Friday, February 23, 2018

AINDHAM VEDHAM 10

ஐந்தாம் வேதம் - J.K. SIVAN

10 கருடன் வருகை

கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று என்று ஒரு பாடல் நினைவிருக்கிறதா? கேள்வியில் தான் பதிலே இருக்கிறது என்பார் ஜே.கே. ( பிரபல தத்துவ மேதை). அவர் பேச்சு நிறைய கேட்டிருக்கிறேன் படித்திருக்கிறேன். சிறந்த சிந்தனையாளர். ஒரு கேள்வி பல கேள்விகளைக் குட்டி போடும். அவற்றை அலசி விடை சொல்லும்போது மேலும் நிறைய கேள்விகள் உருவாகும். இது ஜே.கே. படித்தவர்களுக்குப் புரியும். பிடிக்கும்.

சௌனகர் கொஞ்சம் வேறே மாதிரி. கேள்விகள் தான் கேட்பார்.திருவிளையாடல் தருமியோ என்று எடை போடா வேண்டாம். உக்ரஸ்ரவர் எல்லா கேள்விகளுக்கும் விடை தயாராக வைத்திருப்பவர். நிறைய விஷய தானம் பண்ணுபவர். அதனால்சௌனகர் கேட்டதன் மூலம் நமக்கு கதைகள் கிடைக்கிறது. மேலே செல்வோம்.

''முநிஸ்வரரே, எதற்கு சூரியன் உலகையே சுட்டெரிக்க தயாரானான்? என்ன கோபம? யார் என்ன செய்தார்கள் அவனுக்கு?'' --- கேட்டவர் சௌனகர்.

''ராகு தேவர்களோடு கலந்து தானும் அமிர்தம் பருகினதைப் பார்த்து விட்டார்கள் இல்லையா சூரியனும் சந்திரனும். உடனே அதை நாராயணனிடம் சொல்ல அவர் ராகுவின் சிரத்தை சுதர்சன சக்ரத்தால் துண்டித்தார் என்றேன் அல்லவா? அன்றிலிருந்து ராகுவிற்கு சூரியன் சந்திரனுடன் விரோதம். அவர்களை விழுங்க தொடங்கினான். சூரியன் யோசித்தான். இந்த தேவர்களுக்கு உதவப்போய் எனக்கும் ராகுவிற்கும் பகை. இந்த அவஸ்தையில் எனக்கு தேவர்கள் என்ன உதவி செய்கிறார்கள்?. ஒன்றுமே இல்லையே. இவர்களை விடப்போவதில்லை. அனைவரையுமே நான் சுட்டெரிக்கிறேனா இல்லையா பார்'' என்று மேற்கு மலைகளை நோக்கி கிளம்பினான் சூரியன். தனது அக்னிஜ்வாலையை அங்கிருந்து எங்கும் பரவ விட்டான். தேவர்களும் ரிஷிகளும் எங்கிருந்து இவ்வளவு வெப்பம் வருகிறது. சூரியன் கூட இன்னும் உதிக்கவில்லையே என்று பிரம்மாவிடம் சென்று காப்பாற்ற வேண்டினார்கள். ''

பொழுது விடிந்ததும் சூரியன் இன்னும் அதிக வெம்மையுடன் அழிவைத் தொடங்கப் போகிறான். காச்யபரின் மகன் அருணன் மட்டுமே சூரியனின் எதிரே நிற்க முடிந்தவன். தேரோட்டியாக அவன் சூரியன் முன்னே நின்றால் வெம்மை அவனால் தடுக்கப்படும்'' என்றார் பிரம்மா. அவர் யோசனைப்படியே தேவர்கள் அருணனை வேண்டி அவன் சூரியனின் வெப்பத்தை கட்டுப்படுத்தினான்'' என்று முடித்தார் உக்ராஸ்ரவர்

''வேறு ஏதாவது கேட்கவேண்டுமா?'' என்று சௌடி கேட்க சௌனகர் சும்மா இருப்பாரா? வினதை கத்ருவுடன் போட்டி போட்டாளே, என்னவானாள்? '' என்றார்

கருடன் தனது அன்னை வினதையைத் தேடிப் பறந்தான். பாவம் அவள் அடிமையாக கத்ருவினால் அவதிப்பட்டதைக்கண்டு கலங்கினான். கருடன் எதிரிலேயே ஒரு நாள் கத்ரு '' வினதா, எதிரே கடலின் நடுவே ஒரு தீவில் நிறைய நாகங்கள் வசிக்கின்றன. என்னை அங்கே கருடனை அழைத்துப் போகச்சொல் '' என்றாள் . அவ்வாறே கருடன் செய்தான். பிறகு ''அந்த நாகங்களைத் தூக்கிக் கொண்டு வா'' என்று கட்டளையிட்டாள் . தாயின் அடிமைத்தனத்தால் கருடனால் கத்ருவை மீறி எதிர்க்கமுடியவில்லை. அவ்வாறே செய்தான். ஆனால் நாகங்களை முதுகில் சுமந்து உயரே சூரியன் அருகே பறந்தான். சூரிய வெம்மை தாங்க முடியாமல் நாகங்கள் சுருண்டு மயங்கின. கத்ரு தனது சர்ப்ப பிள்ளைகள் வாடுவதைக் கண்டு இந்த்ரனை பூஜித்து எப்படியாவது குளுமையாக மழை பொழிந்து சூரிய வெப்பத்திலிருந்து என் பிள்ளைகளைக் காப்பாற்று'' என்று வேண்டினாள் . அவளது ஸ்தோத்ரத்தில் மகிழ்ந்த இந்திரன் ஆணையால் மழை பொழிந்தது. குளிர்ந்த காற்று வீசியது. கத்ருவும் அவளது பிள்ளைகள் சர்ப்பங்களும் ரமணியகா என்ற அழகிய தீவில் கருடன் மேலிருந்து இறங்கினார்கள். பிறகு நாகங்கள் ''கருடா இந்த லவண சமுத்ரத்திலிருந்து எங்களை வேறு ஒரு நல்ல இனிய நீர் உள்ள தீவுக்கு தூக்கிச் செல்'' என்று கட்டளையிட்டனர். கருடன் கோபமாக தனது தாயைப் பார்த்தான். ''நான் இந்த சர்ப்பங்களின் உத்தரவின் படி நடக்கவேண்டியது அவசியமா?'' என்று அவன் பார்வை கேட்டது.

''ஆமடா, மகனே. என்னை இந்த நாகங்கள் உச்சைஸ்ரவஸ் கருப்பு வால் போல் தொங்கி ஏமாற்றி உன் சிற்றன்னைக்கு அடிமையாகச்செய்துவிட்டதால் என்னால் உனக்கும் துன்பம். என்ன செய்வேன்''.

கருடன் நாகர்களை நோக்கி, '' உங்களை எந்த விதத்தில் திருப்தி செய்தால், என் தாயை இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்வீர்கள் '' என்று கேட்டான்.

''எங்களுக்கு அமிர்தத்தை உன்னால் கொண்டுவரமுடியுமா. அப்போது உனக்கு விடுதலை''.

கருடன் வினதையிடம் சென்று விவரம் சொன்னான். அதே சமயம் ''நான் எப்பாடுபட்டாவது அமிர்தம் கொண்டுவருவேன். வழியில் நானும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தான் தருவேன். எங்கே கிடைக்கும் என்று வழி சொல் என்றான்.

இங்கிருந்து வெகு தூரத்தில் பெருங்கடலின் ஒரு மூலையில் நிஷாதர்கள் வசிக்கிறார்கள். அவர்களைக் கொன்று அமிர்தத்தை கைப்பற்றி வா. நீ வரும்வரை நான் உனது வெற்றிக்காக தவமிருப்பேன். மாருதி உனக்கு உற்சாக மூட்டட்டும். வசுக்கள் உன் உடலைப் போஷிக்கட்டும். அக்னி உன் சிரத்தைக் காக்கட்டும். சூரியனும் சோமனும் உனக்கு உதவட்டும்'' என ஆசிர்வதித்தாள் தாய் வினதை.

கருடன் பறந்தான்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...