Thursday, February 15, 2018

KUNTHI'S PRAYER 3


குந்தியின் பிரார்த்தனை. 3 J.K. SIVAN

கிருஷ்ணன் தான் பரமேஸ்வரன் எனும் பரமாத்மா. உள்ளும் புறமும் நிறைந்தவன். அவன்குந்தியின் எதிரே அவள் சகோதரன் மகனாக மானிட உருவில் நின்றாலும் அவள் உள்ளத்திலே பரமாத்மா ஸ்ரீ நாராயணனாக அவன் அம்சமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக ஒளி வீசியவன்.

குப்புஸ்வாமி நாடகத்தில் செட்டியாராக வேஷம் போட்டால் நாம் செட்டியாரை பார்க்கிறோமே தவிர நமது நண்பன் குப்புஸ்வாமி அங்கே தென்படவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அப்படித்தான் எல்லோரிலும் இருந்தாலும் நாம் எல்லோரையும் பார்க்கிறோமே தவிர எல்லோரிலும் அவனைப் பார்க்க தவறுகிறோம்.

தவம் செய்து சக்தி பெற்றாலும் அசுரர்கள் அவன் மூலம் பெற்ற தங்களது அதிகாரம் சக்தி அவற்றை உயர்வாக மதித்து, அவனையே இகழ்ந்து, எதிரியாகத் தான் பார்த்தார்கள். அழிந்தார்கள்.

பகவானை புலன்களையும், ஐம்பூதங்களையும் கடந்து மட்டுமே உணரமுடியும். கண்ணால் கண்டால் தான் அவன் இருப்பதை உணர்வேன் என்ற எண்ணம் மறைய, நமது சரீரத்தில் அவன் அளித்த ஐம்புலன்களின் சக்தியை மீறிய உணர்வு என்ற அறிவு தேவை. அர்ச்சாரூபமாக ஆலயங்களில் அவன் தோன்றுவது அவன் அதையும் தாண்டிய அருவமான, அதீத, ஒரு மா பெரும் சக்தி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உணர்த்துவதற்காகவே.

கட்டம் போட்ட நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி பழகியவன் தான் பின்னால் மாபெரும் கவிஞனாக, புலவனாக, அறிஞனாக, எழுத்தாளனாக பக்கம் பக்கமாக வெள்ளைத்தாளில் எந்த கோடுகளும் இன்றி எழுதுபவனாக மாறுவது போல். விழுந்து வணங்குவது, சரணடைவது என்பதே அவனே எல்லாம், அணுவுக்குள் அணுவாக, அண்டத்தில் பேரண்டமாக மிளிர்பவன் என்பதை உணர்வதற்காக. இதனால் நமது அகந்தை அழிந்தபின். அறிவினால் அறியமுடியாத கிருஷ்ணனை அன்பினால், கருணையால் அறியமுடியும். பக்தியால் தான் பரமனை பருக முடியும்.

வயதில் முதிர்ந்தவள், தனது அத்தை என்று அவளிடம் விடைபெற வரும் கிருஷ்ணன் அவள் காலடி மண் தொட்டு வணங்குகிறான் என்றால் அவளது பக்தியை தான் அங்கே நான் உணரவேண்டும். அவன் பக்தவத்சலன் . பக்தனுக்கு அடிமை. கத்தியவாரில் பிறந்தவர்கள் எல்லோரும் மஹாத்மா காந்தியாகி விடமுடியுமா. காந்தி என்ற பெயரை ரொட்டி விற்பவன் கூட வைத்துக்கொள்ளலாம். பூர்வ ஜென்ம பலன் பக்தி ஒருவனை மாற்றிவிடும்.

படிப்பு ஒருவனை பண்டிதனாக வேண்டுமானால் மாற்றும். பக்தனாக மாற்றாது .பரமனை உணர உதவாது. இதயமும் மனமும் பக்தியோடு ஒன்று சேரவேண்டும். பரமஹம்சர் படிக்காமல் தான் பார் புகழும் ப்ரம்மஞானியானார். அறிவுக்கனலான விவேகானந்தரால் குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்னையை அறிந்தார், பவதாரிணியை நேரில் கண்டார். அருள் பெற்றார். படிப்பு வேறு ப்ரம்ம ஞானம் வேறு.பிராமண குலத்தில் பிறப்பதால் மட்டும் உயர்வு அல்ல. அகந்தை இன்றி, தன்னை புல்லினும் தாழ்வாக கருதுபவன் எளிதில் உயர்வடையமுடியும். உள்ளே இருக்கும் ஆத்மாவின் தன்மைப்படியே தான் ஒவ்வொரு மனிதனும் இயங்குகிறான். கிருஷ்ணன் பரம ஆத்மா என்பதால் அவனது செயல்கள் நன்மை பயக்குபவை என்பதை குந்தி ஒரு பரம பக்தையாக அறிவாள் .

நீ போகாதே எங்களுடனேயே இரு என்று வேண்டுபவளின் பிரார்த்தனை தொடர்கிறது

नम: पङ्कजनाभाय नम: पङ्कजमालिने ।
नम: पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रये ॥५॥

5.Nama Pankhaja nabhaya, nama Panjkaja maline,
Nama Pankaja nethraya, namathe pankajangraye.

இந்த ஸ்லோகத்தை நான் சிறுவயதில் என் தந்தை தினமும் காலையில் சொல்வது நினைவிலிருக்கிறது. அர்த்தம் தெரியாமலேயே ரசித்தேன்.

கிருஷ்ணா உன் வயிற்றில் தாமரை மலர் அதன் கொடி போன்ற உருவத்தை பார்த்திருக்கிறேன். நீ பத்மநாபன் மகா விஷ்ணு என்று அப்போது தெரியவில்லை. உன் கண்களும் இப்போது தான் மொட்டவிழ்ந்த தாமரை மலர்கள் என்று பலமுறை வியந்ததுண்டு. அதனால் தான் உன் பார்வை குளிர்ச்சியை தருகிறது. உன் திருவடிகளும் தாமரை மலர் போன்ற மென்மையானவை என்றும் அறிவேன். உன் கழுத்திலும் மணம்கமழ் தாமரை மலர்கள். எப்படிப்பார்த்தாலும் நீ தாமரையின் மொத்த உரு. உன்னை மனமார நமஸ்கரிக்கிறேன் கிருஷ்ணா.

यथा हृषीकेश खलेन देवकी कंसेने रुद्धातिचिरं शुचार्पिता ।
विमोचिताहं च सहात्मजा विभो त्वयैव नाथेन मुहुर्विपद्गणात् ॥६॥

6.Yadha hrishikesa, khalena Devaki kamsena rudhathichiram sucharpitha,
Viomochithaham cha sahathmaja Vibho thwayaiva nadhena muhurvipadganath.

''கிருஷ்ணா, ஹ்ரிஷிகேசா, எதைச்சொல்வேன் எதை விடுவேன். நீ செய்த உதவிகள் எக் காலத்திலும் மறக்கமுடியாதவை அல்லவா. நீ உன் தாய் தேவகியை, தந்தை வசுதேவரை மட்டுமா கம்சனின் சிறையிலிருந்து மீட்டவன்.? என்னையும் என் குழந்தைகளையும் அல்லவா இடைவிடாத, எண்ணற்ற துயர துன்ப கொடுமையின் சிறைகளிலிருந்து மீட்டவன். மஹாத்மா, பரமாத்மா, உன்னை தஞ்சம் அடைந்தல்லவோ நாங்கள் ஜீவிக்கிறோம்.



தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...