Tuesday, February 6, 2018

KOORATHAZHWAR. 3



''அருமையான குரு அபிமான சிஷ்யன்'' -3
. J.K. SIVAN

ஸ்ரீ ராமானுஜருக்கு வயது ஆகிவிட்டது. ஸ்ரீ வைஷ்ணவம் வேரூன்றி விட்டது. எண்ணற்ற வைஷ்ணவர்கள் அவரை போற்றினாலும் சில எதிரிகளும் முளைத்தனர். பொதுவாக சமயம் எதிர்க்காவிட்டாலும் சில சைவர்கள் ராமானுஜரின் அயராத உழைப்பால் வளர்ந்த வைஷ்ணவ வளர்ச்சியில் கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழ புரத்தில் ஒரு கிளர்ச்சி. அவருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் தீவிர எதிர்ப்பாக அமைந்தது. அந்த சோழ தேச ராஜா குலோத்துங்கன், கிருமி கண்ட சோழன் என்ற பெயருடைய ஒரு தீவிர சைவன். தனது ராஜ்யத்தில் சைவத்தை தவிர மற்ற, குறிப்பாக வைஷ்ணவத்தை பூண்டை வேரோடு ஒழிக்க முடிவெடுத்தான். அது ராமானுஜரை அழித்தால் மட்டுமே முடியும் என்று சிலர் மூலம் அறிந்தான்.

"அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜனை இங்கே"

சோழ ராஜாவின் கட்டளை குதிரை வீரர்கள் மூலம் பறந்தது. ராமானுஜரை தனது சைவ குருமார்களுடன் விவாதம் செய்யவைத்து தோற்கடிக்க வேண்டும் வைஷ்ணவத்தை விட்டு சைவத்தை ஏற்கச் செய்யவேண்டும், மறுத்தால் கொன்றுவிடவேண்டும். இந்த எண்ணம் செய்தியாக கசிந்து சில பக்தர்கள் ராமானுஜரிடம் ஓடினர்.

''எக் காரணம் கொண்டும் நீங்கள் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல கூடாது. அரசனை சந்திக்க வேண்டாம். ஆபத்து. உடனே சோழநாட்டை விட்டு வெளியேறுங்கள்" என்று கெஞ்சினர்.

அரசனின் ஆட்கள் வந்துவிட்டனர் ராமானுஜரைத் தேடி. கூரேசர் எப்படியோ ராமானுஜரை சம்மதிக்க வைத்து, தான் அரசனை நேரில் சென்று சந்தித்தார். விரக்தியுடன் ராமானுஜர் சிலருடன் சேர்ந்து கர்நாடகாவில் மேல் கோட்டையை (திருநாராயணபுரம்) நோக்கி நகர்ந்தார். அங்கு பன்னிரண்டாண்டுகள் அந்த முதியவருக்கு வனவாசம் விதிவசமாகியது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை அங்கு பரப்பினார். ஸ்ரீ சம்பத் குமாரன் ஆலயம் நிர்மாணித்தார். அவரது விடா முயற்சியால் மேல்கோட்டை ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்ததாக சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலமாகியது.

ஒரு நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு வைஷ்ணவர் ராமானுஜரை மேல்கோட்டையில் வந்து சந்தித்தார். ஆர்வத்துடன் ஆசார்யன் மூச்சு விடாமல் கேட்கிறார்:

”என் உயிரான ஸ்ரீரங்கம் எவ்வாறு இருக்கிறது? என் பிள்ளைகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாம் நலமா?”

“நீங்கள் இல்லையே என்கிற குறை தவிர எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது அங்கு” என்றார் வைஷ்ணவர்.

”என் சீடன் கூரேசன் எப்படி இருக்கிறான் ? அவனை இழந்து நான் தனியனாகிவிட்டேனே!!! “ என்று ஆதங்கத்தோடு கேட்டார் ஆசார்யன்.

கண்களில் நீர் பெருக, நா தழுதழுக்க வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர் சொன்னார்:

"சுவாமி தங்களை ஜாக்ரதையாக அனுப்பிவிட்டு கூரேசரும் மஹா பூரணரும் அரசன் ஆணைக்கு கட்டுப் பட்டு கங்கை கொண்ட சோழ புரம் அழைத்து செல்லப்பட்டனர். ராஜா அவர்களிடம் "சிவனைக் காட்டிலும் பெரிதொன்றும் இல்லை" என சம்மதித்து எழுதிகொடுங்கள் என்றான். கூரேசன் மறுத்தார். வேதம் சாஸ்த்ரம், உபநிஷத் ஸ்ம்ரிதி புராணம் இவற்றிலிருந்து எல்லாம் மேற்கோள் காட்டி நாராயணனே மேலானவன் போற்றத் தக்கவன் என நிருபணம் செய்தார். ஏற்க மறுத்தான் சோழன். கையொப்பமிட்டுக் கொடு இல்லாவிட்டால் உன் கண் இங்கே பிடுங்கப்படும் என ஆணையிட்டான்.

”கெடுமதி கொண்ட அரசனே, உன் விருப்பம் நிறைவேறாது. உனக்கு வேலை மிச்சம் பண்ணுகிறேன். நானே என் கண்களை பிடுங்கிக் கொள்கிறேன் என்று அவன் நீட்டிய எழுத்தாணியால் கண் விழி கோளங்களை வெளி கொணர்ந்து அவன் காலடியில் எறிந்தார். உன்னைப் பார்த்ததால் அந்த கண்கள் செய்த பாவத்திற்கு இது தண்டனையாகட்டும்''
என்கிறார் கூரேசர் கண்களை இழந்து.

“நீ கையொப்பமிடு'' என மஹா பூர்ணர் நம்பிகளை ஆணையிட்டு அவரும் மறுக்கவே அரசனின் சேவகர்கள் அவர் நேத்ரங்களை அழித்தனர். கூரேசர் வயதில் இளையவராதளால் நம்பிகளைத் தாங்கி வர ரத்தம் பீறிட வழியெல்லாம் ஆறாகப் பெருக சோழன் அரண்மனையை விட்டு தண்டனை பெற்று வெளியேறினர். கங்கை கொண்ட சோழபுரம் தாண்டி வந்தவுடன் நம்பிகளின் பெண் அத்துழாய் பிராட்டி அவருக்காக காத்திருந்தவள் கண்ணற்ற தந்தையைக் கட்டிக்கொண்டு கதறினாள். நம்பிகளால் மேற்கொண்டு நகர இயலவில்லை. கூரேசன் மடியில் தலையும் அத்துழாய் மடியில் காலுமாக சோழ மண்ணிலே சாய்ந்தார்.

”சுவாமி!! ரங்கனை விட்டு பிரிந்ததும், ஸ்ரீரங்கத்தை பிரிந்ததும், ராமானுஜரைப் பிரிந்ததும் எங்கோ கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசத்தில் வாழ்வு முடிவதால் உங்களுக்கு மனமொடிந்து விட்டதா?” என்கிறார் கூரேசர்.

“கூரேசா, நீ அறியாததா? ஒரு வைஷ்ணவனின் அந்திம நேரத்தில் நாராயணனே அருகில் இருப்பான். ஜடாயுக்கு ஸ்ரீ ராமன் அருகில் வந்து அருளவில்லையா ? இதில் காடென்ன நாடென்ன? மேலும் கேள் , ஒரு சுத்த ஸ்ரீ வைஷ்ணவன் மடியிலோ வீட்டிலோ மரணம் சம்பவித்தால் அதற்கு மேல் எது சிலாக்கியம்? நான் ஸ்ரீரங்கத்தில் மரணமடைந்தால் அனைவரும் ஸ்ரீ ரங்கத்தில் மரணம் தான் வைஷ்ணவனுக்கு சிறந்தது என நினைப்பரே!. நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன சொல்கிறது? பெருமாளிடம் பிரபத்தி சரணாகதி பண்ணினவனுக்கு எங்கு மரணம் சம்பவித்தாலும் நாராயணன் அருகில் இருப்பது சத்ய வாக்காயிற்றே!. இதென்ன அனாமதேய இடமா? இங்கல்லவோ என் குருநாதர்கள் நாதமுனிகளும் குருகை காவலப்பனும் வைகுண்ட ப்ராப்தி பெற்ற இடம். விசனப்படாதே. நான் மகிழ்ச்சியோடு விடை பெறுகிறேன்”. மஹா பூர்ணர் பெரிய நம்பிகள் மறைந்தார்.”

நிகழ்ந்ததைப் பூரா கேட்ட ராமனுஜரின் கண்களில் பிரவாகம். தனது குரு பெரிய நம்பிகளுக்கு தான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தார். தனக்காக அவர் உயிர் தியாகம் செய்தது ராமானுஜரை வாட்டியது. அந்திம நேரத்தில் அருகிருந்து மஹா பூர்ணருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டவில்லையே என நொந்தார். பெருமாளே என்ன பாக்கியம் கூரேசனுக்கு? என்னால் முடியாததை அவன் நிறைவேற்றினானே, அவனல்லவோ குருவை மிஞ்சிய சீடன்?"

தொடரும்



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...