Monday, February 12, 2018

SIVARATHRI

''ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி'' J.K. SIVAN

சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார். சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் என்று அருமையான ஒரு பழம் பாடல். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று யோசிக்கிறேன்? சிவன் முழுமுதற் கடவுள். அவனை நெக்குருகி பாடிய ஞானிகள் சிலரின் பாடல்களிலிருந்து பக்தி பாவபூர்வ சிறந்த பொருட் செறிவு, சொற் செறிவு கொண்ட சில வரிகளைப் படிப்போம், ஆனந்திப்போம், அருள் வேண்டி சிவானுபவத்தில் கரைவோம்

ஓம் என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும். ''நம சிவாய '' என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது.

அஞ்சு கோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும் முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

நமசிவாய என்று சொல்லும் அக்ஷரம் சிவனே இருக்கும் இடம். சகல அபாயத்திலிருந்து தப்ப உதவும் உபாயம். பிராணனை பாபத்திலிருந்து மீட்டு நற்கதி தர உதவும் மந்திரம் நமசிவாயம்

சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே

''அடே பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து ஹர ஹரா ஓம் நமசிவாயா என்று கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உன்னை நினைத்து கூப்பிடுவது ஒன்று தானே''.

பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.

''பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும்மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே''.

ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல?

ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே.

மேலே சொன்னது அத்தனையும் நானல்ல. சிவ வாக்கியர் எனும் மஹான். பெரிய சித்தர் பிரான்.

விடிந்தால் மஹா சிவராத்திரி புனித நாள். சிவனுக்கு எத்தனையோ பெயர்கள், அதில் ஒன்று ருத்ரன். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அதனால் தான் அன்பே சிவம் என்கிறோம். சங்கம் வளர்ந்தது தமிழால் . தமிழை நேசித்தவன் ஈசன். அவனை நாமணக்க ''தென்னாடுடைய சிவனே போற்றி'' என்று வணங்குகிறோம்.

சிவனை வழிபடுவோர் சிறப்பாக கொண்டாடுவது சிவராத்திரி. மஹா சிவராத்திரி. சிவராத்திரி வருஷத்துக்கு ஒருமுறை வருவது அல்ல. ஒவ்வொரு தேய்பிறையிலும் சதுர்த்தசி திதி அன்று சிவராத்திரி வழிபாடு நடக்கும். மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில் வருஷத்தில் 12 சிவராத்ரி. ஆகவே மாசி மாத சதுர்த்தசி திதி அன்று வரும் சிவராத்திரி ''மஹா சிவராத்திரி'' ஆகும்.

சிவராத்திரி அன்று கண் விழிப்பார்கள். நாள் பூரா உபவாசம், ருத்ரம் சமகம், திருவாசகம், தேவாரம் ஓதுவார்கள். ஸ்தோத்திரங்கள் பூஜை உண்டு. நாலு காலம் என்று நாள் பூரா கோலாகலமாக நாடு முழுதும் கொண்டாடுவார்கள்.
நாலு காலம் பற்றி சொல்கிறேன். சிவனின் சிரசு எங்கிருக்கிறது என்று பிரமன் அன்னபக்ஷியாக மாறி தேடினான். கண்டே பிடிக்க முடியவில்லை. ஆகவே முதல் காலம் ப்ரம்ம தேவன் செய்கிற பூஜை. சிவன் அபிஷேகப் பிரியன். கங்கை, காவிரி, புனித நதி ஜலங்கள் , தேன் , பால், இளநீர், தயிர், பஞ்சாம்ருதம், விபூதி, பன்னீர், சந்தனம், எலுமிச்சை பழ, கரும்பு சாறு, அன்னம் என்று பலவித அற்புத அபிஷேகங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும். முக்கியமாக பஞ்சகவ்யாபிஷேகம் விசேஷம். (பஞ்சகவ்யம்: பசும்பால், தயிர், நெய், பசு கோமியம், பசுஞ்சாணி இவை கலந்தது.) பல வித புஷ்பங்களால் அர்ச்சனை நடக்கும். தாமரைப் பூ விசேஷம்

அடுத்த கால பூஜை, ரெண்டாம் காலம் இரவு ஒன்பது மணி வாக்கில் ஆரம்பம். பிரத்யேகமாக அது ஸ்ரீ மஹா விஷ்ணு சிவனுக்கு செய்யும் பூஜை. சிவன் வராகமாக அவதரித்து சிவனின் திருவடி தேடி பாதாளம் கடந்து சென்றது நினைவிருக்கும். ஸ்வர்ணபுஷ்பம் என்று வெள்ளி நாணயங்களால் , வெள்ளி மலர்களால் அர்ச்சனை செய்வார்கள்.

உமாதேவி சிவனை பூசை செய்வது மூன்றாம் கால பூஜை. தேனை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது அற்புத காட்சி. வில்வார்ச்சனை நடக்கும். நள்ளிரவு 12 முதல் விடியற்காலை 3 மணி வரை நிறைய கோவில்களில் இதை கொண்டாடுவது வழக்கம்.

கடைசியாக நாலாவது கால பூஜையை யார் செய்வது என்றால், சகல விண்ணுலக முப்பது முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சிவ கணங்கள் பூமியில் நாம் சர்வ பூதகணங்கள் எல்லோரும் வணங்கும் பூஜை நேரம். சூரியோதயம் வரை நடப்பது.

இன்னும் சொல்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...