Tuesday, February 13, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J.K. SIVAN

6. மஹரிஷி ருருவும் துந்துபா சர்ப்பமும்

பூலோகத்தில் ரிஷி வைசம்பாயனரால் பாண்டவ வம்சத்தின் வாரிசான ஜனமேஜயனுக்கு பாரதம் எடுத்துச் சொல்லப்படுகிறது. பாரதம் ஒரு பக்தி பூர்வ புனித நூல். அதில் ஒரு வரி, ஸ்லோகத்தில் ஒரு அடி, படித்தால் கூட செய்த பாபங்கள் விலகும் என்கிறார் உக்ரஸ்ரவர். விவரமாக பாரதத்தை வர்ணிக்கிறார்.

ஒரு இடத்தில் பிருகு மகரிஷியைப் பற்றி சொல்லும்போது ''பிரம்மா, பிருகு மகரிஷியை வருணன் நிகழ்த்திய யாக அக்னியிலிருந்து தோற்றுவித்தார். பிருகுவின் மகன் ச்யவனன், அவனது மகன் பிரமாதி. அவனுக்கு ஒரு பிள்ளை ருரு. ருருவின் மகன் சுனகன் என்று பிருகு வம்சாவளியை பற்றி சொல்கிறார்.

உக்ரஸ்ரவர் நைமிசாரண்ய வனத்தில் எண்ணற்ற ரிஷிகள் இடையே, சௌநகரிடம் நான் சொன்னவர்கள் உங்கள் பிருகு வம்ச முன்னோர்கள். அனைவருமே வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள். பிருகுவின் மனைவி பௌலோமா. ஒரு சமயம் ராக்ஷசன் ஒருவன் அவளைக் கடத்திக்கொண்டு போனபோது அவள் வயிற்றில் இருந்த சயவனர் வெளி வந்து அந்த ராக்ஷசனை அக்னிக்கு இரையாக்குகிறார். பிருகு நடந்ததை அறிகிறார். பௌலோமாவின் கண்ணீர் ஆறாகப் பெருகி அதுவே வதுஸாரா என்கிற நதியாகிறது. அது தான் ச்யவனரின் ஆஸ்ரமத்தை ஒட்டி ஓடுகிறது.

உங்கள் முன்னோர் ருரு பற்றியும் ஒரு கதை சொல்கிறேன். விஸ்வாவசு என்ற ஒரு கந்தர்வ ராஜாவும் மேனகையும் இணைந்ததில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை ஸ்தூலகேசர் என்கிற ரிஷியின் ஆஸ்ரமம் அருகில் விட்டுவிடுகின்றனர். ரிஷி அந்த பெண்ணுக்கு ப்ரமத்வரா என்ற பெயர் சூட்டி அவளை ஒரு சிறந்த பெண்ணாக வளர்க்கிறார். ஒருநாள் மகரிஷி ருரு என்பவர் அந்தப்பக்கமாக வந்தவர் அந்தப் பெண்ணை ஆஸ்ரமத்தில் கண்டு அவள் அழகில் மயங்கி மையல் கொண்டு அவளை மனைவியாக்கிக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். பெண்ணை வளர்த்த ரிஷி ஸ்தூலகேசர் இதற்கு அனுமதிக்கிறார். பாவம் மற்ற சிறுமியரோடு விளையாடும்போது ஒரு நாள் அந்த பெண் பிரமத்வராவை ஒரு பாம்பு கடித்துவிடுகிறது. இறந்து போகிறாள். அந்த பெண்ணின் மேல் காதல் கொண்டிருந்த ரிஷி ருரு மனம் உடைந்து எம தர்மராஜனை நோக்கி தவமிருந்து அந்த பெண் உயிரை மீட்கிறார்.

அந்த பெண்ணை உயிர்ப்பிக்கும் முன்பு எமதர்மன் ஒரு நிபந்தனை இடுகிறான்.

''ஒரு கண்டிஷன். அந்த பெண்ணுக்கு உம்முடையவயதில் பாதியைத் தர ஒப்புக்கொண்டால் பிழைப்பாள். உயிர் தரமுடியும்''

''ஆஹா அப்படியே'' என்று ஒப்புக்கொண்ட ரிஷி ருருவுக்கு பாம்புகள் மீது அன்றிலிருந்து ஆத்திரம். எந்த பாம்பையும் கண்ட வுடன் கொன்றுவிடுவார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் ஒரு காட்டில் துந்துபா எனும் வகை பாம்பின் குடும்பத்தை ரிஷி ருரு காண்கிறார். கொல்ல முயலும்போது துந்துபா கேட்கிறது

''மகரிஷி, சற்று பொறுங்கள். நான் என்ன தீங்கு செய்தேன் உமக்கு? யாரோ கடித்தால் அதற்கு எங்களுக்கு மரண தண்டனையா. நாங்கள் கடிக்கும் பாம்புகள் வகை அல்ல. விஷமற்றவர்கள் '' என்கிறது.

''என் மனைவியை ஒரு பாம்பு கடித்துவிட்டது. அவளுக்கு என் உயிரில் பாதியைக் கொடுத்து நான் மீட்டவன். ஆகவே எனக்கு பாம்புகள் மொத்தத்தில் எதிரி. அவைகளைக் கொல்லாமல் விட மாட்டேன்.''

'''ரொம்ப சரி ருரு. ஆனால் குற்றம் செய்தவர்களை அல்லவோ தண்டிக்கவேண்டும்?. நானும் உங்கள் மாதிரி ஒரு ரிஷி யாக இருந்தவன். என் பெயர் சஹஸ்ரபாதன். எனக்கு ஒரு நண்பன் ககாமா என்று. அவன் ஒரு அக்னிஹோத்ரி. ஒருநாள் அவன் யாகம் செய்யும்போது ஒரு நீண்ட தர்பைப் புல்லை எடுத்து ''பாம்பு பாம்பு'' என்று அவன் மீது போட்டேன். யாகம் கலைந்து மயக்கமானான். அவனுக்கு சிச்ருஷை செய்து மன்னிப்பு கேட்டேன். நான் அவன் மீது போட்டது வெறும் புல் தான் பாம்பல்ல. கடிக்காது. விளையாட்டில் அவ்வாறு செய்து விட்டேன் என்றதற்கு ''நீ கடிக்காத ஒரு வகை பாம்பாவாய் '' என்று சாபமிட்டான்.

''நண்பா நான் செய்தது தவறு தான். தயவு செய்து என்னை மன்னித்து எனக்கு சாப விமோசனம் கொடு'' என்றதற்கு அவன் ''ஒரு காலத்தில் ரிஷி ருரு என்று ஒருவர் உன்னை சந்திப்பார். அப்போது உனக்கு இந்த பழைய நினைவு வந்து மீண்டும் ரிஷியாவாய்'' என்று வரமளித்தான்.

எப்போது அந்த ரிஷி ருரு வருவாரோ, எப்போது நான் மீள்வேனோ.'' இது என் கதை என்றது துந்துபா.

''நான் தான் அந்த ரிஷி ருரு'' என்றதும் துந்துபா சந்தோஷத்தில் துள்ளிக் குத்தித்தது. ருருவைச் சந்தித்ததால் துந்துபா மீண்டும் சஹாஸ்ரபாத ரிஷியானது.

ரிஷி ருரு அப்போது அதனிடம் ''ஜனமேஜய மகாராஜா ஒரு சர்ப்ப ஒழிப்பு யக்னம் பண்ணுவார். அதில் நீயும் கலந்து கொள்.''என்கிறார்.

யார் ஜனமேஜயன்? எதற்காக ஜனமேஜயன் பாம்புகளை ஒழிக்க யாகம் பண்ண வேண்டும்? யார் அஸ்திகர் என்பவர், எதற்காக அந்த ரிஷி பாம்புகளை தீயிலிருந்து மீட்க வேண்டும்? என்று சில ரிஷிகள் கேட்க உக்ரஸ்ரவர் மேலே தொடர்கிறார். (CONTINUED)



MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES IS AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG. RECEIPT WILL BE ISSUED FOR DONATION

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...