்து சென்று வந்தவன்  தூங்க,  சாப்பிட அவஸ்தை படுகிறான். கால வித்தியாச அட்டவணை அவனை கலங்க வைத்து சாப்பிடும் நேரம் தூங்க வைக்கிறது.  தூக்க நேரத்தில் எழுந்து எல்லோரும்  தூங்கும்போது சமையல் அறையில்  வத்தல் குழம்பு தேடுகிறான்.   தூக்கம் இன்றி தவிக்கிறான். எல்லாம் SCN பண்ணும் வேலை.

சுவாமி, இந்த பூமி 24மணி நேரம் சுழல்கிறது   என்றாலும் உடல் கடிகாரம் 25மணி நேரம் சுழல்கிறது. அது எப்படி ஒரு மணி நேரம் கூட? ஆமாம் அது அப்படித்தான். மேலே கேள்வி  எல்லாம் கேட்கக்கூடாது? விஞ்ஞானிகள் சிலரை ஒரு அறையில் கடிகாரம் இன்றி சில நாள் பூட்டி வைத்தார்கள். நேரம் காலம் தெரியாவிட்டாலும் அவர்கள் உடல் கடிகாரம் சரியாக 25 மணி நேரத்துக்கு (ஒரு மணி நேரம் அதிகமாகவே ஒரு நாளைக்கு) எது இரவு எப்போது பகல் என்று அறிந்து கொண்டு தானாகவே அந்த அந்த வேளைக்கு தக்கவாறு உடலை இயக்கியதை உணர்ந்தார்கள்.

கற்கால குகை மனிதன் இப்படித்தான் வாழ்ந்தான். காட்டு விலங்குகள், பறவைகளும் இன்றும் அப்படித்தானே.    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பறக்கும்போது அந்த ஒரு மணி நேர போனஸ் நம்மை அட்ஜஸ்ட் செய் து கொள்ள உதவுகிறது.

நமது உடலின் தட்ப வெப்பத்தை சமன் செய்ய இந்த உடல் கடிகாரம் பேருதவி செய்கிறது. BP , அழுத்தம், ரத்த ஓட்டம், ரத்தம் உறைந்து கட்டி தட்டுவது, இதனால் தான் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதை அனுசரித்து தக்க நேரமாக பார்த்து சிகிச்சை மேற்கொள்கிறார்களாம்.

உடல் கடிகாரத்தின் இரவு 7 மணி நேரத்தை வைத்து புற்றுநோய்க்கான கெமோதெராபியை கூட முடிவு செய்வதாக கேள்வி. சர்க்கரை நோயாளி நண்பர்களுக்கும் இந்த இரவு 7மணி உடல் கடிகாரத்தின் படி தான் சிகிச்சை. இப்படி செய்வதால் சீக்கிரம் குணமாகிறார்களாம்.

குறித்த நேர சாப்பாடு தூக்கம் பல விதங்களில் நமக்கு உதவுகிறது. நாம் தான் லக்ஷியம் செய்வதில்லை. இயற்கையை சரியாக புரிந்து கொள்ளும் பக்குவம் படித்து கோல்டு மெடல் வாங்கினால் மட்டும் வந்துவிடாது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...