Sunday, February 18, 2018

LINGASHTAKAM 3

லிங்காஷ்டகம் 3 - J.K. SIVAN

सर्वसुगन्धिसुलेपितलिङ्गम् बुद्धिविवर्धनकारणलिङ्गम् ।
सिद्धसुरासुरवन्दितलिङ्गम् तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥३॥

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 3 |

ஒருவன் தனது அறியாமையை வெட்கமின்றி வெளிக்காட்டிக்கொள்ளும் எத்தனையோ வழிகளில் ஒன்றுதான் சிவலிங்கத்தை வெறும் கல் என்பது. போகட்டும் பாவம். அறியாமைக்கு வருந்துவோம். தெரியாமல் செய்யும் தவறுகளில் ஒன்றாக எடுத்துக் கொள்வோம்.

அறியாமலா, தெரியாமலா, புரியாமலா எண்ணற்ற மஹனீயர்கள், மஹா பெரியவர்கள், புண்ய புருஷர்கள் எல்லாம் சிவலிங்கத்தை ஆராதித்தார்கள். நமக்குத் தெரியாதவற்றை நாம் மனதிலிருந்து அகற்றி விடுகிறோம். விலையில்லா மாணிக்கங்களை மதிப்பு தெரியாமல் வீசி எறிகிறோம்.

எங்கோ பிறந்த ஒரு ரஷ்ய விஞ்ஞானியை நமது சிவலிங்கம் ஈர்த்தது. டாக்டர் வ்ளாடிமீர் ஆராய்ச்சி பண்ணினார். என்ன கண்டுபிடித்தார்? அதையே இன்று அறிந்து கொள்வோம்.

''லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவாரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்பு தரும், காற்று தரும், ஏன் கேட்டது எல்லாம் தரும் என நம்புகிறேன்'' என்கிறார்.

மகாதேவா, உன்னை நாங்கள் இன்னும் முழுமையாக அறியவில்லையா?

டாக்டர் விளாடிமீர் சொல்கிறார்: '' இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் லிங்க ஸ்வரூபங்களைத் தவிர பூமிக்குள் புதைந்து கிடக்கும் லிங்க ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.' ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.''

மகாதேவா, உன்னை இந்த லிங்க ஸ்வரூபத்தில் பஞ்ச பூதங்கள் சதா சர்வ காலமும் ஆராதிக்கின்றன என்பதை நமது முன்னோர்கள் சொன்னதைக் காற்றில் விட்டு ரஷ்ய விஞ்ஞானி சொல்லிக்கேட்டு ஆச்சர்யப்படும்படியாக எங்களை ஆக்கிவிடாதே. எங்களை எங்கள் முன்னோர் பாதைக்கே கொண்டு செல்லேன்? .

நமது தேகமே பஞ்ச பூதங்களினால் தான் உருவானது. திரும்பி கடைசியில் அவற்றிலேயே நாம் கரைகிறோம், மீண்டும் அவ்வாறே தோன்றுகிறோம் -- இதெல்லாம் எத்தனை முறை ஸ்லோகத்திலும், பேச்சிலும் படிக்கிறோம், கேட்கிறோம். டிவியில் கேட்கிறோம்,பார்க்கிறோம், பிரசாங்கங்களில் கவனிக்கிறோம், சிந்திக்கிறோமா? சதா நமது உணர்வில் நிற்கிறதா?

'' மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன'' என்று ரஷ்ய விஞ்ஞானி கண்டுபிடித்துச் சொல்லும்போது கை தட்ட மட்டும் தெரிகிறது.'

ஏன், ஏற்கனவே காலம் காலமாக நமது ரிஷிகள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் சொன்னவை ஏராளம் ஏராளமாக இருந்தும் அவற்றை லட்சியம் செய்யாதிருக்கிறேன். -- ஒவ்வொருவரும் இதை தனக்குள் கேட்டுக்கொள்வோமா?.

ஒன்று சொல்லட்டுமா. நாம் எல்லோரும் பஞ்ச பூதங்கள் வழிபடும் போற்றும் லிங்கஸ்வரூபங்கள் தான். ஏனென்றால் நம்மில் அந்த சர்வேஸ்வரன் உள்ளான். ஒவ்வொருவரும் ஸ்வயம்பு லிங்கம் தான். ரஷ்ய விஞ்ஞானி சொல்வதையே மீண்டும் கேட்போம்.

''சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள்''

மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார்.

சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் ''-- சொல்வது நானல்ல, டாக்டர் வ்ளாடிமீர் .

எங்கும் எதிலும் மாறி மாறி தோன்றுவதே இந்த மாயா லோகம், மனிதக் கூட்டம் . இந்த மாறுதல் தான் என்றும் மாறாத ஒன்று..

'' புராணவழியாக நிறைய நாம் அறிந்து கொள்ளும் '' சிவம் ''தனித்தன்மை உடையது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் உள்ளது. ''நான்'' --- ஏ, மனிதர்களே முடிந்தால் என்னைப் புரிந்துகொள்ளுங்கள் '' என்று சவால் விடுகிறது ''--- டாக்டர் விளாடிமீர்!

அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.

ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாடிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் டாக்டர் வ்ளாடிமீர் கருத்து!

குழந்தைகளுக்கு முன்னோர் பெயர் வைக்கும் வழக்கம் நம்மில் இருக்கிறதே. அந்த முன்னோர் பெயர்கள் இறைவன் பெயராகவே இருந்ததும் மரபு. இன்றோ நம் குழந்தைகளுக்கு அர்த்தமில்லாத, ஏதோ நாம் புதிதாக கண்டுபிடித்த அற்புதப் பெயர் என்று கருதி சில ''சப்தங்களை'' நாமகரணம் செய்கிறோம். ஒருவேளை அப்பர், சுந்தர் சம்பந்தர் மணிவாசகர் தான் அதேபோல் வ்ளாடிமீர் என்ற புதுப்பெயரில் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு பேசுகிறாரோ? இப்படி அவர்கள் வந்து சொன்னால் தான் நமது பெருமை நமக்கே ஏற்குமோ? அறிவோமோ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...