Thursday, November 30, 2017

ENGAL VAMSAM:

எங்கள் வம்சம்    J.K SIVAN 

                                      பாரதி மானியம் 

என் தந்தைக்கு வயது 11 என் அம்மாவுக்கு  6 அல்லது 7 வயதோ தெரியவில்லை. எப்படியும்  10த்துக்குள் நிச்சயம்  திருமணம் நடந்தது.  அது அக்காலத்து வழக்கம். 

அந்தகாலத்தில்  சிறு குழந்தைப்  பருவத்திலேயே  திருமணம்  செய்து வைத்தார்கள்.  கணவன் 15 வயது சிறுவனாக இருந்திருக்கிறான்.   பெண்ணோ 9 வயதிலேயே  மனைவி  பதவி  அடைந்தவள்.  மருத்துவ  வசதிகள் அதிகமில்லாத காலத்தில்,  வியாதிகள்  அடையாளம்  காணாத  காலத்தில்,  பால்ய விவாகத்தால் சிசு மரணத்தால் எண்ணற்ற  இளம் பெண்கள்  விதவையாகி ,  அவர்களை  உடன்கட்டையும்  ஏற வைத்தது, கொடுமைகளுக்குள்  ராஜா. அதையெல்லாம்  இப்போது  நினைக்கவே  என்னவோ  செய்கிறதே. இதைப்பற்றி மேலே  எழுத மனமில்லை.   ஒரு சிறு பெண்குழந்தைக்கு  தனக்கு திருமணம் நடந்தது என்றால் என்ன என்று புரியும் முன்பே அவள் விதைவையும் ஆகி பலர் முன்னிலையில் கணவனின் சடலத்தோடு தானும் பற்றி எரியும் நிகழ்ச்சி... அய்யோஓஓஓஓஓ !

இந்த பழக்கம்  ஏறக்குறைய  100-130 வருஷங்கள்  முன்பு வரை இருந்தது.  அக்பர் சக்ரவர்த்தி இதை  தடுக்க எடுத்த  முயற்சி பலன் தரவில்லை.   பின்னர்  வில்லியம்  பெண்டின்க் காலத்தில்  சட்டமாகியது.  காலம் செல்லச்  செல்ல  சாரதா  சட்டமும் நிறைவேறி  பால்ய விவாகமும்  தடை  செய்யப்பட்டுள்ளது.

வைத்தியநாத பாரதி மனைவி ஜானகி  அம்மாள்  தனது  உடன்  பிறவாச்   சகோதரியாக இருந்த  ராமசாமி பாரதிமனைவி  ஞானம்மா சக கமனம் செய்துகொண்ட பின்னர்  மனம் உடைந்தாள். பிரிவு  அவளை  வாட்டி  வைத்யநாத பாரதியின்  மனைவி  ஜானகியும்  சிறிது காலத்தில்  இயற்கை  எய்தினாள்

வைத்யநாத பாரதியின்  மகன்  பரசுராம  பாரதிக்கு  அப்போது  20 வயது.  ராமநாடக  கீர்த்தனை போன்ற  தமிழ் நூல்களில்  கற்றுச்  சிறந்தார். சங்கீதமும்  கை கொடுத்தது.  ராம நாமமே  அவர்களுக்கு  வழிகாட்டி.

அந்த காலத்தில்  இத்தகைய  சிறந்த  பக்தர்கள்  யாராவது  ஒருவரை  வாழ்த்தினால்  அவர்கள்  சிறந்து வாழ்ந்தனர்.  மனமொடிந்து  சிலரை  கடினமாக  சபித்தால்  அதுவும்  பலித்தது.  பரசுராம  பாரதியை  இப்படி ஒரு சிறந்த  தூய  ராம  பக்தராக, வாக்தேவி  சக்திவாய்ந்த தெய்வமாக சாத்தனூர் கிராம மக்கள் பார்த்தனர். போற்றினர். எவருக்கு  வியாதி வந்தபோதும்,  ராமநாமம்  உச்சரித்து  துளசி ஜலத்தால், சில  சமயங்களில்  வெறுமே  கை நிறைய  மண் எடுத்து கொடுத்து  குணமாக்கியதாகச்  சொல்வார்கள்.   எந்த மாடு கன்று நோய் வாய்ப் பட்டாலும் அவரிடம்  வந்து  மந்திரித்து, குணமாகியது. இதனால்  அவர் பெயர்  பிரசித்தமாகி  பக்கத்து  ஊர்களில் இருந்தெல்லாம்  மக்கள்  திரண்டனர்.

அதிகாலையில்  காவேரி  ஸ்நானம் செய்து  நியமங்கள்  முடித்து கம்பராமாயணச் சுவடியோடு உட்கார்ந்துவிடுவார்.   ராம  பாராயணம், பூஜை.   பிறகு  உச்சி வேளையில்  போஜனம்.  பிறகு  தன்னையே   மறந்து  ராமத்யானம்.  அவருக்கு  ராமத்யானம்  (ராமனைப் பற்றிய  தியானம்)    '' ரா (இரவு)   ''மத்யானம்'' (பகல்)  என்று இடைவிடாமல்  நடந்தது  என்று சொல்வார்கள் .  இப்படிப்பட்ட   சுத்த ராம பக்தர்  அவர்.

 காவேரிக்கரையில்  மதகடியில் அரசமரத்தருகே   ஒரு பிள்ளையார் இருந்தார் .  அவர்க்கு  ஒரு  சிறு  ஆலயம்  கட்டி  மதகடிப்பிள்ளையார்   பென்று  பெயர் சூட்டினார்.  அந்த  பிள்ளையார்  பெயரில்  பஞ்சரத்ன மாலை,  வேறு  பதிகங்கள், எல்லாம்  இயற்றினார்.  பிள்ளைகள்  விளையாட்டுக்காக  மானம்பு பாட்டு,  கோலாட்ட  பாட்டு  எல்லாம் பாடியிருக்கிறார்.  மழைவராவிடில்  பரசுராம பாரதிகளிடம்  விவசாயிகள்  வந்து  முறையிட்டு  அவரை  பிரார்த்திக்க  சொல்வார்கள்.

ஒருசமயம்  புரட்டாசி  வரை  கூட மானம்  பொய்த்து  விட்டது. ஆனி  மாசம்  ஹஸ்த நக்ஷத்ரத்தில்   விதை  விதைத்தால் அமோக  விளைச்சல்  என்று  நம்பிக்கை. கம்பர்அவர் எழுதிய  ராமாயணத்தில்  ''ஏரெழுபது'' எனும்  காவியத்தில்  ''விரை விடு  இலக்கணம் '' எனும்   செய்யுளில்  இதை  விளக்கியிருக்கிறார்.

 வைகாசி  மாதம்  காவேரியில்  வெள்ளம் வராமலும்   ஆனி ,  ஆடி,  ஆவணி, புரட்டாசி வரைகூட  மேல் மழை  பெய்யவில்லை  என்றால்  வேளாளர்களுக்கும்  சோழகர்களுக்கும்   வயிற்றில் புளி  கரைக்குமே.  ஓடி வருவார்கள்  பரசுராம  பாரதியிடம். வாசல்  நிரம்பிவிடும்.

 ''பாரதி  சாமி, மழை  பெஞ்சால்  தான்  இன்ஜெயிருந்து நவுருவோம்''.  


வெய்யில் தான்  ஏறியதே  தவிர  வேளாளர்கள் இடத்தை விட்டு  நகரவே இல்லை.  கண்கள்  ஆர்வமுடன்  நம்பிக்கையோடு  பாரதிகளையே  பார்த்துக்கொண்டிருந்தன.

 வெகுநேரம்  ஆகாயத்தையே கண் கொட்டாமல்  பார்த்துக்கொண்டு   ராமநாமம் சொல்லிகொண்டே இருந்த  பரசுராம  பாரதி  ஒரு  கவி  உடனே  இயற்றினார்.

''சீராமன்   பாதத்தை சிந்திக்கப்  பெய்யும்  மழை
வாரா  வளங்கள் எல்லாம்  வந்திடுமே  தேறீர்
நன்மைகள்   யாவும் நாளுக்கு நாள்  பெருகும்
தினமைகள்  ஏதேதும் வாராதே''

 (இந்த  பாடலை என் அம்மாவழி  தாத்தா  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட  பாரதிகள்   ஞாபகம்  வைத்திருந்தார்.  அதை  தனது வம்சாவளி என்ற தொடரில் இந்துநேசனில் பிரசுரித்து அதன் ஒரு பிரதி  கிடைத்தது  நம்முடைய  அதிர்ஷ்டம். )

 மேற் சொன்ன  பாடலை பரசுராம பாரதி உடனே இயற்றி  பாடியதன் அர்த்தம்: 

 ' ஸ்ரீ   ராமனின்  கிருபை  என்கிற  மழை,  கருணை மழையாக  அமோகமாக பொழியும், என்  அப்பன்  மதகடி விநாயகன் எங்கே  போனான்? அவன் இதை கவனிப்பான்.  நீங்கள்   யாவரும் மனம்  தளர வேண்டாம். இது  சத்தியம்.  தைரியமாகச்  செல்லுங்கள்.  நம்புங்கள்.   மழை வரும். ''

 விடுவிடென்று  கிளம்பினார் பரசுராம  பாரதியார்.  மதகடி பிள்ளையார் ஆலயம்  சென்றார்.  விபூதியைக் குழைத்து  பூசிக்  கொண்டார்.   விநாயக மூர்த்தியை  வலம்  வந்தார்.

 ''மண்ணுருகப்  பேயும்,  பொன்னுருகக்  காயும்,,
 மண்ணாளப்  புரட்டாசி என்பது  பிரட்டா-சீ  போ
எண்ணுரு   தேதியுமாச்சே  இனிமேல்   எப்படி விரைப்பு?
 எப்படி நாத்து  விடல்?  எப்படியே நடவாகும் ?
அண்ணலே இது  உனக்கு  சம்மதமா?  உந்தன்

 அடிமைகளாம்  குடிகளுரை  சாத்தனூர் அதனில்
பண்ணுரு  செய் பயிர்  தழைக்க  உயிர்களெலாம் செழிக்க
 பக்ஷமுடன் மதகடி வாழ்  கணபதியே  அருள்க.''

அவர்  மழை பெய்யாத  விஷயத்தைச்  சொல்லி,  பெய்யவைக்கும்  பொறுப்பை  மதகடிப்பிள்ளை யாரிடம் தள்ளிவிட்டு   சந்தோஷமாக  வெற்றிலை  போட்டுக்கொண்டு  குடியானவ  ஜனங்களிடம்  பேசிக்  கொண்டிருந்தார்.   வானம்  கருத்தது.  இடி இடித்தது.  கார் மேகங்கள்  நகர்ந்து  வந்தன. ஒரு நாழிகை  நேரம்  மழை கொட்டோ கொட்டு என்று  மண்வாசனை நிறக்க  மழை பெய்தது.

 மழையில் நனைந்து கொண்டே  கம்பர்  இயற்றிய  ஒரு  ராமாயணப் பாடலை  பாடிக் காட்டினார்  பரசுராம  பாரதிகள்.

 அதன் பொருள்   '' களைக்கோட்டு மாமுனி  (ரிஷ்ய ஸ்ரிங்கர் ) வரவால் அங்க தேசத்தில்  மழை பொழிந்து வறுமை  நீங்கியவாறு''   இங்கும்  பெய்யும்.. ஒரு குறைவு மில்லை. போய்   விரை  விடுங்கள் '' என்று  குடியானவர்களை சந்தோஷத்தோடு அனுப்பினார்.

அந்த வருஷம்  அமோக விளைச்சல்.  ஊர்  மக்கள் கூடி  பொதுவில்  ''கோவிலடி செய்'' என்ற  பெயரில் ஒரு பெரிய ''செய்""  (நன்செய்,  புன்செய்""  மாதிரி நிலம்) அதன் பக்கத்தில் வேறு  சில  நிலங்களும் ஊர்ப் பொது ''பாரதி மானியம்'' என்று   அவருக்கு  ஒதுக்கினார்கள்.

இந்த  நிலம்  வெகுகாலம்  அவர் குடும்ப  அனுபவத்தில்  இருந்து வந்தது.  வருஷம் தோறும்  கறவைப்பசுவும்,விளைச்சலில்  பங்கும்  அவர்  குடும்பத்தை  வந்தடைந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...