Wednesday, February 21, 2018

AINDHAM VEDHAM 9

ஐந்தாம் வேதம் - J.K. SIVAN
9. கத்ருவும் வினதாவும்
சென்ற அத்யாயத்தில் தேவர்களையும் அசுரர்களையும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை கடைந்துகொண்டிருக்கும் போது பிரிந்தோம் அல்லவா. அவர்கள் இன்னும் விடாமல் கடைந்தார்கள். சிறிது காலம் சென்று ஆயிரம் கதிர்கள் கொண்ட சந்திரன் பாற்கடலிலிருந்து தோன்றினான். வெண்மையாய் கண்ணைப் பறிக்கும் ஆடை தரித்து மஹாலக்ஷ்மி தோன்றினாள். அதற்குப் பின்னர் உச்சைஸ்ரவஸ் என்ற வெண் குதிரை. அதை தேவர்கள் தலைவன் இந்திரனுக்கு பரிசளித்தார்கள். மேலும் கடைந்ததில் ஜாஜ்வல்யமான கௌஸ்துபம் வெளி வந்தது. ஸ்ரீமந் நாராயணனுக்கு அதை அணிவித்தனர். மேலும் கடைந்தனர். மெதுவாக தன்வந்தரி தலை தூக்கினார். அவர் கையில் வெண்மையான அமிர்த கலசம்.
''ஆஹா ஓஹோ என்று பெருங்கூச்சல். எங்களுக்கே எங்களுக்கே'' என்று தேவர்களும் அசுரர்களும் உற்சாகமாக போட்டியிட்டனர்.
இந்த கூச்சலின் நடுவே வெள்ளை வெளேரென்று பெரிய உடலுடன் அழகான, அளவான, கண்ணைக் கூசும் வெண்மையுடன், இரண்டு தந்தங்களோடு, ஐராவதம் என்கிற பெரிய யானை வெளியே வந்தது.
வஜ்ராயுதம் தாங்கிய இந்திரன் அதை தனதாக்கிக் கொண்டான். ஆசை யாரை விட்டது? தேவர்களும் அசுரர்களும் மேலும் வாசுகியைப் பிழிந்து மந்திரமலையை சுற்றிக் கடையவே ஒரு மூச்சுத் திணறும் நெடியுடன் ஆலஹால விஷம் தோன்றியது. உலகையே விழுங்கும் அளவிற்கு அது விரைவில் பரவி அக்னிஜ்வாலை வீசியது. மூவுலகங்களும் அதிர்ந்தன. எல்லோரும் ஓடினார்கள். பிரம்மாவுக்கு ஒருவரால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்று தோன்ற அவரிடம் ஓடினார்.
கைலாயத்தில் தவத்தில் இருந்த சிவனைக் கண்டு மெதுவாக அவர் மௌனம் கலைய காத்திருந்த பிரம்மா அவசர நிலையை எடுத்துரைத்தார். இதோ வருகிறேன் என்று சொன்ன சிவன் அங்கே சென்று பாற்கடலில் விளைந்த ஆலஹால விஷத்தை அப்படியே விழுங்கினார். பார்வதி தேவி அதை அவர் உடலில் அது செல்லாதவாறு அவரது கழுத்திலேயே அதை நிறுத்த அவர் அன்று முதல் நீலகண்டனானார். யாருக்கோ அமிர்தம் கிடைக்க சிவன் விஷத்தை ஏற்றுக்கொண்டார்.
அங்கே பாற்கடல் பக்கத்தில் ஏக ரகளை. லக்ஷ்மி யாருக்கு அம்ருதம் யாருக்கு என்று.
நிலைமை சமாளிக்க முடியாத போதெல்லாம் சமய சஞ்சீவி விஷ்ணு தானே. அவரிடம் ஓடி பிரம்மா முறையிட அவர் மோகினியாக ஒரு மாயத் தோற்றம் கொண்டு, தானவர்களையும் தைத்யர்களையும் மயக்கி அவர்களுக்குத் தானே அமிர்த விநியோகம் பண்ணுவதாக பொறுப்பேற்று அமிர்த கலசத்தை அந்த மோகினி பெற்றுக்கொண்டு, அமிர்தம் முழுதும் தேவர்களைச் சேரும்படியாக செய்தார்.
தேவர்களிடையே ராகு என்பவன் அவர்களில் ஒருவனாக நடித்து அமிர்தம் அவனுக்கும் கிடைத்து விழுங்கினான். இதை சூர்யனும் சந்திரனும் கண்டுபிடித்துவிட்டு நாராயணனிடம் சொல்ல, அவர் சுதர்சன சக்ரத்தால் ராகுவின் தலையைத் துண்டித்து அமிர்தம் அவன் உடலில் சேராதவாறு செய்ததால் அவன் உடல் ஒரு பெரிய மலையாக பூமியில் விழுந்தது. அவன் அந்த ஆத்திரத்தில் சூரியனையும் சந்திரனையும் அன்று முதல் இன்றும் சமயம் கிடைத்தபோதெல்லாம் விழுங்கி விடுவதைத் தான் சூரிய சந்திர கிரஹணம் என்று அறிகிறோம்.
இவ்வாறு தேவாசுரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி அமிர்தத்துக்காக உயிரிழந்தனர்.
மந்திரமலையை மீண்டும் அதன் இடத்திலேயே கொண்டு பதித்தனர். அவஸ்தைப் பட்ட வாசுகி விடுபட்டது. எஞ்சிய தேவர்களும் அசுரர்களும் தத்தம் இடம் திரும்பினார்கள்.
''என்ன திருப்தியா ?''என்று கதை சொன்ன சௌடி (உக்ரஸ்ரவர்) சிரித்துக்கொண்டே கேட்டார்.
இதற்கிடையில் உச்சைஸ்ரவஸ் என்கிற குதிரையை கத்ருவும் வினதாவும் பார்த்தார்கள் அல்லவா? கத்ரு தனது சகோதரி வினதாவிடம் ஒரு கேள்வி கேட்டாள்
''உச்சைஸ்ரவஸ் என்கிற குதிரையைப் பார்த்தாயே அது என்ன நிறம்?'' என்று கேட்டாள் .
''ஏன், அதன் உடம்பு முழுதும் வெள்ளை நிறம் தானே பார்த்தோம்?'' என்றாள் வினதா.
'உளறாதே. அதன் வால் அட்டை கருப்பு'.
''நீ சரியாகவே பார்க்காதவள். முற்றிலும் வெள்ளையானது அந்த குதிரை'' என்றாள் வினதா. வாக்கு வாதம் முற்றியது இருவருக்கும். ''நான் சொன்னது சரியானால் நீ எனக்கு அடிமை. எதற்கும் நாளை அந்த குதிரையைச் சென்று பார்ப்போம். அப்பறம் தான் நமது ஒப்பந்தம் காரிய சித்தி பெறும் '' -- கத்ரு .
அவளுக்கு வினதாவின் அடிமையாக விருப்பமில்லை. தனது மகன்களான ஆயிரம் நாகங்களை கூப்பிட்டு நீங்கள் கருநிறம் கொண்டு உச்சைஸ்ரவசின் கரிய நிற வாலாக மாறி தொங்குங்கள் . வால் கருப்பு என்று அறிந்து வினதா தோற்றுப்போகட்டும். அவள் என் அடிமையாகட்டும் '' என்றாள் கத்ரு.
சர்ப்பங்கள் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டன. கத்ரு கோபங்கொண்டு '
' நீங்கள் அனைவருமே ஜனமேஜயனின் சர்ப்ப ஒழிப்பு யாகத்தில் தீக்கிரையாவீர்கள்'' என்று சாபமிட்டாள்.
கொடிய விஷ நாகங்கள் அழிவதில் பிரமனுக்கு மகிழ்ச்சிதான். கத்ருவின் சாபம் பலிக்கவேண்டும் என்று விரும்பினான்.
''மகரிஷி, மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விஷயங்கள். மேலே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.'' என்றார் சௌனக ரிஷி. சௌடி தொடர்கிறார்:
திட்டமிட்டவாறே, மறுநாள் வினதாவும் கத்ருவும் உச்சைஸ்ரவசைக் காண பறந்து சென்றார்கள். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. உச்சஸ்ரவசின் வால் கருநிறமாக காணப்பட்டது. ஆச்சர்யப்பட்ட வினதா கத்ருவின் அடிமையானாள்.
இதற்கிடையில், தக்க நேரத்தில் வினதாவிடம் இருந்த இரண்டாவது முட்டையிலிருந்து கருடன் உருவானான். மிக்க பலத்தோடும், வீர்ய கம்பீரத்தோடும் , சக்தியோடும், சூரிய ஒளியுடன் வெளியே வந்தான். ஆகாயத்தில் பறந்த அவனைக்கண்டு எல்லா ஜந்துக்களும் நடுங்கின. அக்னியாகிய விபவாசனிடம் அடைக்கலம் நாடின.
விபவாசன் சிரித்தான். அக்னிப் பிழம்பல்ல அது. கருடன். காஸ்யப ரிஷியின் பிள்ளை. வினதாவின் மகன். சர்ப்பங்களை கொன்று தீர்க்கும் சக்திமான்.
கருடன் அருணனைச் சுமந்து கொண்டு தன் தாய் வினதா இருக்குமிடம் வந்தான். அப்போது சூரியன் தனது தீக்கதிர்களால் உலகைச் சுட்டெரிக்க தீர்மானித்திருந்தான்.
''மகரிஷி உக்ரஸ்ரவரே, எதற்காக சூரியன் உலகைக் சுட்டெரிக்க எண்ணினான்?'' என்று சௌனகர் அடுத்த கேள்விக்கணையை தொடுத்தார். இதற்குப் பதிலாக என்ன புதிதாக ஒரு கதையை சௌடி சொன்னார். அதை அறிய கொஞ்சம் காத்திருப்போம்.
MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES IS AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG. RECEIPT WILL BE ISSUED FOR DONATION

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...