Thursday, September 27, 2018

NALACHARITHRAM

ஐந்தாம் வேதம் (மஹா பாரதம்). J.K. SIVAN
நள சரித்திரம் 3

இதற்கும் மேல் துயரம் உண்டா ?

யுதிஷ்டிரன், பீமன், திரௌபதி எல்லோரும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
விருஹதஸ்வ ரிஷி தொடர்ந்து சொல்கிறார்:

கலி துவாபரனிடம் சொல்லியவாறே, நேராக நிஷாத நகரம் வந்தான். ஒரு இடத்தில் தங்கி காத்திருந்தான். 12 வருஷங்கள் ஓடிவிட்டது. நளன் ஒரு சாயந்திரம் நித்ய கர்ம அனுஷ்டானம் செய்யும்போது தனது கால்களை சரியாக கழுவவில்லை. நீர்படாத அந்த வழியாக கலி புருஷன் நளன் உடலில் நுழைந்துவிட்டான். (பெரியவர்கள் வெளியே போய்விட்டு வந்தால் வீட்டில் காலை முழுதும் நன்றாக அலம்பு என்று சொல்வார்களே இப்போது காரணம் புரிகிறதா?)

கலி புஷ்கரன் என்பவனை சந்தித்து ''வா பகடை ஆட்டம் ஆடலாம்'' என்று அழைத்தான்.
''என் மூலம் நீ நளனை எளிதில் வெல்லலாம். அவனது நாடு புகழ் பெருமை எல்லாம் நீ அடைந்து நிஷாத நாட்டு மன்னனாக சுகமாக வாழலாம்'' என்று ஆசைகாட்டினான். புஷ்கரன் சந்தர்பத்தை விடுவானா? நளனைப் போய் சூதாட அழைத்தான். நளனும் ஒப்புக்கொண்டான். ஆட்டம் சூடு பிடித்தது. நிறைய தடவை நளன் தோற்றான். எனினும் நிறுத்தவில்லை. தங்கம், வெள்ளி, தேர், ஆடைகள், ஆபரணம் எல்லாம் இழந்தான். தமயந்தி அழைத்ததால் மக்கள் அரண்மனை வாயிலில் திரண்டனர். மக்களுடன் நளன் பேசவில்லை. இரண்டாம் முறையாக அவர்களை தமயந்தி அழைத்தாள் . அப்போதும் நளன் மக்க ளையோ மந்திரிகளையோ கலந் தாலோசிக்க வில்லை. இருப்பதை யெல்லாம் இழந்து கொண்டே இருந்தான்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தயமயந்தி தேர்ப்பாகனை வரவழைத்தாள்

'வர்ஷ்நேயா , எங்களது குழந்தைகள் இந்த பெண்ணையும் , பிள்ளையையும் அழைத்துக்கொண்டு தேரோடு செல். குந்தினபுரத்தில் எங்கள் உறவினரிடம் புகலடைவாயாக'' பின்பொரு முறை சந்திப்போம்'' என்றாள் .

விதர்ப நகரில் குழந்தைகள் தேர் எல்லாம் ஒப்படைத்து அவன் ருதுபர்ணன் என்கிற அயோத்யா மன்னனிடம் தேர்ப்பாகனாக வேலைக்கமர்ந்தான்.

''ஆட்டம் தொடரலாமா? இன்னும் என்ன இருக்கிறது உன்னிடம் பணயம் வைக்க ? என்று புஷ்கரன் கேட்டபோது நளன்

''என் மனைவி தமயந்தியை வைத்து ஆடுகிறேன்'' என்றான். புஷ்கரன் இதை ஏற்கவில்லை.கோபித்தான்.

எனவே கட்டின துணியோடு நளன் தமயந்தி இருவரும் நகரை விட்டு வெளியேறினர். புஷ்கரன் அரசனாக ஆணையிட்டான். ' யாராவது நளனுக்கு உதவினால் சிரச்சேதம்''
என ஆணை பிறப்பித்தான்.

ஆகாரமின்றி மூன்று இரவுகள் வெறும் நீரில் மட்டுமே இருவரும் உயிர் வாழ்ந்தார்கள்.
ஊருக்கு வெளியே ஒரு பொது இடத்தில் தங்கினார்கள். சில பறவைகளை பார்த்த நளன் இடுப்புத் துணியால் அந்த பறவைகளை பிடித்து அன்று உணவாக உட்கொள்ள நினைத்தபோது அவனது துணியை உருவிக்கொண்டு அவை பறந்து சென்றுவிட்டன.

பறவைகள் மேலே பறக்கும்போது சிரித்து விட்டு சொல்லியது:

''ஹே முட்டாளே, நாங்கள் தான் நீ விளையாடித் தோற்ற இரு பகடைகளும். உன் ஆடையைப் பிடுங்கி அது கூட இல்லாமல் நீ திரிய வேண்டும் என்பதற்காக உன்னிடம் பறவைகளாக வந்தோம்''. என்றன.

நளன் விசனத்தோடு ''தேவி, இதோ இந்த பாதை விதர்பநகர் செல்கிறது. நீ செல். நான் இந்த காட்டுப்பகுதி வழியாக தெற்கு நோக்கி செல்கிறேன். ''

''நாதா, உங்களை இடுப்பில் போதிய உடையும் இன்றி பசியோடு எப்படி இந்த காட்டுப்பாதையில் விட்டுச் செல்வேன். இருவரும் சேர்ந்தே துன்புறுவோம். என்றோ மீண்டும் ஒரு நாள் நமக்கு வாழ்வில் ஒளி தோன்றும். காத்திருப்போம். ஒரு மனிதன் துன்புறும்போது அவனது ஒரே சாய்கால், பக்கத் துணை, அவன் மனைவி மட்டுமே. மற்றதெல்லாம், மற்றோரெல்லாம் அங்கே காணமுடியாதே. காணாமல் போய்விடுவார்களே. வாருங்கள் இருவருமே என் தந்தையின் விதர்ப தேசத்துக்கு
செல்வோம். உங்களை மரியாதையோடு நடத்துவார்கள். மீண்டும் முயற்சித்து இழந்ததைப் பெறுவோம்.'' என்றாள் தமயந்தி.

''எல்லாம் இழந்த நான் எந்த முகத்தோடு அங்கே செல்வேன்?''

"ஒரே இடுப்புத் துண்டை இருவரும் சேர்ந்து சுற்றிக்கொண்டு ஒரு தொத்தல் குடிசையில் மண் தரையில் இரவு தங்கினார்கள். பசியும், தாகமும், மன உளைச்சல், உடல் களைப்பு. இருவரும் தூங்கிவிட்டார்கள். நளனுக்கு தூக்கம் நின்றது. நாட்டை இழந்தது, சகலமும் இழந்தது அவன் இதயத்தை மனத்தை வாட்டியது. உறவும் இல்லை, பகையும் இல்லை, ஒன்றுமே இல்லை, ஒருவருமே இல்லை. என்னால் வந்த துன்பம் என்னோடு போகட்டுமே. பாவம், ஒன்றுமறியாத இவளை வேறு நான் எதற்கு என் துன்பத்தில் சேர்த்து சுமை தரவேண்டும். எனக்கு இனி சாவா, பிரிவா? ஆம் விட்டு விட்டுப் பிரிவதே நல்ல முடிவு. எப்படியாவது தமயந்தி தனது தந்தையின் நகர் செல்வாள். அவளாவது கஷ்டமின்றி வாழட்டும். இந்த எண்ணத்தை நளன் மனதில் நிரப்பியவன் கலி.

இருவரையும் சேர்த்து இருந்த துணியை பாதியாக கிழித்து மானத்தை மறைத்துக்
கொண்டு அசந்து தூங்கும் தமயந்தியை ஒருமுறை கண்களில் குளமான நீரோடு பார்த்து விட்டு நளன் கிளம்பினான்.

''தெய்வங்களே, அஸ்வினி தேவர்களே, மருதுக்களே, என் மனைவியை காப்பாற்றுவீர்களாக. துயிலெழுந்து என்னைக் காணவில்லைஎன்று எப்படியெல்லாம் துன்புறுவாளோ, நீங்கள் காப்பாற்றுங்கள். நன் பிரிகிறேன், எனக்கு வேறு வழியில்லை'' கலி நளனை அப்புறப் படுத்தினான்.

தமயந்தி துயிலெழுந்து நளனைத் தேடினாள் .அலறினாள். கதி கலங்கினாள் .பித்துப் பிடித்தது. ஒரு பெரிய நாகம் அருகில் இருந்தது. அதைப் பார்க்கவில்லை. அவளது நல்ல காலம் அந்த பக்கம் யாரோ ஒரு வேடன் அவள் அழுகுரல் .கேட்டு வந்தான். அந்த நாகத்தை கொன்றான். முகத்தில் நீர் தெளித்தான். மயங்கி கிடந்தவள் கண் திறந்தாள்.''

''யாரம்மா நீ? இந்த காட்டில் நள்ளிரவில் எதற்கு வந்தாய்?

அந்த வேடன் மனதில் தமயந்தியின் மீது காம இச்சை பிறந்தது அவன் கண்களிலும் அவன் வார்த்தைகளிலும் அது தெரியவே தமயந்தி அவனிடம் கோபமாக பேசி அவனை விரட்டினாள் . அவன் அவளை பலாத்காரம் செய்ய முற்படவே அவள் எல்லா தெய்வங்களையும் வேண்டி அவனைப் பிணமாக விழ சபித்தாள் . அவன் இறந்து விழுந்தான்.

தமயந்தி காட்டில் அலைந்து நளனைத் தேடினாள். மரங்கள், மிருகங்கள், பறவைகள், அனைத்திடமும் என் நளனைக் கண்டீர்களா, எங்கே அவர்? என அரற்றினாள். காட்டில் எங்கோ சில துறவிகள் தென்பட்டனர். அவர்கள் அவளைத் தேற்றினார்கள் .''இனி உனக்கு நல்லதே நடக்கும். உன் நளன் உனக்கு மீண்டும் கிடைப்பான்'' என வாழ்த்தி முனிவர்கள் மறைந்தனர்.' எங்கே அந்த மான்கள் நிறைந்த ஆஸ்ரமம், எங்கே போனார்கள் நான் கண்ட முனிவர்கள்? எல்லாம் கனவா?''

வேறு ஒரு இடத்தில் சில வியாபாரிகள் தென்பட்டனர். மேலே மண் படர்ந்து, கரை படிந்து, கிழிந்த ஒரு துணியோடு தமயந் தியைப் பார்த்து பேயோ பிசாசோ,இந்த வன தேவதையோ, ராக்ஷசியோ என்றெல்லாம் சிலர் பயந்தனர். அந்த கூட்டத்தலைவன் முதியவன் மட்டுமே அவளோடு பேசி விவரம் அறிகிறான். வழியில் எந்த ஆணோ பெண்ணோ காணவில்லையே அம்மா? இந்த காட்டில் யானை சிங்கம், புலி போன்ற கொடிய வன விலங்குகள் தானே நடமாடும்.'' என்றான்

'' நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று அவள் கேட்க, ''சேடி தேசத்தில் சுவாஹு நகரம் போகிறோம். நீயும் வரலாம் ''

அவர்களோடு சென்று இரவு ஒரு இடத்தில் தங்கினார்கள். அங்கு காட்டு யானைகள் சில கூட்டமாகவந்து அவர்களை தாக்க, சில இறந்தனர், அவர்களது குதிரை ஒட்டகம் ஆடு ஆகியவை அழிந்தன. எல்லாம் இந்த பிசாசினால் என்று சில தமயந்தியைக் கொல்ல முற்பட்டனர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...