Wednesday, September 12, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹாபாரதம்.

நரனும் ஹரனும்
சடைமுடியோடு ஒரு துறவி எதிரே நின்று அர்ஜுனனை எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அர்ஜுனன் இந்திரனை சந்திப்பதில் குறியாக இருந்ததை அறிந்து அந்த துறவி தானே இந்திரன் என்று காட்டிக்கொண்டபோது தான் அர்ஜுனன் தன்னை சோதிக்க இந்திரன் வந்ததை அறிந்தான்.

''அர்ஜுனா உனது வீரத்தை அறிவேன். உன்னை சோதித்தேன். எவ்வளவு தூரம் நீ கடமை உணர்ச்சியில் கருத்தாக இருக்கிறாய் என்று அறிந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்?''

''தேவேந்த்ரா உனது கருணையால் எனக்கு சகல தனுர் வித்தைகளும், மிகச்சிறந்த, எவரும் வெல்லமுடியாத ஆயுதங்களும் சித்திக்க வேண்டுகிறேன். அவற்றை நான் நேர்மைக்காகவும் நீதிக்காகவும் மட்டுமே பிரயோகிப்பேன்.''

''அர்ஜுனா, எப்போது நீ தேவலோகத்தில் நுழைந்தாயோ உனக்கு சகல பாக்யங்களும் உடைமையாகிவிட்டன.''

''தேவதேவா எனக்கு இந்திர லோக போக போக்யங்கள் வேண்டாம். காட்டில் என் சகோதரர்கள் நிர்கதியாக நிற்கின்றனர்.சகலமும் இழந்துவிட்டோம். எதிரிகளைப் போரில் வென்று என் சகோதரன் மீண்டும் சக்கரவர்த்தியாக ராஜ்ஜியம் ஆள நான் வெற்றி பெற ஆசி வழங்கவேண்டும்.

''அர்ஜுனா, உனக்கு என் ஆசி. நீ முக்கண்ணன் சிவபெருமானை சந்திக்க வேண்டும். அவரிடம் ஆசி பெற்று பாசுபதம் பெற்றால் உன்னை வெல்ல எவராலும் முடியாது'' அது நடக்கும். கவலைப் படாதே.'' இந்திரனை வணங்கி அர்ஜுனன் விடைபெற்றான்.

''வைசம்பாயனரே, என் முன்னோர் வாழ்க்கை சரிதம் என்னை பெருமையடையச் செய்கிறது. மேலும் சொல்லுங்கள் '' என்றான் ஜனமேஜயன்.

''ஜனமேஜயா, பிறகு அர்ஜுனன் இந்திரன் சொன்னபடியே கைலாச பர்வதம் நோக்கி நடந்தான். பல மாதங்கள் கடந்தன. காடும் மழையும், வனமும், இடையூறுகளும் கடந்தான். இமகிரி அடியில் வனத்தில் விரதமிருந்தான். சிவனை நோக்கி தவமிருந்தான். நாட்கணக்கில் அன்ன ஆகாரமின்று கடுந்தவம் புரிந்த செய்தி தேவர்கள் மூலமாக சிவன் அறிந்தார். அவனது மனதில் இருந்த எண்ணம் புரிந்தது அவனுக்கு அருள் புரிய இசைந்தார்.

ஒரு வேடனாக, பார்வதி உடன் வர, சிவபெருமான் ஒரு காட்டுப்பன்றியை துரத்தி வந்தார். அது ஒரு ராக்ஷசன், அர்ஜுனனைக் கொல்ல காட்டுபன்றியாக வேடமிட்டு அங்கு வந்தவன். அர்ஜுனன் காண்டிவத்தை எடுத்து அதைக் கொல்ல அம்பை தொடுத்தான்.

''அதை வேட்டையாடாதே. நான் தான் அதை முதலில் துரத்தியவன் எனக்கு சொந்தமானது'' என்று சிவ-வேடன் தடுக்க, இதற்கிடையில் மூகன் எனும் அந்த ராக்ஷசன் தனது சுய உருவெடுத்தான். அர்ஜுனன் தன்னைக் கொல்ல வந்த அந்த ராக்ஷசன் மீது அம்பு எய்தான். இருவர் அம்பும் அந்த ராக்ஷசன் மீது பட்டது. அவன் இறந்தான்.

வேடன் உருவில் வந்த சிவனைக் கண்ட அர்ஜுனன் '' ஏ வேடா, நீ யார், கொடிய வன விலங்குகள் சூழ்ந்த இந்த வனத்தில் உனக்கு என்ன வேலை. அந்த ராட்சசன் காட்டுப் பன்றியாக என்னைக் கொல்ல வந்தவன். அவனைக் கொல்ல நான் அம்பு எய்தபோது நீ எதற்காக அவனை தாக்கினாய். உன்னை சும்மா விடமாட்டேன். உன்னைக் கொல்வேன்'' . என்றான் அர்ஜுனன்.

''அப்பனே, எங்களைப் பற்றி நீ கவலைப் படாதே. இந்த வனம் எங்களுக்கு பழக்கப்பட்டது தான். உன்னை பார்த்தால் ராஜ வம்சமாக தெரிகிறாய், நீ எங்கே இங்கு வந்தாய் அதை முதலில் சொல்.

''வேடனே, என் கையில் காண்டீவம் என்கிற இந்த தனுசு இருக்கும் வரையில் எனக்கு எதற்கும் எவரிடமும் அச்சமில்லை. இந்த ராக்ஷசனை அழிக்க எனக்கு ஒரு பிரயாசையுமில்லை. நான் குறிவைத்த பொருள் மீது மற்றவன் குறிவைத்தால் அவனை நான் விடமாட்டேன். எனவே எனது அம்பில் இறந்த ராக்ஷசனைக் கொன்ற பெருமை உனக்கு இல்லை. என்றான் அர்ஜுனன்.

'' நிறுத்து. நான் தான் முதலில் அவனை கொன்றவன். நீ அல்ல. இருந்தும் இப்போது நமக்குள் ஒரு போட்டி. நில் அங்கேயே. நீ உன் ஆயுதங்களை என் மீது பிரயோகி. நான் எளிதில் அவற்றை தடுப்பேன். பிறகு எனது அஸ்த்ரங்களை உன் மேல் பிரயோகிப்பேன். முடிந்தால் அதை தடு. பிழைத்திருந்தால் உனது பாக்கியம். இல்லையேல் மாண்டுபோ என்று சிவ-வேடன் சொல்ல அர்ஜுனன் ஆச்சர்யப்பட்டான். ''என்னை எதிர்க்கும் தைரியம் ஒரு சாதாரண வேடனுக்கா. போகட்டும் முடிந்தால் உயிர் பிழைக்கட்டும்'' என எண்ணி போட்டிக்கு ஒப்புக்கொண்டான்.

அர்ஜுனன் தனது காண்டிவத்தை எடுத்து சரியான அம்புகளை தேர்வு செய்து வேடன் மீது சரமாரியாக பொழிந்தான். சிவ -வேடன் அவற்றை எளிதில் தடுத்து சிரித்துக்கொண்டிருந்தான்.

''என்ன தம்பி இதெல்லாம் ஒரு அஸ்த்ரமா, கஷ்டமானதாக ஒன்றும் இல்லையா உன்னிடம்? இருந்தால் அதெல்லாம் என் மீது போடு'' என்றான். கோபமடைந்த அர்ஜுனன் மிக சக்திவாய்ந்த அம்புகளை வேடன் மீது எய்தான். வேடனும் அவற்றை தடுத்தான். அர்ஜுனன் திகைத்தான். ஒரு வீரனுக்கே உரிய தன்மையில் எதிராளியின் திறமையை வியந்தான். வேடா பிரமாதம். உன் வித்தை அசாத்தியமானது என்றான்.

''வீண் பேச்சு வேண்டாம். போட்டியில் கவனம் வை'' என்றான் சிவ-வேடன்

காண்டீவத்தை எதிர்கொள்ளும் தகுதி வாய்ந்த அந்த வேடன் சாமானியன் அல்ல, அந்த வனப்ரதேசத்தில் இருப்பவனாக இருக்க முடியாது என அர்ஜுனன் உணர்ந்தான். வேறு யாராவது யக்ஷனாக இருந்தால் இதில் முடியட்டும்'' என்று மிகச் சக்தி வாய்ந்த அம்புகளை வீசினான். அர்ஜுனன் அம்புகள் பலனளிக்க வில்லை. அக்னி அஸ்தரம் தொடுத்தான். அதுவும் பயனற்று போனது. அர்ஜுனன் திகைத்தான். யார் இவன்? காண்டிவத்தால் வேடனைப் பிணைத்து அவனை தாக்கினான்.
ஒரு நொடியில் அர்ஜுனனிடமிருந்து காண்டிவத்தையே கைப்பற்றினான் சிவ-வேடன். அர்ஜுனன் திகைத்துப் போய் தனது உடைவாளை உருவினான். அந்த வேடனை எதிர்த்து அவன் தலையில் தாக்கினான். அடுத்த கணமே அர்ஜுனனது வாள் ஒடிந்து விழுந்தது. கோபம் பீறிட்டு அர்ஜுனன் கற்களாலும் மரங்களாலும் வேடனைத் தாக்கினான். அவற்றால் வேடன் பாதிக்கப் படவில்லை. கடைசியாக் ஆயுதம் இழந்து அர்ஜுனன் வேடனோடு மல்யுத்தம் துவங்கினான் . வேடனின் பலம் அர்ஜுனனை வீழ்த்தியது. அவன் மயக்கமடைந்தான். உடலெல்லாம் ரத்தத்தோடு, காயங்களோடு மயக்கம் தெளிந்த அர்ஜுனன் மண்ணில் ஒரு சிவலிங்கம் செய்து மலர் மாலையிட்டு அதை பூஜித்து பிரார்த்தித்தான்.

தலை நிமிர்ந்தவன் தான் மண் லிங்கத்திற்கு இட்ட மலர் மாலை எதிரே நின்ற வேடனின் சிரசில் சூட்டப்பட்டு இருப்பது கண்டு இரு கை கூப்பினான். புரிந்து கொண்டான். அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.''மகாதேவா நீயா..'' என்றான்.

சிவனும் அர்ஜுனனின் வீரத்தை மெச்சி ''பல்குனா, உன் வீரத்தை நானே பரிசோதிக்க உன்னுடன் யுத்தம் புரிந்தேன். நீ என்னையே வெல்லும் அளவுக்கு பலம் மிக்கவன் என மெச்சினேன். உனக்கு என்னை முழுமையாக காணும் பார்வை அளிக்கிறேன். இதற்கு முன் நீ ஒரு ரிஷியாக இருந்தவன். உனக்கு என் தரிசனமும் தருவேன், உனக்கு எவரும் வெல்லமுடியாத எனது சக்தியும் தருவேன். என்னுடைய ஒரு ஆயுதமும் உனக்கு தருகிறேன்' என ஆசிர்வதித்தார் சிவபெருமான்.

முக்கண்ணன் கொடுத்த பார்வையால் மகாதேவனையும் பார்வதி தேவியையும் நேரில் கண்டான் அர்ஜுனன். ''நீலகண்டா, விஷ்ணு ரூபத்திலும் காக்கும் சிவபிரானே, உன்னை வணங்குகிறேன். என் தவறுகளை மன்னித்து அருள்வாயாக. உன்னை தரிசிக்கவே இத்தனை காலம் கடும் தவம் புரிந்தேன். என்னை சோதித்து அருள் செய்த தெய்வமே நான் பாக்யசாலி.

சிவன் அர்ஜுனனை ஆரத்தழுவி '' அர்ஜுனா நீ நரன், நாராயணனின் தோழன். பதரியில் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தவன்.

உன்னை இனி எவரும் வெல்ல முடியாத சக்தியை தந்தேன். உனக்கு வேண்டும் வரம் கேள்
"மகாதேவா, நான் உன் தரிசனம் கண்டு பலனடைந்தேன் தேவாதிதேவா, ''எனக்கு பீஷ்மர், கர்ணன், துரோணர் கிருபர் போன்ற வீரர்களுடன் மற்ற ராக்ஷசர்களுடன் யுத்தத்தில் மோதி ஜெயிக்க தாங்கள் அருளால் பிரம்மாஸ்திரம் தந்து அருள வேண்டும்.

''வீரனே, உனக்கு நான் என்னுடைய மிகச் சக்திவாய்ந்த பாசுபதம் என்கிற ஆயுதம் தந்தேன். அதை நீ பிரயோகித்தால் அதை எவராலும் எதிர்கொள்ளமுடியாது, அதன் சக்தியிலிருந்து தப்ப முடியாது. இதை எதிர்க்க இந்திரன், வாயு, வருணன், அக்னி யாராலும் முடியாதபோது நீ சொன்ன மனிதர்களால் எப்படி எதிர்க்க முடியும். நீ பிரயோகித்த உடன் மீண்டும் உன்னிடமே இந்த ஆயுதம் வந்து சேரும்.

இதை உன் மனதால், காண்டிவத்தால், கூட உபயோகிக்கும் சக்தி தந்தேன். மூவுலகிலும் இதை தடுக்க எவரும் இல்லை. இந்தா உனது காண்டிவம்'' என்று அவனது வில்லையும் ஆசிர்வதித்து அருளினார் சிவபெருமான். அவனை ஆலிங்கனம் செய்த அடுத்த கணமே அவனிடம் அவரது பாசுபதம் சேர்ந்தது. உடலிலும் புதுமையா
க ஒரு பலம் கூடியது.

அவனுக்கு பாசுபதத்தை எப்படி பிரயோகிக்கவேண்டும் என்று உபதேசித்த பின்னர் சிவனும் பார்வதியும் பனிமலையில் மறைந்தனர்.

சிவனை ஸ்தோத்திரம் செய்து அர்ஜுனன் வெற்றிகரமாக மன நிறைவோடு திரும்பினான்.

THE BOOK ''AINDHAM VEDHAM'' IN TWO PARTS OF 500 PAGES EACH AVAILABLE FOR MINIMUM DONATION FIXED AS A CONCESSION TO INTERESTED READERS BY SKSS. CONTACT: 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...