Tuesday, November 14, 2017

தசாவதாரம்

தசாவதாரம் 

                                      ஆதி நாராயணனின் அவதாரங்கள்..3



உலகில் உயிரினம்  தோன்றிய வரலாற்றை அறிந்தவர்கள் அது  ஸ்ரீமந்நாராயணன் எடுத்த அவதாரங்களின் பிரதிபலிப்பு என உணர்வார்கள்.  மீன், ஆமை, பன்றி, என  உயிரினங்கள் படிப்படியாக  அறிவு பூர்வமாக வளர்ச்சியடைந்து கடைசியாக பூரண மனிதனாக தோன்றுவதன் காரணம் புரியும். டார்வின் புதிதாக ஏதோ கண்டுபிடித்ததாக  கை தட்டுவார்கள் நமது பாகவத புராணங்களை படிக்காதவர்கள்.

சோமுகாசுரன் குதிரை முகம் கொண்ட அரக்கன். ப்ரம்ம தேவன் படைத்த வேதங்களை சாஸ்திரங்களை எல்லாம்  ஒருமுறை அபகரித்து அவற்றை கடலின் அடியில் எடுத்து சென்று விட்டான்.  ப்ரம்ம தேவன் முறையிட, அவற்றை காத்து மீட்க  ஸ்ரீமந்நாராயணன் ஒரு பெரிய மீனாக அவதரித்து அந்த அசுரனை அழித்து வேதங்களையும்  சாஸ்திரங்களையும் மீட்பதற்காக எடுத்ததே  மத்ஸ்யாவதாரம். மச்சாவதாரம். பாதி மீன் பாதி நாராயணன்.   ஒரு அருமையான கோவில் சென்னையிலிருந்து  திருப்பதிக்கு செல்லும் வழியில் 70 கி.மீ. தூரத்தில் நாகலாபுரம் எனும் ஊரில் மத்ஸ்யநாராயணனை மூலவராக கொண்டு அற்புதமாக இருக்கிறது. அவசியம் அந்த பக்கம் செல்வோர் கண்டு  தரிசிக்கலாம்.  பெருமாளின்  பெயர் வேதநாராயண பெருமாள். தாயார்  வேதவல்லி. எனது யாத்ராவிபர கட்டுரைகள் படிப்பவர்கள் இந்த ஆலயத்தைப்பற்றி படத்தோடு எழுதியதை நினைவு கூறலாம்.

கூர்மாவதாரம் -  கூர்மம் என்றால் ஆமை.  ஏறகனவே  சொன்னபடி,  திருப்பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலை கடைந்து அமிர்தம் தேடியபோது  மந்திரமலையை மத்தாக உபயோகித்து அதைக் கடைய கயிறாக  வாசுகிஎனும் மிகப்பெரிய  நாகத்தை  தேர்ந்தெடுக்க, அந்த நடுக்கடலில் மத்து நிற்பதற்காக  அதன் அடியில் ஆதாரமாக மஹாவிஷ்ணு தான் ஆமையாக  நின்றார்.

கூர்மாவதார ஆலயம்  ஆந்திராவில் உள்ளது.   ஸ்ரீ கூர்மம் எனும் அந்த க்ஷேத்ரம் ஸ்ரீகாகுளத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில்  உள்ளது. பெருமாள் கூர்மநாதர். நமது தேசத்தில் கூர்மாவதார  ஆலயம் இது ஒன்று தான்.

வராஹ அவதாரம் -  வராஹம் என்றால் தமிழில் காட்டுப் பன்றி. ஹிரண்யாக்ஷன் எனும் அசுரன் பூமியைப் பாயாய் சுருட்டி  கடலுக்கடியே பாதாளத்தில் ஒளித்து  வைத்துவிட்டபோது விண்ணோர் குறை தீர்க்க மீண்டும் பூமியை வெளிக்கொண்டுவர மஹாவிஷ்ணு எடுத்த காட்டுப்பன்றி உருவே  வராஹாவதாரம். கடலுக்கடியே பூமியை த்தேடி  ஹிரண்யாக்ஷனோடு மோதி, அவனை கொன்று பூமியை மீண்டும் அதன் நிலையில் இருக்க செய்த அவதாரம்.

திருமலையில் பூவராக மூர்த்தியாக  பெருமாள் காட்சி தருகிறார். திருநெல்வேலியில் லட்சுமி வராஹ பெருமாள் கோவில் கல்லிடைக்குறிச்சியில் உள்ளது.  ஸ்ரீ முஷ்ணத்தில் ஆதி வராஹன்  பூவராஹனாக அருள் பாலிக்கிறார்.

நரசிம்மாவதாரம் - நரசிம்மம் என்பது பாதி நரனாகவும் பாதி சிம்மமாகவும் உள்ள உருவத்தை காட்டும்.  இது மஹாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம்.   தனது பக்தன் சிறுவன் பிரகலாதனை அவன் தந்தை கொடிய அசுரன் ஹிரண்யகசிபு துன்புறுத்தியபோது அந்த அசுரனைக் கொல்ல  எடுத்தது. 

ஜெயன் விஜயன் எனும் மஹாவிஷ்ணுவின்  துவார பாலகர்கள் விஷ்ணுவை தரிசிக்க வந்த துர்வாச முனிவரை தடுக்க, அவர் சபிக்க பூமியில் பிறக்க நேரிட்டது. விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

''முனிவர் சாபத்தை என்னால் மாற்றமுடியாது. ஒரு வரம் வேண்டுமானால் உங்கள் இருவருக்கும் தருகிறேன்.சரியா?'' என்கிறார் விஷ்ணு.

''தாருங்கள்.

''நீங்கள் இருவருமே என்னிடம் மீண்டும்  மூன்று பிறவி எடுத்தபிறகு வரலாம். அந்த மூன்று ஜென்மங்களிலும் நீங்கள் எனக்கு முழு எதிரியாகவே இருப்பீர்கள்.  அப்படி வேண்டாமென்றால்  இன்னொரு  வழி நீங்கள் என் பக்தர்களாக  முப்பது ஜென்மம் எடுக்க நேரிடும்.   எது உங்கள் விருப்பம்?''

''சுவாமி, நாங்கள் உங்களை சீக்கிரமே அடைய வேண்டும். மூன்று ஜென்மங்கள் எதிரியாகவே இருக்க விருப்பம்'   என்று அவர்கள் ஒப்புக்கொண்டதால்  அவர்களே  ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபுவாக ஒரு பிறவி நேர்ந்தது.மற்றொன்று, ராவண கும்பகர்ணர்கள். மூன்றாவது சிசுபாலன் வக்ரதந்தன். அது  துவாபர யுகத்தில் கிருஷ்ணன் அவதரித்தபோது.

சில நரசிம்மர் ஆலயங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.  சிதம்பரம் அருகே லக்ஷ்மிநரஸிம்ஹர், திருவாலியில்,  தஞ்சாவூரில், காஞ்சிபுரம்  செவிலிமேடு கிராமத்தில், மன்னூர் எனும் கிராமத்தில் திருவள்ளூரில்,  திருநெல்வேலி அம்பாசமுத்ரத்தில், திருத்தணியில் வெங்கனூரில், பொன்னேரி அருகே  கோளூரில், மற்றும் திருவொற்றியூரில் மற்றும் நிறைய இடங்களில்.

இன்னும் தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...