Saturday, September 1, 2018

LALITHA SAHASRANAMAM




ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (452 - 467) - J.K. SIVAN

तेजोवती त्रिनयना
लोलाक्षी-कामरूपिणी ।
मालिनी हंसिनी माता
मलयाचल-वासिनी ॥ 94॥

Tejowathi Trinayana
Lolakshi-Kamaroopini
Malini Hamsini Matha
Malayachala vasini

தேஜோவதீ த்ரிநயநா
லோலாக்ஷீ காமரூபிணீ |
மாலிநீ ஹம்ஸிநீ மாதா
மலயாசல வாஸிநீ || 96

सुमुखी नलिनी सुभ्रूः
शोभना सुरनायिका ।
कालकण्ठी कान्तिमती
क्षोभिणी सूक्ष्मरूपिणी ॥ ९६॥

Sumukhi nalini subhru
shobhana suranaeika
Kalakanti kantimati
kshobhini sukshmarupini 96

ஸுமுகீ நலிநீ ஸுப்ரூ :
சோபநா ஸுரநாயிகா |
காலகண்டீ காந்திமதீ
க்ஷோபிணீ ஸூக்ஷ்மரூபிணீ || 96


லலிதா ஸஹஸ்ரநாமம் - (452-467) அர்த்தம்

* 452 * தேஜோவதீ -- பளபளவென்று ஒளிர்பவள். காந்தி என்றாலும் ஒளிவீசுவது. ஒன்றிலிருந்து பெற்று அதை வீசுவது. சூரியனிடமிருந்து பெற்று வீசும் ஒளி சூரிய காந்தி என்பதுபோல். பிரம்மமே ஒளிவீசுவதை இந்த நாமம் உணர்த்துகிறது. ப்ரஹதாரண்யக உபநிஷத் (III.viii.9) ''சூரியன் சந்திரன் ஒளிவீசுவது ப்ரம்மத்திடமிருந்து பெற்ற ஒளியே ''என்கிறது.

* 453 * த்ரிநயநா -- அம்பாள் ஸ்ரீ லலிதைக்கு முக்கண்ணி என்று பெயர். ஒரு வருத்தமான விஷயம். சென்னையில் அற்புதமான ஒரு அம்பாள் கோவில் மைலாப்பூரில் இருக்கிறது. சக்திவாய்ந்தது. அம்பாளுக்கு முண்டகக்கண்ணி -- பத்ம லோசனி , தாமரைக்கண்ணாள் என்று பெயர். எல்லோரும் ஒருவர் விடாமல் அவளை முண்டக்கண்ணி என்று சொல்வது என்றாவது ஒருநாள் மாறவேண்டாமா? அது இன்றுமுதலாக இருக்கட்டுமே.

அம்பாளின் முக்கண்கள் எவை? சூரியன், சந்திரன், அக்னி. மூன்று கண்களும் பேச்சு, ஊக்கம், கவனிப்பு ஆகியவற்றை குறிப்பன. அவளே சிவன். ஆகவே அவளும் த்ரிநேத்ரி. யோகசூத்ரத்தில் பதஞ்சலி மகரிஷி (I.7) ''எதையாவது சரியாக புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, மூன்று விஷயம் தேவை, கண்கூடாக பார்த்தல், ஊகித்தல், (அனுமானம்), மற்றொன்று ஆகமா ஆதாவது ஆத்ம ஞானம், நிர்ணயம் செய்வது. முக்கண் என்பது ஆஞ்ஞா சக்ரத்தை குறிப்பிடுவது. ஒருவரின் உள்ளே இருப்பதை அறியும் சக்திக்கும் இந்த பெயர். சக்தி வழிபாட்டில் இடது கை ,வலது கை , வைதீக வழிபாடு என்று மூன்று முறைகள் உண்டு. எல்லாமே மூன்று மூன்று.

* 454 * லோலாக்ஷீ காமரூபிணீ - அலைபாயும் கண்கள் சிலருக்கு உண்டு. சுற்றிக்கொண்டே இருக்கும் பார்வை. லோலாக்ஷி என்றால் பெண். அம்பாளின் ஒரே விருப்பம் ஆசை, சிவனோடு இணைதல் மட்டும் அல்ல, எல்லோருடனும் இருப்பது. அவள் அஷ்டமாதா. யோகேஸ்வரி (விரும்புபவள்), மஹேஸ்வரி, (கோபிப்பவள்), வைஷ்ணவி (ஆசைகளை கட்டுப்பாட்டில் கொண்டவள்), பிராம்மணி (உணர்ச்சிகளின் வடிவம்) கல்யாணி ( அதிசயம், ஆச்சர்யம்) , இந்த்ரஜா ( பொறாமையை கட்டுப்பாட்டில் கொண்டவள்) வராஹி (மதிப்பவள் , எடைபோடுபவள்), யமதண்டா ( மரண தண்டனை அளிப்பவள் ) ஸ்ரீ சக்ர வழிபாட்டில் இந்த பெயர்கள் சந்தர்ப்பங்களுக் கேற்றாற்போல் சற்று மாறுபடும்.

*455* மாலினீ -- மாலை சூடியவள். சாதாரண பூ மாலை அல்ல. சமஸ்க்ரித பாஷையின் 51 அக்ஷர மணிமாலை. அவள் சப்த ப்ரம்மம் அல்லவா? அவளிடமிருந்து வெளிப்படுவது தான் பாஷையே. பிரபஞ்சத்தை தன்னுள் கொண்டவள். ஒருவரி கதை ஒன்று சொல்கிறேன். சிவருமானுக்கும் லலிதாம்பிகைக்கும் கல்யாண சமயத்தில் லலிதாவின் அந்தரங்க தோழி மாலினி சிவனின் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு ''ஒரு வரம் கொடுத்தால் தான் காலை விடுவேன்'' என்று சொல்ல, என்ன வரம் கேள் என்று சிவன் கேட்க, ''உங்கள் சக்தி அனைத்தும் லலிதையோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்'' என்று கேட்க, ''அப்படியே '' என்று சிவன் வரமளிக்க அவர் கால் விடுதலை பெற்றது.

தாந்த்ரீகத்தில் மாலினி என ஒரு தந்திரம் உண்டு. பிரஞையை தொடர்ந்து அழிப்பதற்கும் மாலினி என்று பெயர். ஒரு ஏழுவயது பெண்ணை மாலினி என்ற நாமம் குறிக்கும்.

*456* ஹம்ஸினீ - தன்னைச்சுற்றிலும் ஹம்சங்களோடு இருப்பவள். ஸ்ரீ சக்ர பூஜையில் முதல் ஆவரணத்தில் வரும் தேவதைகள். நமது கழுத்தின் இருபக்க ரத்த நாளங்களை அஷ்ட மாதா என்று குறிப்பிடுவதுண்டு. ஹம்சம் என்றால் வாத்து. ஹம்சமந்த்ரம் அஜப ஜப மந்திரம் எனப்படும். சீரான நிமிர்ந்த உள்மூச்சு, வெளிமூச்சை சுவாசிப்பதை ஹம்சம் என்பார்கள். வாத்துகள் நேராக நடப்பவை. சௌந்தர்ய லஹரி பரமேஸ்வரன் வீட்டில் நிறைய ஹம்சங்கள் நடை பழகுவது பற்றி வரும். சிவன் வீடும் அம்பாளின் வீடும் ஒன்று தானே.

* 457 * மாதா -- லோக மாதா. சர்வ மந்திரங்களின் தாய் அம்பாள். வேத மாத்ருகா.

* 458 * மலயாசல வாஸிநீ -- மலய மலைச்சாரலில் வசிப்பவள் என்று ஒரு பெயர் அம்பாளுக்கு.
மலைகள் நிறைந்த பிரதேசம் மலையாளம். அங்கே அம்பாளுக்கு பகவதி என்று பெயர். கேரளத்தின் ஆதி பெயர் மலயாசலம். அங்கே பேசப்படுவது மலையாளம். கமகமவென்று சந்தனம் செழிப்பாக வளரும் காடுகள் கொண்ட இடம். இந்திரனின் நந்தவனம் என்று பெயர்.வளமை கொழிக்கும் இடம்.

* 459 * ஸுமுகீ -- ''பார்க்க லக்ஷணமாக தெய்வீகமா இருக்கு'' என்போமே அது அம்பாளின் முகத்தை நினைவு படுத்தவே தான். பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் ஒரு அழகு முகம். சாந்தோக்ய உபநிஷத் (IV.14.2) “ உன் முகத்தை பார்க்கும்போது அது பிரம்மத்தை உணர்ந்து ஒளிவீசுவது தெரிகிறது'' என்று சொல்கிறது. எல்லா உபநிஷதங்களும் அப்படித்தானே சொல்ல முடியும்.

* 460 * நளினி -- மென்மையானவள். தாமரை மலரின் மெத்து மெத்து அங்கம். புனிதமானவள். கங்கைக்கு நளினி என்று ஒரு பெயர் உண்டு.

* 461 * ஸுப்ரூ - அழகிய மிருதுவான வளைந்த வில்லினை ஒத்த புருவங்களை உடையவள் ஸ்ரீ லலிதாம்பிகை என்று சொல்கிறது இந்த நாமம். நமக்கு இந்த அர்த்தம் தெரியாததால், சுப்ரு என்று சுப்பிரமணியனை செல்லமாக கூப்பிடுகிறோம். ''ஹே உமாதேவி, இந்த உலகில் பயத்தை போக்க வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். உன் இரு அழகிய வில்லினை ஒத்த புருவங்களை ஆயுதமாக கொண்டு நாண் ஏற்றி மலர் அம்புகளை தொடுக்க ரதியின் கணவன் மன்மதனிடம் அளித்தால் போதும் '' என்று சௌந்தர்ய லஹரி 47வது ஸ்லோகம் சொல்கிறது. பயம் ஆளைக் கொன்றுவிடும். புலியை விட கிலி ஆபத்தானது.

* 462 * சோபனா - நற்செயல்கள் நடக்க செய்பவள் ஸ்ரீ லலிதை. அதீத விவரிக்க முடியாத அழகி அம்பாள். வாக் தேவியால் சொல்ல முடியாத போது நாம் எப்படி வர்ணிக்க முடியும்? சோபை என்றாலே அழகு என்று அதனால் தான் சொல்வது. தெய்வீக அழகு.

* 463 * ஸுரநாயிகா -- தேவர்களின் தலைவி. எத்தனை ராக்ஷஸர்களை தேவர்கள் நலத்துக்காக சம்ஹாரம் செய்தவள் அம்பாள். தேவர்கள் எனும்போது அதில் ப்ரம்ம விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி லட்சுமி எல்லோருமே அடக்கம் தான். சர்வ சக்தியுடையவள் என்பதை குறிப்பிடும் நாமம்.
* 464 * காலகண்டீ -- சிவன் யமனை வதைத்தவன், உதைத்தவன்.கால சம்ஹாரன் என்று பெயர் கொண்டவன். காலகண்டன் என்றால் கழுத்து நீலமாக உள்ளவன் என்றும் பொருள். சிவனின் தொண்டையில் ஆலஹால விஷம் நெஞ்சில் உள்ளே இறங்காமல் தடுத்தவள் அம்பாள். அதனால் தான் காலகண்டன் நீலகண்டன் ஆனான்.

* 465 * காந்திமதீ -- ஒளிவட்டம் பிரபை எனப்படும். காந்தி என்றால் பிரகாசம் அளிப்பது. மேதாவிலாசம், அன்பு, கருணை, ஞானம் எல்லாம் ஒளிவீசும் அம்பாளின் முகத்தை இந்த நாமம் சொல்கிறது.

* 466 * க்ஷோபிணீ -- உணர்ச்சி ததும்ப செய்பவள். - சிவனை ஆட்கொண்டு ஆட்டுவிப்பவள்.. அசையாததை அசைத்து பிரபஞ்ச சிருஷ்டி காரணமானவள். சக்தி இல்லையேல் சிவம் ஏது?

* 467 *ஸூக்ஷ்மரூபிணீ - அணுவுக்குள் அணுவானவள். அவள் மூன்று உருவங்களை உடையவள். ஸ்தூல ஸ்வரூபமாக இருப்பதை இந்த லலிதா சஹஸ்ரநாமத்தில் தியான ஸ்லோகங்கள் அவளது ஸ்தூல சரீரத்தை போற்றி பாடுபவை. நுண்ணிய சூக்ஷ்ம ஸ்வரூபத்தை காமகலா என்ற நாமமம் நினைவூட்டுகிறது. அதற்கும் சிறிய அணுவுக்குள் அணுவான ஸ்வரூபத்தை குண்டலினி என்கிறோம். கதோபநிஷத் இந்த துக்குணியூண்டு உருவத்தை ' அணோரணீ' யம் (அணுவுக்குள் அணு) என்று சொல்கிறது.

ஒரு சக்தி பீடம் : பித்தாபுரம் புரு ஹிதிகா சக்தி ஆலயம்.
பதினெட்டு சக்தி பீடங்களில் ஒன்று. ஆந்திராவில் கோதாவரி ஜில்லாவில் காக்கிநாடா அருகே உள்ளது. இந்த சக்தியின் சிவனின் பெயர் குக்குடேஸ்வரர். நான் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன். பாத கயா சரோவர் என்று தடாக (குளம்) தீர்த்தம். பக்தர்கள் ஸ்னானம் செய்கிறார்கள்.
அம்பாள் புருஹிதிகா குக்குடேஸ்வரர் சந்நிதி வடகிழக்கில் குடிகொண்டிருக்கிறாள். சாமல்கோட்டை ஸ்டேஷனிலிருந்து 12 கி.மீ. காக்கிநாடாவிலிருந்து 16கி.மீ. பித்தாபுரம் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ. சிவன் ஸ்படிக லிங்கம்.

இந்த ஸ்தலம் த்ரிகயா க்ஷேத்திரம் எனப்படும். ஒரு பெரிய ராக்ஷஸன் ''கயாசுரன்'' என் உடம்பில் யாகம் பண்ணுங்கள் என்று பிரம்மாவிடம் சொல்லி கால் நீட்டி படுத்தான். அவன் தலை கயாவில். கால் பித்தாபுரத்தில். இப்போது அங்கே குளம். அதனால் தான் பாத கயா என்று மேலே சொன்னேன்.
சதியின் உடலை சுமந்து சிவன் ருத்ராநடனம் ஆடியபோது அவளது பின்புறம் விழுந்த இடம் பித்தாபுரத்தில் இந்த ஸ்தலம் என்று ஐதீகம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...