Tuesday, November 28, 2017

NOSTALGIA

                  '' உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே..'' J K. SIVAN 


ஒரு சில பழைய தமிழ் சினிமா பாட்டுக்களை இன்னமும் மறக்க முடியவில்லை.
''கையிலே வாங்கினேன் பையிலே போடலே ஆனா காசு போன இடம் தெரியலே''

ஏறக்குறைய 50-60 வருஷங்களுக்கு முன்பு கூடவா இந்த எகனாமிக் ப்ராப்ளம் என்று நினைக்கும்போது ஒன்று புரிகிறது. விலைவாசி கொஞ்சமாக இருக்கிறதே என்று பார்க்காதே அதை வாங்க உன்னிடம் ஐவேஜ், வரும்படி, எவ்வளவு இருந்தது என்று பார். எதுவுமே  தாறு மாறாக ஏறலை  இரங்கலை.  வருமானம் கொஞ்சமாக இருந்தபோது விலைவாசியும் அதற்கேற்றமாதிரி கொஞ்சமாக இருந்தது.  


அப்போதெல்லாம்  எல்லாமே  ரொம்ப  சீப், விலை குறைச்சல் என்று வருமானத்தை, வாங்கும் சக்தியை பற்றி யோசிக்காமல் பேசுகிறோம்.   இப்போது  வருமானம் எங்கோ மேலே போய்விட்டது.  இட்டிலி வடையும் ஆகாசத்தில் பறக்கிறது. கைக்கு எட்டவில்லை.ஆகவே வாய்க்கு எப்படி எட்டும்?

பஸ், டாக்சி, ஆடோ, டூ வீலர், கார், எதுவுமே ஓட தார் ரோடே இல்லாத காலம், மின்சாரம் தெருவில் அங்கொரு இங்கொரு விளக்காக முணுக் முணுக் என்று கூட எரியவில்லை. கண்ணாடி கூண்டில் கெரொசின் எண்ணெய் விளக்கு வெளிச்சம் தான்.

அப்படியும் இவ்வாறு பணத்துக்கு முடையா என்றால் ஆமாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆறு ஏழு எட்டு டிக்கட் என்று இருந்ததாலும் ஒருவர் இருவர் வருமானத்தில் வண்டி ஓடியதாலும் பண முடை நிறைய குடும்பங்களில் வீட்டுக்கு வீடு வாசப்படியாக இருந்தது. எல்லோரும்  அதே கஷ்டத்தில் இருக்கும்படியாக வாழ்க்கை முறை அமைந்திருந்ததால் யாருமே அதை கஷ்டமாக நினைக்கவில்லை.  சமாளித்தார்கள்.

இது ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் பூதாகாரம் எடுத்தது.

நான் வேலைக்கு சென்றபோது வருஷத்துக்கு ரெண்டு ரூபாய் இன்க்ரிமெண்ட். Rs 45-2-80-5. என்று சம்பள ஸ்கேல். பஞ்சப்படி என்றே அல்லவன்ஸ் களுக்கு பெயர் பொருத்தமாகவே இருந்தது. அது ஒரு 20+25 ரூபாய் சேர்ந்து வரும். பச்சை யாக ஒரு அச்சு எழுத்து மங்கி படிக்க முடியாமல் உத்தியோக வரி நோட்டிஸ். அதை பார்க்கவே நாங்கள் வெறுத்தோம். 5 ரூபாய் அதன் மூலம் போய் விடும்.

திடீரென்று ஒருவர் கத்தையாக மடித்து இந்த நோட்டிஸ் களோடு கார்ப்பரேஷன் ஆபிசிலிருந்து  ஒண்ணாம்தேதி  சம்பள பட்டுவாடா அன்று வந்து  சம்பளம் பட்டுவாடா  பண்ணுபவர் அருகில் உட்கார்ந்து கொண்டு   சம்பளம் வாங்குபவர்களை  பேர் சொல்லி கூப்பிட்டு பணம் வாங்கிக்கொண்டு ரசீது  கொடுத்து வசூல் பண்ணுவார்.

சம்பள நாள் அன்று  அந்த காலகண்டன் '' ஜே.கே. சிவனா? ஏதோ ரெண்டு மூணு பாக்கி நோட்டிஸ் லே இந்த பேர் பார்த்தேனே'' என்று தேடி நோட்டிஸ் பாதி கிழித்து கொடுத்து கை மாறி 15-20 ரூபாய் என்னிடமிருந்து போய்விடும்.

பத்தரை மணி பார்த்தசாரதி திருவல்லிக்கேணி ஒரு கோவில் வேலை முடித்துவிட்டு நான் வேலைசெய்த M.E.S   (அப்புறம்  MSEB ,  TNEB   ஆகி  இப்போது  ஏதோ பிரைவேட் கம்பனி ஆகிவிட்டதாம்) .ஆபிஸ் வருவார். 10 மணி ஆபிசுக்கு பத்தரைக்கு நேரம் தவறாமல் நாள் தோறும் வந்து விடுவார். அட்டேண்டன்ஸ் ரிஜிஸ்டர்லே கையெழுத்து போடும்போது அலட்சியமாக சிரிப்பார். நிறைய பேர் என் காது கேட்க அவரை ''லேட்'' பார்த்தசாரதி என்று உயிரோடு இருக்கும்போதே அழைத்தார்கள். அவர் காலம் தவறி வந்ததால் இப்படி ஒரு பேர்.

என் வருமானம் வருமான வரி கட்டும் அளவுக்கு அப்போது இல்லை என்பதாலோ வருமான வரி அதிகம் பேரிடம் வாங்க அரசாங்கத்துக்கு (நல்ல அரசாங்கம்!) அவசியம் இல்லாததாலோ அதை பற்றி நாங்கள் ஆபிசில் பேசாமல் மற்ற அக்கப்போர் பேச்சுகள் தான் பேசிக்கொண்டே வேலை செய்வோம். எங்கும் காகித மலைகள். அவைகளுக்கு நடுவே அங்குமிங்குமாக சில ரெமிங்க்டன், அண்டர்வூட் டைபிஸ்டுகள்.

ஏனோ தெரியவில்லை நிறைய ராஜாக்கள் சுல்தான்கள் இருந்தாலும்  பழைய வஸ்துக்களுக்கு  என்று ஒரு தனி பெயர்.  

மேலே சத்தம் ஏராளமாக போட்டுக்கொண்டு எப்போது  வேணுமானாலும் கீழே விழுந்துவிடுவேன் என பயமுறுத்திய மின் விசிறிகளுக்கு ''ஹைதர்'' காலத்தவை என்று பேர்.  என் தலைமேல்  ஒரு  CROMPTON  விசிறி  மெதுவாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் ஊரைக் கூட்டும் அளவுக்கு சத்தம் போட்டு அது பழக்கமாகி விட்டது.

சம்பளம் வாங்கின மறுநாளே நரசிம்மன் ரெண்டு ரூபா கை மாத்தாக கேட்பார். சம்பளம் வாங்கி தரேன் என்று சொல்லப்பட்ட அந்த ரெண்டு ரூபாய், எட்டணா ஒரு ரூபாயாக சில்லரையாக பல நாட்களுக்கு பிறகு நாணயமாக வந்து விடும்.

பெரிய ஹால்.   12வது  பிளாக்   பிளாக்  BLOCK   என்று வெள்ளைக்காரன் வைத்த பெயர் கொண்ட  திருமலைநாயக்கர் மஹால் மாதிரி ஒரு  இடம்.  200 பேருக்கு மேல் அதில்  காகித மலைகளுக்கு இடையே தலைமட்டும் தெரிய  உட்கார்ந்து இருப்போம்.   இருந்தோம். ஆறு மணி ஆனால் பெருச்சாளி காலடியில் ஓடும். நிறைய பைல் (files) களை எங்கள் அதிகாரிகளோ பணியாளர்களோ தீர்வு காணாமல் கட்டி போட்டிருந்த கஷ்டமான விவகாரங்களை எலியாரும் பெருச்சாளியாரும் சம்பளம் வாங்காமலேயே முடித்து விட்டார்கள். அந்த file களில் பிரச்சனை தீராமல் சம்பந்தப்பட்டவர்கள் ஒருவேளை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டிக்கொண்டதால் அவர் தனது வாகனங்களை அனுப்பி பிரச்சனையை முடித்திருக்கலாம்.

பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை. குண வந்தன் பணக்காரனாவதில்லை. இதை பல பேர் சொல்லி கேட்டிருக்கிறோம். ஏன் பணமும் குணமும் ஒத்துப்போவதில்லை?

பணம் கொடுத்துக்கொண்டே இருக்கும் வரை பெறுபவர்கள் புகழ்கிறார்கள். பணம் கொடுப்பவனிடம் குறைந்தால் அவனை ஏசுகிறார்கள். கருமி, கஞ்சன் என்ற பட்டம் அவனை எளிதில் சேர்கிறது. சரி பணத்தை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொண்டு ஜாக்ரதையாக ஒருவன் செலவழித்தாலும் அதே கஞ்சன் கருமி பட்டம் தானே வந்தடைகிறது. மறுநாள் பற்றிய கவலை இன்றி ஒருவன் தன்னிடமுள்ள பணத்தை வாரி இறைப்பானாகில் அந்த ஒருநாள் தர்மிஷ்டன் மறுநாள் காணாமல் போகிறான். அதனால் தான் கொடுப்பதே தெரியாமல் கொடுப்பது என்கிற வழக்கம். கேட்டுக் கொடுப்பதைவிட கேளாமல் தானே பார்த்து உணர்ந்து தருமம் செய்வது. வெளியே அதை காட்டிக்கொள்வது இல்லாமல் நடக்குமானால் அவன் செல்வந்தனாகவும் தர்மிஷ்டனாகவும் காலம் தள்ள முடியும். எண்ணற்ற செல்வங்கள் மேலே மேலே குமிந்து கொண்டிருப்பவனுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை.

சூரியனிடம் பெற்ற செல்வத்தை எல்லாம் கர்ணன் வாரி வழங்கினான். கொடுத்து கொடுத்து கரம் சிவந்தான். கொடுப்பதைத் தவிர வேறு ஒன்றும் அறியாத அளவுக்கு அவன் தானம் செய்பவன் ஆனான்.

கல்யாணங்கள் விசேஷங்களுக்கு போனால் பவன்ஸ் ஜர்னல் அலுவலகம் பாரதிய வித்யா பவன் வெளியீடுகள் ராஜாஜியின் ராமாயணம்,(சக்ரவர்த்தி திருமகன் கல்கியில் வாரா வாரம் ஓடிப்போய்  வியழைக்கிழமை நாலு அணா கொடுத்து வாங்கிவந்து படித்திருக்கிறோம். மகாபாரதம்  வியாசர் விருந்து என்ற பெயரில் வந்தது. ஒரு ரூபாய் ஒரு புத்தகம். (
நானும் ஒருநாள் மஹா பாரதம் எழுதுவேன் என்று கனவிலும் தெரியாது).   மு.வ. எழுதிய திருக்குறள்  கையடக்க புத்தகம் கூட ஒரு ரூபாய் தான்.   இதெல்லாம் வாங்கி  பரிசாக அளித்து இருக்கிறோம்.  இதே பரிசு எனக்கும் வீட்டில் நிறைய வந்திருக்கிறது.

 என். எஸ். கிருஷ்ணன் பாட்டில் வருமே ''முதல் தேதி.. முப்பதாம் தேதி'' என்று. அவர் சொன்ன உத்தி, அதாவது பெருமாள் உண்டியிடம் ''லோன்'' பெற்று செலவு செய்து சம்பளம் வந்தவுடன் வட்டியோடு உண்டியில் திரும்ப போட்டு பொருளாதார சிக்கலுக்கு விடை தேடிய குடும்பங்கள் பலஅக்காலத்தில் உண்டு.

எவ்வளவோ எண்ணங்கள்   எத்தனையோ நெஞ்சின் அலைகளாக நினவுகள் பிரவாகமாக  பெருக்கெடுக்கிறது. ஓடிவரும்போது வரட்டும். அணையா போட்டிருக்கிறேன்!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...