Tuesday, November 28, 2017

NALOPAKYANAM

நளோபாக்யானம் - J.K. SIVAN நிடத நாட்டு ராஜா நளன். சகல கலா வல்லவன். தேவர்களும் பொறாமை கொள்ளும் குணமும் அழகும் கல்வியும் நிறைந்தவன். தமயந்தியை மணக்கிறான். கலி புருஷன் பிடியில் சிக்கியவன் சகலமும் இழந்தவன், மனைவியை விட்டு புரிகிறான். கார்கோடன் எனும் விஷ நாகம் தீண்டி உருமாறுகிறான். அதுவே அவன் மறைந்து வாழ உதவுகிறது. ருது பர்ணன் எனும் அரசனுக்கு தேரோட்டுகிறான். மீண்டும் தமயந்தியை சந்திக்கும் தருணம் கலி நீங்கி இழந்தைஎல்லாம், மனைவியும் சேர்த்து தான், திரும்ப பெற்று மீண்டும் நிடத நாட்டு அரசனாகிறான். தருமனைப் போலவே பகடை யாட்டத்தில் முதலில் தோற்றவன் ருதுபர்ணனிடம் அந்த வித்தையை நன்றாக கற்றதால் பகடை ஆட்டத்தில் நிபுணனாகி தான் இழந்தல் நாட்டை மீண்டும் வெல்கிறான். தமயந்தி தனது தந்தையாகிய விதர்ப்ப நாட்டரசன் பீம ராஜாவின் அரண்மனையில் இருந்தாலும் ஊர் ஊராக ஆட்களை விட்டு ஒரு வெண்பா கவிதையில் ஒரு கேள்வி யை கேட்டு எங்கும் அதை பரப்ப சொல்கிறாள். எங்காவது நளன் இருந்தால் நிச்சயம் அதற்கு பதில் சொல்வான். அவன் இருப்பதை கண்டு பிடிக்கலாம் என்று எண்ணம் அவளுக்கு. புகழேந்தியின் தமிழ் நெஞ்சை அள்ளுகிறது. நளோபாக்யானம் மஹாபாரதத்தில் வருகிறதுஇதை நளவெண்பா என்று எளிய வெண்பா பாடல்களில் எழுதியிருக்கிறார். சிலவற்றை ரசிப்போம். ''இருங்கானில் நீத்த இகல்வேந்தன் தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப் புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த உரைபகர்வ தானாள் உணர்ந்து. '' தனது தந்தை விதர்ப்ப நாட்டு அரசன் பீமராஜன் அரண்மனையில் கெட்டிக்கார பிராமண புரோஹிதன் சுவேதன் என்பவனை அயோத்தி நாட்டுக்கு ஒரு கவிதையுடன் அனுப்புகிறாள் குளிர்ச்சி பொருந்திய கூந்தலையுடைய தமயந்தி. ''என்னை நள்ளிரவில் ஒரு பெரிய காட்டில் விட்டுப்பிரிந்த போர்மன்னனாகிய என் கணவன் நள மகாராஜாவை அங்கே சென்று தேடி இங்கே அழைத்து வா '' என்கிறாள். ''காரிருளிற் பாழ்மண்ட பத்தேதன் காதலியைச் சோர்துயிலில் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற் கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச் சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து. 2 ''நீ போய் காசி ராஜன் அரண்மனையில் இந்த கேள்வியை கேள்....''கரியநிறமுள்ள இருட்டில் (நள்ளிராப் பொழுதில்) பாழடைந்த ஓர் மண்டபத்தில் தூங்கும் அன்பு மனைவியை கை விட்டுச் செல்லுதல் தேர் படைகள் கொண்ட ஒரு ராஜா செய்யும் சரியான செயலா?'' என்ற இந்த பாடலை கேள்வியாக அறிவிக்கவேண்டும். என்கிறாள். இதற்கு தகுந்த மறுமொழி உரைக்கின்றவர் எவராக இருப்பினும் அவரை நீ போய் அறிந்து கையோடு அழைத்துக்கொண்டு வா''. புரோகிதன் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னமாதிரியே செய்கிறான். மின்னும் ஒளி கொண்ட மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலைகளிலும்,கடற்கரைப் பகுதிகளிலும், கடல்சூழ்ந்த பல்வகை நாட்டு புறங்களிலும், காடுகளிலும், பார்த்துக்கொண்டே சென்று, நிலைபெற்ற மதம் கொண்ட மயக்கத்தையுடைய ஆண் யானைகளையுடைய நள மன்னனைத் தேடி,அயோத்தி நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தான். 'மின்னாடு மால்வரையும் வேலையும் வேலைசூழ் நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி அடைந்தான் அயோத்தி நகர்''. அங்கே அனைவரும் கேட்க தமயந்தி கேட்ட கேள்வியை பாடலாக கேட்கிறான் அதாவது ''அடர்ந்த காட்டில் நள்ளிரவில் தன் மனைவியைத்தன்னந்தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்ற நிலை அரசனுக்குப் பொருத்தமாமோ? அங்கிருந்த உருமாறிய நளன் அர்த்தம் புரிந்து கொள்கிறான். புரோகிதன் எதிரே வருகிறான். ‘மனைவியைக் காட்டில் விட்டுச்செல்லல் அரசர்கட்குத் தகுமோ?’ எனல் கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப் போனதூஉம் வேந்தற்குப் போதுமோ - தானென்று சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில் ஏற்றினான் வந்தான் எதிர். உருமாறிய நளன் வாகுகன் என்ற பெயரில் அங்கே சேவகம் செய்கிறான். புரோகிதனைப் பார்த்து வெண்பா வில் பதில் சொல்கிறான் . ''குளிர்ச்சி பொருந்திய முத்துக்களால்கோக்கப்பட்ட மாலைகளைக்கொண்ட வெண்கொற்றக் குடையையுடைய வீம ராஜனின் பெண் தமயந்தியை, கொடிய காட்டிடத்தில் தனியே நள்ளிரவில் விட்டுச் சென்றான் அந்த ராஜா என்பதை பற்றி சந்தேகம் வேண்டாம். ஒளிபொருந்திய வளை அணிந்த தமயந்தியை தூங்கும் போது தனியே விட்டு பிரிந்ததன் காரணம் முன்செய்த கர்ம வினையின் பயனால் தான். வேறு வழியில்லாததால்'' என்று நீ போய் சொல்'' என்கிறான். ''ஒண்தொடி தன்னை உறக்கத்தே நீத்ததூஉம் பண்டை விதியின் பயனேகாண் - தண்தரளப் பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே நீத்தானென் றையுறேல் நீ'' சுவேதன் தமயந்தியிடம் திரும்பி வருகிறான். '' எனது கேள்விக்கு பதில் அயோத்தி ராஜ்யத்தில் ஒருவன் பதிலளித்தான''. என்கிறான். ''நீ எங்கே தங்கியிருந்தாய்? நிடத நாட்டு மன்னன் நளனை எங்கெல்லாம் தேடினாய், எங்கே உன் கண்ணில் பட்டார் அவர்? உடனே சொல்'' என்கிறாள் ஆவலுடன்.. ''எங்கண் உறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல் கங்கைவள நாட்டார்தம் காவலனை - அங்குத் தலைப்பட்ட லாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர் அலைப்பட்ட கொங்கையாள் ஆங்கு.'' 6 புரோகித பிராமணன் சுவேதன் ''மலர்மணம்கமழுகின்ற கூந்தலையுடைய தமயந்தி!, நான் அயோத்தி மாநகரில் நல்ல உயர் குலத்தோனாக தோன்றிய அயோத்தி ராஜ ருதுபன்னனின் தேரோட்டி ஒருவனை பார்த்தேன். வாகுகன் என்று பெயர். அவன் பேச்சு நள ராஜா மாதிரியே இருந்தது. ஆனால் அவன் உருவம் கருத்து அழகற்று இருந்தது. நளன் அழகிய உருவம் கொண்டவனாச்சே'' என்கிறான் ''வாக்கினான் மன்னவனை ஒப்பான் மறித்தொருகால் ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும் கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான் ஏந்துநூல் மார்பன் எடுத்து''. தமயந்திக்கு வாகுகன் என்பவன் தனது கணவன் நளனாக இருக்கிறன் என்று புரிந்து விட்டது. உருவம் வேறாக இருக்கிறதே? எதனால்? ஒரு எண்ணம் மனதில் உதயமாகிறது. . வாகுகனை வரவழைக்க திட்டம் தீட்டிவிட்டாள் ''சுவேதா, நீ மீண்டும் அயோத்தி ராஜ்ஜியம் செல். அதன் அரசன் ருதுபன்னனிடம் வீமராஜாவின் அழகுள்ள மகள் தமயந்தி கணவன் நளன் விட்டு விட்டு சென்றதால் மீண்டும் ஒரு சுயம்பரத்திருமணத்தை நிகழ்த்தி வேறு ஒரு அரசனை மணக்க போகிறாள். ரெண்டு நாள் தான் இருக்கிறது.அரசர்கள் எல்லாம் அழைக்கப்படுகிறார்கள் என்று செயதி சொல். அயோத்தியிலிருந்து இவ்வளவு தூரம் வருவதற்கு அவன் வாகுகனை தேரோட்ட சொல்வான். என் காதல் கணவன் நளன் உலகில் சிறந்த தேரோட்டி என்பதால் அவனை விரைவாக தேரோட்ட சொல்லி வாகுகன் இங்கே வருவான்.''. ''மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட கொடைவேந்தற் கித்தூரம் தேர்க்கோலங் கொள்வான் படைவேந்தன் என்றாள் பரிந்து'' சுவேதன் அயோத்தி சென்று ருது பண்ணனிடம் எங்கள் விதர்ப்ப நாட்டு ராஜா பெண் தமயந்திக்கு மறு கல்யாணம். சுயம்வரம்.நாளைக்கு நீங்களும் பங்கேற்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அவளை மனைவியாக அடையலாம்'' என்கிறான். ''எங்கோன் மகளுக் கிரண்டாம் சுயம்பரமென் றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய் அந்நாளும் நாளை அளவென்றான் அந்தணன் போய்த் தென்னாளும் தாரானைச் சேர்ந்து''. நாளை தமயந்தியின் ஸ்வயம்வரத்தில் நாம் மீண்டும் இதுபற்றி மேற்கொண்டு விஷயம் அறிவோமா?. ATTACHED IS RAJA RAVIVARMA PICTURE OF NALAN LEAVING HIS SLEEPING WIFE IN FOREST AT MIDNIGHT

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...