Wednesday, February 7, 2018

MY ANCESTORS



என் தாய் வழி முன்னோர்கள் J.K. SIVAN

                                                          ''கனம்'' கணபதி சாஸ்திரிகள்

அன்பு நண்பர்களே, என்ன வார்த்தை சொல்வேன்? எப்படி நன்றி தெரிவிப்பேன், வாழ்த்துவேன்?
என் தாய் வழி பாட்டன் பூட்டன் பற்றிய விபரங்களை என் தாத்தா வசிஷ்ட பாரதியார் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அக்கால வாழ்க்கை முறை பற்றிய விஸ்தரிப்பு தான் என் கட்டுரைகள் என்பது தெரிந்ததே. இவற்றை அனுபவித்து மேலும் என்னை ஊக்குவிக்கும் அன்பர்களே, இதற்கு நான் என்ன சொல்ல முடியும்? ஒரு குடும்பத்தில் மனைவியோ அம்மாவோ சொல்வதைத்தான் நான் இங்கே காப்பியடித்து சொல்லமுடியும்.
''என்ன சொல்றேள் புதுசா? என் சமையல் பிடிச்சிருக்கா? இது இத்தனை நாளா தெரியலயா? சரி போகட்டும். இனிமே இதுமாதிரி நல்ல சமயலாவே பண்ணி போடறேன்''.
நான் அவர்களை மாதிரி எல்லாம் அதிகாரமா சொல்ல முடியுமா? ஆகவே கொஞ்சம் முயற்சி செயது இன்னும் நன்றாக பிடிக்கும்படி எழுத ட்ரை பண்ணுகிறேன். என் கிருஷ்ணன் அதற்கு அருள் புரியட்டும்''
தஞ்சாவூர் ஜில்லா கருத்தட்டாங்குடி பரசுராம அப்பா அக்ரஹாரத்தில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை பற்றி சொன்னேன் அல்லவா. குதிரை வைத்யநாத அய்யர் என்று ஒருவரின் பெயர் அடிபட்டது அல்லவா அதில். ஐயர் அவருக்கு ராஜா கொடுத்த குதிரையில் தான் போவார். அதானால் அந்த பெயர். அவர் சிறந்த சங்கீத வித்வான். அவரது குமாரர் தான் 'கனம்'' கணபதி சாஸ்திரிகள் -- இந்த கனம், ''மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான்'' வகை அல்ல. மிகவும் கடினமான ஒரு சங்கீத பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஒரு சிலரே அடைந்த பட்டப் பெயர். இவர் சாத்தனூர் ஆரம்பகால ராமஸ்வாமி பாரதியின் சகோதரி லக்ஷ்மியை மணந்தவர்.
''கனம் கிருஷ்ணய்யர்'' என்ற சங்கீத வித்வானின் ( தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் ''என் சரித'' த்தில் இவரைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது)
கிருஷ்ணய்யரின் பெரியம்மாவின் பெண் தான் லக்ஷ்மி. இதனால் தான் சாத்தனூர் பாரதி குடும்பமும் தஞ்சாவூர் கணபதி சாஸ்திரி குடும்பமும் இணைந்தவை. சுருங்கச்சொன்னால் என் தாத்தாவின் மூன்றாம் தலைமுறை மனிதர்கள் இவர்கள். சாஹித்ய சங்கீத வித்வான்களும் ராம பக்தர்களுமாக கலந்த ஒரு பரம்பரை..
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் என்பதற்கு பதினாறு வகை செல்வம் என்று பொருள் இருந்தாலும் விளையாட்டாக நாம் அதை குழந்தைகளாக அர்த்தம் கொள்வோம் அல்லவா. உண்மையில் இப்போது நாம் வெட்கப்படுகிறோமே தவிர
அந்த காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு என்று எல்லாம் கிடையாது. எல்லோர் வீட்டிலும் குறைந்தது 5 அல்லது 6 குழந்தைகள் இருக்கும். நான் சொன்னது குறைந்த அளவு. பத்து குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் ஏராளம். இப்படி பெரிய ஆலமர குடும்பங்களை இன்னும் நாம் காணலாம். என் குடும்பமே அப்படிப்பட்ட ஒரு ''பெரிய'' குடும்பம்.
அப்போதெல்லாம் மருத்துவ வசதிகள் முன்னேறவில்லையா, வியாதிகளை பற்றி முழுதும் தெரியவில்லையா என்று ஆராய வேண்டாம். உண்மை என்னவென்றால் சில குழந்தைகள் இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிடும் நிலை அப்போது.
எந்த நோய்க்கும் கை வைத்தியமாகத்தான் மருந்து. -- அதாவது '' அனுபவ'' மருத்துவர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உண்டு. படித்து பட்டம் பெற்றவர் அல்ல. மூலிகை அறிந்து இதால் இது குணமாகும் என்று பல பேருக்கு கொடுத்து சில பேருக்கு குணமாகி பத்துக்கு ஐந்தாவது தேறிய அனுபவஸ்தர்கள். போனதெல்லாம் கர்மா, முன் செய்வினை என்று அறிவித்தவர்கள்.
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் (ஆயிரம் வேரைக்கொண்டவன் என்று நிறைய பச்சிலை மூலிகைகளைக் கொண்டவன் கூட முழுமையான வைத்திய சாஸ்திரம் தெரிந்தவன் அல்ல என்று தான் சொல்வது வழக்கம்) என்ற வாக்கு பொய்க்காமல் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. பத்து பன்னிரண்டு குழந்தைகளில் நான்கு ஐந்தாவது தேறாதா என்ற ஆதங்கத்தில் இவ்வாறு குடும்பத்தில் ஒரு நோக்கம் இருந்திருக்கலாம். நோய் நொடி வந்தால் வைதீஸ்வரனுக்கு வேண்டிக்கொண்டு, திருப்பதி வெங்கடாசலபதிக்கு முடிந்து வைத்தும் , முடி வளர்த்து கோவிலில் வந்து இறக்குவதாக வேண்டிக்கொண்டவர்கள் அதிகம். அவ்வளவு முழு நம்பிக்கையோடு கடவுளை வேண்டும் பழக்கம் இன்றும் சில குடும்பங்களில் தொடர்கிறது.
குழந்தைக்கு மூக்கிலோ காதிலோ துளை இட்டு ''பின்னம்'' குறை, பண்ணினால் யமன் நெருங்க மாட்டான், கசப்பான வேம்பு என்ற பெயர் வைத்தால் ''ச்சே பேரே கசக்கிறதே'' என்று யமன் கிட்டே வரமாட்டான் என்றெல்லாம் நம்பினார்கள். அவன் போட்ட ''பிச்சை'' என்று குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் கருணை காட்டி உயிர்ப் பிச்சை என்று விட்டு விடுவான். இப்படியான நம்பிக்கைகளால் நிறைய குடும்பங்களில் இன்றும் ''பிச்சைகள், வேம்புகள்'' இருக்கிறார்கள். எனது மூத்த தமையனுக்கு வீட்டில் பிச்சை என்ற பெயர். வெளியே ரத்தினம் அய்யர்.
பெரியவர்கள் பெயரை குழந்தைக்கு வைத்து அந்த பெயரைச் சொல்லி கூப்பிடுவது அவ மரியாதை என்று அந்த பெயர் கொண்ட குழந்தைகள் கடைசிவரை அம்பி, பெரியம்பி, சின்னம்பி, அண்ணு , அண்ணப்பா, அங்கச்சி. அம்மாளம், இப்படிப்பட்ட பெயர்களாலேயே அழைக்கப்பட்டு வாழ்ந்து மறைந்தார்கள். பக்தி அவர்களைக் காப்பாற்றியது என்று தாராளமாக கூறலாம்.
எங்கள் முன்னோரில் பலர் சங்கீத வித்வான்களாகவும் சிறந்த ராம பக்தர்களாகவும் இருந்தார்கள் என்றேனே. சாதரணமாக பாடுபவர்களைக் காட்டிலும் அசகாயத்தனமாக பாடுபவர்களுக்கு மவுசு (DEMAND ) இருந்ததால், வித்வான்கள் '' தனித்திறமை காட்டி பரிசுகள் பெற முனைந்தனர். மேலே ''கனம் '' பாடுவது பற்றி சொல்லியிருந்தேனே. அது போல் தான் மற்றொரு அசாத்யமான சாதகம், கழுத்தில் கூரான கத்தி கட்டிக்கொண்டு '' கண்டம்'' பாடுவது. கண்டம் சிறிது சரிந்தாலும் குரல்வளை பெருத்தாலும் பிடிப்பாக கட்டிக்கொண்டிருந்த கூரான கத்தி தொண்டையைப் பிளந்து விடும்.
இன்னொரு சாதகம் தலையில் எலுமிச்சையை வைத்துக்கொண்டு அசையாமல் பாடுவது. பாடும்போது தலையை அசைத்தும் கைகள், உடம்பை மாவாட்டுவது போல் உருட்டியும் பாடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து சிறுவயதில் எம். கே. தியாகராஜ பாகவதர் என்ற பாடக நடிகர் பாடல்களைப் பாடுவதை படத்தில் கண்டிருக்கிறேன். நீங்களும் இன்னும் யூ ட்யூபில் அவரை பார்க்கலாம். ஒரு சில கச்சேரிகளை நேரிலும் கேட்டிருக்கிறேன். துளிகூட முகம் சுளிக்காமல் பாடுவார். ஏழிசை மன்னன் என்று பேர் பெற்றவர். கந்தர்வ கானம் என்பார்கள். 4 - 4 1/2 கட்டையில் பாடுபவர் என்றெல்லாம் புகழ்வார்கள். இன்றும் அவர் பாட்டுகளை விடாமல் கேட்டு வருவதில் தனி ஆனந்தம் கொள்பவர்கள் என் ரகம்.
தலையில் எலுமிச்சை வைத்து பாடும் சங்கீதம் ஒரு வகையில் குழந்தைகள் இன்றும் விளையாடும் லைம் அண்ட் ஸ்பூன் ஓட்ட பந்தயம்'' ரகம். இது எலுமிச்சை கீழே விழாமல் குழந்தைகள் ஓடி ஜெயிப்பது. அது வித்துவான்கள் பாடி ஜெயித்தது..
இந்த மாதிரி வித்தைகளில் கற்று தேர்ந்தவர் தஞ்சாவூரில் வாழ்ந்த 'கனம்' கணபதி சாஸ்திரிகள். அவருக்கு சகோதரி புருஷனாக வாய்த்தவர் திருக்குன்னம் சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணய்யர்.
இன்னும் மேலே சொல்கிறேன்.

1 comment:

  1. Super,it is not your family history but the record of yesteryears history of Thanjavur

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...