Friday, February 16, 2018

flattery

புகழ்ச்சி ரொம்ப பிடிக்கும். J.K. SIVAN

உங்களுக்கு யாரை முதலில் பிடிக்கும்?
நீங்கள் என்ன பதில் சொன்னாலும் உங்களுக்கு உங்களைத்தான் முதலில் பிடிக்கும். எந்த போட்டோவில் நீங்கள் இருந்தாலும் அந்த போட்டோவில் முதலில் நீங்கள் பார்ப்பது உங்களைத்தான். பத்திரிகையில் மற்றவர் பேர் வந்தாலும் உங்கள் பேரைத்தான் முதலில் தேடுவீர்கள். உங்களை பற்றிய செயதிகளைத்தான் கண் முதலில் தேடும்.

யாராவது எப்போதும் தன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காலத்தில் மட்டும் அல்ல ரிஷிகள் காலத்திலேயே உண்டு. தன்னைப் பற்றிய புகழ்ச்சியை பெறுவதற்கு யாரும் பெரிய மனிதர்களாகவோ, பணக்காரர்களாகவோ தான் இருக்கவேண்டும் என்று நியதி இல்லை. எந்த வர்கத்திலும் தன்னை அண்டி இருப்பவர்கள் இப்படி செய்யவேண்டும் எதிர்பார்க்கின்றவர்கள் எங்குமே உண்டு.

''அய்யா மாதிரி உண்டுங்களா? அய்யா சொன்னா சொன்னதுதான். ஆணி அடிச்சது மாறில்ல இருக்குது.'' ஒருவேளை சாப்பாடோ, அல்லது தேவையான ஐந்து ரூபாயோ கூட அண்டியவனை இப்படி பேச வைக்கிறது.

''உங்களைபோல யாருன்னா இப்படி எல்லாம் செய்வா? குறிப்பறிந்து ஒவ்வொண்ணையும் பண்றதிலே உங்களுக்கு நிகர் நீங்க ளே தான். உங்கண்ணாவும் இருக்காரே....! புதுப்புடவையை மனைவி வாங்கிக்கொண்டபோது வாய் மூடி பணம் கொடுத்த கணவனிடம் அவளை இப்படி பேச செய்யும்.

''இந்த ராகத்தை அண்ணா இன்னிக்கி பாடினதுபோல் யாரும் விஸ்தாரமா அலசி பிழிஞ்சு கொடுத்ததில்லை. முப்பது வருஷத்திலே புன்னாக வராளியை நீங்க பாடினது போல் நான் கேட்டதே இல்லை. பக்க வாத்தியம் அடுத்த கச்சேரி சான்சுக்காக வித்வானிடம் சொல்லும் வார்த்தையே இது தவிர அது பாட்டை கவனிக்காமல் வீட்டை நினைத்துக்கொண்டே வாசித்ததது தான் உண்மை.

''அம்மா உன் கை தாராளம். நேத்து கொடுத்தியே உப்புமா எங்க ஊட்டிலே எல்லாமே நல்லா துன்னுச்சுங்க. ''
ஊசிப்போன உப்புமாவை ரோட்டிலேயே கொட்டி அதைத் தின்ற நாய் கோபத்தோடு துரத்திக்கடிக்க வந்தபோதும் அதை மறந்து வேலைக்காரி பட்டு எஜமானியைப் புகழ்வது அட்வான்ஸ் 100 ரூபாய்க்காக.

இப்படி எல்லோரும் புகழ்ந்து பாடுவதை கேட்பவர்கள் மனநிலை என்ன?

ஒரு வித சந்தோஷம். உண்மையிலேயே தான் அப்படித்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வளர்ந்து ஒருநாள் அப்படியே ஆகவும் வழி உண்டு. இவர்களை முகஸ்துதி பிரியர்கள் என்று அறியலாம். ஸ்தோத்ரப்ரியர்கள் என்றும் சொல்வதுண்டு.

இதற்கு நேர் மாறாக ஒன்று இருக்கிறது.

கடவுளை ஸ்தோத்ரம் செய்வது மனம் மகிழ்ந்து. பலன் எதிர்நோக்காது இருப்பது. ஸ்தோத்ரம் இந்திரன் சந்திரன் என்றெல்லாம் இயற்கைக்கு மாறாக புகழாமல் என்றும் உண்மையானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இதை இயற்றிய மகான்கள் புராணங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி இவற்றை இயற்றியிருக்கிறார்கள். அவற்றை சொல்லும்போது அவற்றின் பொருள் உணர்ந்து நாம் உச்சரிக்கும்போது நம் மனம் இன்பமடைகிறது. பகவானின் பாரபட்ச மில்லாத அன்பு, கருணை, பாசம், பற்று எல்லாம் புரிகிறது. இகழ்வது போல் புகழ்வது போல் பாடுவது ஆச்சர்யமானது.

இர்ண்டறக்கலக்கும் மன நிலையை அளிக்கும் வண்ணம் அழுத்தமான வார்த்தைகளில் பல மகான்கள் சரணாகதி அடைந்து பாடியிருக்கிறார்கள்.


''நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ? நல்லோர்க் கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன் நான் என்செய் கேனோ? என்னுடைய
தாயே அனையாய், சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ?
சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ?.''

வள்ளலார் கெஞ்சுகிறார்.

இந்த நாய் துன்பக்கடலில் விழுந்து அல்லல் படுவது உனக்கு அழகா?
நல்லவர்களுக்கு நான் ஒன்றுமே கொடுத்ததில்லையே?
என்னிடம் ஒன்றுமே கொடுக்க இல்லையே? நீதானே அம்மா எனக்கு ! கொஞ்சம் தயவு காட்டமாட்டாயா? குழந்தை தான் நான் உனக்கு என்னை காப்பற்றவேண்டாமா? என்னை நீ பாராமுகமாக விட்டுவிட்டால் உலகம் உன்னைப் பார்த்து சிரிக்காதா?.

என்ன பக்தி பார்த்தீர்களா. இது முகஸ்துதியா? பரிபூர்ண பக்தி. நம்பிக்கை.

''தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஒறி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.''

அம்மா தான் கிடையாதே. அப்பா என்று உன்னை நம்பி உன் சந்நிதி வந்தேன். நீர் என்னடாவென்றால் வாயில்லையோ என்று சந்தேகப்படும்படி வாயே திறக்கவில்லை. உம்மை, என் மனத்தை ஒரு கோயிலாக்கி அதற்குள் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறேனே. என்னுடைய குறை உமக்கு தெரியாதோ? . திருவொற்றியூரில் உட்கார்ந்து கொண்டு தொண்டர்களுக்கு எல்லாம் அருள்பவரே என்னையும் அவர்களில் ஒன்றாக கருதி அருளவேண்டும்.

வள்ளலாரைப் பற்றி நிறைய எழுத ஒரு விருப்பம் மனதுக்குள்ளே இருந்து கொண்டே இருக்கிறது.

பக்தி சிலருக்கு ஒரு தெய்வத்திடம் மட்டும் இருக்கலாம். இஷ்ட தேவதை என்று அந்த தெய்வத்தை மட்டும் வணங்குவதால் தவறில்லை. மற்ற தெய்வங்களை தாழ்த்தியோ இகழ்ந்தோ குறை சொல்வது, தூற்றுவது, மிகப் பெரிய தவறு.

ஒரு கிராமத்தில் ஒரு மிராசுதார் சிவ பக்தர். அவரிடம் ஒரு அருமையான நம்பகமான பணியாள் . அவனிடம் அவருக்குகொஞ்சம் அதிருப்தி அவன் பெயரில் மட்டும் தான்.

''எலே உன் பேர் என்னடா?
''பெருமாளுங்க''
''சரி போ''
வெகுநாள் அவருக்கு உள்ளே இது உறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது பார்த்தாலும் ''பெருமாளு பெருமாளு;; என்று நொடிக்கொருதரம் அவன் பெயர் சொல்லிக்கூப்பிடுவது சங்கடத்தை அளிக்கவே ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு

''இந்தா பாரு, நீயி உன் பேரை மாத்திக்கிடணும். புரியுதா?''
''புரியில்லீங்களே சாமி''
''இதோ பார்ரா, உன் பேரை பெருமாளு ன்னு இல்லாம வேற பேர் மாத்தி வச்சுக்கோ எங்கறேன்?''
''எதுக்கு சாமி?''
''எனக்கு அப்போ உன்னை இன்னும் ரொம்ப பிடிக்கும் நிறைய சம்பளம் கொடுக்கணும்னு ஆசை.''
''ஊட்டிலே கேக்கறேங்க.''
''கேக்கறதுக்கு என்ன இருக்கு மாத்திக்கறேன்னு சொல்லு.''

வீட்டில் கேட்டதுக்கு ஊரில் பூசாரி கிட்ட போய் சொல்ல சொன்னார்கள். பெருமாள் ஊருக்கு போனான். பூசாரி விஷயம் கேட்டான்.

''சரி உன் பேத்தை மாத்த நிறைய செலவாகுமே. ஊரிலே அம்பது நூறு டிக்கெட்டு தேறும். சோறு போடணும் அம்புட்டு பேருக்கும். அவங்க முன்னாலே கோவில்லே உனக்கு பேர் மாத்திடறேன். கோவிலுக்கு நூறு ரூவா. எனக்கு இருநூறு ரூவா. படையலுக்கு ஊர் சாப்பாட்டுக்கு ஆயிரம் ரூவா கொண்டுவா. ஓடு''

எஜமான் கிட்ட சொன்னதும். அவருக்கு இது ஒரு பெரிய விஷயமாக படலை. பணம் கொடுத்தார். ஒருவாரம் கழித்து பெருமாள் வந்தான்.
வெகு ஆர்வமாக ''என்னடா பெருமாள் பேர் மாத்திட்டியா? ''
''ஆமாம் எஜமான்.''
'' என்னடா பேர்"?''
''பெத்த பெருமாள்''

எஜமான் அசந்து போய் உட்கார்ந்தார். ஒவ்வொருவரும் தத்தம் மனதில் எதிலும் எந்த மனிதரிலும் தன் விருப்பத்தையே காணும் அன்பு தான் நிரம்பி காண்கிறது.
+++

தன்னை பிறர் புகழ அலைபவர்கள் சில சமயம் அல்லல் படுவதுண்டு. ஒரு கதை சுவாரஸ்யமாக இருக்கிறதே கேளுங்கள்.\
காட்டு ராஜா சிங்கத்துக்கு தன்னைப்போல் மகா பலம் வாய்ந்தவன், வீரன் யாருமில்லை என்று நினைப்பு. ஒருநாள் நடந்து போகும்போது ஒரு குரங்கை எதிர்கொண்டது.

''ஏய் குரங்கே நில். நான் யார் என்று உனக்கு தெரியுமல்லவா?''
''தெரியும் ராஜா.''
''என்னைக்காட்டிலும் பலசாலி, வீரமானவன் நமது இந்த காட்டில் எவனேனும் இருக்கிறானா சொல்?''
''மகாராஜா, உங்களைக்காட்டிலும் வீராதி வீரன் பராகிரமசாலி கிடையவே கிடையாது.''
''சரி போ''

அதன் போதாத காலம் ஒரு மான் எதிர்பட்டது.
''சரி இன்று நாம் சிங்கத்தின் வயிற்றுக்குள்'' என்று பயந்தது. ஆச்சர்யவசமாக குரங்கிடம் கேட்ட அதே கேள்விக்கு மான் அளித்த பதிலில் அதன் உயிர் தப்பியது. (சிங்கத்திற்கும் பசி யில்லை போல் இருக்கிறது)

''எங்கள் அருமை சிங்க ராஜாவே உம்மை விட ஒருவருமே இந்த மாபெருங்காட்டில் பலசாலி இல்லையே . இருக்கவும் முடியாதே''என்று சொல்லி மான் படுவேகமாக ஓடி உயிர் தப்பியது.

பரம சந்தோஷத்தோடு வீர நடை போட்டு சிங்கம் மேலே சென்றபோது தான் அந்த பெண் யானையைப் பார்த்தது. அதே பழைய கேள்வி.

அந்த பெண் யானை அன்று ஏதோ அதன் கணவன் மேல் கோபமாக இருந்த சமயம் அது. கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் தும்பிக்கையை நீட்டி சிங்கத்தை வளைத்து ஒரே தூக்காக தூக்கி அருகில் இருந்த மரத்தில் துணி தோய்த்தது.

என்ன நடந்தது என்று புரிவதற்குள் சிங்கத்தால் எழுந்திருக்க கூட முடியவில்லை. யானை மேலும் தன்னை நெருங்குவதற்குள் நிலை குலைந்து நொண்டிக்கொண்டு ஓடிக்கொண்டே உடல் வலியுடன் உடைந்த எலும்புகள் எத்தனை இருக்கும் என்ற கவலைப்பட்டது.

ஆனால் அந்த சிங்கத்துக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தன்னைத்தானே கேட்டுக்கொண்டது :



'ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை யென்றால் எதற்கு இத்தனை பதட்டம் இந்த முட்டாள் யானைக்கு?''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...