Saturday, November 4, 2017

ஒரு திரு முருகா!

ஒரு திரு முருகா! - 2 J.K. SIVAN

அருணாசலத்தில், திருவண்ணாமலையில், ஒரு ஒதுக்குபுறமான தெரு. அதில் ஒரு ஓட்டுவிடு. அதில் இருப்பது ரெண்டே பேர். எவ்வளவு பெரிய மாட மாளிகையாக ஒருகாலத்தில் இருந்த செல்வந்தன் வீடு. சகலமும் இழந்தது. இருப்பது இப்போது ரெண்டே மனித உடல்கள் தான். ஒன்று அந்த உடலின் திருப்திக்கு அலைந்தது. மற்றொன்று அந்த உடலின் உள்ளே இருக்கும் உள்ளத்தை நல்ல வழிக்கு கொண்டுவர உயிர் வாழ்ந்தது. ஒன்று ஆண். மற்றொன்று பெண்.
''பகவானே, என் சகோதரன் இப்படி ஆகிவிட்டான். பெற்றோரும் இல்லை உற்றோரும் லக்ஷியம் பண்ணவில்லை. நிர்கதியாக நிற்கிறேனே . இவனை திருத்த வழியே தெரியவில்லையே. இவ்வளவு பெரியவனாகியும் என்ன சொல்லியும் ஒன்றுமே பயனில்லையே.''

கதறுகிறாள் சகோதரி. வறுமை ஒருபக்கம், அபவாதம் மறுபக்கம். மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகவே வளர்ந்து பூதாகார உருவெடுத்தால் அந்த பேதை என்ன செய்வாள்?

அவனோ என் செல்லத் தம்பி.... இருப்பது நான் ஒருவளே அவன் மீது அக்கறை கொண்ட ஒரே ஜீவன். நானும் கைவிட்டு விட்டால்? அவன் குணம், செய்கை, நடவடிக்கை இவைகள் என்னை கொல்வதற்கு முன் என் மனசாட்சியே என்னைக் கொன்று விடுமே. அதற்கு இடம் கொடுக்க கூடாதே.
''அப்பா என் செல்வமே, அருணகிரி, உனக்காக நான் என்னவெல்லாமோ பாடு பட்டுவிட்டேன். உனக்கு எந்த விதத்தில் உதவுவது என்றே புரியவில்லை . என் இடமிருந்து செல்வம், உடமை எல்லாம் தந்தேன் அழித்துவிட்டாய். நான் என்ன செய்வேன்?

உனக்கு மற்ற பெண்கள் பின்னால் செல்லவேண்டும். அதற்கு பணம் வேண்டும். என்னிடம் பணம் இல்லை. நான் உன் சகோதரி என்பதை மறந்து விடு என்னையே நீ தேடும் ஒரு பெண்ணாக பாவித்து விடு. ஒரு பெண் தான் உனக்கு வேண்டும் அவ்வளவு தானே உன் எதிர்பார்ப்பு. நானே உனக்கு அந்த பெண் . போதுமா. திருப்தியா? இதை விட நான் வேறு என்ன சொல்லமுடியும். செய்ய முடியும்? பெண்ணாசை வேண்டாம் என்றால் உன் காதில் அது ஏறவே இல்லையே.

மேலே பேச நா எழவில்லை, தொண்டை அடைத்தது. கண்களில் ஆறு வெள்ளமாக பெருகியது.

என்ன ஆச்சர்யம். மூர்க்கனான அருணகிரிக்குக்கூட ஒரு கணம் திக் என்றாகியது. பொட்டில் அறைந்தால் போல ஒரு வேதனை. திகைத்து ஒரு கணம் நின்றான். கால் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி அவனை சிரம் வரை கல் சிலையாக்கியது. சகோதரியின் வார்த்தை அம்புகள் அவன் மார்பை துளைத்து நெஞ்சத்தை பிளந்தது. அந்த சூட்டில் நெஞ்சு உருக ஆரம்பித்தது. நெஞ்சத்தில் திரையில் இதுவரை அவன் செய்த பாபச் செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக படம் ஓட ஆரம்பித்தது. அடடா, அவன் செய்த பாப செயல்கள் ஏன் உருகி இப்போது கண்ணீராக மாறி கண்களை நிரப்பி வழிந்தோடுகிறது?.

''இனி நான் ஒரு கணமும் இந்த உடலில் உயிரோடு வாழ அருகதை அற்றவன். இந்த கேடு கேட்ட அல்ப வாழ்க்கையை நான் வாழ்ந்தது போதும். இதற்கு ஒரே பிராயச்சித்தம் இந்த உயிரை விடுவது தான்''. இந்த எண்ணம் அவனை ஆக்கிரமிக்க நேராக ஓடினான். எதிரே நீண்ட மதில் சுவர்கள் கொண்ட அண்ணாமலையான் ஆலயம்.

''அருணகிரி அருணகிரி'' என்று அவன் தமக்கை அவன் பின்னே ஓடினாள். அவனது ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை அவளால். பார்க்கிறாள். அதோ அண்ணாமலையின் கோவில் சுவற்றின் மீது தாவி ஏறிவிட்டானே. ''முருகா, முருகா, முருகா'' என்ற அவன் உரக்க கத்துவது கேட்கிறது.

ஐயோ. பகவானே இதென்ன அக்கிரமம். ''முருகா'' என்று கத்தியவன் அவ்வளவு உயரமான ஆலய சுவற்றிலிருந்து கீழே பாய்ந்து விட்டானே. நான் அங்கே போய் சேரும்போது அவன் உடல் என்ன கதியில் இருக்கப்போகிறதோ?

இதெல்லாம் நான் நீங்கள் பயப்படுவது. நினைப்பது. முருகன் நினைப்பது வேறு ஆயிற்றே. பன்னிரு கையன் கீழே விழுபவனை தாங்கி அல்லவோ பிடித்துக் கொண்டான். தாங்கிய தங்கவேலனுக்கு தெரியும். தலைகுப்புற விழுந்த தறி கெட்ட அருணகிரி அறிவானா? மயக்கத்தில் இருந்தான்.

வேலவன் தனது வேலை எடுத்தான் வேலை செய்ய ஆரம்பித்தான். ''ஓம் சரவணபவ'' எனும் ஷடாக்ஷரத்தை அவன் வேல் அருணகிரியின் நாவில் எழுதியது.

''ஆஹா யாருக்கு தான் கிடைக்கும் இந்த அபூர்வ பாக்கியம். ஒரு ஜெப மாலை அவன் கையில் இருந்து அருணகிரி கைக்கு தாவியது.

அக்கிரமத்தின் மொத்த உருவான அருணகிரி இனி நாம் அறிந்த போற்றுகின்ற திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்.

விழித்த அருணகிரி வேறு மனிதன் இப்போது.
என்ன பார்க்கிறாய் பாடு ?
நானா பாடுவதா? எப்படி ? எத்தை பாடுவேன்?
''முத்தை தரு என்றே பாடு..'' முதல் அடி எடுத்துக் கொடுத்தான் முருகன் .

ஆஹா திவ்ய பிரவாகம் துவங்கிவிட்டதே. ஆயிரக் கணக்காக உலகெங்கும் பக்தர்கள் இரவு பகலாக பாடும் திருப்புகழ் பாடல்கள் அங்கே பிறந்துவிட்டன.
முஹூர்த்தம் ஆரம்பித்துவிட்டதே....

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

முருகனை வர்ணித்து ஆரம்பிக்கிறார் அருணகிரி. முருகனுக்கு பரம சந்தோஷம். இப்படி ஒரு பக்தன் கிடைத்தால் பின் எப்படி இருக்கும்?.

உன் முத்தான வெள்ளை வெளேர் பல் தெரிகிறது. தேவயானை மணாளா, சக்திவேலாயுதத்தை ஏந்திய சரவண பவானந்தமே . மஹா பாவியான எனக்கும் கூட மோக்ஷ வீடு அடைய வழிகாட்டும் ஒப்பற்ற ஒரு மோக்ஷ விதையாக விளங்கும் ஞான குருவே,

நீ யார் என நான் அறியேனா? மூவுலகும் துதித்து போற்றும் அந்த முக்கண் பரமசிவனுக்கு வேதங்களுக்கு எல்லாம் ஆதார ஸ்ருதியான ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த தகப்பன் சாமி அல்லவா நீ! அவர் மட்டுமா, மற்றவர்கள்? ப்ரம்மா, விஷ்ணு, கோடானுகோடி, முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நிற்கும் தேவ சேனாபதி அல்லவா நீ முருகா,

எவரும் வெல்லமுடியாத ராக்ஷஸன் தச சிரம் கொண்ட ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை செலுத்தி, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து ஒரு பகல் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, ஜயத்ரதனை அழிக்க உதவி, அந்த நண்பன் அர்ச்சுனனுக்கு, தேரோட்டியாக வந்து பசுமையான நீலமேகவண்ணன் திருமால் உன் மாமனே பாராட்டும் பரம்பொருளே,

எனக்கு என்று பரிவோடு நீ என்னைக் காத்தருளும் நாள் ஒன்று தனியாக உண்டோ? சூரனை வென்றவனே நீ யுத்தம் புரியும் காட்சி என் மனதில் ஓடுகிறதே அதை சொல்லவேண்டாமா?


தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஏற்றவாறு சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து ஊழித்தெய்வமே காளிதேவியே திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் ஆடிக்கொண்டு சம்ஹாரம் செய்வது போல கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து அங்கே சனிஷதமாக உணவு நிறைய கிடைத்ததே என்று மகிழ்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் இந்த அழகிய ஊழிக் கூத்துக்கு ஏற்ப ''தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'' என்ற தாள ஓசையைக் கூறுகிறது கேட்கிறதே. கொன்னக்கோல் வாசிக்கிறார் அருணகிரி அந்த தாண்டவத்திற்கு ஏற்ப......

அடடே, கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழங்குவதும் காதில் விழுகிறதே போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் கத்துகிறதே கேட்கிறதா. அவற்றின் சப்தத்தை உங்களுக்கு கேட்கச்செயகிறேன். 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் யுத்த வெறியில் அசுரர்களை வாதம் செய்தவாறு குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழுகிறதே

சினேகம் பாசம், அன்பு எதுவுமே அறியாத கோபமும் விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களைக் கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, யுத்தம் செய்யவல்ல பெருமாளே'' என்று அருணகிரி ஷண்முகனை பாடும் முதல் பாட்டு இது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...