Monday, February 19, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்.    J.K. SIVAN 

                   
 காஸ்யபரின் குழந்தைகள்                                                                    

நான் சொல்லும் இந்த கதைகள் நைமிசாரண்யத்தில் எண்ணற்ற ரிஷிகள் கூடியிருக்கும் சபையில் உக்ரஸ்வரர் சில ரிஷிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக வருகிறது என்று கூறியதை நினைவு கொண்டு தொடர்வோம்.  

அந்த கால சம்பவங்கள் நமது கற்பனைக்கெட்டாத அதிசயங்களாக இருப்பதை அப்படியே கேட்டு, படித்து மகிழ்வதோடு நிறுத்திக்கொண்டு மேற்கொண்டு தொடரவேண்டும்.  காரண காரியங்களை அலசி தான் நம்புவது என்று எண்ணம் கொண்டால் மஹாபாரதத்தில் மேலே நகரமுடியாது. ஜாக்கிரதை.

 அந்த  பொற்காலத்தில்   பிரஜாபதிக்கு  இரண்டு பெண்கள்  இருந்தனர். ரெண்டு பேருமே அழகிகள் .  கத்ரு,  வினதா   என்ற பெயர்கள் அவர்களுக்கு.  அவர்களை காச்யப  ரிஷி  மணந்து கொண்டார்.  அவர்களது  சேவையில் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டிய வரத்தை அளித்தார்.

'' கத்ரு  உனக்கு  என்ன  வேண்டுமோ கேள்''

''சுவாமி,  எனக்கு  மிகவும் அழகிய சக்தி வாய்ந்த  ஆயிரம்  நாகங்கள்  குழந்தைகளாக  பிறக்கவேண்டும் ''

''இதென்ன  விபரீத  ஆசை?   பரவாயில்லை.  அப்படியே  ஆகுக''

''வினதா,   உனக்கென்னம்மா விருப்பம்.  அதைச் சொல். நிறைவேற்றுகிறேன்.''  என்றார்  காச்யபர்.

'எனக்கு  இரு  பிள்ளைகள் வேண்டும்.  பலத்தில், அழகில் வீரத்தில் சக்தியில்  கத்ருவின்  புத்ரர்களை விட  அதிகமாகவே''  என்றாள்  வினதா.

''ததாஸ்து''  என்று  வரமளித்த  காச்யபர்  காட்டுக்குத் தவம் செய்ய சென்றார்.  500 வருஷங்கள்  ஓடியது. கத்ருவின் மக்களாக  ஆயிரம் முட்டைகளிலிருந்து  நாகங்கள்  ஜனித்தன. கத்ரு  மகிழ்ந்தாள்.  வினதாவுக்கு குழந்தைகள்  பிறக்க வில்லை.  தனது  வசம் இருந்த  இரு முட்டைகளில் ஒன்றை  உடைத்தாள். உள்ளே  பாதி உருவாகியிருந்த  ஒரு  குழந்தை பேசியது:

''நான்  உருவாகுமுன்  ஏன்  அவசரப்பட்டாய்?  அதன் பயனாக   உனக்கு  சாபம்  இடுகிறேன்.    நீ  ஒரு  அடிமையாவாய்.   அந்த  இன்னொரு  முட்டையையாவது ஜாக்ரதையாக  வைத்துக்கொள்.  500 வருஷம் பொறு.  அதிலிருந்து நீ  கேட்டபடி ஒரு சர்வ சக்தி  உள்ள  அழகிய  பலம் மிக்க புத்திரன் பிறப்பான்.  அவன்  உன்னை  அடிமைத் தளையிலிருந்து  விடுவிப்பான்.  இனியாவது அவசரம் வேண்டாம்.'' என்றுரைத்த   உடைந்த  முட்டையிலிருந்து வெளிப்பட்ட  பாதி குழந்தை  விண்ணுலகம் பறந்தது. அது தான்  அருணன்.  சூரியனின்  தேர்ப்பாகன்.  500 வருஷங்கள் கழிந்ததும்  வினதாவின் மகனாக  பக்ஷி ராஜனான  சர்ப்பங்களின்  எதிரியான  கருடன்  பிறந்தான்.

சகோதரிகள்  மகிழ்ந்தனர்.  காலம் ஓடியது.  விநதையின்  குழந்தை கருடனை  எதிரியகாகத்தான்  கத்ருவின் குழந்தைகளான  நாகங்கள்  பாவித்தன.  

ஒருநாள்  அவர்கள் வசித்த ஆஸ்ரமத்தின் பக்கமாக  உச்சைஸ்ரவஸ்   என்கிற  இந்திரனின் குதிரை சென்றதைக் கண்டு கத்ருவும் வினதாவும் களித்தனர்.  அது  தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது  தோன்றிய  அதிசயப்  புரவி.''

'' மகரிஷி உக்ரஸ்ரவரே, மிக அழகாகச்  சொல்கிறீர்களே. எங்களுக்கு  பாற்கடல்  எதற்காக  கடையப்பட்டது?. அந்த  அழகிய  குதிரை  தோன்றிய விவரம்  எல்லாவற்றையும்  கூட  தெரிவிக்க வேண்டும் '' என்றார்  சௌனகர்.  (அவர்  விடாமல்  தொடர்ந்து  கேள்விகள் கேட்பவர். அவர் அப்படியெல்லாம்  விடாமல்  கேட்பதால் தான்  நமக்கு  கதைகள்  கிடைக்கின்றன. )

சௌடி (உக்ரஸ்ரவரின் இன்னொரு பெயர்)  தொண்டையைக் கனைத்துக்கொண்டு  ஆரம்பித்தார்.

'' மேரு  என்பது  ஒரு  கண்ணைப்பறிக்கும்  வானை முட்டும் பெரிய  மலை. அதன் மேல் சூரியனின் கதிர்கள்  பதிந்து பொன்னிறமாக ஒளி  வீசும்.  அதன் குளுமை, அழகு, வசதியில்  மயங்கி  தேவர்கள்,  கந்தர்வர்கள் அதில் வசித்தனர். சாதாரணர்கள்,  பாபிகள்  அதன் அருகே  கூட  செல்லமுடியாது. தேவர்கள்  அதன் மீது அமர்ந்து தவம் செய்து  அமிர்தம்  கிடைக்க வேண்டினர். பிரம்மா  அவர்கள்  கோரிக்கையை  ஸ்ரீமன்  நாராயணனிடம்  வைக்க, அவர்  ''தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து  பாற்கடலைக் கடையட்டும். அவர்கள்  வேண்டித் தவம் செய்யும் அமிர்தம் கிடைக்கும் '' என்றார்.  தேவர்கள் அசுரர்கள்  மகிழ்ந்து ஒன்று சேர்ந்து  பாற்கடலைக் கடைய  ஏற்பாடுகள் நடந்தது.

மந்தர  மலை  என்று ஒரு பெரிய  உயர்ந்த மலை. 11000  யோசனை உயரம், அதே  அளவு  கீழே  ஆழமும் கூட.   அதன் மீது எண்ணற்ற  மூலிகைகள். அடர்ந்த  கனிவகை மரங்கள்.  அப்சரஸ்கள்,  கின்னரர்கள், பட்சிகள் இனம், மிருகங்கள் நிறைந்து  வாழும் மலை.  அதை  மத்தாக  உபயோகிக்க  முடிவெடுத்தனர்.   ஆனால் அதை  நகர்த்த முடியாததால்  மீண்டும்  நாராயணன், பிரம்மா  IRUVARIDAMUM சரணடைந்து  ''எப்படியாவது  உதவுங்கள்''  என்று  கேட்டனர்.

நாராயணன்  புன்னகைத்து,  தான்  அமர்ந்திருந்த  அனந்தன்  என்கிற நாகத்திடம்  '' நீ  சென்று  உதவு''  என்று பனிக்க  அது மந்திரமலையை அதன்  காடு மரங்களோடு பாற்கடலை நோக்கி  நகர்த்தியது.

எல்லோரும்  பாற்கடலை நெருங்கி  ''க்ஷீர  சாகரா, உன் மீது  இந்த  மந்திரமலையை  நிறுத்தி கடைந்து அமிர்தம்  கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்க''  பாற்கடல் பதில் சொன்னது.

''என்னைக் கடைந்து  அமிர்தம்  நீங்கள்  எடுக்கலாம்.   ஆனால்  எனக்கும்  அதில்  பங்குண்டு.  மந்திர மலையை பாற்கடலில்  நிலை  நிறுத்த  யோசித்து ஆமைகளின்  தலைவனாக  அந்த  நாராயணனே முன்வந்து  மந்திரமலையை  தன் முதுகில் சுமந்தான்.

எப்படி  எதைவைத்து  மந்திரமலையால் பாற்கடலை  கடைவது?   யோசித்து கடைசியில்  வாசுகி தனது பலம் வாய்ந்த  நீண்ட  உடலையே  கடையும்  கயிறாக  அளிக்க  முன் வந்தது.  வாசுகி   தனது தலையை  அசுரர்கள் பக்கமும்  வாலை  தேவர்கள் பக்கமுமாக  வைத்து  மந்திரமலையை  தனது உடலால் பலமாக  சுற்றிக்  கொண்டது.  தேவாசுரர்கள்  மந்திரமலையை வாசுகியைச் சுற்றிக்  கட்டி  பாற்கடலைக் கடைந்தனர். அவ்வப்போது  வாசுகி திணறியபோதெல்லாம் அதன்  வாயிலிருந்து   மின்னல் வீசும் கரு மேகங்களும்  அக்னியும்   வெளிப்பட்டது.  மேகத்திலிருந்து பொழிந்த மழை நீர்  களைப்படைந்த  தேவர்களுக்கு  புத்துணர்ச்சி அளித்தது. மலை  சுற்றியபோது அதன் மீதிருந்த  மரங்களின் இனிய நறுமண மலர்கள் எங்கும் அவர்கள்  மேல் மலர் மாரியாக பெய்து உற்சாகம் ஊட்டியது.  மலை  கடைவதால்  பாற்கடலின்  அடியே  இருந்த எண்ணற்ற  மிருகங்கள் ராக்ஷசர்கள்  நசுங்கி மாண்டனர்.  மரங்கள் சாய்ந்தன.  ஒன்றோடொன்று  உராய்ந்து  காட்டுத்தீ  பரவியது.  தீயை  மழை  அணைத்தது.  மூலிகைகள்  பாற்கடல் நீரோடு கலந்து  அவற்றைப் பருகிய தேவர்களுக்கு  சக்தியளித்தது.  பல  காலம்  சென்றது.  அமிர்தம்  கிடைக்கவில்லை.  களைத்த  தேவர்கள்  நாராயணனை வேண்ட  ''தேவர்களே  உங்களுக்கு  தேவையான  சக்தி அளிக்கிறேன் . மந்திரமலையை  சரியாக நிறுத்தி  மீண்டும் பாற்கடலை கடையுங்கள். வெற்றி பெறுவீர்கள் ''

தேவாசுரர்கள்  திருப்பாற்கடலை கடைந்ததையும் அதில் தோன்றியவை பற்றியும் அடுத்த தொடரில் அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...