Sunday, February 25, 2018

YATHRA VIBARAM




யாத்ரா விபரம் J.K. SIVAN

பனையபுரம் சிவன்

பூர்வ ஜென்மத்தில் செய்த பலன் என்பார்களே நான் கொஞ்சம் செய்த்திருக்கிறேன் போல இருக்கிறது. இல்லாவிட்டால் வீடு தேடி வந்து என்னை காரில் பல க்ஷேத்ரங்களுக்கு அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் அழைத்து போவாரா?

நான் சென்ற எத்தனையோ கோவில்களில் அது ஒரு நடுநாட்டுத் தலம். பேரிலிருந்தே எவ்வளவு பழையது என்று புரியும். புறவார்பனங் காட்டூர். இப்போது பனையபுரம். திண்டிவனம் - விழுப்புரம் மெயின் ரோடில் விக்கிர வாண்டியைத்தாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, தஞ்சாவூர் முதலிய ஊர்களுக்குச் செல்லும் (தஞ்சாவூர்) சாலையில் திரும்பி 2கி.மீ. பயணித்தால் சாலை ஓரத்தில் ஜிலு ஜிலு என்ற கிராம காற்றில் பனையபுரம் கோபுரம் பார்க்கலாம். பக்கத்தில் பெண்ணையாறு. நிறைய பனங்காடாக இருந்த இடம். இங்கே சிவனின் பெயர் பனங்காட்டீஸ்வரர். அம்பாள் சத்யாம்பிகை, புறவம்மை. சொல்லாமலேயே தெரியும். பனைமரம்.

சம்பந்தர் பனையபுரம் வந்து பாடியிருக்கிறார். சூரியன் வழிபட்ட க்ஷேத்ரம் தலம். ராஜகோபுரம் சின்னது. உள்ளே கொடிமரம்.. வெளிப் பிராகாரத்தில் கணேசர், சுப்பிரமணியர் சந்நிதிகள்.கிழக்கு பார்த்த சந்நிதி. துவாரகணபதியையும், தண்டபாணியையும் நமஸ்கரித்து உள்ளே போய் சத்யாம்பிகையைத் தரிசிக்கலாம். நவகிரஹம் தாராளமாக சுற்றலாம். வலம் வந்து கொடிமரம் வணங்கி உள்ளே பார்த்தால் பனங்காட்டீஸ்வரர் அருள்பாலிப்பார் .

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒரு விசேஷம். திருநீலகண்ட நாயனார் இங்கே மனைவியுடன் சேர்ந்து கைகூப்பி நிற்கிறார்கள். ஏதோ விசேஷம் இருக்கிறது கொஞ்சம் கண்டுபிடிக்கவேண்டும். அடுத்து அவர் கதை எழுத ஒரு எண்ணம். சப்தமாதர்கள் , பைரவர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு. வலப்பக்கம் சற்று தள்ளி நடராஜானின் அற்புத சபை. உற்சவர்களை ஜாக்கிரதையாக வெளிநாட்டுக்கு பறக்காமல் பாதுகாத்து வருகிறார்கள். 1300 வருஷத்துக்கு முந்திய கோவில். சுற்றிலும் நல்ல மதில் சுவர் யாரும் உள்ளே வந்து சொந்தம் கொண்டாட வழி மறித்திருக்கிறது.

"விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடைக்
கண்ணமர்ந்தவனே கலந்தார்க் கருளாயே." (சம்பந்தர்)

இந்த ஆலயத்தில் 1012 முதல் 1043 வரை ஆண்ட முதலாம் ராஜேந்திர சோழன், அவன் மகன் இரண்டாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன் கால கல் வெட்டுகள் உண்டு. ஆலயத்தில் உள்ளன. 'திருப்பனங்காடுடைய மகாதேவர்' என்று கல்லில் செதுக்கியிருக்கிறானாம் சோழன். கண் நோய்களைப் போக்குபவர் என்ற அர்த்தத்தில் ராஜேந்திர சோழன் கல்வெட்டு ''நேத்ரோதாரக சுவாமி'' என்கிறது. நம் முன்னோர்கள் கோவிலை எடுத்துக்கொள்ளாமல் நிறைய நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்டதையும், வழிபாட்டுக்கு பொருளுதவி செய்யப்பட்டதையும், வேறு பல காணிக்கைகளையும் கொடுத்ததெல்லாம் கல்வெட்டுகள் சொல்கிறதாம்.

ராஜேந்திர சோழன் கடாரம் சென்று வென்றான் என கல்வெட்டு பேசுகிறது (இன்றைய மலேஷியாவில் உள்ள ''கெட்டா'' தான் அப்போது கடாரம். ஸ்ரீவிஜய பேரரசை சேர்ந்தது. 1020க்கும் 1040க்கும் இடைப்பட்ட வருஷங்களில் சோழ ராஜா கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறான்.

எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரின் துணைவியார் பரவை. அவர் நடன மங்கையர் குலம். சிவாலயங்களில் இன்றும் அவர் சுந்தரருடன் சேர்ந்து வழிபடப்படுகிறார். முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் பரவை என்ற ஒரு ‘அணுக்கி’. இந்த ஊர் பரவைபுரம் என்றும் பேர் பெற இவர்கள் தான் உபயம்.

முக்கியமாக என் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் இதை கட்டாயம் படிக்கவேண்டும்:

'' 1070 முதல் 1122 வரை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழனால் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இன்றைய சென்னையில் உள்ள அரும்பாக்கத்தைச் சென்றத பொன்னம்பலக் கிழான் என்ற குழுத்தலைவன் அணையா விளக்கேற்ற பொற்காசுகள் பரிசளித்தான் ''

இங்கு ஒரு முக்கிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருநாளன்று ஆலயச் சன்னதியில் உள்ள லிங்கத்தின்மேலும் சத்யாம்பிகையின் விக்கிரகத்தின் மீதும் சூரியனின் கதிர்கள் விழுகின்றன என்பது பனையபுரம் ஆலயம் குறித்த ஒரு சிறப்புச் செய்தி. அவ்வளவு நேர்த்தியாக அந்தக் கால சிற்பிகள் கட்டிடம் கட்டினார்கள். இப்போது சில வருஷங்களிலேயே இடியும் பாலம், அடுக்கு மாடிகள் கட்டுபவர்கள் இந்த பாராவை படிக்க வேண்டாம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...