Monday, February 12, 2018

KULAPPULLY.2


‘’ குளப்புள்ளி கதாதாரி வெண்ணை கிருஷ்ணன்’ - 2 J.K. SIVAN
அவரென்ன சாதாரண குடும்பத்திலா வந்தவர்?.
தாத்தன், பாட்டி, அப்பா அம்மா எல்லோருமே சிறந்த கிருஷ்ண பக்தர்கள். குருவாயூரப்பன் இங்கேயும் உருவாக வேண்டாமா? பிரசன்ன குமார் மனதில் ப்ரசன்னமான சில கேள்விகள்:
வீடு கட்ட மனை தேடினேன். வீடு எனக்கா உனக்கா கிருஷ்ணா? இருப்பதை பார்த்தால் வீடு உனக்கு தான் அவசியம். ஆமாம், முதலில் உனக்கு ஆலயம் அப்பறம் எனக்கு ஒரு வீடு. இல்லை. கிருஷ்ணா இல்லை. எனக்கு தான் முதலில் வீடு இப்போது அவசியம். நான் எங்கோ அல்லவோ இருக்கிறேன். உன்னருகில் இருந்தால் தானே முழுநேரமும் உன்னை கவனித்து உனக்கு ஒருஆலயம் நிறுவ முடியும்?
பிரசன்ன குமார் குளப்புள்ளியில் அவசரம் அவசரமாக தனக்கு வசிக்க ஒரு சிறிய வீடு கட்டிக் கொள்ள ஏற்பாடு செயது கொண்டார். அணிலாக, எறும்பாக இரவு பகல் உழைத்தார். ஆதரவு சேர்ந்தது. மலையாள நண்பர்களுக்கு ஒரு வழக்கம். ப்ரச்னம் பார்ப்பது. எதானாலும்
ப்ரச்னம். சோழி போட்டு பார்ப்பார்கள். ஜோசியர் கொஞ்சம் பயமுறுத்தினார்.
''தம்பி, கோவில் கட்டுவது அவ்வளவு எளிதல்ல. பாதியில் நிறுத்தினால் விளைவு தாங்க முடியாது. ஏற்கனவே குஞ்சுமணி பழைய கற்களை தகர்க்கிறேன் என்று குளத்தில் சிறிய வெடி மருந்துகளை கண்ணாடி சீசாவில் வைத்து குளத்தில் வெடித்தான். என்ன ஆச்சு? மீன்கள் செத்தன. பாவம் குஞ்சுமணிக்கு கண் பார்வை போய்விட்டது. ஜாக்கிரதை. நீயும் குஞ்சுமணியாகி விடாதே''.
பிரசன்ன குமாரின் மனைவிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ''எதற்கு இந்த ரிஸ்க். வேண்டாம். கோவில் கட்டுவதெல்லாம் பிற்பாடு எப்போவாவது பார்த்துக் கொள்வோம்'' என்று தடுத்தாள் .
''எதுவானாலும் சரி. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன். கிருஷ்ணன் குளப்புள்ளியில் வந்து நிற்கப் போகிறான். யார் என்ன சொன்னாலும் தடுத்தாலும் சரி''-- இது பிரசன்ன குமார்.
குரலிலும் தீர்மானத்திலும் கெட்டியாக இருந்தார். எத்தனையோ எதிர்ப்புகள், தடைகள். அத்தனையும் தாண்டி காலை எடுத்து முன் வைத்தார் பிரசன்ன குமார்.
பிரபல ஜோசியர் செட்டலுர் ஸ்ரீ கிருஷ்ணன் குட்டி குப்தன் அஷ்ட மங்கள்ய தேவ ப்ரச்னம் நடத்தினார். தோஷங்கள் நிவர்த்தி பெற தாந்த்ரீ, கரியன்னுர் வாசுதேவன் நம்பூதிரி வரவழைக்கப் பட்டு சம்பிரதாய புனருத்தான சடங்குகள் துவங்கின. வாஸ்து பிரகாரம் கோவில் எப்படி அமையவேண்டும் என்று பிளான் போட்டு கொடுத்தார். புதுப் பணம் என்று ஒரு தங்கக் காசு ஒரு கன்யா பெண் மூலம் வைக்க வேண்டும்.
தனது கன்யா பெண்ணையே புதுப்பணம் எடுக்க சொன்னார். ஸ்ரீ கிருஷ்ணனின் பழைய விக்கிரஹம் பழைய கோவிலில் ஸ்தாபிக்கப் பட்டது. அந்த நாள் மறக்க முடியாத நாள் பெப்ரவரி 2, 2006. மூன்றே வாரத்தில் கோவில் கட்டுவதற்காக ஒரு குழு தயாரானது.
''ஸ்ரீ கிருஷ்ண க்ஷேத்ரம் சம்ரக்ஷண சமிதி'' நிறுவப்பட்டு பிரசன்னகுமார் தான் தர்மகர்த்தா.
ப்ரசன்னகுமார் பிடிவாதக்காரர். அவர் பக்கம் தான் வெண்ணைக் கிருஷ்ணன் இருக்கிறானே. கோவில் கட்ட இடம் கொடுக்க மறுத்த நில சொந்தக்காரர் உன்னி கிருஷ்ணன் ஒரு நாள் திடீரென்று வந்தார்.
''பிரசன்ன குமார், நீங்கள் கோவிலை அந்த மனையில் கட்டிக்கொள்ளலாம்'' என்று ஒப்புதல் கொடுத்தார். அதற்கு முன் ஆச்சர்யமாக ஷீர்டி பாபா கனவில் தோன்றி ஆசி அளித்தார்.
அப்பறம் என்ன, முதலில் மனை இடம் க்ளீன் ஆகியது .
26.8.2006 அன்று ஒரு சுப முகூர்த்தத்தில் பிரசன்ன குமார், ஸ்ரீதரன்மேனன். உன்னி கிருஷ்ணன் கோகுலநாதன் எல்லோருமாக சேர்ந்து கிருஷ்ணனை வேண்டிக்கொண்டு அஸ்திவாரம் போடப்பட்டது. ஜோசியர் எதிர்காலத்தை சரியாக நிர்ணயித்தார்: இந்த கிருஷ்ணன்கோவில் மிகப் பிரபலமாகும். அவர்கள் பேசும்போது ஒரு சர்ப்பம் கோவிலில் தலை காட்டியது. ''பயம் வேண்டாம். ஆசீர்வாதம் பண்ண ஆதிசேஷன் வந்திருக்கிறான்'' என்கிறார் ஜோசியர்.
நண்பர்கள், பக்தர்கள், மற்றவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக உதவி கிருஷ்ணன் கோவில் உருவாகி வளர்ந்தது. ''கிணறு வேண்டுமே என்று கவலைப்படாதே இங்கேயே எனது பழைய கிணறு ஒன்று இருக்கிறதே பார் அதை திருத்தி அமைத்து விடு'' என்று கிருஷ்ணனே
எண்ணத்தை மனதில் திணிக்க சிதிலமாகி மண்ணில் புதைந்திருந்த பழைய கிணறு தோண்டி, தூறு வாரப் பட்டு, கற்களால் சுவர் எழுப்பப்பட்டு, ஜோரான பளிங்கு நீருடன் புதுக் கிணறானது.
தொடரும்....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...