Monday, September 24, 2018

BUDHDHA

​ தன்னை வென்று உலகை அறிந்தவன்
​ ​J.K. SIVAN

நான் கார்பொரேஷன் ஆரம்ப பள்ளியில் படித்தவன். தமிழ் மொழியில் பாடம் கற்றவன். ஆங்கிலத்தை தமிழில் விளக்கின​தால் தான் ஆங்கிலம் அறிந்தவன். ஆங்கிலத்தில் 17​ ​வயது வரை பேச​ முடியாதவன் . ​பயப்பட்டவன். ​ஆனால் பேசுவதை எல்லாம் புரிந்து கொண்டவன்.

எனக்கு அமைந்த ஆசிரியர்க​​ள் என்னை கல்வியில் ஆர்வம் கொள்ளச் செய்த பெருமக்கள்.

எப்போதோ துரைசாமி முதலியார் மரத்தடியில் ​கழுத்தில் கிழிந்த ​சட்டையை ​அழுக்கு ​வேஷ்டிக்குள் விட்டு, ​ அது அவிழ்ந்து விழாமல் ​பெல்ட் போட்டுக்கொண்டு திறந்த பிரவுன் பட்டனில்லாத கோட் போட்டுக்கொண்டு சட்டையின் கிழிசலை மறைத்துக்கொண்டு கற்றுக்கொடுத்தது பசுமரத்தாணி வகை.​ அவரிடம் கற்றதில் ஒரு நினைவு.

​+++​
பெரிய மகாராஜாவின் பிள்ளை அவன். லும்பினி எனும் ஊரில் 2600 வருஷங்களுக்கு ​ ​மு​ன்பு ராஜகுமாரனாக பிறந்து ​சித்தார்த்தன்​ என்று பேர் வைக்கப்பட்டவன். அந்த பேர் மறைந்து விட்டது. அவன் பிறந்த அன்று வானத்தில் வெள்ளி பெரிதாக தோன்றி பூமியை வெள்ளி முலாம் பூசியது. விசாக பவுர்ணமி அல்லவா. இளவரசனாக இருந்து என்ன பயன்? ​ ​பிறந்த ஏழாம் நாளே அம்மா இறந்து போனாளே . அவள் பெயர் மஹா மாயா தேவி. பச்சிளம் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு நாட்டைக் காக்கும் பொறுப்போடு சேர்ந்துவிட்டது ​ அப்பாவும் ​ராஜா​வுமான ​ சுத்தோதனனுக்கு.

இன்னொரு பேரிடி காத்திருந்தது ராஜாவுக்கு. அரண்மனை ஜோசியர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். மணி ஓடியது. சரி வேறு வழியில்லை. ராஜாவிடம் சொல்லிவிட வேண்டியது தான்.

''ஜோசியர்கள், நிபுணர்களே, என் மகன் சித்தார்த்தன் ஜாதகம் எப்படி இருக்கிறது.
ஆவலாக இருக்கிறேன் சொல்லுங்கள்?''

''மஹாராஜா, எப்படிச் சொல்வது என்று தான் திரு திரு வென்று விழித்துக்கொண்டி ருக்கிறோம்.''

''சொல்லுங்கள் உடனே ''

''இந்த குழந்தை விநோதமானவன். அவன் ஒரு துறவி ஆகிவிடு​வது நிச்சயம். அவன் கண்ணில் எந்த நோயாளியும், இறந்த உடலும், கிழவனோ, கிழவியோ, துறவி யாராவதோ தென்பட்டு விட்டால், உடனே அவன் மனம் துறவறத்தை நாடும் என்று ஜாதகம் சொல்கிறது. அவனை ஜாக்கிரதையாக இதெல்லாம் கண்ணில் படாதபடி வளர்ப்பது கடினமான காரியம்''

''அவ்வளவு தானே, நான் ஏற்பாடுகள் செயகிறேன் நீங்கள் கவலையை விடுங்கள்'' என்றான் சுத்தோதனன். பலத்த காவல். மேலே சொன்ன எவரும், எதுவும், அரண்மனை பக்கமே வராமல் செய்தன. வருஷங்கள் ஓடின. பையன் வளர்ந்தான்.

சொந்தத்திலேயே ஒரு ராஜகுமாரி சித்தார்தனுக்கு மனைவியானாள். சிறுவயதி
லேயே கல்யாணம். காலம் சென்றது. ஒரு குழந்தையும் பிறந்தது. ராகுலன்.

​நடக்கக்கூடாது என்று பிரயாசைப்பட்டது நடந்துவிட்டது. ​ ஒரு வயோதிகனை, ஒரு நோயாளியை, ஒரு இறந்த பிணத்தை யாரோ தூக்கிச் செல்வதை​ எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அதிசயத்தோடு ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டான் சித்​தார்த்தன். ​ இது என்னது? எதற்காக? ஏன்? இந்த துன்பம் அவசியமா? ------ அவன் மனதில் ஒரு பெரும் புய​ல் மையம் கொண்டு உருவானது. இதிலிருந்து எப்படி தப்புவது?

மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன, இதெல்லாம் எப்படி மனிதன் தவிர்க்க முடியும். இது எ​..​ல்​..​ல்​..லாம் எதனால், ஏன், எப்படி இதிலிருந்து மீள்வது ........ கேள்விகள் அலைமேல் அலையாக அவன் மனக்கடலில் கொந்தளித்தது. சூறாவளிக்கு, புயலுக்கு விடை??

அரண்மனை கட்டு திட்டங்கள், சுற்றம், உறவு சுகபோகம் இதெல்லாம் அவனது சிந்தனைக்கு இடையூறாக தொந்தரவு செய்தது.

ஒரு நள்ளிரவில் அரண்மனையை விட்டு, இளம் மனைவி, குழந்தையை, அரசபோகம், எல்லாவற்றையும் துறந்து​ சித்தார்த்தன் ​ வெளியேறி விட்டான். காட்டிலும் மேட்டிலும் அலைந்தான். பசியால் வாடினான். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று ஞானத்தை தேடினான். அவன் இடைவிடா முயற்சி பலநாட்களுக்குப் பிறகு பயனளித்தது. போதி மரம் ஒன்றின் அடியில் அமர்ந்தவனுக்கு சத்ய ஒளி வழிகாட்டியது. ஞானம் அவனை அடைந்தது. சித்தார்த்தன் இனி போதி மரத்தடியில் ஞானம் பெற்று ​''​புத்தன்​''​ ஆனான்

உடலின் துன்பங்களை அவன் லக்ஷியம் செய்யவில்லை. எந்த பேரிரைச்சலும் அவன் அமைதியைக் குலைக்கவில்லை. இயற்கையின் சீற்றம் அவனை பாதிக்கவில்லை.

புத்தன் வைராக்கியம், தியானம் இரண்டின் உருவகமானான். எல்லாவற்றையும் சமமாக ஏற்கும் மனோபாவம் அவனிடம் வந்துவிட்டதே. தன்னையே சோதித்து ஸ்புடம் போட்ட தங்கமானான் புத்தன். இன்பம் துன்பம், சுகம் துக்கம், வாழ்வு சாவு எல்லாமே அவனுக்கு ஒன்று.

புத்தரிடம் ஒரு ஏழை வாலிபன் ஒருநாள் வந்தான். கண்களில் ஆறாக கண்ணீர்.
அவனை சலனமில்லாமல் பார்த்தார் புத்தர். அவன் அழுது ஓய்ந்துவிட்டான்.

‘நண்பா, நீ யார், எதற்கு இங்கே வந்தாய்? ஏன் கலக்கம்?'' என்கிறார் புத்தர்
''ஐயா, நான் எதைச்சொல்வேன், எப்படிச் சொல்வேன். துன்பம் நிறைய மண்டிக்கி டக்கிறது என்னுள்'' என்றான் அவன்
'' பகிர்ந்துகொண்டாலே பாதி குறைந்துவிடுமே!''
''நான் செய்த தொழில் நஷ்டம் தந்தது. வீடு வாசல் வெள்ளம் புயலில் பறி போய்​ ​விட்டது. என் கண்ணெதிரே என் மனைவி பெற்றோர் குழந்தைகள் யாவரும் துடித்து இறந்ததை பார்த்துவிட்டேன். இனி என்ன பாக்கி. மனம் உடைந்து அலைந்தேன். எனக்கு இனி என்ன இருக்கிறது, நானும் செத்து மடியவேண்டியது தான் என்ற நிலையில் தான் உங்களைப் பார்த்தேன். ஏதோ மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
''நீ எங்கிருந்து வருகிறாய் அப்பனே?''
அவன் சொன்ன ஊர் பெயர் அவன் ரொம்ப தூரத்திலிருந்து வருவதை உணர்த்தியது.
''இந்தா சோர்ந்திருக்கிறாய். முதலில் நீரைக் குடி''
அருகிலிருந்த செம்பில் கொஞ்சம் நீரும் ஒரு கல் உப்பும் கொடுத்தார். இந்த உப்புகல்லை கொஞ்சம் நீரில் கலந்து குடி. ''
நீர் உப்புக்கரித்து அதிகம் குடிக்க முடியாமல் துப்பினான். ''ஐயா உப்பு கரிக்கின்ற இந்த நீர் குடிக்க இயலவில்லை''
''சரி, இந்த உப்பை அந்த குளத்தில் கரைத்துவிட்டு நீரைக் குடி.'' குடித்துவிட்டு வந்தான்.
''அது உப்பு கரிக்கவில்லையே, குடித்தாயா. தாகம் அடங்கியதா?''
ஆம் என்றான்.

''வாழ்வில் எதிர்ப்படும் துன்பங்கள் துயரங்கள் உப்பு போன்றவை. மனம் தண்ணீர் போன்றது. மனத்தை குறுக்கிக் கொண்டால் உப்பு கரிக்கும். துன்பங்கள் பெரிதாக தோன்றி வாட்டும். மனம் குளத்து நீர் போல் விசாலமாக இருந்தால் துன்பம், துயரம், கஷ்டம் எதுவுமே தலை தூக்காது.''

புத்தரைக் கண்டு வியந்தவன் புதிய மனிதனாக திரும்பி சென்றான்.

ராஜா அசோகர் புத்தரை ஒருநாள் கண்டு வணங்கியதைப்பார்த்த மந்திரி கோபம் கொண்டான். சக்ரவர்த்தி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அசோகருக்கு புத்தரையும் தெரியும், முட்டாள் மந்திரியையும் நன்றாக தெரியுமே. அவனைத் திருத்த ஒரு திட்டம் போட்டார்.

‘நீ போய் ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை, மூன்றும் இங்கே கொண்டுவா. சில மணி நேரத்தில் அவை வந்தன. மூன்றையும் சந்தையில் விற்று விட்டு வா.''

ஆட்டுத்தலை உடனே விற்பனை ஆனது. கொஞ்சம் கஷ்டப்பட்டு புலித்தலை விற்கப்பட்டது.

​''என்ன, தலைகளை விற்றுவிட்டாயா?''​
​''​எவனுமே மனித தலையை சீண்டவில்லை பிரபு​. மற்றது ரெண்டும் விற்றாகிவிட்டது.''​

''மனித தலையை விற்கமுடியாவிட்டால் இலவசமாக கொ​டுத்திருக்கலாமே '''
​''நான் வைத்த இடத்திலேயே இருக்கிறதே. எவருமே தொடக்கூட இல்லையே.
அதை ஒருவரும் சீண்டவில்லை​ மஹாராஜா ​​'''

''மந்திரி, உயிர் போய்விட்டால் உடல் எதற்கும் பயனற்றது. உயிர் இருக்கும்போது என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறது இந்த உடம்பு?! ஞானிகள் இதை நன்றாக உணர்ந்தவர்கள். உடலில் உயிர் இருக்கும் போதே மனிதனின் உடல் நிலையாமை உணர்ந்தவர்கள். ராஜாவும் பரதேசியும் ஒன்றுதான் அவர்களுக்கு. எனவே நான் புத்தரை விழுந்து வாங்கியதில் ஒரு தப்புமில்லை.புரிகிறதா?'' என்கிறார்​ சக்ரவர்த்தி ​ அசோகர்.

புத்தரைப் பற்றி கடலளவு சொல்லலாம் போல் இருக்கிறது

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...