Sunday, February 25, 2018

SURDAS

                                      
எப்படிச் சொல்வேனடி...... J.K. SIVAN

உணர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்தால் பேச்சு வராது என்பது நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவமானது. புரிகிறது எனக்கு. வாய் பேசவரவில்லையா, வார்த்தைகளே மறந்து போய்விட்டதா? மற்ற நேரத்தில் எல்லாம் பொட்டுக்கூடை பேச்சு பேசும் வாய் அந்த பயல் கிருஷ்ணனைப் பற்றி பேச நினைக்கும்போது மட்டும் ஏன் இப்படி மக்கர் செயகிறது?
என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை அவனது பெருமைகளை அருமைகளை, அதீத செயல்களை நினைத்தால் இந்த மாபெருங் கருணா சமுத்திரத்தை எந்த வாய்ச்சொற்களால் அளந்து சொல்ல முடியும் என்ற மலைப்பா?
அந்த பயல் சிறு குழந்தைதானே, சுலபத்தில் அவனை விஷமூட்டி கொன்றுவிடலாம். அது ஒரு சுண்டைக்காய் வேலை என்று திமிரோடு வந்த பூதகிக்கு , ''இந்தா எனக்கு பால் ஊட்ட வந்த ''தாயென வந்த பேயே, உனக்கு என் பரிசு என்று அவள் உயிரையே குடித்துவிட்டு பொக்கை வாய் சிரிப்பை காட்டியதை எந்த வார்த்தைகளால் விவரிப்பேன்?
சர்வ வேதங்களும் சகல உபநிஷதங்களும் போற்றும் அவனை முழுமையாக விவரிக்க திணறும்போது, ஒரு சாதாரண கோபி, யசோதா எனும் தாய் ''இனி எப்படி வெளியே சென்று விஷமம் பண்ணுவாய் என பார்க்கிறேன்'' என்று அவன் கண்களில் நீர் ததும்ப அவனை ஒரு சிறு கயிற்றால் வயிற்றில் கட்டினதை எப்படி விவரிப்பேன்? ''அதிசயம்'' என்று ஒரு வார்த்தைக்கு மேல் சொல்ல வழியில்லையே. ,
பல காலம் கம்சனால் சிறையில் வாடிய உக்கிரசேனனை, கம்சனைக் கொன்று மதுராபுரியை மீட்டு, மீண்டும் ராஜாவாக்கினாயே, எப்படி? பவ்யமாக மரியாதையோடு, வணங்கி, உன் தலையைக் குனிந்து ''நீங்களே மீண்டும் எம் அரசனாக ஆள வேண்டும்'' என்றாயே அதை எந்த வார்த்தையால் விவரிப்பேன்? மேலே சொன்னதை மட்டுமே தானே திருப்பி திருப்பி சொல்ல முடிகிறது? அது அந்த உக்கிரசேனனின் உணர்ச்சியையோ, உன் கருணையையோ விவரித்ததாக ஆகுமா?
சரி அதை விடுவோம். ஜராசந்தன் பல ராஜாக்களை வென்று அடிமைப்படுத்தி சிறையில் அடைத்து வைத்து வாட்டினபோது, அவனை பீமனை விட்டு கொல்லச்செய்து, அந்த ராஜாக்களை மீட்டாயே அப்போது அவர்கள் உன்னை வாழ்த்தினதை எத்தனை வார்த்தைகளில், எந்தெந்த வார்த்தைகளில் சொல்வது, யாரால் முடியும்?
கிருஷ்ணனாக நீ சொன்னதை, செய்ததை என்னால் வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ராமனாக நீ செய்ததையாவது சொல்வோம் என்றால், ஒரு சின்ன சம்பவத்தை கூட சொல்ல முடியவில்லை. உதாரணமாக தனது ரிஷி கணவர் கௌதமர் இட்ட சாபத்தில் பல வருஷங்கள் கல்லாக மாறி வாடிய அஹல்யாவை ஒரு நொடியில் உன் காலடியால் மீண்டும் உயிர்பித்தாயே அவள் அப்போது கடல்மடையாக கொட்டிய வார்த்தைகளை வெறும் ''தேங்க்ஸ்'' என்ற வார்த்தையால் சொன்னால் சரியா? முறையா? அடுக்குமா? நியாயமா?
எப்போதோ நாராயணனாக கஜேந்திரனை முதலை வாயிலிருந்து கணநேரத்தில் மீட்டாயே அதையாவது விவரிக்கலாமென்றால் அது கூடமுடியவில்லையே கிருஷ்ணா. கஜேந்த்ரனின் உணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் அவனை விட பெரியதாக இருக்கும் போல் இருக்கிறதே. நான் எங்கே போவேன்?
விடாத மழையில் அந்த தொத்தல் குடிசை காற்றில் பறந்து விழுந்தபோது உடனே ஒரு கூரை வேய்ந்தாயே, அப்போது அந்த ஏழை பக்தர் நாமதேவர் வாய் பிளந்து ''பாண்டுரங்காஆஆஆ'' என்று அடிவயிற்றிலிருந்து ஒலித்தாரே , அதன் பின் ஒளிந்துகொண்டிருந்த உணர்ச்சைகளை எந்த வார்த்தைகளால் விவரிப்பேன் சொல் ?
மேலே சொன்னதெல்லாம் நான் எழுப்பும் கேள்விகள் அல்லவே அல்ல, கண்ணில்லாத சூர்தாஸ் அருமையான வ்ராஜ் பாஸி எனும் பழைய வட மொழியில் எப்போது கேட்கிறார் தெரியுமா, அது எந்த வார்த்தைகளோ, என் மனதில் நிரம்பி வழியும் என் பிரார்த்தனைகளை புரிந்து ஏற்றுக்கொள் கிருஷ்ணா. என் வார்த்தைகள் அவ்வளவு தான் என்கிறார்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...