Sunday, November 19, 2017

VAYALUR MURUGAN

வயலூரில் வேலவன்.

அருணகிரி தமிழ்  கடினம்.  எளிதில் அர்த்தம் புரியாது..  அகராதி பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்போது வார்த்தை வார்த்தையாக அர்த்தம் தெரிந்துகொண்டு படித்து முடிப்பது.  திருப்புகழ் மறந்து போய்விடும்.   யாராவது புரிகிறமாதிரி எழுதவேண்டும்.  அப்போது  நிறைய பேர்  திருப்புகழ் படிப்பார்கள். அதன் அற்புதத்தை அனுபவிப்பார்கள்.

நான் பள்ளிக்கூட காலங்களில்  திருக்குறள் அர்த்தம் புரியாமல்  தமிழ் வாத்தியார் சொன்ன பரிமேலழகர் உரை ஒருவரிடம் வாங்கிக்கொண்டு வந்து படித்த ஞாபகம் இருக்கிறது. திருக்குறள்  ரொம்ப ரொம்ப எளிது. விளக்கமே வேண்டாம்  என்று ஆகிவிட்டது. 70வருஷங்களுக்கு  மேலாகி விட்டது.  பரிமேலழகர் உரை இன்னும்  நான் தொடவே இல்லை அதற்கப்புறம். அவர் உரைகள்  புதுசாக  அட்டை பிரிக்காமல்  நிறைய வீட்டில் இருக்கும் என்பது என்னுடைய தாழ்ந்த அபிப்ராயம்  அல்ல.மிக உயர்ந்த அபிப்ராயம்.  மு.வ. எழுதிய  ஒரு ரூபாய் விளக்கம் தான்  வள்ளுவரை  உலகத்துக்கு  வெளிச்சம் போட்டு காட்டியது  என்பேன்.  அருணகிரிக்கும்  ஒரு மு.வ.  வேண்டும்.

இந்த பாடல் எனக்கு புரியவில்லை:  யாரோ சொன்ன அர்த்தம் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.  

''பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் நீபப்

பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்...

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்டு

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழம் இடிப் பல்வகை தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி

வெற்ப குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக மருப்பு உடைய பெருமாளே''

நான் பல பேரை படித்து புரிந்து கொண்ட அர்த்தம்: 


முருகனின் மயில் வாகனம்  தயாராக நிற்கிறது.  அவன் ஏறி அமர வேண்டியது தான் பாக்கி. அதற்கு அலங்காரம் பிரமாதம்.  மணிகள், மாலைகள், உடலில் ஆபரணங்கள், குதிரைபோல் சேணம். முருகனின் குதிரை அல்லவா அது. அழகன் முருகனும் அலங்கார புருஷனாக காட்சி அளிக்கிறான்.  கடம்ப மலர்கள் அவன் அழகுக்கு எடுப்பாக மாலையாக அவன் மேல் நிறைந்து இருக்கிறது. கையில் பளபளக்கும் கூர்மையான வேலாயுதம். ஆஹா  ஒரு வீச்சில் எப்படி அது அந்த க்ரவுஞ்ச மலையையே பிளந்தது. 

தேவர்களும் விண்ணோர்களும்  இன்னும்  பிளந்த வாய் மூடவில்லையே. 

காற்றில் படபடக்கும் கொடியில்  சேவல். கம்பீரமாக கழுத்தை உயற்றி அங்கும் இங்கும் என்னை எதிர்ப்பவர் யாராவது உண்டா  என்று பார்க்கிறதே.  ஏன்? அது தான்  சாதாரண சேவல் இல்லையே.  சூர பத்மன் அல்லவா அது.?  

திருமுருகன் உருவத்தில் மனதை கவர்வது எப்போதும் அவனது தண்டையணிந்த அழகியதாமரைத் திருவடிகள் தான்.  ஒரு லக்ஷம் பாட்டு குறைந்த பட்சம்  அதை பற்றியே பாடுபவர்  அருணகிரி.  நிச்சயமாக  பாடியிருப்பார். நமக்கு கிடைக்கவில்லை.. நாம் தான் எல்லாவற்றையும் வேண்டுமென்றே இழப்பவர்கள் ஆயிற்றே.   பழனியாண்டியின் பாதம் பணிவது பாக்யம்.  ஆறுமுகன் பன்னிரு தோளன்.  எட்டு திசையிலும் உள்ளவர்களைக் காக்க பன்னிரண்டு கண்களும் தோள்களும்.  அவசியம் தானே.  தேவ சேனாபதி அல்லவா. விண்ணும் மண்ணும் காக்கும் பொறுப்புக்கு ரெண்டு கண்கள் கைகள் எப்படி போதும்?

அருணகிரி  திருவண்ணாமலையில்  பிள்ளையார் சுழி போட்டார். ''முத்தைத்  திரு'' பாடவைத்த முருகன் அடுத்து அவரை வயலூருக்கு செல்ல வைத்தான். வயலூரில் பாடிய திருப்புகழ் மேலே இருப்பது. வயலூர் அழகிய ஊர்.  வயல்களுக்கு இடையே முருகனை பார்த்திருக்கிறேன். வாரியாருக்கு பிடித்த ஸ்தலம்.  

கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு வகைகள், கடலை !!  அடேயப்பா எப்படி இத்தனை பட்சணங்களை  அருணகிரி வரிசையாக சொல்லி அடுக்கி வைத்து முருகனுக்கு நைவேத்தியம் பண்ணுகிறார். உண்ணவா என் வினை தீர்த்த வித்தகா.  அருட்கடலே. கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம், என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பனின் சோதரனே  என் உள்ளத்தில் உறைகின்ற  பெருமாளே''  என்று  மனம் திறந்து பாடுகிறார் அருணகிரியார்.  அற்புதமான பாடல் இது. மனப்பாடம் செயது ஒப்பித்தால்.  ஒரு நீண்ட நதியின் மேல் பாலத்தில் ஓடும் ரயில் வண்டியின் சத்தம் போல் சந்தம் இனிக்கும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...