Sunday, September 23, 2018

NALA CHARITHRAM



நள  சரித்திரம் 2      J.K. SIVAN 

தமயந்தியை பார்த்து  அவள் தேவர்களில்  யாரை மணக்க விரும்புகிறாள் என்று தெரிந்து வா என்று நளனை  அனுப்பிய இந்திரன்  அவன் வரவுக்கு  ஆவலாக காத்திருந்தான் அல்லவா?

''என்ன நடந்தது?'  என்று  இந்திரன் நளன்  திரும்பியவுடன் ஆர்வமாக  வினவினான். நளன்  தான்  பொய் சொல்லமாட்டானே.  அப்படியே  தமயந்தி சொன்னதைப்  போட்டு உடைத்தான்.  தேவர்கள் யோசித்தனர்.  

குறிப்பிட்ட நாளில் ஸ்வயம்வர மண்டபத்தில் அநேக  ராஜாக்கள்  அமர்ந்திருந்தனர். தமயந்தி கையில் மாலையோடு  நுழைந்தாள் .  அத்தனை அரசர்களுக்கிடையே  அவள் கண்கள் நளனைத் தேடின.   ஐந்து  பேர்  ஒரே மாதிரியாக ஒரே அச்சாக நளனைப் போலவே  உட்கார்ந்திருப்பதை  கண்டாள் .  அட, இதென்ன, ஐந்து நள மகாராஜாக்களா?.  யார்  இதில் உண்மையான  நளன்?''

ஏற்கனவே  நளன்  சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.  ''அடடா  நாலு  தேவர்கள்  நளனைப் போலவே அல்லவோ  வந்திருக்கிறார்கள். எப்படி கண்டுபிடிப்பது?   தெய்வங்களே,  என் மனத்தைக் கவர்ந்தவன்  நிஷாத தேசத்து மன்னன் நளன் மட்டுமே. நீங்கள்  தான்  அவனை எனக்கு  காட்டித் தரவேண்டும். எனக்கு வாழ்வளிக்க வேண்டும்.  தேவர்கள்  அவ்வாறே  தங்களது  தெய்வீகத்தன்மையை காட்டினர்.  கூர்ந்து கவனித்தாள்  தமயந்தி.  தேவர்கள் நால்வரின்  கண் இமைகள் அசையவில்லை.  அவர்கள் வியர்வையால் வாடவில்லை. அவர்கள் கால்கள் தரையைத் தொடவில்லை. அணிந்திருந்த  மாலைகள் வாடவில்லை. அவர்கள் மீது தூசு தும்பு எதுவும் படவில்லை.  நிழல் தரையில் விழ வில்லை.

ஒரு நளன்  மட்டுமே  இதெல்லாம்  இன்றி வித்யாசமாக இருந்தான்.  தமயந்தி  சிரித்துக் கொண்டே  தனது கரத்தில் இருந்த மாலையை அவன் கழுத்தில்  இட்டாள் .  நிஷாத தேச மன்னன் நளனின்  மனைவியானாள் .அக்னி வருணன் யமன்   இந்திரன் முதலியோரை வணங்கி இருவரும் ஆசி பெற்றனர். எட்டு வரங்கள்  பெற்றனர் . யாகத்தில்  தம்மை காணலாம்,  நளன்  வேண்டியபோது அவன் உருவை அடையலாம், நினைத்த இடத்தை அடையலாம்,  உணவு ருசிகரமாக தயாரிக்கலாம், உயர்ந்த, மென்மையான,  மேன்மை யான,   குணங்கள்  விலகாது. இவ்வாறு அவர்கள்  வரமளித்துவிட்டு  சென்றனர். நள  தமயந்தி தம்பதி  இந்த்ரசேனன்,  இந்த்ரசேனா  என்று  ஒரு பிள்ளை, பெண்ணையும் பெற்றார்கள்.

ஒரு விஷயம்  சொல்லவேண்டும்.  திரும்பிப் போகும் வழியில்  தேவர்கள்  துவாபர னையும்  சனீஸ்வரனையும்  சந்தித்தார்கள்.  ''

எங்கே  செல்கிறீர்கள் இருவரும்?''

''பீமராஜன் பெண் தமயந்தி ஸ்வயம்வரத்துக்கு தான்,  எனக்கு  அவளை மனைவியாக அடைய  ஆவல்.'' என்றான் கலி எனும் சனீஸ்வரன்.

''முடிந்து போனபிறகு  எதற்கு போகிறாய்.  அவள் தான்   நிஷாத தேச மன்னன் நள னுக்கு மாலையிட்டுவிட்டாளே''  என்றான் இந்திரன்.

கலி கோபமுற்றான்.  ஏமாற்றம் அவனுக்கு  நளன்  மேல் கோபமாக பாய்ந்தது. தேவர் களை அவமதித்து  மனிதனுக்கு மாலையிட்ட தமயந்தியை சும்மா விடமாட்டேன்'' என்றான். எங்கள் அனுமதி இருந்தது.  நாங்கள் தேவர்கள் என  காட்டிக்கொண்டபிறகே  அவள்  நளனை அறிந்தாள்  என்றான்  இந்திரன். எனவே  நளனுக்கு  துன்பம் தர நினைத்தால்  அது  எளிதல்ல.'' என்றான் இந்திரன்.

கலி  இதை ஏற்கவில்லை.  அவன் கோபம் அடங்கவில்லை. நளனை  விடமாட்டேன். அவனை  சூதுக்கு  அழைத்து அவன்  நாடு, புகழ், பெருமை,  எல்லாம் இழந்து தமயந்தியுடன் இன்ப வாழ்க்கை வாழ முடியாமல் செய்வேன்'' என்றான்...

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...