Tuesday, November 7, 2017

உத்தவ கீதை 10ம் அத்தியாயம்

உத்தவ கீதை 10ம் அத்தியாயம் J.K. SIVAN 

ஆத்மா தேகம் இதெல்லாம் பற்றி ........

உத்தவா, ஏற்கனவே பலமுறை நான் சொன்னதை உனக்கு திரும்ப சொல்கிறேன்.


உண்மையில் சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம் இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை, நாம் தான் இந்த தேகம், இது சாஸ்வதம் என்ற தப்பான மாயையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும்.

பரம்பொருளே முடிவில் அடைய வேண்டிய லக்ஷியம். நாம் செய்யும் காரியங்களில் அவற்றின் மூலம் பலனை, பயனை அடைய வேண்டும் என்ற நினைப்பு துளியும் இன்றி ஈடுபடவேண்டும். அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்த்து வைக்காதிருத்தல் என்ற நியமங்கள் கைக்கொள்ளவேண்டும். குருவை அணுகி பக்தியோடு சேவை புரிய வேண்டும். குருவிற்கு தனது பணிவிடை மூலம் திருப்தியை அளித்தவன் ஆசி பெற்று அருளை பெறுகிறான். அகந்தை, பொறாமை, மமதை, பரபரப்பு, வெறுப்பு, வீண் பேச்சு அற்றவனாக வைராக்கியத்தோடு இருக்கவேண்டும். மனைவி-மக்கள்-மனை-நிலம்-உற்றார்-செல்வம் முதலியவற்றில் ஒட்டுதல் பற்றுதல் இன்றி தனித்திருக்கவேண்டும் சமநோக்கு, அன்பு பிறர் நலனில் ஊக்கம் கொண்டவனாக இருக்க வேண்டும்.

ஆத்மா என்பது என்றும் ஸ்வயம் ஜோதி. சர்வ சாட்சியாக எதிலும் ஒட்டாமல் இருப்பது. ஆத்மா, பூத சரீரம் , சூக்ஷ்ம சரீரம் இரண்டிலும் வேறானது. உடலில் இருந்தாலும் ஆத்மா அதனுடன் சம்பந்தமில்லாதது. நமது தேகம் மாயையின் முக்குணங்களின் சேர்க்கை. மனிதனை உலகவாழ்க்கையுடன் பின்னிப் பிணைத்து வாடச் செய்கிறது. தோற்றமோ மறைவோ இல்லாத ஆத்மா ஜனன மரணம் தொடர்புடையது என்பதே தவறு. ஆத்ம ஞானம் பெற்றவன் இதை புரிந்து கொண்டு மாயையின் மயக்கத்தில் இருந்து தெளிவு பெறுவான்.

புண்ணிய இருப்பு உள்ள வரையில் சுவர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கிறான். புண்ணியம் தீர்ந்ததும், அவன் விரும்பா விட்டாலும் கூட, காலம் அவனைக் கீழே தள்ளி விடுகிறது. கிருஷ்ணன் சொல்வது எது போல் தெரியுமா. ஒரு பெரிய ஓட்டலில் வசதியோடு தூங்குகிறோம் நாளைக்கு?? கையில் காசு இருக்கும் வரை. அது சொகுசு, சுக வசதிக்காக வாடகையில் கழிந்ததும் வெளியே போகவேண்டும். ஒரு நிமிஷமும் அதிகமாக நேரம் அங்கே தங்க இடமில்லை.

அதர்மத்தில் நாட்டமுடையவன், தீயவர்களின் சேர்கையுடயவன். உன் நண்பனைக் காட்டு. நீ யார் என்று சொல்கிறேன் என்பார்களே அது மாதிரி விஷயம். புலன்களை கட்டுப்பாட்டில் வைக்காதவன், வசப்படுத்தாதவன், மனம் போனபடி வாழ்பவன், கஞ்சன், பேராசைக்காரன், பெண்ணாசைப் பிடித்தவன், பூதப் பிரேத கணங்களை திருப்தி செய்ய முறை தவறி வேள்வி செய்து, விலங்குகளை பலி கொடுப்பவன் – இப்படிப்பட்ட ஜீவர்கள், தீய சக்திகளின் பிடியில் அகப்பட்டு, கோரமான இருள் சூழ்ந்த நரகங்களை தான் அடைவார்கள்.

பிறகு, மீண்டும் ஜனனம். துன்பங்களுக்கு காரணமான உடலை அடைந்து, செயல்கள் செய்து, அழிந்து போகும் தன்மையை உடைய உடல்களையே மீண்டும் மீண்டும் அடைகிறார்கள். அவனது மூன்று குணங்கள், சத்வ ரஜோ, தமோ குணங்கள் அவனது கர்மாக்களைச் செய்ய தூண்டுகிறது. கர்மபலன், செயல் செய்பவனின் குணம், அவனது விருப்பம் இதற்கேற்றவாறு அமைகிறது. குணங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே ஒரே பரமாத்மாவான என்னை, காலம், ஆத்மா, உலகம், இயற்கை, தர்மம், என்று பலவிதமாக பெயரிட்டு அடையாளம் காண்கிறார்கள். நான் தான் எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்ப்பவனாயிற்றே.

எல்லாவற்றிலும் பகவானே இருக்கிறான் என்பதால், பார்க்கும் யாவையும், யாவரும் பகவானாகவே இவைகளில் பகவானையே பார்க்க வேண்டுமேயன்றி அந்தந்தப் பொருளாக அல்ல.
புரிந்ததா உத்தவா? என்று கிருஷ்ணன் கூறுவது அவன் தெரிந்து கொண்டானா என்பதை அறிய அல்ல. அவன் மூலம் இந்த உயர்ந்த தத்துவத்தை புரிந்து கொண்டோமா என்ற அக்கறையில் தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...