Friday, November 24, 2017

TAMIL OCEAN

தமிழ்க்கடலில் சில முத்துக்கள்   J.K. SIVAN 

 உலகத்தில் இருக்கும் அத்தனை சமுத்ரங்களையும் ஒன்றாக  சேர்த்தாலும்  அது நமது தமிழ்க்கடலுக்கு ஈடாகாது என்று சொல்லும் அளவுக்கு எத்தனையோ  விஷயங்கள்  இருக்கிறது  நமது தமிழ் இலக்கியத்தில்.  அப்போதும் அப்போது  தேடும்போது சில அற்புதங்கள் கண்ணில் படுகிறது. அது பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்கிறேன். 

ஒரு புலவர், வழக்கம்போல் வறியவர். காசு வாசனை பார்க்கக்கூட கிடைக்காதவர். எங்கோ ஒரு தனவந்தரை சந்திக்கிறார். புலவரது துரதிர்ஷ்டம்  அந்த  தனவந்தர்  நொடித்து போயிருக்கிறார்.  இருந்தும் ஏதோ கடன் வாங்கியாவது கொஞ்சம்  புலவருக்கு பரிசளிக்கிறார்.  அவரளித்த பரிசை போற்றி ஒரு கவி பாடுகிறார். ரொம்ப சிம்பிள். அர்த்தம் இட்லி சாப்பிடுவது போல் எளிதாக இருக்கிறது. 

''இந்த காவிரி ஆற்றங்கரையில் நிற்கிறேன்.  நிறைய  வெள்ளமாக ஓடும்போது வளம் கொழிக்கிறது. தண்ணீர் ஓடும்போது எத்தனையோ நிலங்கள் உயிர்கள் சந்தோஷமாக அனுபவிக்கிறது.  தண்ணீர் வற்றிவிட்டது இந்த ஆற்றில். அப்போதும்  மக்கள் அதை தேடி வருகிறார்களே.  '' என்னிடம் தண்ணீர் இல்லை, ஓடுங்கள்'' என்றா விரட்டுகிறது?  என்னை தோண்டி பாருங்கள் கொஞ்சமாவது உங்கள் தாகம் தீர்க்கிறேன்'' என்று எல்லோருக்கும்  ஆற்று மணலில்  ஊற்று மூலம் மகிழ்ழ்விக்கிறதே.   இந்த  ஆற்றை பார்த்தபோது எனக்கு ஆதரவளித்த அந்த தனவந்தர் ஞாபகம் தான் வருகிறது.  பாவம் பிச்சை எடுத்தாவது எனக்கு தானம் செயகிறாரே..   இது தான் அந்த பாடல்.

''கொடுத்தாவி காக்கின்ற காவேரி வற்றிக் குறைந்திடினு
மடுத்தோண்டி நீருண்ணுவார் அதுபோல் இந்த மானிலத்தி
லடுத்தாரை ரட்சிக்குந் தாதா வென்பார்க்கு அடையாளம் பிச்சை
யெடுத்தாகிலுங் கொடுப்பார் வெள்ளை நாவல் இருப்பவனே''


அதே புலவரே இன்னொருவரோ யாரோ, ரொம்ப அலுத்துப் போய்விட்டார். பசியோடும் ஏமாற்றத்தோடும் நடந்து திருப்போரூர் வந்து விட்டார்.  அடேடே  இங்கே  முருகன் இருப்பானே.  அவனை தரிசித்து அவனிடம் முறையிடுவோம்  என்று  நடக்கிறார். திருப்போரூர் கோவில் வந்துவிட்டார். வேலவனை, முருகனை பார்த்துவிட்டார்.  
ஓ வென்று கதறுகிறார்.   

நான்  எந்த  இலக்கணப்பிழையற்ற பா  வில்  பாடினாலும்  எவர் காதிலும் விழவில்லை. உன் தந்தை, தாய், மாமன் மாமி ஒருத்தருக்கும்  காது கேட்கவில்லையே அப்பா. நீ  தமிழக கடவுள். நீயாவது உன் வேலை கொஞ்சம் கீழே வைத்துவிட்டு என் பாக்களை கேட்டு அருள் புரியக்கூடாதா?

எல்லோரையும் புகழ்ந்து போற்றி, எனக்கு தெரிந்த, சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா, இசைப்பா, கொச்சகப்பா, தனிப்பா   எவ்வளவோ ''பா'' க்களில்  என் சாமர்த்தியம் காட்டினேன். ஹுஹும்..  இதெல்லா பாவிலும்  ஆச்சர்யமான கிரந்த பாவிலும், வெல்லப்பாகு  போல் இனிமையாக பாடினான். சிரிக்க சிரிக்க விகடப்பாவும் பாடினேன். ''அட, போய்யா,  என்று காதிலே கூட வாங்காமல் விரட்டுகிறார்கள், இனி நான் செய்வது ஏதப்பா?  பேசாமல் உன் திருப் ''பா''தத்தை பிடித்துக் கொள்கிறேன்.   அப்பனே, கந்தப்பா, முருகப்பா, திருப்போரூர் வாழும் வேலப்பா, உன்   கை  காட்டப்பா  ( நானிருக்க பயமேன் என்று அபய  ஹஸ்தம்) 
மெய்யான தெய்வமே, மெய்யப்பா, உடனே கை காட்டப்பா'' என்று பாடுவது எனக்கு ஆனந்தத்தை தந்தது. உங்களுக்கு??

இந்த தனிப்பாடல் தான் அது: 


''சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா
தாழிசைப்பா ,கொச்சகப்பா ,த் தனிப் பாவுக்கும்
விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்
வெல்லப் பாவது போல விகடப் பாவும்
எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா
ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்
கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...