Thursday, February 8, 2018

SELF CONFIDENCE

வாழ்க்கை சக்கரம் -- தனக்குத் தானே தைரியம் அவசியம். J.K. SIVAN

''தள்ளாத வயது'' என்று சொல்வதே தப்போ என்று தோன்றுகிறது. எதுவுமே எளிதில் நம்மைக் கீழே தள்ளி விடும் போல் இருக்கிறது. ஒரு தடி, கொம்பு அவசியம் மூன்றாம் காலாக உதவ வேண்டியிருக்கிறது. அல்லது யாராவது ஒருவர் நம்மை பிடித்துக் கொள்ளவேண்டும், அல்லது நாம் அவரை பிடித்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் உண்டாகிறதே. , நாம் விழுவதற்கு எந்த நேரமும் தயாராக இருப்பதால். எதுவுமே நம்மை தள்ளி விடும். நம்மை அப்படி விழாமல் காப்பவர் தான் நமக்கு உற்ற துணை. அவர் ஒருவர் தான் நம் மேல் அக்கறையோடு செயல் படுவார். யார் அவர்?

அந்த ''அவர்'' நாம் தான் சார். இது தான் எனக்கு தெரிந்த நல்ல ''நமக்கு நாமே'' திட்டம்

உன்னைப் பிடித்து வெளியே தள்ளாமல் உனக்கு என்று ஒரு இடம் இப்போதே பிடித்து வைத்துக் கொள் .
உனக்கு அப்புறம் யார் அதை எடுத்துக்கொண்டு போனால் நமக்கு என்ன அது பற்றி தெரியவா போகிறது?

பழைய நண்பன், மனைவி (புதுசு வேறே யாரோ என்ற அர்த்தத்தில் அல்ல) உன்னை மணந்து நீ கிழவனாகியபோது தானும் கிழவியாகிய ஒரே பழைய மனைவியைத் தான் சொல்கிறேன். அடே பயலே, பின்னால் நீ தேடுவாய் என்பதை உன்தர்ந்து தான் இளவயதில் கல்யாணத்தில் ஜான் வாஸாவில் வாக்கிங் ஸ்டிக் தருகிறார்களோ. அனுபவசாலிகள்.

தைரியத்தை எப்போதும் இழக்காமல் உன் உடம்பின் தேவைகளை புரிந்து கொண்டு அனுசரித்து நட.
என் போன்ற வயதான சகோதர சகோதரிகளே, மரணத்தை நினைத்து துளியும் அஞ்சவே வேண்டாம். அது கட்டாயம், நிச்சயம் வரும். எப்போது என்று அதுவே தீர்மானிக்கட்டுமே.நமக்கு எதற்கு அதைப் பற்றிய சிந்தனை.

உடம்பு சீராக இருந்துவிட்டால் உள்ளம் தானாகவே அமைதி அடையும். வலி இல்லாவிட்டால் தான் வாதாபி கணபதி பாடமுடியும். பல்வலியோடு பல்லவி பாடமுடியாதே.

ஆறுமுகசாமிக்கு அறுபது என்று ஆபிஸ் நினைவு வைத்துக்கொண்டு அவனை ரிட்டையர் பண்ணி விட்டது. சந்தோஷம். நாளையிலிருந்து free.
ஆனால் வங்கிக்கணக்கில் பாலன்ஸ் ஐந்து நம்பர் எண்ணிக்கையில் இருக்கவேண்டாமா. இத்தனை நாள் எதற்கு உழைத்தாய்?.
நல்ல உணவை விரும்பி சாப்பிடவேண்டும்.
பிடித்த ஆடையை உடுத்திக் கொள் .
போதும் இந்த கட்டுப்பாடு. ஊர் சுற்றிப் பார்.
பையன் பெண் எல்லாருக்கும் உன்னாலான கடமையை செயது விட்டாய். இன்னும் அதேபோல் பேரன் பேத்திக்கு செய்ய விருப்பம் தான். அது எல்லோராலும் முடியாது. ஆனால் . .
உடம்பு பர்ஸ் இரண்டும் இடம் கொடுத்தால் தொடர்ந்து செய். இல்லையேல் விட்டுவிட்டு. இது சுயநலம் இல்லை. இயலாமை.

நீ பட்டத்தின் மாஞ்சா கயிறாக இருந்தது போதும். காற்றில் பட்டம் அறுந்து போகட்டுமே. அது எங்காவது பறந்து கொண்டு தான் இருக்கும். உன் கண்ட்ரோல் கட்டுப்பாடு இனி அதற்கு இல்லை.

ஆச்சு 70வருஷம் தாண்டி விட்டதே. எத்தனை காலண்டர்கள் மாற்றியாகி விட்டது வீட்டில்.

உனக்கு உன் உடல் தொந்தரவு கொடுக்கவில்லை என்றால் நீ தான் சக்ரவர்த்தி.

உள்ளம் சோர்வடைய ஆரம்பிக்கும். அனுமதிக்காதே . ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இரு அதற்கு. அது அலாவுதீன் பூதம். வேலை கேட்கும். கொடுக்காவிட்டால் உன்னை காலை இட்டிலியாக தின்றுவிடும்.

உடல் அசைவுகள் தளர்வதற்கு ரொம்பவும் இடம் கொடுக்காதே. நட. உட்கார். எழுந்திரு. தூங்கு. உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்வதற்கு விடாமல் பழக்கப் படுத்திக்கொள்.

சின்ன வயதில் மரத்தடியில் நிறைய பையன்கள் பெண்கள் வட்டமாக உட்கார்ந்திருக்க அவர்களை எவ்வளவு வேகமாக வட்டமாக சுற்றி சுற்றி ஓடி ''சங்கிலி புங்கிலி கதவைத் திற , நா மாட்டேன் வேங்கைப் புலி, ஆட்டுக்குட்டியை கண்டியா? கண்டேன். உள்ளேயா வெளியேவா'' என்று கையில் ஒரு துணி துண்டை வைத்துக்கொண்டு ஒரு பையனை பிடித்து துரத்தினேன். இப்போது முடியுமா?

என்ன கொஞ்சம் நடை மெதுவாக இருக்கும். முன் போல் ஓடிப்போய் ட்ரெயின் ஏற்கமுடியாது. பஸ்ஸில் தொங்கிக்கொண்டு போகமுடியாது.

''நான் சொன்னபடி தான் எல்லோரும் இந்த வீட்டில் நடக்கவேண்டும்'' என்ற ஹிட்லர் பாணியில் இருந்து விடை பெறு . வீட்டில் இனி அது செல்லாது. பேரன் பேத்திகள் மேல் உனது ஆணைகளை செலுத்தாதே. கேட்கமாட்டார்கள். அவமானப் படுவாய்.

வாழ்க்கை எனும் வட்டத்தில் ஒரு முனையிலிருந்து மறு முனை செல்கிறாய். இதோ அடுத்த முனை அருகே வந்து விட்டது கண்ணுக்கு தெரிகிறதே. வாழ்க்கை முறையை சுலபமாக்கிக் கொள்

75லிருந்து 80 பக்கம் நகர்கிறாயா? ''ஆஹா, வாய்யா என் கூட்டாளியே?. உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்''.

உடம்பு மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டதோ? ஆமாம் எத்தனை வருஷம் தான் அது அடிமையாக இருக்கும். அது இப்போது எஜமான். மனதளவில் இதை புரிந்து கொண்டு தயாராகு.

உன்னை சித்ரவதை பண்ண, உன் சேமிப்பை குறைக்க நிறைய ஆஸ்பத்திரிகள் டாக்டர்கள் வரும் நேரம் இது.
எதிர்பார்த்து ஜாக்கிரதையாக இரு. அனாவசியமாக அதன் வலையில் விழுந்து இருப்பதை இழக்காதே.

மறுமுனை கையெட்டும் தூரத்தில் வந்துவிட்டதா? கவலையே வேண்டாம். உன் ஆகாராதிகள், எண்ணங்கள் சீராக இருக்கட்டும். பயம் விலகட்டும். '' தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன'' பாட்டு ஞாபகம் இருந்தால் அடிக்கடி உரக்க பாடு. தைரியம் தானாகவே வரும்.

முதியோர் இல்லம் உனக்குமா? போய் அடிக்கடி பார் அங்கே மற்றவர்களை. அவர்களோடு பேசு. அனுபவங்கள் சொல்லிக் கொடுக்கும். எந்த கேள்விக்கும் அதிலேயே பதில் அடங்கி இருக்கிறது. புத்திசாலி கெட்டியாக அதை பிடித்து விடுவான். நீ தான் கெட்டிக்காரன் ஆயிற்றே.

நிம்மதி மனத்தில் தான் இருக்கிறது. வெளியே இல்லை. எதையும் தாங்கும் இதயம் நமக்கு கொடுக்கப் பட்டிருக்கிறதே. ''வருவதை எதிர் கொள்ளடா''

நீ வந்த வழியை திரும்பிப்பார். எவ்வளவு கஷ்டங்கள் நஷ்டங்கள் தாண்டி வெற்றி நடை போட்டிருக்கிறாய். அது உன்னை கடைசிவரை அப்படியே செல்ல விடுமே. அடுத்தவனுக்கு இது தெரியாது. புரியாது. உனக்கு உதவ முடியாது.

பாதையின் முடிவுக்கு வந்துவிட்டேனா? ஆஹா என் மனம் சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கிறது. நோய் என்னை ஜெயித்துவிட்டதோ. வாழ்த்துக்கள். போரில், போட்டியில் ஒருவர் தானே வெற்றி பெற முடியும். நான் சிரித்துக் கொண்டே என் தோல்வியை ஒப்புக்கொள்வது தான் அழகு. அதுவே வெற்றி. அதுவே என் கம்பீரம்.

80 -100 வருஷங்களா!! ஆஹா !! அற்புதமான பூலோக வாழ்க்கையின் அனுபவம் என்னிடம் இருக்கிறதே.

''மரணமே வா. உன்னைத் திரும்பிப் போகச் செய்வதற்கு என் சொத்தை இழக்க நான் தயாரில்லை. அது டாக்டருக்காகவோ ஆஸ்பத்திரிக்கோ நான் கஷ்டப்பட்டு ரத்தம் வியர்வை சிந்தி சேர்க்க வில்லை. அவை யாவும் என் அருமை மகன் மகள், பேரன் பேத்திக்கு. உனக்கு இதோ இருக்கும் நான் மட்டும் தான். இலவசம். நடுவில் டாக்டர் தரகன் எதற்கு. வா. வா. நான் தான் உன்னை வரவேற்க எப்போதோ தயாராகிவிட்டேனே!.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...