Wednesday, November 8, 2017

மனமே இதைக் கேள்



மனமே இதைக் கேள் - J.K. SIVAN
உலகிலேயே ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம் எது தெரியுமா?
கையில் பிடிக்கமுடியாமல் தப்பித்து ஓடும் மனசு. அதை ஒருவழியாக பிடித்து கட்டிப்போட்டு ஒரே நிலையில் வைப்பது HERCULEAN TASK என்பார்களே அதைவிட கடினமானது. இதில் தொடர்ந்து ஈடுபட்டு சிலர் ஜெயித்திருக்கிறார்கள்.

மனதைப் பற்றி சிந்தித்த மா மனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், எல்லோருமே ஒரே மாதிரியாக சொல்லும் ஒரு வார்த்தை ''மனத்தை அடக்கு''

எப்படி? என்று சில வழிகள் சொல்லிக்கொடுத்தாலும் பல யுகங்கள் ஆகியும், பகவான் பல அவதாரங்கள் எடுத்து வந்தபோதிலும் இந்த மனது அப்படியே தான் சுதந்திரமாக மேய்கிறது. அதை அடக்க ஒரு இடத்தில் கட்டிப் போட வேண்டும். அந்த ஒரு இடம் நான் கண்டுபிடித்த்து விட்டேன். '' கிருஷ்ணா, உன் திருவடி''.

அது அப்படி உன் திருவடியைப் பிடித்துக் கொண்டால் கிடைக்கும் சுகமே தனி. தேடும் நிதி, பெருமை, புகழ், எல்லாமே வேறில்லை நீயே என புரியவைக்கும். எங்கு திரும்பினாலும் என்னை சுற்றி தேவர்கள் கூட்டம் தான் எனக்கு அருகில் அப்போது. தீயவை என்னை விட்டு நீங்கி அந்த இடத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றி வெகு காலம் ஆகியிருக்கும்.

''ஏ புலவர்களே எதை எதையோ பாடுகிறீர்களே. நலம் வேண்டுமா?
ஆரம்பியுங்கள் பாட.
அந்த பூமாதேவி மணாளன் பக்தவத்சலனை பற்றியே பாடுங்கள். பாடுவதற்கு விஷயமா இல்லை, கிருஷ்ணனை பற்றி நினைத்து, அவன் எப்படி அந்த அசுர கூட்டத்தையே ஒவ்வொன்றாக அழித்தான் என்று பாடவே உங்களுக்கு பல ஜன்மம் வேண்டுமே.

பாடினால் என்ன ஆகும் என்று சொல்லட்டுமா?
அஞ்ஞான இருள் ஓடும். துன்பம் துயரம் எல்லாம் பறக்கும். தேவர்களே உங்களை ஆச்சர்யமாக பார்ப்பார்கள். தவம் வேறு எதுவுமல்ல இதுவே என புரியும். உமாபதி வேறு ரமாபதி வேறு என்ற நினைப்பு ஒழியும். வித்தியாசம் ஏதேனும் ருந்தால் அது அவர்கள் வித்யாசப்படுத்தி எழுதும் '' உ, ர'' , இரண்டில் மட்டுமே என்று புரியும். ஒன்றே எல்லாம் என்று உணர்ந்தால் இன்னொன்றை எதற்காக தேடவேண்டும்?

பாரதி இதை எப்படி சொன்னார் என்று தெரியவேண்டாமா? இதோ அவரை ரசியுங்கள்.

மனமே

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே

திண்ணம் அழியா
வண்ணந் தருமே.1

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.2

இங்கே யமரர்
சங்கந் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.3

நலமே நாடிற்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.4

புகழ்வீர் கண்ணன்
தகைசே ரமரர்
தொகையோ டசுரப்
பகைதீர்ப் பதையே.5

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர்
பார்ப்பார் தவமே.6

தவறா துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானோர்
எவரும் ஒன்றே.7

ஒன்றே பலவாய்
நின்றோர் சக்தி
என்றுந் திகழும்
குன்றா வொளியே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...