Wednesday, September 26, 2018

KUNTHI'S PRAYER

குந்தியின் பிரார்த்தனை.


                                           '' மறவேன் உன்னை   மாதவா.''   1.   

மஹா பாரதத்தில் மறக்கமுடியாத, மதிப்புக்குரிய ஒரு பாத்திரம்  கிருஷ்ண பக்தை குந்தி தேவி .  பாண்டவர்களின் தாய். கிருஷ்ணனின் அத்தை.

மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாளாக மும்முரமாக நடந்து முடிந்து இப்போது மேலும் ஒரு சில மாதங்களாகி விட்டது. பாரத தேசத்தில் பாதிக்கும்  மேலாக ராஜாக்கள் மறைந்து விட்டனர். யுத்தத்தில் பங்கேற்காத சிலர் மட்டுமே உயிரோடு இருந்தனர்.

எத்தனையோ வம்சங்கள் அனாதையாகி விட்டன.  கௌரவர் பக்கம் ஒருவர் கூட பாக்கியில்லை. பாண்டவர் பக்கமும் ஐந்து சகோதரர்களை விட முக்கியமாக வேறு யாருமில்லை. கிருஷ்ணன் சிலநாள் எல்லோருக்கும் துக்கம் தீர ஆறுதல் அளித்துவிட்டு தனது நாடான துவாரகைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது. ஹஸ்தினாபுரம் அரண்மனையில் ஒவ்வொருவராக எல்லோரிடமும் சென்று விடை பெறுகிறான் கண்ணன்

குந்தியிடம் வருகிறான்.

''அப்போ, அத்தை, நான் என் ஊருக்கு திரும்பி போகிறேன். நீ சௌக்கியமாக சந்தோஷமாக இரு. மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கலாம். உனக்கு உன் மக்கள் இந்த தேசத்தின் இணையில்லாத சக்கரவர்த்தி களாக ஆகிவிட்டதில் சந்தோஷம் தானே''. கேட்டுவிட்டு கண்ணன் சிரித்தான்.

अपरे वसुदेवस्य देवक्यां याचितो sभ्यगात् ।
अजस्त्वमस्य क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥१८॥ 8.37
के वयं नामरूपाभ्यां यदुभि: सह पाण्डवा: ।
भवतो sदर्शनं यर्हि हृषीकाणामिवेशितु: ॥२३॥  8.38
नेयं शोभिष्यते तत्र यथेदानीं गदाधर ।
त्वत्पदैरङ्किता भाति स्वलक्षणविलक्षितै: ॥२४॥  8.39

பதில் சொல்லாமல் குந்தி சிலையாக அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதில் சூறாவளி வீசியது.  காற்றில் கடலின் கொந்தளிப்பு...தன் எதிரே எல்லாமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது. சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாம் வெறும் அர்த்தம் இல்லாத வார்த்தைகளாகி விட்டன. உத்தரா நிறை கர்ப்பவதியாகி ஓடிவந்தது. கிருஷ்ணன் அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்றியது ... ஆம் அது தான் அவனது சமீபத்திய உதவி.. வம்சம் வளர ஒரே ஒரு வாய்ப்பு. அஸ்வத்தாமன் தான் பாண்டவ வம்ச வாரிசையையே பூண்டோடு அழித்துவிட்டானே. ஒன்றா இரண்டா, எத்தனை அக்கிரமங்கள், ஆபத்துகள் எல்லாவற்றையும் இந்த பாவி துரியோதனன் மூலம் நானும் என் மக்களும் அனுபவித்தோம். அப்போதெல்லாம் எனக்கு உதவிய ஒரே ஆத்மா இந்த கிருஷ்ண பரமாத்மா... நான் போகட்டுமா விடை கொடு என்கிறானே !

''என்ன அத்தை, சிலையாகி விட்டீர்களா? நான் சொன்னது காதில் விழுந்ததா? எனக்கு விடைகொடுங்கள். நான் துவாரகையில் சில காரியங்கள் பாக்கி வைத்திருக்கிறேன். அவற்றை முடிக்கவேண்டும்.''

கண்கள் குளமாக குந்தி இரு கைகளை சிரத்திற்கு மேல் உயர்த்தி கூப்பினாள் .

 ''கிருஷ்ணா.... கிருஷ்ணா...
 வார்த்தை மேலே வரவில்லை. குரல் தழுதழுத்தது. ''என் உயரிய தெய்வமே.உன்னை வணங்குகிறேனப்பா. நீயே எல்லாம். எல்லாம் நீயே..கண்டும் காணாமலும் அருள்பவன் நீயே .

''நீயா கன்றுக்குட்டிகளோடு விளையாடிய யாதவ சிறுவன்? கோபியரோடு குலாவிய மாதவன். எண்ணற்ற அரக்கர்களை எளிதில் வீழ்த்திய மாவீரன். பாண்டவ குல நேசன். மகா சக்தி கொண்ட ஆண்டவன் மஹா விஷ்ணு நீ சாதாரண மனிதனாக வந்து எளிமையாக என் எதிரே நிற்கிறாய். பீஷ்மர் முற்றும் உணர்ந்த ஒரு  ஞானி.  எங்கள் எல்லோருக்கும் குல குரு. பிதாமகர். உன் ஆயிர நாமங்களை அற்புதமாக எங்களுக்கு செவிக்குச் செல்வமாக வழங்கியவர். ஆத்ம ஞானத்தால் உன்னை  அறிந்தவர்  அனுபவத்தால் உன்னை நானும் உணர்ந்தவள்.

குந்தியின் மனக்கண் முன் நடுச்சபையில் திரௌபதி துச்சாசனன் என்ற மகா பலசாலியால் ஆடை  இடுப்பிலிருந்து உருவப்பட்டு  அலங்கோலமாக அவமானப்பட நேரும் சமயம் இரு கை உயர்த்தி தன்னை காத்துக்  கொள்ளும் சர்வ சக்தியும் இழந்து ''ஆபத் பாந்தவா''   என்று கிருஷ்ணனை வேண்ட,  அவள் காக்கப்பட்ட சம்பவம் திரையோடியது.. உடல் நடுங்கியது. மீண்டும் நெஞ்சடைத்தது. கண்களில் நீர் பெருகியது. கரங்கள் கூப்பியவண்ணமே இருந்தன.

ஒரு பெண் திரௌபதிக்கு மட்டுமா உதவனினவன் கிருஷ்ணன்?.
பௌமாசுரன் என்கிற நரகாசுரன் பதினாயிரம் அரசிளங்குமரிகளை சிறைபிடித்து அவர்களை யாகத்தில் பலி கொடுக்க உத்தேசித்த போது அவனைக் கொன்று அவர்களை விடுவித்து    ''நீங்கள் உங்கள் நாடு திரும்புங்கள் '' என்று விடைகொடுத்த போது நடந்தது என்ன?
''ஒரு இரவு வீட்டை விட்டு வெளியே தங்கினாலே மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். எவரும் எம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எம்மைக் காத்த நீயே எங்களுக்கு கதி.   உன்னுடனேயே வந்து விடுகிறோம்'' என்று அவர்கள் முறையிட அவர்கள் அத்தனைபேருக்கும் நீ  வாழ்வளித்தவன் அல்லவா?

பிருந்தாவன மக்கள் இந்திரன் கோபத்துக்காளாகியபோது ஏழுநாளாக பிரவாகமாக பெருகிய வருணன் விடுத்த பெரு மழையிலிருந்து கோவர்த்தன கிரியை அனாயாசமாக இடது சுண்டுவிரலாலேயே தூக்கி அனைவரையும் காத்தவன் அல்லவா கிருஷ்ணன்.

பார்த்தன் முதல் பசுக்கள் வரை அனைத்துயிர்களையும் பேராபத்துகளிலிருந்து பாதுகாத்தவன் அல்லவா கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...