Saturday, September 29, 2018

WARNINGS OF DEATH



கால தேவன் எச்சரிக்கை - J.K. SIVAN

பராங்குச நாய்டுவுக்கு பதினெட்டு வயதிலி ருந்தே ஒரு சிந்தனை. சில புத்தகங்கள் படித்து, சில பிரசங்கங்கள் கேட்டு, அப்பா, தாத்தா விட்டு வைத்த எண்ணற்ற சொத்துக்கள் நிறைய இருப்பதை அனுபவிக்க, அவசியம் தேவை பூமியில் நீண்ட நாள் என்று புரிந்து விட்டது. நீண்ட நாள் வேண்டு மென்றால் என்ன செய்ய வேண்டும்? நிறைய சாப்பிட்டு, தூங்கி, பேப்பர் படித்து, நடந்து, கச்சேரி கேட்டு நாய்க்குட்டியோடு விளையாடி, பல ஊர்களை சென்று பார்த்தால் போதுமா?? மரணம் என்று ஒன்று இருக்கிறதே அதை அல்லவா வராமல் செய்ய வேண்டும்? அதற்கு என்ன வழி?

தவம் செய்தால் கடவுள் முன்னே வந்து ''உன் தவம் திருப்தியாக இருந்துது நாயுடு, உனக்கு என்ன வேண்டும் கேள் என்று வரம் கொடுப்பாரே'' அப்படித்தானே படித்தோம், கேட்டோம், பாடினோம், ஆகவே தவம் செய்வோம்.

அது சரி அடுத்தது இன்னொரு பெரிய விஷயமாக இருக்கிறதே?
எந்த கடவுளை நோக்கி வரம் இருப்பது?
நிறைய பேர் ப்ரம்மா, விஷ்ணு சிவன் என்று இந்த மூன்று பேரை நோக்கி அல்லவோ தனித்தனியாக பல வருஷங்கள் தவமிருந்தார்கள். கடும் தவம் வேறே
.
சரி. ஆகவே இந்த மூன்று பேரில் ஒருவரை செலெக்ட் பண்ணுவோம். ஆனால் யாரை செலக்ட் பண்ணி தவம் இருந்தாலும் கடைசியில் வரம் பெற்றவன் இறந்து அல்லவோ போயிருக்கிறான்?. எவனும் மரணத்திலிருந்து தப்பவில்லையே? ஆகவே என்ன தோன்றுகிறது இதிலிருந்து?
மரணம் வரக்கூடாது என்றால் இந்த மூன்று பேரில் எவரையும் நம்பி பிரயோஜனமில்லை.

பராங்குச நாயுடு பல இரவுகள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
பேசாமல் அந்த மரணத்திற்கு அதிபதியான எமதர்ம ராஜனையே நோக்கி தவமிருப்போம். அவன் தயவு வைத்தால் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுவானே . அது அவன் டிபார்ட்மென்ட் அல்லவா. அவனை பேசாமல் கைக்குள் போட்டுக்கொண்டால்??... இதல்லவோ சமயோசிதம். சபாஷ் பரங்குசா, உன் புத்தி கூர்மையே கூர்மை'' என்று தனக்கு தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண் டான்..

இந்த கதை சீக்கிரம் முடியவேண்டும் என்பதற் காக பராங்குச நாய்டுவின் கடுந்தவம் பல காலம் தொடர்ந்து முடிந்ததாக அரை வரியில், எழுதி விட்டு மிகுந்த திருப்தியடைந்த யம தர்ம ராஜனை நாயுடு முன்னால் நிற்கவைக்கிறேன்.
''பக்தா நீ என்னை நோக்கி இவ்வளவு கடுந்தவம் புரிவாய் என்று நான் நினைக்கவில்லையே. நிறைய பேர் என்னை நினைப்பதே இல்லை. ரொம்ப சந்தோஷம். எதற்கு என்னை நோக்கி தவமிருந்தாய்?. என்ன வேண்டும் உனக்கு கேள் ? '' யமதர்மன் பெருத்த உருவத்தோடு, சிவந்த கண்களுடன், ஜொலிக்கும் கிரீடம் மேல் ஒரு கூரான வாள் தொங்க, கன்னங்கரேல் என்ற ஒரு டில்லி எருமை போல் ஒன்றின் மேல் ஏறி கையில் ஆள் (ஆயுள்) பிடிக்கும் கயிறு தொங்க வந்து நின்றான். மீசையை முறுக்கி '' சொல்லு'' என்றான் யமதர்மன்

பராங்குச நாயுடு பயந்து நடுங்கினான். பேச்சு கஷ்டப்பட்டு வந்தது.

''உங்கள் அருளால் எனக்கு மரணமே சம்பவிக்க கூடாது''

''அப்பனே, அது யாராலும் காரண்டி கொடுக்க முடியாத விஷயம். எவரானாலும் பிறந்தால் இறப்பது நிச்சயம். எப்போது நிகழும் என்றும் தெரிவிப்பதில்லை. எனக்கு தெரியும். ரகசியம் அது. உனக்கு மட்டும் அல்ல எவருக்குமே சொல்ல மாட்டேன். ஆகவே ரொம்ப வருத்த மாக இருக்கிறது உனக்கு உதவ முடிய வில்லை யே என்று. ''

''ஐயோ எம தர்மா நான் மரணம் வேண்டா மென்று தானே உன்னையே நோக்கி தவம் இருந்தேன்.''

''இல்லை பக்தா. உனக்கு ஒரு உதவி வேண்டுமானால் நான் செயகிறேன். உனக்கு மூன்று எச்சரிக்கை கொடுக்கிறேன். அதிலிருந்து நீ உஷாராக மரணம் எப்போது வேண்டுமானாலும் அதற்குப் பிறகு சம்பவிக் கும் என்று உணர்ந்து கொள் மரணத்துக்கு உன்னை தயார் செயது கொள் ... சரியா? . இது ஒன்று தான் என்னால் உனக்கு உதவ முடியும். நான் வருகிறேன்'' என்று யமன் எருமை வாகனமேறி திரும்பி விட்டான். மறைந்தான்.

பராங்குச நாயுடுவுக்கு பரம சந்தோஷம். '' ஆஹா நல்ல ஆள் இந்த யமன். நமக்கு மூன்று எச்சரிக்கை தருகிறேன்'' என்று ஒரு சலுகை காட்டி இருக்கிறானே.. அதுவரை நாம் நன்றாக ராஜ போக வாழ்க்கை வாழ்வோம். அப்புறம் மரணத்தை பற்றி கவலைப் படுவோம்..

பல வருஷங்கள் பராங்குச நாயுடு சந்தோஷ
மாக வாழ்ந்தான். வயதாகி கிழவன் இப்போது. காதோரம் தலையில் எல்லாம் நரைத்து சொட்டை விழ ஆரம்பித்தது. உடனே நல்ல டாக்டர் ஒருவரை பார்த்து நிறைய FEES கொடுத்து சொட்டை தெரியாமல் தலைமுடி நாற்று நட்டுக்கொண்டான். கருப்பு நிற மை தடவிக்கொண்டு வெள்ளை நிற முடியை கருப்பாக்கி இளமையாக காட்டிக் கொண்டான். இன்னும் சில வருஷம் ஆகியும் யமன் வரவில்லை என்று நாயுடு மகிழ்ந்தான். எத்தனையோஎங்கெங்கோ ஆள் பிடிக்கும் வேலையில் நம்மை வேண்டுமென்றே மறந்துவிட்டு இன்னும் எச்சரிக்கை கொடுக்க வில்லை யென்றால் என்ன அர்த்தம். மரணம் இன்னும் பல காலம் நமக்கு கிடையாது என்று தானே பொருள்? எச்சரிக்கை தான் அவன் கொடுக்க வராமல் மறந்து விட்டானே.

பத்தடி தூரத்தில் எருமை நின்றால் கூட தெரியாமல் கண் பார்வை மங்கியதும் பராங்குச நல்ல கண் டாக்டரை தேடி தங்க FRAME போட்ட கண்ணாடி மாட்டிக்கொண்டான். மாடு பக்கத்தில் அம்மா என்று கத்தியது அப்பறம் தான் தெரிந்தது. இன்னும் சுகமாக சில காலம் வாழ்ந்தான் நாயுடு . நாளாக நாளாக பல் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பொருள்விளங்கா உருண்டை கடித்து உதிர்ந்தது போல் அவனை விட்டு வெளியேறி வாய் ஜிப் ZIP இல்லாத பர்ஸ் போல் ஆனது. பொய்ப்பல் ஒட்டிக்கொண்டான். எதையும் ''கடிக்காதே'' என்று தான் டாக்டர் சொல்லிவிட்டாரே .
ஏன் இந்த யமன் எச்சரிக்கவே வரவில்லை? . நம் பக்கம் அவன். யோக்கியமானவன். என்று பராங்குச நாய்டு சந்தோஷமாக நினைத்து ஒரு நாள் சாயங்காலம் சினிமா போக வாசலில் செருப்பு காலில் மாட்டும்போது எதிரில் யமன் வந்து நின்றான். அதே தோற்றம். கயிறு சுருக்கு போட்டு அவன் பக்கம் ஆடியது.

''அடேடே, எம தர்மனா வரவேண்டும். என்ன விஷயம். முதல் எச்சரிக்கையா? சொல்லுங்கள். எப்போது மரணம் ? இன்னும் பல காலம் இருக்கு போல் தெரிகிறதே. தேங்க்ஸ் '' '

''பராங்குச நாடு, பத்மநாப நாய்டு மகன், 18 , பரக்காவட்டி தெரு,... நரப்பாக்கம்... வயது 71. நீ தானே அப்பா அது? '''

''ஆமாம் சரியாக என் விஷயங்கள் சொல்லிவிட்டீர்கள். எதற்கு என்ன விஷயம்.?
''உன் நேரம் முடிந்து விட்டது. பூலோக வாழ்க்கை அவ்வளவுதான் உனக்கு. கிளம்பு. வழக்கமாக நான் வருவதில்லை என் ஆள்கள் தான் வருவார்கள். உன் விஷயத்தில் உன் தவம் என்னை நோக்கி என்பதால், எனக்கு அது மகிழ்ச்சி தந்ததால், நானே உன்னை ''இட்டுக்கொண்டு '' போக வந்திருக்கிறேன்.

''ஐயய்யோ . எமதர்மா, வார்த்தை தவறிவிட்டாய்..... எனக்கு மூன்று முறை முன் எச்சரிக்கை தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டு இப்போது திடீரென்று ஏதோ பார்க்குக்கு வாக்கிங் போவது போல் கூட்டிக்
கொண்டு போவது நியாயமா, தர்மமா எம தர்மா?

''முட்டாளே உனக்கு நான் மூன்று எச்சரிக்கை கொடுத்து வெகு காலம் ஆகிவிட்டதே. காதருகே நரை எதற்கு கண்ணாடியில் தெரியும்படி கொடுத்தேன்? . இனியாவது உன் நினைவு கடவுள் மீது திரும்பட்டும், நல்லதே செய், நல்லதே நினை.இறைவனை நம்பு. ''

அதை விட்டாய் என்று ரெண்டாவது எச்சரிக்கையாக உன் கண் பார்வை மங்க வைத்தேன். ஏன்? உன் அகக்கண் திறக்கட்டும். அது ஒளி தரட்டும் என்று ... அதையும் நீ கண்டுக்க வில்லை.

உன் பல்லைக் கழட்டினேன்... பல் போனால் சொல் போச்சு என்பார்களே உங்கள் ஆட்கள்... இனியாவது நாராயணா, பரந்தாமா என்று ஒரு சொல்லாவது சொல்ல மாட்டாயா என்று எதிர் பார்த்தேன்.... ''கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் பாட்டு தான் நீ பாடினாய்.'' சரி பேச நேரமில்லை கிளம்பு.

''ஐயோ நான் புரிந்து கொள்ளாமல் விட்டேனே. தர்மா என்னை கொஞ்சம் காப்பாற்றேன்''

சரி கடைசி சந்தர்ப்பம். உன் உயிர் பிரியுமுன்பு, உனக்கு ஒரு வினாடி நேரம் தருகிறேன். மனம் திறந்து, கண் மூடி, மனம் வாக்கு காயத்தால் உன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு பரந்தாமா உன் திருவடியே துணை என்று ''அரை நிமிஷ நேரமட்டும் '' துதி. உனக்கு என் டிபார்ட்மென்ட் நரகம் இல்லாமல் மோக்ஷ சவுகரியம் தருகிறேன்.''

பராங்குச நாய்டுவுக்கு மட்டும் அல்ல, கால தேவன் தலை மேல் கத்தி தொங்குவதால், பாரபக்ஷ
மின்றி, எல்லாருக்கும் இந்த மூன்று எச்சரிக்கை தருகிறான். அப்போதைக்கு சொல்ல முடியுமோ முடியாதோ, இப்போதைக்கு நாராயணா என்று சொல்லிவிடுவோம். சொல்லிக்கொண்டே இருப்போம்.

(எங்கோ ஒரு முறை காஞ்சிமட பெரியவா ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பக்தர்களுக்கு தமாஷாக சொன்ன கதையின் வர்ணனை)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...