Tuesday, February 20, 2018

ADVICE TO FOLLOW

இது படிக்க பிடித்தால் பின்பற்றவும் செய்வோமே - J.K. SIVAN

இந்துக்கள் முதலில் தாங்கள் இந்துக்கள் என்று உணர்ந்தாலே பாதிக்குமேல் நாம் அமைதியாக வாழ்வோம். சீர் படுவோம். அதிலும் நாம் பிராமணர்கள் என்று எத்தனை பேர் பெருமைப் படுகிறார்கள். அப்படிப் பெருமை பீற்றிக்கொண்டாலும் உண்மையிலே நாம் பிராமணர்களா? பிராமணர்கள் யார் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றாவது புரியுமா ? இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. நமக்குள் எத்தனை பேருக்கு நமக்கும் வேதங்களுக்கும் உண்டான நெருங்கிய சம்பந்தம் தெரியும், அல்லது புரியும்?

'ஸாரி ஸார், இதெல்லாம் உங்கள் போன்ற கிழம் கட்டைகள் வேலையில்லாமல் கிளப்பி விடுகிற பிரச்னை யாக இருக்கலாம். அன்றாட வாழ்க்கை யில் வேதமாவது பிராமணனாவது'. நான்சென்ஸ் '. இப்படி உதறி விடுவது சுலபம். பிரச்னை தீருமா?

''சார், நான் கொஞ்சம் சொல்ல அனுமதிக்க வேண்டும்''
இது தமிழ் பிராமண சமூகத்துக்கு மட்டும் என்று ஒரு சிறிய வட்டத்தில் துவங்குவோம். நாடு முழுக்கவும் என்ன நடக்கிறது என்று இதுவே ஒரு சாம்பிள் சர்வே ஆக இருந்து விட்டுப் போகட்டுமே.

நமக்கென்று போதிக்க, நல வாழ்க்கை, நல்வழி காட்டுவதற்கு அநேக ஆசார்யர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எல்லோரும் மோசம் இல்லை. சிலர் வேண்டுமானால் வேஷதாரிகளாக இருக்கலாம். எப்போதாவது சொந்த விஷயங்கள், அதில் நன்மை கிடைக்க, சிக்கல்கள் தீர இருந்தால் மட்டுமே தீர்வு காண, ஆச்சார்யர்களை அணுகுபவர்களும் நம்மில் சிலர் இருக்கிறோம். அவர்கள் சொல்வதை, சொன்னதை நமக்கு பொருந்தாது என்று தோன்றினால் மறந்தும் விடுகிறோம்.

நமது முன்னோர்கள் ஆசார்யர்கள் வாக்கை மதித்தார்கள். பயன் பெற்றார்கள். நம்மில் அப்படி சிலர் இன்னும் இருக்கிறார்கள். ஆசார்யர்கள் சிலரும் முன்கால ஆசார்யர்களாக இல்லையே, மாறி விட்டார்களே என்பதும் சில நேரம் இடிக்கிறது.காலத்தின் கோளாறு யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

சாஸ்திரங்கள் மதிக்கப்படுவதில்லை இருதரப்பிலும்.

எப்போவாவது ஒரு மகான் தோன்றுவார். அதைத் தூக்கி நிலை நாட்டுவார். காரணம் என்னவென்றால் பக்தி குறைந்து விட்டது. பண்பாடு அதால் சீர் குலைந்து விட்டது. ஸ்வதர்ம சிந்தனை, சுயநலத்தால் மூடப்பட்டு விட்டது.

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்களுக்கு கொஞ்சம் அதிக பொறுப்பு இருக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களை, எடுத்துச் சொல்லி அதில் ஆர்வம் வரும்படி செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீக உணர்வை மனதில் விதைக்க வேண்டும். பிறகு தானாகவே அது பெரிய வ்ருக்ஷமாக வளரும்.

நான் இதை முடிந்தவரை செய்து கொண்டுவருகிறேன் என்று சொல்வதில் சந்தோஷமாக இருக்கிறதே. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ஈடுபாட்டில் முனைய வேண்டும் என்று எதிர்பார்ப்பு வேறு எனக்கு. நமது சமூக மேன்மைக்கு நாம் கொஞ்சம் பாடு படுவோமே.

வயதானவர்கள் பெர்முடாவை கழட்டி மடித்து வைத்துவிட்டு, வேஷ்டி கட்டிக்கொள் வோமா.மேல் துண்டு போட்டுக்கொள்வோமா . முடிந்தபோது பஞ்ச கச்சம்?? முதலில் அதைக் கட்டிக்கொள்ள பழகுவோமா? ஒருவேளையாவது சந்தியாவந்தனம், காயத்ரிமந்திரம்ஜபம் அனுஷ்டித்தால் பரம சந்தோஷம்.
மந்திரம் மறந்துபோனால் இன்டர்நெட்டில் புத்தகத்தில் எல்லாம் இருக்கிறதே

அடிக்க வரவேண்டாம். ஒரு சிறு சிண்டு, உச்சிக் குடுமி வேண்டாமே என்றால், கிராப்புக்கு இடையிலே பின்னாலே தொங்கட்டுமே? காற்றில் ஆடட்டுமே.) . அதெல்லாம் எதற்கு சார் 'பிறகு பார்த்துக் கொள்வோமே'' என்றால் இப்போது அதை விட்டு விடுவோமே? ''பிறகு'' என்பது நம் போன்ற வயோதிகர்களுக்கு இனி ஏது ?எப்போதாவது கிடைக்கும்போது..!பார்த்துக் கொள்வோமா.

எப்போதும் நெற்றிக்கு அவரவர் குல குடும்ப வழக்க குறிகளை இட்டுக்கொள்வோமா? ----திரி புண்டரம், கோபி சந்தனம், திருமண் , விபூதி , கரிக்கோடு, --- இவற்றில் ஏதாவது ?

வெளியிலே சென்று கண்ட இடத்தில் கண்ணால் 'கண்டதை' உண்பதை நிறுத்துவோமா? உடலுக்கு தேவையானதை, ருசிக்கு அதிக இடம் கொடுக்காமல் உண்ணும் பழக்கம் ? டாக்டர் சொன்னபடியும் கூட... முடியுமானால் நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லும் உணவு வகைகளை?

நமது முன்னோர்கள், நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் மறைந்து போயிருந்தால், அவர்கள் பசியாக தாகமாக வாடுகிறார்களே, கொஞ்சம் அவர்கள் மேல் கருணை வைத்து மாதம் ஒருமுறை நன்றிக்கடனாக வாவது அமாவாசை தர்ப்பணம்??

சிறிது நேரம் TV அக்கப்போரை மறந்து தனியாக அமர்ந்து சில நிமிஷங்களாவது காலை, மாலை முடிந்தபோது, பகவத் கீதை, ராமாயணம், தேவாரம், திவ்ய ப்ரபந்தம் வேறு ஏதாவது... படிப்போமா?

எந்த உருவம் பிடிக்குமோ அந்த உருவத்தில் பகவானை நினைப்போமா?

மற்றவர்களோடு அனாவசிய பேச்சும், வம்பு பேச்சையும் குறைப்போமா?

நம்மையொத்த வயது நண்பர்கள் கிடைத்தால் இது விஷயங்களில் சிந்தனை செலுத்த வழியுண்டா?

பக்கத்தில் ஏதாவது கோவில் இருந்தால் யாருடனும் பேசாமல் சிறிது நேரம் அந்த விக்ரஹங்களோடு மட்டும் பேசுவோமா . தினமும் முடியவில்லை என்றால், முடிந்தபோது, வாரம் ஒருமுறையாவது?

வீட்டில் உணவை எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோமா? காலையில் முடியவில்லை என்றால் இரவிலாவது? வாரத்தில் ஒருமுறை, விடுமுறையில்?

சகோதரிகளே, உங்களை விட்டு விட்டதாக நினைக்கவேண்டாம்? இதோ உங்களுக்கு சில tips தரட்டுமா?

வீட்டில் மற்ற பெண்களுக்கு குழந்தைகளுக்கு, கோலம் போட சொல்லித்தரலாமா? (அவசியம் ஏற்படுபவர்கள் முதலில் உங்களை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்)

குழந்தைகளுக்கு மனதில் நமது இதிகாச, புராண கதைகளை பதிய வையுங்கள். பாட்டு, பஜனை, ஸ்லோகம், சொல்லிக் கொடுங்கள்.

என்னென்ன பண்டிகை நாட்கள், எந்த எந்த பக்ஷணங்கள் நைவேத்யம், எப்படிப் பண்ணவேண்டும் அவற்றை என்று ஞாபகப் படுத்தி சொல்லுங்கள். நீங்கள் எப்படியெல்லாம் இவற்றை கற்றுக்கொண்டீர்கள் என்று சொல்லுங்கள். அன்றன்று என்ன நக்ஷத்ரம், திதி, ராகு காலம் எமகண்டம் எப்போது என்று பஞ்சாங்கத்தை பார்த்து தினமும் ஞாபகம் வைத்துக் கொள்ள செய்யுங்கள்.

விடிகாலையில் குளித்து பிறகு சமையல் அறையில் சமைப்பது, நான் உண்ணும் முன்பு முதலில் வீட்டு தெய்வத்துக்கு நைவேத்யம், சிறிது காக்கைக்கு...

விருந்தாளிகளை அழைப்பது, உபசரிப்பது. பெரியோருக்கு மரியாதை, பணிவு, பதவிசாக பேசுவது. இலையில் முறையாக பரிமாறுவது ''போதுமா'' என்று யாரையும் கேட்டு பரிமாற வேண்டாம்.

இதெல்லாம் சொல்லித்தரலாமா?

தலையை எப்போதும் முடிந்து, (விரித்த திரௌபதி கூந்தல் வீட்டில் வேண்டாமே. எந்த சபதமும் பாக்கி இல்லையே). நெற்றிக்கு இட்டுக் கொள்வது குழந்தைகளுக்கு பழக்கம் உங்களால் தான் வரவேண்டும்.

சுறு சுறுப்பாக இருப்பது, உண்மை பேசவேண்டும், பொய் வேண்டாம். சிக்கனமாக செலவு. சேமிப்பு பழக்கம். குழந்தைகளுக்கு இது எல்லாம் முக்யமான அவசியமான பாடம் அல்லவா?

பெண்கள் உடையில் ரொம்ப கவனம் செலுத்த வேண்டும். பண்பாட்டை தியாகம் செய்யவேண்டாம். புடவை என்றோ ஒருநாள் கட்ட அல்ல. சிலர் தாலி பேங்க் லாக்கரில் இருந்தால் முதலில் அது கழுத்தில் ஏறட்டும். வைரம் விலை உயர்ந்த ஆபரணமாக அது இருந்தால் மஞ்சள் கயிற்றோடு திருமாங்கல்யம் கண்டிப்பாக கழுத்தில் தொங்கவேண்டுமே.

மேலை நாடு அவர்கள் வழக்கத்தில் இயங்குகிறது. நாம் மேலை நாடு போக அவசியம் இருப்பதால் நாம் அங்கு போவது சம்பாதிக்க மட்டுமே, நமது பண்பாடு சம்பிரதாயத்தை தொலைக்க அல்ல. நாம் மேலை நாட்டு மக்கள் அல்லவே அல்ல. ஆகவே மாட்டோம்.

இது ஒன்றும் உபதேச மந்திரம் அல்ல. முழுமையாகவும் எல்லாமே இதில் சொல்லவில்லை. நிறைய இருக்கிறதே அதை நாமாகவே தெரிந்து கொள்ளுவோம்.
இது ஆரம்ப பாடம். சைக்கிளில் ஏறி குரங்கு பெடல் அடிக்க மட்டுமே இது. balance வந்து விட்டால் சீட்டில் உட்கார்ந்து நாமாகவே ஓட்டுவோம், ஓடுவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...