Wednesday, September 26, 2018

SWAMI DESIKAN 750

சுவாமி  தேசிகன் 750   J.K. SIVAN 



                   சோதனையும்   சாதனையும்  

SrImAn venkatanAthAryaH kavitArkika kesarI | vedAntAcArya-varyo me sannidhattAm sadA hRdi ||
கவிகளுக் கிடையே ஒரு  பெரிய  சிங்கம். வாதத்தில்  எவரும் வெல்ல முடியாதவர் ஒருவர்    சொல்  ஸ்ரீ  ராமானுஜருக்கு  பிறகு மிகச்சிறந்த  வைஷ் ணவ  ஆச்சார்யனாக   திகழ்ந்த ஸ்ரீ  சுவாமி தேசிகனைத்தான்  நினைக்கத்  தோன்றுகிறது.   தேசிகரின்  அம்மா தோத்தரம்பா,   கிடாம்பி ஆச்சான் (ப்ரணதார்த்தி   ஹராச்சார்யார் ) என்பவரின் 
கொள்ளு பேத்தி.   ராமாநுஜாசாரியாருக்கு  ஆகாராதிகளை   தயாரித்தவர். தாய் மாமன்  கிடாம்பி  ஆச்சான்.    தேசிகனின்  ஆரம்ப குரு  அவரது     அப்புள்ளார்.  . அப்புள்ளாரின்  குரு  நடாதூர் அம்மாள்  எ ன்ற மஹான். இந்த மஹான்  தான் தேசிகனை   ஐந்து  வயதிலேயே   முதன் முதலாக  பார்த்தபோது  தேசிகனின் முக தேஜஸில்  வியந்து  ''ஆம்  முதல்வன் இவன் ''  என்றவர்.   இதை   ஸ்ரீ  உ.வே.  பிரதிவாதி  பயங்கரம்  அன்னங்கராச்சார்யர்  எழுதிய  ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவம் என்ற  சிறிய நூலில்  படித்தேன்.    வைணவ சம்பிரதாய கோட்பாட்டை நிலைநிறுத்தி  சிறக்கச் செய்வதில் இவன் தான்  முதல்வனாக  இருக்கப்போகிறான் என்று அந்த மஹான்  நடாதூர்  அம்மாளுக்கு   தெரிந்திருக்கிறது.   

தேசிகன் சுவாமி  ஏக சந்தகிரஹி,    எதையும் ஒரு முறை  செவியில் கேட்ட அடுத்த கணமே  மனதில்  மறக்காதபடி  பதிந்துவிடும்.    இது போல் அபூர்வ சக்தி கொண்ட  இன்னொருவர் ஸ்ரீ கூரத்தாழ்வான்.   ஆகவே   சுவாமி தேசிகன்  இருபது வயதுக்குள்  வெகு  வேகமாக அனைத்து சாஸ்திரங்களையும்  முறையாக  முழுமையாக  அறிந்துகொண்டார். ''கவி தார்க்கிக சிம்மம் ''  என்று  தர்க்கத்தில் எவரும் எதிர்க்கமுடியாத சிங்கம்  என்ற  விருது  எளிதில் கிடைக்கும் விருதா? 

எந்த கருத்தையும்  சீராக, பல  வித கோணங்களில் ஆராய்ந்து தனது முடிவை சொல்லும்  பாங்கு அவரது  ஆழ்ந்த ஞானத்தை  வெளிப்படுத்தி அவரது  இயற்பெயரான  வேங்கடநாதன் மறைந்து போனது.  உலகம் அவரை  ஸ்ரீ  வேதாந்த தேசிகனாக   புரிந்து கொண்டது.

ஒன்றா  இரண்டா  எடுத்துச் சொல்ல.  எண்ணற்ற  ஸ்லோகங்கள், கத்தியம், ஸஹஸ்ரம் , அந்தாதி, காவியங்கள்,  சரித்திரங்கள் என  எழுதி தள்ளி  இருக்கிறார்  சுவாமி தேசிகன். அவற்றை வரிசைப்படுத்தி எழுதினாலே  ஒரு குட்டி  புஸ்தகமாகிவிடும் .

அவரது  நாற்பதாவது   வயது கடந்து  அப்புறம்  ஒரு பிள்ளைக்கு அப்பாவானார்.  வரதராஜன் மீதுள்ள பக்தி காரணமாக அந்த பிள்ளைக்கு வரதன் என்ற பெயர்  அமைந்தது.     வைணவ நூல்கள், சமூகம்,வரதனை,  நைனாச்சார்யா,  குமார வரதாச்சார்யா என  வரதனைப்   போற்றுகிறது.  அவரும் ஒரு சிறந்த வைணவ பண்டிதர்.   ஆசிரியர்.  தேசிக மங்களம், பிள்ளை அந்தாதி, தேசிக தினாசார்வை  என  பல நூல்கள்  இயற்றியவர். 

வடக்கே  மத வெறி கலவரம் அதிகரித்து  அந்த  பயம்  கொஞ்சம்   கொஞ்சமாக தெற்கே  பரவலாயிற்று.  வெறும் பயம் அல்ல. உயிரை விட மேலான பக்தியை அழிக்கும்  தீய   சக்தியாக வளர்ந்து  நாசத்தை விளைவித்தது.  சக்தி பலம்  கொண்ட மிலேச்சர்கள் உருவில் தெற்கே பல  ஹிந்து ஆலயங்களை, விகிரஹங்களை  அழித்தது. சூறையாடியது. 

மாலிக்காபூர்  படை எந்நேரமும்  ஸ்ரீ ரங்கம் வரும் என்று அறிந்து தற்காப்பாக,  முக்கிய அரிய நூல்கள், விகிரஹங்கள்  பதுக்கப்பட்டு  பாதுகாப்பாக  வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான  வைணவர்கள் கொல்லப்பட்டனர்.  உயிருக்கும் மேலான ரங்கநாதனை காக்கும்   பொறுப்பை   முதிய வயதில்  பிள்ளை லோகாச்சார்யார் ஏற்றார்.  அவசரம் அவசரமாக  வெறியர்கள் வருமுன்பு,  ஸ்ரீ ரங்கம்   உத்சவ ரங்கன்  நம்பெருமாளோடு  சிலர் துணையுடன் ஸ்ரீரங்கத்தை  விட்டு வெளியேறினார். ஜ்யோதிஷ்குடி  அடைந்தார்.   பிள்ளை  லோகாச்சார்யார்  அங்கேஇருந்து  காட்டு  வழியிலே,  அன்ன  ஆகாரமின்றி  மேலே  செல்ல  இயலாமல் களைத்து, கடைசி மூச்சுடன்  போராடி  விண்ணுலகெய்தினார்.  மூல விக்ரஹம்  ரங்கநாயகி தாயார் சந்நிதி  அருகிலேயே   ரகசியமாக புதைக்கப்பட்டுவிட்டார்.  

மூலவருக்கு   முன்பாக வெளியே  தெரியாதபடி அற்புதமாக  ஒரு  சுவர் எழுப்பப்பட்டு  மூலவர்  ரங்கநாதன் மறைக்கப்பட்டார்.  இந்த   ஏற்பாட்டை  சுவாமி தேசிகன் முன்னின்று மேற்பார்வை  இட்டார்.

வயதில் முதிர்ந்த ஆசார்யன்  ஸ்ரீ  சுதர்சன  சூரி  ஸ்ரீரங்கத்தை விட்டு   வெளியேற சம்மதிக்கவில்லை.  முகலாய வெறியர்கள் கொன்ற   எண்ணற்ற  வைணவர்களில்
 அவரும்  ஒருவர்.  ஆனால்  அதற்கு முன்பு தனது உயிருக்கும் மேலான '' ஸ்ருத  பிரகாசிகா'' என்ற  அற்புத  பாஷ்ய  ஓலைச்சுவடுகளை சுவாமி தேசிகனிடம் ஒப்படைத்தார்.

''சுவாமி  இனி என்னை  நம்பி பயனில்லை.  இதை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உயிரிலும் மேலாக இதை காப்பாற்றவேண்டியது  உமது பொறுப்பு '' என்று சொன்னதால்  சுவாமி தேசிகன், மற்றோரும்  அந்த நூலை  மறைத்து,  உயிரற்று கிடந்த வைணவர்களோடு ஒருவராக  அசைவற்று கிடந்ததால்  பிணங்கள் என்று கருதப்பட்டு  வெறியர்களிடமிருந்து தப்பினர். 

பிறகு அங்கிருந்து தப்பி  எப்படியோ  மேல்கோட்டை  சென்றார்கள்  சுவாமி தேசிகனும் தப்பிய  மற்றோரும்.  சுதர்சன சூரியின் குடும்பத்தையும் பிள்ளைகளையும்  ஜாக்கிரதையாக  கூடவே  அழைத்து சென்று காப்பாற்றினார்.  சத்தியமங்கலத்தில்  கர்நாடகாவில் குடியேறினர்.  அங்கிருந்து  மேல்கோட்டை  அடைந்து அங்கே  ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர   ஜீயர் என்பவரை  சந்திக்கிறார்.  அவர் தான்  ஸ்ரீ பரகால  மட முதல் ஜீயர். 

மேல்கோட்டையில் இருந்து சில  நாளில்  திருப்பதி செல்கிறார்  சுவாமி தேசிகன். ஜாக்கிரதையாக  நம்பெருமாள் அங்கே  போய் சேர்ந்து விட்டாரே.   பிறகு    வடக்கே  திவ்ய தேச யாத்ரை செல்கிறார். மதுரா,  பிருந்தாவனம்,  அயோத்யா, காசி போன்ற   புண்ய க்ஷேத்ரங்கள் செல்கிறார்.    ஸ்ரீ ரங்கம்  திரும்பியபோது அவர் கண்களில் ரத்தம் சொட்டுகிறது. மஹா பாவிகள்  இப்படி  சேதம் விளைவித்திருக்கிறார்களே!   ரங்கநாதா, வரதராஜ பயத்திலிருந்து எங்களை  விடுவித்து அருள்  என்ற   எண்ணத்தில் விளைந்தது தான் அப்போது அவர்  இயற்றிய   ''அபீதிஸ்தவ'' (பீதி இல்லாமல் இருக்க அருள்செய்)   ஸ்லோகம். 

இதை படித்து விட்டு  எழுதவேண்டும் என்ற ஆர்வம் எழுந்து விட்டது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...