Friday, September 14, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்        ஜே.கே. சிவன் 
மஹாபாரதம் 
                                                           
           விஜயனின்  தேவலோக விஜயம்

ஜனமேஜயன் குதித்தான். ஆனந்தத்தால் கூத்தாடினான். ''வைசம்பாயன ரிஷி,  என் கொள்ளுத்தாத்தா  அர்ஜுன மஹாராஜா, எவ்வளவு பெரிய மஹா வீரர், பக்தர்.  சிவபெருமானே அவரோடு சண்டை போட்டு மகிழ்ந்து  ''உன்னை ஜெயிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை எனக்கு ''ல் என்று சொன்னாரென்றால்.....  நான் பெரும் பாக்கியசாலி இந்த குடும்பத்தில் பிறக்க''   என்றான். மேலே சொல்லுங்கள் கேட்க துடிக்கிறேன்'' என்றான்.


வைசம்பாயனர் தொடர்கிறார்:

அர்ஜுனன் வணங்கி நிற்க  சிவபெருமான்  பார்வதியுடன் அவனுக்கு காட்சி அளித்துவிட்டு பனிமலை சிகரம் நோக்கி  மறைந்தார் அல்லவா?

''யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கல்லவோ கிடைத்தது.  திரிசூல தாரி, த்ரிநேத்திரன்  சிவனைத் தொட்டேன். அவனை அடித்தேன், அவனுடன் யுத்தம் பண்ணினேன். அவனருள் பெற்றேன். அவனால் எனக்கு ஒரு புத்துணர்ச்சியும்  புது சக்தியும் உள்ளும் புறமும்  பெற்றேன். இனி என் எதிரிகளை  அழிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.''   அர்ஜுனன்  நன்றியுடன்  சிவனை வணங்கினான்.

அர்ஜுனனை வருணன் , யமன், குபேரன் ஆகியோர் வழியில் சந்தித்து  வாழ்த்தினர்.  அவர்களை வணங்கி  ஆசி பெற்றான் அர்ஜுனன். அவர்களைத் தொடர்ந்து இந்திரன் தனது தேவி இந்திராணி யுடன்  ஐராவதத்தின் மேல் அமர்ந்து வந்து அர்ஜுனனை  வாழ்த்தினான்.

அப்போது யமன்  அர்ஜுனனை வாழ்த்தி  உனக்கு சகல தேவர்களையும் காணும் சக்தி அளித்திருக்கிறோம். அனைவரையும் நீ பார்க்கலாம்

 நீ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  நரன்  என்கிற ரிஷியாக இருந்தவன்.   அர்ஜுனா உனக்கு  என்னுடைய  கதாயுதம் தருகிறேன். இதை எவராலும் வெல்லமுடியாது. எளிதில்  உன் எதிரிகளை இதால்  அழிக்க முடியும்'' என்று  யமன் பரிசாக ஒரு கதாயுதத்தை அளித்தான்.

அவ்வாறே  வருணனும்  வருணாஸ்த்ரங்களை  அர்ஜுனனுக்கு அளித்தான்.

குபேரன்  சும்மா இருப்பானா?   '' நானும்  உனது வீரத்தை மெச்சி  ஒரு  பரிசு தருகிறேன். இந்தா  இது  அந்தர்தானம்  எனும் அஸ்தரம். இதால் உன் எதிரிகள்  நீ  இடும்  கால வரையறைகேற்றவாறு   நீண்ட  உறக்கத்தில் ஆழ்வார்கள்.  தக்க சமயத்தில் இதை உபயோகி. திரிபுராந்தக சம்ஹாரத்தின் போது  சிவபெருமான் கூட இதைத்  தான் பிரயோகித்தார். உன்னை தேவலோகத்திற்கு அழைத்துச்செல்ல  இந்திரனது ரதம்  வரும்.  அங்கே வா. எல்லோரையும்  வணங்கி  உனக்கு  அளிக்கும்  ஆயுதத்தை பெற்றுச் செல்'' என்றான் குபேரன்.

 ரதம் வந்தது.  அர்ஜுனன்  பறந்தான்.  இந்திரனின் கோட்டை வாசலில் நான்கு தந்தங்களுடன்  ஐராவதம் நின்றிருந்தது.  இந்திரனின்  அமராவதி நகரத்தில்  கந்தர்வர், தேவர், கின்னர கிம்புருஷர்கள்  வாத்யங்களோடும், வேதங்களோடும் அர்ஜுனனை வரவேற்றனர்.   மலர்களை தூவினர். நாரதர் தும்புரு,  அஷ்ட வசுக்கள், ஆதித்யர்கள், அஸ்வினி தேவதைகள்,  ருத்ரர்கள்,  ஹாஹா  ஹுஹு க்கள்  எனும் கந்தர்வர்கள்,  எல்லோருமே  அவனை  வரவேற்று உபசரித்தனர். இந்திரன் தனது  பிரம்மாண்ட  சபையில்  அர்ஜுனனை ஆலிங்கனம் செய்து அருகில் தனது ஆசனத்தில்  அமர்த்தினான். தேவலோக அரம்பையர்  நாட்டியம் ஆடினார்கள்.  ரம்பா, ஊர்வசி திலோத்தமை  மற்றும் எண்ணற்ற  கந்தர்வர்கள்  நிகழ்ச்சிகள் நடத்தினர். இதற்கிடையில்  ஊர்வசி அர்ஜுனன் மீது மையல் கொள்கிறாள். அவன் தங்கியிருந்த மாளிகைக்கு வந்து அவனை கேளிக்கைக்கு  அழைக்கிறாள்.  அர்ஜுனனுக்கோ  அவளைக் கண்டதுமே  தனது தாய் குந்தி,  மாத்ரி, இந்த்ராணி போன்ற  உயர்குல மதிப்புக்குரிய  தாயினமாக  தோன்றியது.   எனவே அவளது அழைப்பை நிராகரிக்கிறான்.   அவளை வணங்கி  ஆசி  கேட்கிறான்.  அவளது வாக்கு வாதங்கள்  எடுபடவில்லை. ஊர்வசி ஏமாற்றத்தால்  கோபமடைகிறாள். மூவுலகும் மயங்கும் என்னை அவமதித்து என்னை  ஏமாற்றமடையச் செய்த  நீயும்  ஒரு  காலத்தில்  ஒரு நர்த்தகியாக,  ஆணும் பெண்ணும் இல்லாத  நபும்சக பிறவியெடுப்பாய்.  ஊர்வசி  இவ்வாறு சாபமிட்டு செல்கிறாள்.

இந்திரனின் வஜ்ராயுதம்  அர்ஜுனன் பெற்ற மகிழ்ச்சியைவிட  ஊர்வசியின் சாபத்தால்  வருந்தி  அதை  இந்திரனிடம்  சொல்ல  ''என் மகனே, அர்ஜுனா, இதுவும் உனது நன்மைக்கே,  உனது  அஞ்ஞாத வாச காலத்தில் இந்த சாபம் பெரிதும்  உனக்கு கை கொடுக்கும்''  என்றான்  இந்திரன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...