Saturday, September 29, 2018

NALA CHARITHRAM



ஐந்தாம் வேதம். (மஹா பாரதம்)   J.K. SIVAN 
நள  சரித்திரம் 

                      துன்பம்  சாஸ்வதமல்ல

''வைசம்பாயனரே,  என்ன என்ன கஷ்டம் எல்லாம்  நமது முன்னோர்கள்  பட்டிருக்கின்றனர் என்று அறியும்போது  நாம்  எவ்வளவு பாக்யசாலிகள் என்று புரிகிறது'' என்றான்  ஜனமேஜயன்.

''ஆமாம்  ஜனமேஜயா,  அவர்கள்  தெய்வீகமானவர்கள். கஷ்டத்தை கஷ்டமாக எடுத்துக்கொள்ளாதவர்கள்.  அதை ஏற்கத்தகுந்த, ஏற்கவேண்டிய  கடமையாக, கர்ம பலனாக அனுபவித்து  இறைவனிடம் நன்றியோடு வாழ்ந்தவர்கள். ஒன்று சொல்கிறேன் கேள்:

'' பெரியோர் செய்த புண்ணியம் எல்லாம்  அவர்களது தலைமுறையில்  பின்னால்  வருவோர்க்கு தான்  பலனளிக்கும்.  எனவே தான்  நல்லதையே நினைத்து நல்லதையே செய்யவேண்டும். இறைவனது அருள் கிடைக்க  நம்மாலான சரீர, சம்பத்து  உதவிகளை  மனமார  பிறகு செய்யவேண்டும். துன்பம்  வரும் காலத்தில்  நம்மை  தனித் தனியாக அணுகுவதில்லை.  எல்லாம்  ஒட்டு மொத்தமாக  சேர்ந்தே  வரும். 

உனக்கு  நான் சொல்லிவருகிறேனே  நளனும்  அவன் மனைவி தமயந்தியும் பிரிந்து பட்ட கஷ்டங்கள் பற்றி.  மேலே கேள்.

 இதுவே தமயந்திக்கு நேர்ந்தது. நாடு, நகரம், நண்பர்கள்,  சேனை, மக்கள், செல்வம்,  பிள்ளைகள், கணவன், சகலமும் பிரிந்தாகிவிட்டது. உதவியவர்கள் சிலரையும், ஒரு யானைக்கூட்டம் ஒன்று சிதறடித்து, அவப்பெயரை  வாங்கித்  தந்ததே. விதி அல்லவோ இது?  மனதாலும்  ஒருவருக்கும்  கெடுதல் நினைக்கவில்லையே?  இறைவா உன் சோதனை இன்னும்  இருக்கிறதா எனக்கு?

சேதி  தேசத்து  ராஜா அரண்மனை அருகே வியாபாரிகள்  தமயந்தியோடு அவர்கள் வந்தபோது  மேலே உப்பரிகையில்  ராணி  தமயந்தியின்  நிலையை பார்த்து விட்டு, ஒரு தாதியை  அனுப்பி  அவளை அழைத்து வர செய்தாள் .

 "நீ யாரம்மா?''  என்று அந்த ராணி  கேட்டதற்கு  தனது விருத்தாந்தங்களை தமயந்தி சொல்கிறாள்.

' நீ  என்னுடனேயே  இரு என்று  அந்த  ராணி அவளுக்கு அடைக்கலம்  தந்தாள். ஆட்களை விட்டு  உன் கணவனை தேடச் சொல்கிறேன். எங்கெல்லாமோ சுற்றி  அவனும் இங்கே  வரக்கூடும்.'' அதுவரை நீ ஜாக்கிரதையாக இங்கே இரு''

'' அம்மா  நீங்கள்  ஆதரவு தருவதற்கு நன்றி.  என்னை  எந்த  ஆடவரும் சந்திக்கவேண்டாம்.  நான்  எவருக்கும்  பணி  செய்யமாட்டேன். என்னை அத்துமீறி  எவராவது துன்புறுத்தினால்  அவர்களுக்கு மரண தண்டனை  நீங்கள் வழங்க வேண்டும்.  இதற்கு ஒப்புக்கொண்டால்  நான் இங்கு தங்குகிறேன்.'' என்றாள்  தமயந்தி.  அரசியும் சரி என்றாள் .

அரசகுமாரி சுனந்தாவின்  அந்தப்புரத்தில் அவரது  தோழியாக  தமயந்தி குடி புகுந்தாள் .
நளன்  பசியோடு இரவில்  தமயந்தியை விட்டு பிரிந்து  தனியே நடந்து சென்றானே அவனுக்கு என்ன ஆனது என்று கொஞ்சம் அறிவோம்.

 தமயந்தியை விட்டு பிரிந்த நளன்  காட்டில் அலைந்து ஒரு இடத்தில்  தீ  பற்றி எரிவதை கண்டான்.  அதன் நடுவில் ஒரு  பெரிய நாகம்  தவித்துக் கொண்டிருந்தது.   நளனைப்  பார்த்ததும்  ''தேவனே,  தக்க சமயம் வந்தீர். என்னை இங்கிருந்து எப்படியாவது  அப்புறப்படுத்தவேண்டும். உதவுங்கள்''   என்றது.

யார்  நீ?

நான்  கார்க்கோடகன், தேவரிஷி நாரதரின் சாபத்தால்  இந்த  தீவட்டத்தில்  இடையே  தவிக்கிறேன்.  என்னை  நளன்  என்று ஒரு அரசன் வந்து விடுவிப்பான். அதுவரை  காத்திரு ''  என்று சொன்னார்.

'' நான் தான்  நளன்''

மெதுவாக  கார்க்கோடகனை எடுத்து  தீயிலிருந்து மீட்டு  வேறு ஒரு  இடத்தில் விட்டான்  நளன் .  '' நளா, நீ  என் நண்பன். ஒரு சில அடிகள் இங்கிருந்து எடுத்து வை.   எண்ணிக்கொண்டே போ.''   நளனும்  அவ்வாறே செய்தான். ஒரு  பத்தடி  கூட  போயிருக்க மாட்டான்.  கார்கோடகன்  அவனை கடித்தான்.  நளன்  நிறமும் உருவும் மாறி விட்டான்.  

''உனக்கு  உயிர் மீட்டு  உதவினேனே   இது தான் எனக்கு உன் கைம்மாறா  கார்க்கோடகா?'' என்றான் நளன் .

''நளா, நான் உனக்கு நல்லது தான் செயகிறேன். என் சொல்லை தயவு செயது கொஞ்சம் கேள்.  இனி உன்னை  யாரும்  அடையாளம்  காண மாட்டார்கள். உன்னுள்ளே  உன்னை  ஆட்டிபடைத்த  கலி /சனியின்  தீய சக்தி இப்போது முதல்  என்னுடைய கொடிய  விஷம் உன்னுடைய  உடம்பில் இப்போது இருப்பதால், அவதிப்படும்.  உன்னைவிட்டு   கலி /சனி  நீங்கும்வரையில்  என்னுடைய  விஷம்  அவனை  வாட்டிக்கொண்டே இருக்கும். இது நான் உனக்கு செய்யும்  பிரதியுபகாரம்.  ஒரு பாவமறியாத  உனக்கு  துரோகம் செய்தவனுக்கு   இது தான்  நான்  தரும்  தண்டனை. என் விஷத்தால்  உனக்கு  எந்த துன்பமும் வலியும் உடலில்  உண்டாகாது.

நீ  இங்கிருந்து அயோத்யாவுக்கு செல்.   அங்கே அரசனாக இருக்கும் ருதுபர்ணன்  உனக்கு  பகடைக்காய்  ஆட்டத்தின் ரகசியங்களை சொல்லித்தருவான். உனது அச்வ சாஸ்திரம் அவனுக்கு  உபயோகமாகும்.  இக்ஷ்வாகு  அரச வம்சம் உனக்கு  உதவும். உன் மனைவி மக்களை க்ஷேமமாக  மீண்டும்  காண்பாய்.  இதோ இந்த  வஸ்திரத்தை  ஜாக்கிரதையாக  வைத்துக்கொள்.  எப்போது உனது  பழைய உருவம் உனக்கு தேவைப்படுகிறதோ  அப்போது இதை உடுத்திக்கொள்.அடுத்த கணமே  பழைய  அழகிய  நள மஹாராஜனாக உருவம் பெறுவாய்.''  என்றான் கார்கோடகன்.  

''வ்ரிஹதஸ்வ மகரிஷி,  நள  தமயந்தி புராணம் இதுவரை நான்  கேட்டதில்லை.  நான்   ஒருவன் தான் இப்படி  துன்புற்றேன் என்று   நினைத்துக்கொண்டிருந்தேன்.என் முன்னோர்களும்  இதை அனுபவித்தி ருக்கிரார்களே''  என்றான்  யுதிஷ்டிரன்

மேலே சொல்லுங்கள்  மகரிஷி  என்றாள்  திரௌபதி. பெண்ணல்லவா, அவள் மனம்  தமயந்தியின்  துன்பம்  விலகவேண்டும் என்று  ப்ரார்த்தித்தது . 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...