Tuesday, February 20, 2018

PESUM DEIVAM

பேசும் தெய்வம் J.K SIVAN சொல்லுங்கோ பெரியவா..... தனியே அமர்ந்திருந்தேன். வெளியே இருந்து எந்த சப்தமும் உள்ளே நுழையாமல் கதவு ஜன்னல் எல்லாம் சார்த்தி யாயிற்று. மேலே பழைய fan அதிகம் சப்தம் செய்யாமல் அதை மெதுவாக வீசும்படியாக பண்ணியாயிற்று. நானும் என் எதிரே மஹா பெரியவாளும் மட்டுமே. அமைதியாக அசைவு இல்லாமல் தீபம் ஒரு சீரான கோடு போல் ஒளி வீச, அவர் முகத்தை உற்று பார்த்துக்கொண்டே இருந்தேன். ''என்ன பார்க்கிறாய். ஏதோ கேட்கப்போகிறாய் என்று தோன்றுகிறதே. கேளேன்.'' ''பார்த்திண்டிருந்தாலே நிறைய பேசறாப்பலே தானே இருக்கு பெரியவா'' ''உன்னை எனக்கு பிடிக்கும். ஜனங்களுக்கு சேவை செய்றியோல்லியோ ?'' ''எனக்கு எது முடியறதோ, என்னாலே எதை கொடுக்கமுடிகிறதோ அதை கொடுத்துண்டு தான் வறேன் '' ''பெரியவாவின் வார்த்தைகள் நெஞ்சில் அலை அலையாக விழுந்தன: ''கரெக்ட். விடாதே. விடாம பண்ணிண்டு வா. அதிலே இருக்கிற திருப்தி வேறே எதிலுமில்லேன்னு புரிஞ்சுக்குவே. ஜன சேவை தான் ஜனார்த்தன சேவை. மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம்' என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதிலும் சிலர் கோயில்கள் , வழிபடற இடம் எதுவும் வேண்டாம் . பேசாம ஆஸ்பத்திரி, ஸ்கூல் இதெல்லாம் தான் வேணும் என்பார்கள். ல் மனசுக்கு ஆறுதல், வியாதி எண்ணம் மனசிலேர்ந்து போவது, கல்வி ஞானம் தருவது -- எல்லாமே உத்தமமான காரியம் தான். பகவானுக்கு இப்படி செய்யறவன் மேலே பிரீத்தி உண்டு எல்லாத்துலேயுமே சிறந்தது ஜனங்களுக்கு ஏதாவது ஒரு சேவை செயறது. மனிதனுக்கு செய்ற சேவை மாதவனுக்கு செய்யற சேவை எனும்போது அந்த மாதிரி ஜனங்களுக்கு செய்கிற சேவை பக்தி சேவையா இருந்துட்டா இன்னும் விசேஷம் இல்லையா. அதாலே மக்களுக்கு நன்மை தானே. ''வாஸ்தவம் பெரியவா. நான் உங்களைப்பத்தி, மற்ற மகான்களை பற்றி, கோவில் பற்றி, புராணம், சாஸ்திரம், சம்ப்ரதாயம் பற்றி, பாரதம் பாகவதம் ஸ்லோகம், ஸ்தோத்திரம் இதெல்லாம் எனக்கு தெரிஞ்சவரை மற்றவர்களுக்கு நான் புரிஞ்சிண்டமாதிரியே சொல்லிண்டு வரேன். எனக்கு இதில் ரொம்ப திருப்தி. நேரம் காலம், கடிகாரம் பாக்கிறதில்லே. ராவோ பகலோ எப்பல்லாம் முடியறதோ அப்பல்லாம் செய்றேன் பெரியவா. காசுக்காக இல்லை '' ''க்ஷேமமா இருப்பே. செய்''. ''ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை சொஸ்தம் பண்ணி அனுப்பினா போதுமா? வியாதி குணமானா ஆசாமி நல்லவனா ஆயிடுவானா? உலகத்துக்கு பயனில்லாமல் கெடுதி செயறவன் குணமடைஞ்சு என்ன பயன்? புத்திக் கோளாறு உள்ளதாகச் சொல்லப்படும் பலரை என்னிடம் அழைத்து வந்து சொஸ்தப்படுத்த வேண்டும் என்று கேட்கிறபோது நான் இந்த ரீதியில்தான் உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறேன். அதை அப்போது அவர்களிடம் சொன்னால், என்னிடம் ஆறுதல் தேடி வருகிறவர்களுக்கு மனசு கஷ்டப்படும், அதனால் சொல்வதில்லை. இப்போது பொதுவாகச் சொல்கிறேன்: புத்தி பூர்வமாக ஒரு தவற்றை செய்தால்தான் அது பாபமாகிறது. ஆனபடியால் புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலிலும் பாபம் இல்லை. ஏதோ பூர்வ பாபத்துக்காக அவர்கள் இப்படியாகியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குப் பாபமில்லை. நாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறோம். சித்தப் பிரமை பிடித்தவர்கள்பே அப்படியில்லை. பேசுவதும் இல்லை. மனதில் உருவாவது எதுவோ அதையே சொல்கிறார்கள். இவர்களை 'சொஸ்த'ப் படுத்தி மற்றவர்களைப்போல் ஆக்கி, எதற்கு அவர்களுக்கு பாபம் சேரும்படியாகப் பண்ண வேண்டும் என்று கூடாது தோணும்'' உடல் வியாதி நிவாரணம் ஆனால் போதாது. மனசும் திருந்தனும். கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம். பள்ளிக்கூடத்தால் கல்வி விருத்தியாவது வாஸ்தவம். படித்துவிட்டு வெளியே வந்து யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடத்தால் என்ன பயன்? பக்தி, மனக் கட்டுப்பாடு, தியாகம் இதெல்லாம் இல்லாத படிப்பால் வரும் வெறும் புத்தி வளர்ச்சி எதற்கு பயன்? சாதூரியமாக அயோக்கியத்தனங்கள் செய்ய உதவும். எப்படி நிறைய தப்பு பண்ணவர்கள் சாமர்த்தியத்தை காட்டி சால்ஜாப்பு, பொய் , திசை திருப்பிவிடுவது போன்ற காரியங்கள் செய்வதை காண்கிறோம். வித்யாசாலையோடும் வைத்யசாலையோடும் மநுஷ்யனின் வாழ்வு முடிந்து விடுமா? அவன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். அதற்கு உதவுவது தான் ஆலயம். அதற்கு அவசியம் இருக்க வேண்டும். நாம் நல்லவர் ஆவதற்காக பகவத் தியானம், பூஜை இவைதான் அவசியம். நமது உடல் ஆரோக்கியம், புத்திக்குப் படிப்பு, தரித்திரம் நீங்க செல்வச் சுபிட்சம் இதெல்லாம் விட ஒருவனை பகவானிடம் சேர்ப்பதே பேருபகாரம். நாமும் பகவானிடம் மனஸைச் செலுத்தி, தியானம், பூஜை இவைகளை அநுஷ்டித்தால்தான் மற்றவர்களை இவற்றில் ஈடுபடுத்த நமக்கு யோக்கியதை உண்டாகும். அப்போதுதான் நாம் செய்கிற பரோபகாரம் சக்தியோடு பலன் தரும். ஒவ்வொரு மனுஷனும் தெய்வம். அவனுக்குச் சேவை செய்வது சிலாக்கியம். அவனைத் தானாகவே தெய்வீகத்தை தெரிந்து கொள்ள, உணர்ந்துகொள்ள ஆலயம் அவசியம். ஆலயங்களை அவசியம் நான் நன்றாக பாதுகாத்து பலன் பெறவேண்டும். நல்லவனாவதற்குப் பக்தி தேவையில்லை என்று ஒரு சிலர் சொல்லட்டுமே. நடைமுறையில் பார்த்தால், எண்ணற்ற சுயநல ஆசைகளால் ஆட்டி வைக்கப்படுகிற ஜீவனைப் பரிசுத்தப்படுத்த பக்தியே சிறந்த சாதனம். 'பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் சர்வசக்தனாகவும் இருந்துகொண்டு நம் கர்மங்களுக்குப் பலன் தருகிறான்' என்கிற பயபக்தி உணர்ச்சிதான் யுக யுகாந்திரமாக நம்மை வழி நடத்தி வருகிறது. பக்தியின் லட்சியம் ஒருவனை நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்துகொண்டு, அதற்கும் நமக்கும் பேதமில்லை என்ற பரம ஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்தே தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகத்துக்கு நல்லவனாக நடக்கவும்கூட அதுவே வேறெந்த உபாயத்தையும்விட மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது. கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் படவைத்து பகவானை ஞாபகமூட்டுவதைவிட பெரிய சமூக சேவை இல்லை. '' அதனால் தான் ஊரிலே கோபுரத்தை தவிர வேறு எந்த கட்டிடமும் உயரமாக இருந்து அதை மறைக்கக்கூடாது என்று வைத்திருந்தார்கள். கோபுர தரிசனம் பாப விமோச்சனம். இப்போது கோயிலை gps மேப் பார்த்து பல கடைகள், பேனர்கள் இதற்கு இடையே சிறிதாக காண்கிறோம். அதற்கும் காசு கட்டவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...